Friday, 27 February 2009

விரியன் பாம்பு


ஏகாந்தமாய் நின்ற விளக்குத் தூண் இரயில் பெட்டியின் ஜன்னலைக் கடந்து சென்றது. வண்டியும் நிலையத்தில் போய் நின்றது. பிளாட்பாரத்தில் ஒரே பரபரப்பு.

" சௌக்கியமாய்ப் போய் வா! ஜன்னல் வழியாகத் தலையை நீட்டாதே"

"நீட்டமாட்டேன், பாட்டி."

"ஊர் போய்ச் சேர்ந்த உடனே தந்தி கொடுப்பதற்கு மறந்துவிடாதே!...போர்யா, நான் சொல்வது காதில் விழுகிறதா? அந்த மாதிரிப் பொருளை எப்படித்தான் எடுத்துச் செல்வாயோ?"

இரயில் புறப்பட்டது.

"போய் வருகிறேன், பாட்டி!"

"என் பெயரைச் சொல்லி அம்மாவுக்கு ஒரு முத்தங்கொடு. கைக்குட்டை பையில் இருக்கிறது..."

"ஒரு நிமிடத்தில் போர்யா நம்மோடு இருப்பான் என்த் தோன்றுகிறது" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் மெதுவாகச் சொன்னார்.

கதவு திறந்தது. போர்யா உள்ளே நுழைந்தான். அவனுக்குச் சுமார் பன்னிரண்டு வயதிருக்கும். பையன் கொழுகொழுவென்றிருந்தான்; ரோஜாக் கன்னங்கள். அவன் தலையில் சாம்பல் நிறத்தொப்பி சாய்வாக இருந்தது. தன்னுடைய கறுப்பு நிறச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றி விட்டிருந்தான். அவனது ஒரு கையில் பிரம்புப் பெட்டியும், மறு கையில் கயிற்றுப் பையும் இருந்தன. பைக்குள் பெரிய பச்சைக் கண்ணாடி ஜாடி வைத்திருந்தது. பையைச் சற்றுத் தள்ளிப் பிடித்து, அதையே உற்று நோக்கியவாறு, பெட்டிக்குள் மெல்ல நடந்தான்.

பெட்டியில் ஒரே கூட்டம். மேல் பலகைகளிலுங்கூடப் பிரயாணிகள் ஏறியிருந்தனர். பெட்டியின் நடுவில் போர்யா நின்றுகொண்டான்.

"நாம் சிறிது நகர்ந்துகொள்வோம்; பையன் ஓரத்தில் உட்கார்ந்துகொள்ளட்டும்" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் சொன்னார்.

"நன்றி" என்று தெளிவில்லாமல் சொல்லிவிட்டு, பலகைக்கு அடியில் சாமானை வைத்த பிறகு போர்யா உட்கார்ந்துகொண்டான்.

பிரயாணிகள் அவனை ஓரக் கண்ணால் நோக்கினர். கொஞ்ச நேரம், முட்டிகளின்மேல் கைகளை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து நன்றாக மூச்சிழுத்தான். பிறகு தானிருந்த இடத்திலிருந்து கீழே இறங்கி, கயிற்றுப் பையை வெளியே எடுத்து, கண்ணாடி ஜாடியின் உள்ளேயிருந்ததை நீண்ட நேரம் கூர்ந்து பார்த்தான். கடைசியாக, தணிந்த குரலில் "இருக்கிறது" என்று சொல்லி, பையை வைத்துவிட்டு, தன் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

பிரயாணிகளிற் பலர் தூங்கிவிட்டனர். போர்யா வருவதற்கு முன்னர், இரயில் சக்கரங்களின் கடகட ஒலியும், யாரோ சிலருடைய சீரான குறட்டையும் அங்குள்ள அமைதியைக் கெடுத்தன. ஆனால் இப்பொழுதோ, உட்காரும் பலகைக்கு அடியிலிருந்து விசித்திரமாக இடைவிடாது வந்த சரசரவென்ற சத்தமும் அந்த ஒலிகளுடன் சேர்ந்துகொண்டது.

வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர், முட்டிகளின் மேல் தம்முடைய பெரிய கைப்பெட்டியை வைத்துக்கொண்டு, போர்யாவைப் பார்த்து, "தம்பி, நீ மாஸ்கோவுக்குப் போகிறாயா?" என்று கேட்டார்.

போர்யா தலையசைத்தான்.

"கோடையைக் கழிக்க நாட்டுப்புறம் போயிருந்தாயோ?"

"கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன்."

"அப்படியா சங்கதி! நல்லது, கிராமத்திற்குப் போயிருந்தாயா?" கிழவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார். "ஆமாம், இவ்வளவு பெரிய சுமையைச் சமாளிப்பது உனக்குக் கக்ஷ்டமாயில்லையா?"

"இந்தப் பிரம்புப் பெட்டியைச் சொல்லுகிறீர்களா? ஊஹூம், அது இலேசானது." போர்யா குனிந்து பெட்டியைத்தொட்டுக்கொண்டு, "இதில் சில நில உயிர்களைத் தவிர, வேறொன்றும் இல்லை" என்று அலட்சியமாகச் சொன்னான்.

"என்ன உயிர்கள்?"

"நீர்நிலவுயிர்களும், ஊர்வன சிலவுமே அதில் இருக்கின்றன என்று சொன்னேன்; ஆகவே கூடை ரொம்ப இலேசானது."

ஒரு நிமிடம் அமைதி நிலவியது. பிறகு, பரந்த தோளும், கரிய மீசையும் கொண்ட தொழிலாளி, "நீர்நிலவுயிர், ஊர்வன என்றெல்லாம் சொல்கிறாயே, தம்பீ! அவைதான் என்ன என்று சொல்லேன்" என ஆழ்ந்த குரலில் உரக்கக் கேட்டான்.

"தவளைகள், தேரைகள், பல்லிகள், பச்சைப் பாம்புகள்..."

"அப்பப்பா, இது என்ன கோரம்!" என்று மூலையிலிருந்து ஒருத்தி சொன்னாள்.

கிழவர் தம்முடைய கைப்பெட்டியின்மீது விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். "ரொம்ப வேடிக்கையாயிருக்கிறதே!.... இவை எல்லாம் உனக்கு எதற்கப்பா?"

"எங்கள் பள்ளிக்கூடத்தில் சிறு உயிர்காட்சிசாலை ஒன்று கட்டுகிறோம். இரண்டு பேர் கட்டிட வேலையைக் கவனிக்கிறார்கள். நான் தான் அதற்கு வேண்டிய பிராணிகளைப் பிடித்துக்கொடுக்கிறேன்."

"என்ன கட்டுகிறார்களாம்?" என்று மேல் பலகையில் படுத்துக் கொண்டிருந்த, வயது சென்ற கூட்டுப்பண்ணைக்காரி ஒருத்தி கேட்டாள்.

"சிறு உயிர்காட்சிசாலை" என்று விளக்கினார் கிழவர். "அதாவது ஒரு கண்ணாடிப் பெட்டி, ஏறக்குறைய மீன் காட்சிசாலை போலவே இருக்கும். அதில்தான் இவற்றை எல்லாம் அவர்கள் வைப்பார்கள்..."

"என்ன, பாம்புகளையா?"

"ஆமாம். ஆனால் அவைகளைப் பாம்புகள் என்று சொல்ல முடியாது. விஞ்ஞான முறைப்படி நீர்நிலவுயிர்கள், ஊர்வன என்று தான் குறிக்க வேண்டும்." போர்யாவின் பக்கமாகக் கிழவர் திரும்பினார். "என்ன, தம்பீ, நீர்நிலவுயிர்கள் ஏராளமாகக் கொண்டுவந்திருக்கிறாயா?"

போர்யா கண்களை உயர்த்தி விரல்விட்டு எண்ணத் தொடங்கினான்.

"நான்கு பச்சைப் பாம்புகள், இரண்டு தேரைகள், எட்டுப் பல்லிகள், பதினொரு தவளைகள்"

"என்ன பயங்கரம்!" என்று இருட்டு மூலையிலிருந்து யாரோ ஒருவன் சொன்னான்.

கூட்டுப்பண்ணைக்காரி முழங்கைகளை ஊன்றிக்கொண்டு, போர்யாவை நோக்கினாள்.

"இவை எல்லாவற்றையுமா பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்கிறாய்?"

"எல்லாவற்றையும் அல்ல. பாதிப் பச்சைப் பாம்புகளையும் தவளைகளையும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள மற்றொரு பள்ளிக்குக் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து ட்ரிடான்களை* வாங்கிக்கொள்வேன்."

"ஆமாம், வாத்தியார் இதற்காக உங்களை வெளுத்து வாங்கமாட்டாரா?"

போர்யா தோள்களைக் குலுக்கிக்கொண்டு பெருமித்துடன் புன்முறுவல் செய்தான்.

"வெளுத்து வாங்குவாரா? எதற்காக? இதற்காக எங்களுக்கு நன்றியல்லவா செலுத்துவார்?"

"படிப்புக்கு இதெல்லாம் தேவையாக இருந்தால், இவர்களை எதற்காகக் கண்டிக்கப் போகிறார்கள்?" என்று மீசைக்காரத் தொழிலாளி ஆமோதித்தான்.

இந்தப் பேச்சு பிற பிரயாணிகளையும் ஈர்த்தது. வெயிலால் பழுப்பேறிய ஓர் இளம் லெப்டினன்ட் மறு புறமிருந்து வந்து, மேல் பலகைமீது முழங்கையை வைத்துச் சாய்ந்து கொண்டான். கூட்டுப்பண்ணைப் பெண்கள் இருவர், கொட்டைகளைக் கடுக்கு முடுக்கென்று கடித்துத் தோல் போக்கிய வண்ணம், வந்தார்கள். விற்கண்ணாடி அணிந்த உயரமான வழுக்கைத் தலையர் ஒருவரும் தொழிற்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறு எல்லோரும் சிரத்தை கொள்ளவே, போர்யாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அவர்கள் கேள்வி கேட்பதற்குக் கூடக் காத்திராமல் உற்சாகத்தோடு பேசினான்.

"எங்கள் பள்ளிக்கூடத்திற்கு எவ்வளவு தூரம் நன்மை செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடையில் ஒரு பச்சைப் பாம்பின் விலை ஐந்து ரூபிள்; வாங்கப் போனால் தெரியும் அதன் அருமை! வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம்! தவளைகளோ... ஒவ்வொன்றும் குறைந்தது ஐம்பது கொபேக் இருக்கும். ஆகவே அவைகளுக்கு வேறு ஐந்து ரூபிள் ஐம்பது கொபேக் ஆகும்... இவற்றை வைக்கும் கண்ணாடிப் பெட்டியோ!...அதை வாங்குவதற்கு ஐம்பது ரூபிள் வேண்டும். அப்படியிருக்க, நீங்கள் என்னடா என்றால் `வெளுத்து வாங்கமாட்டாரா?` என்கிறீர்கள்!"

பிரயாணிகள் சிரித்துத் தலையசைத்தார்கள்.

"தம்பியைச் சொன்னதற்கு உனக்கு நன்றாய் வேண்டும்!"

"அதிலும் ஏதாவது நண்மை இருக்கலாம், யார் கண்டது?"

"இவைகளைப் பிடிப்பதற்கு உனக்கு அதிக நாள் ஆயிற்றா?" என்று கேட்டான் லெப்டினன்ட்.

"இரண்டு வாரங்கள் ஆயின. காலை உண்டிக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் வேட்டையாட வெளியே செல்வேன். பகல் உணவுக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்; மறுபடியும் மாலை வரையில் வெளியே சுற்றுவேன்." போர்யா தொப்பியை எடுத்து, அதனால் விசிறிக்கொண்டான். "தவளைகளையும் தேரைகளையும், பொறுத்த வரையில் அவ்வளவு கஷ்டமில்லை... பல்லிகள் தான் எங்கும் இருக்கின்றனவே; ஆனால் பச்சைப்பாம்புகளோ... ஒரு சமயம் ஒன்றைப் பார்த்த்தும் அதைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அது சரசரவென்று குட்டைக்குள் பாய்ந்துவிட்டது. ஓட்டவேகத்தில் சட்டென்று நிற்க முடியாமல் நானும் தொபுக்கென்று குளத்தில் விழுந்துவிட்டேன். இது மிகவும் ஆபத்தான வேலை, தெரியுமா?"

"ஆமாம், ஆமாம், அது ஆபத்தானது தான்" என ஆமோதித்தான் லெப்டினன்ட்.

இப்பொழுது கிட்டத்தட்ட அப்பெட்டியில் இருந்தவர் அனைவரும் போர்யாவின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் புன்முறுவல் பூத்த முகங்கள் எட்டிப் பார்த்தன. போர்யா பேசும்போது எல்லோரும் அமைதியாக்க் கேட்டார்கள். அவன் நிறுத்தியதும், இலேசான சிரிப்பொலியும், மென்மையான பேச்சொலியும் கேட்டன.

"பையன் படுசுட்டியாக இருக்கிறான்."

"இத்துனூன்டுப் பயல், ஆனால் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான்!"

"ஆமாம், ஆமாம்!" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் சொன்னார். "இதெல்லாம் சமுதாயத்திற்குப் பயன்படும் வேலை. என் காலத்தில் இப்படிப்பட்ட குழந்தைகளே இல்லை. கிடையவே கிடையாது!"

"பாட்டி மட்டும் தடுத்திராவிட்டால், இன்னும் நிறையப் பிடித்திருப்பேன்" என்றான் போர்யா. "இவைகளைக் கண்டு அவள் பயந்து சாகிறாள்."

"பாவம், பாட்டி!"

"அதனால் தான் நான் விரியன் பாம்பைப்பற்றி அவளுக்கு ஒன்றும் சொல்லவில்லை."

"எதைப்பற்றி?"

"விரியன் பாம்பைப்பற்றி. நான்கு மணி நேரம் அதை விரட்டிக்கொண்டு போனேன். அது ஒரு கல்லுக்கு அடியில் புகுந்துவிட்டது; அதற்காகப் பதிபோட்டுக் காத்திருந்தேன். அது வெளியில் வந்ததும் லபக்கென்று பிடித்துவிட்டேன்."

"அப்படியென்றால் உன்னிடம் ஒரு விரியன் பாம்பு வேறு இருக்கிறது என்றா சொல்கிறாய்?" என்று இடைமறித்தான் தொழிலாளி.

"ஆமாம். ஜாடிக்குள் இருக்கிறது" என்று பெஞ்சிக்குக்கீழ் சுட்டிக்காட்டினான் போர்யா.

"இது வேறு வம்பா!" என்று இருண்ட மூலையிலிருந்த பெண் அங்கலாய்த்தாள்.

அங்கு இருந்தவர்களிடையே மௌனம் குடிகொண்டது. கேலிப் பேச்சுகளெல்லாம் நின்றுவிட்டன. லெப்டினன்ட் மட்டும் சிரித்துக்கொண்டே, "ஒருவேளை அது விரியன் பாம்பு இல்லையோ என்னவோ?" என்றான்.

"விரியன் பாம்பு இல்லையா? அப்படியானால் வேறு என்னவாம்?" என்று போர்யா ஆத்திரத்தோடு கேட்டான்.

"இன்னொரு பச்சைப் பாம்பு." "அந்த வேறுபாடு கூட எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?"

"எங்கே, காட்டு பார்க்கலாம்!"

"ஐயோ, சனியனை ஏனையா விலைக்கு வாங்குகிறீர்கள்? அது இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும், ஐயா!" என்ற குரல் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்தது.

"அட, காட்டட்டுமே. கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம்."

"அதில் அப்படி என்ன வேடிக்கை இருக்கின்றது? நினைத்தாலே குமட்டுகிறது!"

"உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதைப் பார்க்க வேண்டாம்."

போர்யா பெஞ்சிக்கு அடியிலிருந்த பையை வெளியே இழுத்து, அதன் அருகில் உடகார்ந்து கொண்டான். வழியிலிருந்தவர்கள் இடம்விட்டு நகர்ந்தனர். பெஞ்சிகளின் மீதிருந்தவர்கள் எழுந்திருந்து, கழுத்தை நீட்டிப் பார்த்தார்கள்.

"எனக்கு வயது நாற்பதுக்குமேல் ஆகின்றது; ஆனாலும் பச்சைப் பாம்புக்கும் விரியன் பாம்புக்கும் உள்ள வித்தியாசத்தை என்னதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் என்னால் சொல்ல முடியாது" என்றார் கண்ணாடிக்காரர்.

"பார்த்தீர்களா! உங்கள் பள்ளிக்கூடத்திலும் நிலவுயிர்க் காட்சிசாலை ஒன்று இருந்திருந்தால், நீங்களும் அறிந்திருக்க முடியும்" என்று கிழவனார் குறிப்பிட்டார்.

"பச்சைப் பாம்பின் தலையில் மஞ்சள் புள்ளிகள் இருக்கும்" போர்யா ஒரு பக்கத்தில் ஜாடியுள் பார்த்துக்கொண்டு சொன்னான். "ஆனால் விரியன் பாம்புக்கு எந்த..." அவன் திடீரென்று பேசுவதை நிறுத்தினான்; முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் சாயை படர்ந்தது. "விரியன் பாம்பு...விரியன் பாம்புக்குப் புள்ளிகள்..." மறுபடியும் நிறுத்திவிட்டு ஜாடியின் மறு பக்கத்தைப் பார்த்தான். பெஞ்சிக்கு அடியில் உற்று நோக்கினான். பிறகு மெதுவாக அவன் பார்வை தரையை நோக்கித்தன் காலடி பக்கத்தில் சென்றது.

"அது அங்கு இல்லையா?" என்று யாரோ கேட்டார்.

போர்யா எழுந்திருந்து, முட்டிகளில் கைவைத்தபடி நின்றுகொண்டு, ஜாடியை உற்று நோக்கினான்.

"அது... இதிலே தான். அது சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்த்து... இதிலே தான்."

யாரும் பேசவில்லை. மறுபடியும் பெஞ்சிக்கு அடியில் பார்த்தான் போர்யா.

"துணி அவிழ்ந்து கிடக்கிறது. நான் பலமாகத் தான் கட்டினேன்; அப்படியிருக்க அது..."

யாரும் துணியைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தரையின்மேல் விழிப்பாக நோக்கி, தங்கள் கால்களை மாற்றி மாற்றி வைத்தனர்.

"நல்ல தொந்தரவப்பா!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார் கண்ணாடிக்காரர். "இங்கு தான் அது ஊர்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாயா?"

"நல்ல சங்கடமப்பா!..."

"இருட்டில் யாரையாவது கடித்துவிடப் போகிறது!"

வயதான கூட்டுப் பண்ணைக்காரி எழுந்து உட்கார்ந்து கொண்டு, போர்யாவை உற்று நோக்கினாள்.

"தம்பி, நீ என்ன செய்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொண்டாயா? அடுத்த மூன்றாவது ஸ்டேஷனில் நான் இறங்க வேண்டும்; என்னுடைய சாமான்கள் எல்லாம் பெஞ்சிக்குக் கீழே இருக்கின்றன. அவற்றை எப்படி எடுப்பேன்?"

போர்யா பதிலே சொல்லவில்லை. அவனுடைய காதுகள் நெருப்பெனச் சிவந்தன; அவன் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள் நிறைந்திருந்தன. கைகளைப் பக்கங்களில் வைத்து, விரல்களால் தொடைகளில் தட்டிக்கொண்டே, பெஞ்சிக்கு அடியில் குனிந்து பார்ப்பதும் நிமிர்ந்து நிற்பதுமாயிருந்தான்.

"அதனால் ஒரு நன்மையும் ஏற்படாதென்று நான் அப்போதே சொன்னேனே!" என்று இருண்ட மூலையிலிருந்த பெண் கத்தினாள்.

"மாஷா அத்தை! ஏ, மாஷா அத்தை!" என்று ஒருத்தி கூப்பாடு போட்டாள்.

"என்ன அது?" பெட்டியின் ஓரத்திலிருந்து பதில் வந்தது.

"ஜாக்கிரதையாக இருங்கள். பெஞ்சிகளுக்கீழே ஒரு விரியன் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது."

"என்ன அது? விரியன் பாம்பா?"

பெட்டியில் ஒரே இறைச்சல். ஒரு பெண் கண்டக்டர், கண்டக்டர்களின் அறையிலிருந்து தூக்கக் கண்களோடு வெளியே வந்தாள். திடீரென்று அவளுடைய கண்கள் அகலத் திறந்தன.

தொழிற்பள்ளி மாணவர்கள் இருவரும் ஒரு கிழவியை மேல் பலகைக்குத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தனர்.

"நீ மேலே போ, பாட்டி. எவாக்குவேஷனுக்கு வேளை வந்துவிட்டது!"

"கூட்டம் நிறைந்திருந்த பெஞ்சிகள் மளமளவென்று காலியாகிவிட்டன. மேல் பலகைகளிலிருந்து பல பெண்களின் கால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கீழேயிருந்த பிரயாணிகள் எதிர்ப் பெஞ்சிகளின்மீது தங்கள் பாதங்களை வைத்துக் கொண்டனர். தீக்குச்சிகளைக் கொழுத்திக்கொண்டும் பாட்டரி விளக்குகளைப் பிடித்துக்கொண்டும் இடைவழியில் பாம்பைத் தேடினர் சிலர்.

அந்தப் பெண் கண்டக்டர் இடைவழியில் நடந்துகொண்டு, ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தாள்.

"என்ன விஷயம்? இங்கு என்ன நடந்தது?"

யாரும் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. ஏக்காலத்தில் பல குரல்கள் கேட்டன. சிலர் கோபத்தோடும், சிலர் களிப்போடும் பேசினர்.

"ஒரு சிறுவனின் காரணமாகத்தான் இந்தத் தொல்லை எல்லாம்!"

"மீஷா! மீஷா! எழுந்திரு, இங்கு ஒரு விரியன் பாம்பு இருக்கிறது!"

"ஹா... ம்... எந்த ஊர் அது?"

திடீரென்று ஒரு பெண் கீச்சிட்டாள். அது தொடர்ந்து நிலவிய அமைதியைக் கலைத்தது. "பயப்பட வேண்டாம், அது என் கச்சைதான்" என்று உக்ரேனிய பாணியில் கூறியது ஒரு மென்மையான குரல்.

வெளிறிய முகத்துடன் திருட்டு விழி விழித்த போர்யாவைக் கண்ட கண்டக்டர், அவனைப் பார்த்து, "ஆமாம்?...நீ என்ன செய்தாய்? என்று கேட்டாள்.

"கட்டியிருந்த துணி அவிழ்ந்துகொண்டது...நான் அதை நன்றாகத்தான் கட்டிவைத்தேன், தவிர அது..."

"இப்படி விஷப் பாம்புகளை எல்லாம் கொண்டுவரும்படி சிறுவர்களிடம் சொல்கிற வாத்தியார் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமே!" என்று கண்ணாடிக்காரர் சொன்னார்.

"என்னை யாரும் கொண்டுவரச் சொல்லவில்லை... என்று முணுமுணுத்தான் போர்யா. "என்... என்னுடைய யோசனைதான் அது."

"பையன் கொஞ்சம் சுய யோசனையைக் காட்டியிருக்கிறான்" என்று சிரித்தான் லெப்டினன்ட்.

நிலைமையை நன்கு புரிந்துகொண்டாள் கண்டக்டர்.

"உன்னுடைய யோசனைதானா அது!" என்று சிணுங்குவது போலக் கூறினாள். "சரி சரி, பெஞ்சிக்கு அடியில் தவழ்ந்து போய், அதைப் பிடி. போடா, போய்ப் பிடித்துவா! என்னைப் பிடிக்கச் சொல்கிறாயா என்ன? போ, போ!"

போர்யா பெஞ்சிக்கு அடியில் தவழத் தொடங்கினான். கண்டக்டர் அவனுடைய ஜோடுகளைப் பற்றிக் கொண்டு, முன்னைவிடப் பலமான குரலில், "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஊனக்கென்ன கிறுக்கா? வெளியே வா, வெளியே வாவென்று சொல்லுகிறேனே, கேட்கிறதா!" என்றாள்.

போர்யா தேம்பி அழுதுகொண்டு பெஞ்சிக்கு அடியில் பாதத்தை மெள்ள அசைத்தான்.

"நான்... அதை... போக... விட்டேன்... அதனால்... நானே... எப்படியும்... பிடிக்க வேண்டும்."

"போதுமடா ராஜா, நிறுத்து" என்று கூறி பெஞ்சிக்கு அடியில் பாம்பைத் தேடிக் கொண்டிருந்த போர்யாவை வெளியே இழுத்தான் லெப்டினன்ட்.

ஒரு சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றாள் கண்டக்டர். பிறகு வாசலை நோக்கிப் புறப்பட்டாள்.

"நான் போய் ஸீனியர் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்" என்று சொன்னாள். நீண்ட நேரமாக அவள் திரும்பவேயில்லை. பிரயாணிகள் கவலைப்பட்டுச் சலித்துப் போய்விட்டனர். பேச்சுகள் குறைந்தன; அமைதி நிலவியது. லெப்டினன்டுடன் தொழிற்பள்ளி மாணவர்கள் இருவரும் வேறு சிலரும் சேர்ந்து பெஞ்சிகளின் அடியிலிருந்து கைப்பெட்டிகளையும் பைகளையும் ஜாக்கிரதையாக வெளியே இழுத்துவிட்டு, விரியன் பாம்பைத்தேடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்டுபிடித்து விட்டார்களா, என்ன என்பதைப்பற்றி இடையிடையே விசாரித்துக் கொண்டு, பொதுவாக நச்சுப்பாம்புகளைப் பற்றிய பேச்சில் மற்றவர்கள் ஈடுபட்டனர்.

"எந்த நல்ல பாம்புகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்? தெற்கில் தானே நல்ல பாம்புகள் உண்டு!"

"...கையை மிகவும் அழுத்தமாகக் கட்டி, இரத்தத்தை உறிஞ்சி, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் அந்த இடத்தைச் சுட்டுவிட வேண்டும்."

"ஐயா, ரொம்ப நன்றி! பழுக்கக் காய்ச்சிய இரும்பா, சரிதான், சரிதான்!"

வயதான கூட்டுப் பண்ணைக்காரி குறிப்பாக யாரையும் பார்க்காமலே, "சாமான்களை எடுப்பதற்குக் கூட நான் பெஞ்சின் பக்கம் செல்லப் போவதில்லை! ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி நான்காம் வருஷத்தில் என்னுடைய மைத்துனியை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவள் மருத்துவ விடுதியில் இரண்டு வாரங்கள் இருக்க நேர்ந்தது." என்று முறையிட்டாள்.

வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் இப்போது மூன்றாவது மேல் பலகையில் உட்கார்ந்திருந்தார்.

"உங்களுடைய மைத்துனி அதிர்ஷ்டசாலிதான். விரியன் பாம்பு கடித்தால் உயிருக்கே ஆபத்து" என்று கவலையில்லாமல் அவர் சொன்னார்.

"இதோ இருக்கிறது!" தொழிற்பள்ளி மாணவர்களுள் ஒருவன் திடீரென்று கூச்சலிட்டான்.

அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாரும் "அப்பாடா!" என்று கவலை நீங்கிப் பெருமூச்சு விடுவதுபோலத் தோன்றியது; சக்கரங்கள் மிகுந்த உற்சாகத்தோடு உருளத் தொடங்கின.

"அதைக்கண்டுபிடித்துவிட்டாயா, இல்லையா?"

"எங்கே இருக்கிறது?"

"சீக்கிரமாகக் கொன்றுவிடுங்கள்!"

மண்டியிட்டு அமர்ந்திருந்த தொழிற்பள்ளி மாணவனைச் சூழ்ந்து பலர் கூடிவிட்டனர். இடித்துத்தள்ளி ஒருவர் வழியில் மற்றவர் புகுந்துகொண்டு, லெப்டினன்ட் பாட்டரி விளக்கைக் காட்ட பெஞ்சிக்கு அடியில் எல்லோரும் கூர்ந்து நோக்கினர்.

"பெஞ்சிக்கு அடியில் இருக்கிறது என்றா சொல்கிறாய்?"

"ஆம்! அதோ, அந்த முலையில் தான்."

"நீ அதை எப்படிப் பிடிக்கப் போகிறாய்?"

"தெரியவில்லை. அது சிரமந்தான்."

"சரி சரி, சும்மா நிற்காதீர்கள்! அது வேறு ஓடிப்போய்விடப் போகிறது!"

ஸீனியர் கண்டக்டரை அழைத்துக்கொண்டு பெண் கண்டக்டர் வந்து சேர்ந்தாள். ஸீனியர் கண்டக்டர் குனிந்து, பெஞ்சிக்கு அடியில் இருண்ட மூலையில் வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டே, பெண் கண்டக்டரைக் கையினால் சைகை காட்டி அழைத்து, "உலைக் கம்பியை எடுத்து வா!" என்று சொன்னான்.

பெண் கண்டக்டர் அங்கிருந்து போய்விட்டாள். வேடிக்கை பார்க்க எல்லோரும் காத்திருந்தனர். வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர், மூன்றாவது பலகையில் உட்கார்ந்து, கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே, "இன்னும் நாற்பது நிமிடங்களில் நாம் மாஸ்கோவில் இருப்போம். நேரம் எப்படிப் பறந்துவிட்டது. எல்லாம் ...ம்... எல்லாம் இந்தப் பையனால் தான்" என்று சொன்னார்.

பலர் சிரித்தனர். தொழிற்பள்ளி மாணவனைச்சுற்றி நின்றிருந்தவர்களெல்லாம் போர்யா இருப்பதை அப்போதுதான் தினைத்துக்கொண்டவர்களைப் போல அவனையே நோக்கினர். போர்யாவோ கவலையோடும் களைப்போடும், தனது அழுக்கான கைகளை மெள்ளத் துடைத்துக்கொண்டு ஒரு பக்கமாக நின்றான்.

"என்னடா ராஜா, ஊன்னுடைய வேலையெல்லாம் வீணாகிடும் போலிருக்கிறதே" என்று சொன்னான் லெப்டினன்ட். நீ படாத பாடுபட்டு வேட்டையாடிக்கொண்டு வந்துள்ள பள்ளிக்கூடக் காட்சிப் பொருளை உலைக் கம்பியால் இவர் தீர்த்துவிடப் போகிறாரே."

போர்யா, முகத்திற்கு எதிரே கையை வைத்துக்கொண்டு, விரல் நகத்தால் அழுக்கைச் சுரண்டினான்.

"வேட்டைக்காரா, என்ன வருத்தமா?" என்று தொழிற்பள்ளி மாணவன் வினவினான்.

"எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று மெதுவாய்ச் சொன்னான் போர்யா.

பிரயாணிகள் யாருமே பேசவில்லை.

"இது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை, இல்லையா?" என்று மீசைக்காரத் தொழிலாளி திடீரென்று உரத்த குரலில் சொன்னான். அவன் கால்மேல் கால் போட்டு அமைதியாக உட்கார்ந்துகொண்டு, களிமண் படிந்த தன் செருப்பின் முனையைப் பார்த்த வண்ணம் இருந்தான்.

"எது சரி இல்லை?" என்று அவன் பக்கம் திரும்பிக் கேட்டான் ஸீனியர் கண்டக்டர்.

"பையன் அதை வேடிக்கைக்காகக் கொண்டுவரவில்லை. அதைக் கொல்லுவதென்றால் ஏதோ போலிருக்கிறது. என்ன நான் சொல்கிறது?"

"அப்படியானால் அதை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கண்ணாடிக்காரர் கேட்டார்.

"அதைப் பிடிக்க வேண்டும்! அவ்வளவு தான்!" என்று தொழிற்பள்ளி மாணவன் பதில் சொன்னான். "அதைப்பிடித்து, வேட்டைக்காரனிடம் கொடுத்துவிட வேண்டும்."

உலைக் கம்பியை எடுத்துக்கொண்டு பெண் கண்டக்டர் வந்தாள். அவள் போர்க்கோலம் பூண்டிருப்பது போலத் தோன்றியது.

"இன்னும் இங்கே தான் இருக்கிறதா? இல்லாவிட்டால் எங்கேயாவது போய்விட்டதா? யாராவது விளக்கைக் கொளுத்துங்களேன்" என்றாள் அவள்.

அவள் கையிலிருந்த உலைக் கம்பியை லெப்டினன்ட் மெதுவாக வாங்கிக்கொண்டான்.

"தோழர்களே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? விரியன் பாம்புக்கு உயிர்ப்பிச்சை கொடுத்துவிடலாமா?... அந்தப் பையனைப் பாருங்கள்--பாவம், அவன் அரும்பாடு பட்டிருக்கிறானே!" என்றான்.

குழப்பமடைந்த பிரயாணிகள் எதுவும் பேசவில்லை. ஸீனியர் கண்டக்டர், கடுங்கோபங் கொண்டு, முகமெல்லாம் சிவக்க லெப்டினன்டை உருட்டி விழித்தான்.

"உங்களுக்கென்னவோ வேடிக்கையாக இருக்கிறது. அது யாரையாவது கடித்துவிட்டால் நாங்கள் அல்லவா பதில் சொல்ல வேண்டும்?" என்றான்.

"ஆமாம், நண்பரே, பாம்பைக் கொன்றாலுங்கூட வேறொன்றுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டுமே?" என்று தொழிற்பள்ளி மாணவன் கூறினான்.

"பதில் சொல்ல வேண்டுமா?" என்று பெண் கண்டக்டர் திருப்பிச் சொன்னாள். "எதற்காக நாங்கள் பதில் சொல்ல வேண்டுமாம்?"

"பள்ளிக்கூடச் சொத்தை அழித்ததற்காக. ஆமாம், அதற்காகத்தான்."
ஒவ்வொருவரும் மனமாரச் சிரித்து, பிறகு விவாதத்தில் இறங்கினர். எப்படியும் பள்ளிக்கூடத்தில் விரியன் பாம்பை வைக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னார்கள். பள்ளியில் வைத்திருப்பார்கள்; உயிர்நூல் ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்கும் என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். விரியன் பாம்பை மறுபடியும் போர்யாவிடம் கொடுப்பது ஆபத்து எனச் சிலர் கருதினர். "டிராமில் அல்லது சுரங்கரயிலில் அவன் மீண்டும் தவற விட்டுவிடுவான்" என்றனர்.

"நான் இனிமேல் அதைத் தவற மாட்டேன்! ஆணையாகச் சொல்லுகிறேன், நான் தவற விடமாட்டேன்!" என்று பெரியவர்கள் எல்லாம் இரக்கப்படும் அளவிற்குப் பரிதாபத்தோடு போர்யா சொன்னான். வயதான கூட்டுப் பண்ணைக்காரி கூட மனமிரங்கிவிட்டாள்.

"இனிமேல் அதை விட்டுவிடமாட்டான்" என்று அவள் கெஞ்சும் குரலில் சொன்னாள். "அவன் இப்போது புத்திசாலியாகிவிட்டான்! கொஞ்சம் இரக்கம் காட்ட வேண்டியதுதான். மற்ற பிள்ளைகள் எல்லாம் விளையாடி, விடுமுறைக்காலத்தை இன்பமாகக் கழிக்கின்றனர்; அப்படியிருக்க இவனோ இந்தச் சனியன்களைப் பிடிக்க இரண்டு வாரங்கள் செலவிட்டிருக்கிறான்."

"ஊம், ஆமாம்! நியாயந்தானே! மற்றவருடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதுதான்" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் கூறினார்.

"தத்துவம் பேசுவதில் உமக்கு அதிகப் பிரியமென்று கெரிகிறது." என்று கண்ணாடிக்காரர் தலையை நிமிர்த்திக்கொண்டு சொன்னார் "சரி, பையனையும் அவனுடைய பாம்பையும் அவனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுவீரா" என்று வினவினான்.

"ம்... வந்து... ஆமாம்... அவனை... நான்..."

"சரி சரி, நான் கொண்டுபோய் விடுகிறேன். நீ எங்கு குடியிருக்கிறாய்?" என்றான் லெப்டினன்ட்.

"செர்னிஷேவ்ஸ்கிய் தெருவில்."

"அது என் வழியில் இல்லாவிட்டாலுங்கூட, நான் உன் வீடுவரை வருகிறேன்."

"வேட்டைக்காரர்களே, பாம்பைக் கொன்றாயிற்றா இல்லையா? என்று பெட்டியின் மறு கோடியிலிருந்து யாரோ கேட்டார்கள்.

"இல்லை. அதற்கு உயிர்ப்பிச்சை அளித்துவிட்டோம்" என்று தொழிற்பள்ளி மாணவன் பதில் சொன்னான்.

"வேட்டைக்காரர்களை"க் கடுகடுப்புடன் நோக்கினான் ஸீனியர் கண்டக்டர்.

"நீங்களெல்லாம் இன்னும் குழந்தைகளாகத் தானிருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டுப் பெண் கண்டக்டரின் பக்கம் திரும்பி, "நலக்கரி இடுக்கியைக் கொண்டு வா" என்றான்.

"குழந்தைகள்!" என்று அவளும் திருப்பிச் சொல்லிக் கொண்டு இடுக்கியைக் கொண்டுவரச் சென்றாள்.

பத்து நிமிடங்கள் கழித்து, விரியன் பாம்பு ஜாடிக்குள் சென்றது. லெப்டினன்ட் ஜாடியைப் பலமாகக் கட்டி, தன் முட்டியின்மேல் வைத்துக்கொண்டான். போர்யா, லெப்டினன்டின் பக்கத்தில் மகிழ்ச்சியோடு மௌனமாக அமர்ந்திருந்தான்.

மாஸ்கோ போகும் வரையில், பிரயாணிகள் தங்கள் பள்ளி வாழ்வை எண்ணிப் பார்த்துக்கொண்டு மிகவும் உற்சாகத்தோடிருந்தனர்.


*ட்ரிடான்- ஒருவகை நீர்நிலவுயிர்

எழுதியவர்- யூ. ஸோட்னிக்

இடம்பெற்ற நூல்- நீச்சல் பயிற்சி
மொழிபெயர்ப்பாளர்- சு. ந. சொக்கலிங்கம்
பதிப்பாசிரியர்- பூ. சோமசுந்தரம்
ஓவியர்கள்- ஆ. ஏலிசேயிவா, எம். ஸ்கோபிலிவா
தமிழில் முதல் பதிப்பு- 1960
*முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ*

(சொற்களைப் பிரித்து- சேர்த்து எழுதும் முறை தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பினும் அப்படியே விடப்பட்டுள்ளது.)

**விரைவில் - ராயாவின் "கைதிகள்" **

5 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மறுபடியும் பதிவிட்டிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மிக நல்லதொரு கதையோடு மீண்டும் வந்ததிற்காக... நன்றி.

சரவணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருத்திகா. இனி தொடர்ச்சியாக வாரம் ஒரு கதையாவது தவறாமல் வெளியிட எண்ணியுள்ளேன். விரியன் பாம்பு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதே என்று எண்ணிய நேரத்தில் உங்கள் மறுமொழி உற்சாகம் தருவதாக உள்ளது. ராயாவின் "கைதிகள்" இன்னும் சுவாரசியமாக இருக்கும்!

Anonymous said...

i dont remember 'kaidhigal . waiting .....

Joe said...

நல்லதொரு பதிவு!

//புரப்பட்டது. // --> புறப்பட்டது.

சரவணன் said...

நன்றி ஜோ - பாராட்டுக்கும், எழுத்துப்பிழையை சுட்டியதற்கும்!