Tuesday, 23 June 2009

குறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு

“தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள்கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத்திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக்காட்டிலும் மறைய முடியாது”--இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்—சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திருமங்களுக்குப் பிறகு அவன் தலைதெரிக்க ஓடித் தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான்! இந்தக்குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெக்கிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிகக் கடினமானதாக இருந்த காலம் அது.

“குறும்பன்” என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெக்கிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903 – 1966) உரைநடைப்படைப்புகள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும். கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத்தொகுப்புகள் இயற்றியவர்.
குறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு

நாடோடி வியாபாரி கண்ணில் படாமல் தப்பவேண்டுமே கடவுளே என்று எண்ணியவாறு கிராமத்தைச் சுற்றிக் கடந்து போக முயன்றேன். தலைக்கு நாள் போலவே சாலை வழியே மெல்ல நடந்து, பொழுது சாயும் தறுவாயில் பேராற்றின் கரையை அடைந்தேன். பாறைகளில் தத்தி முழங்கியவாறு அது விரைந்து பெருகிக் கொண்டிருந்தது. நுரையால் அதன் பெருக்கு
வெளேரென்று காட்சி தந்தது. அது என்ன ஆறோ, எனக்குத் தெரியவில்லை. எங்கே ஆபத்தின்றி இறங்கிக் கடக்கலாம் என்பதைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம். கரையோரமாக ஆற்றுப் பெருக்குக்கு எதிர்த்திக்கில் சிறிது தூரம் நடந்தேன். அப்புறம் பெருக்கையொட்டித் திரும்பினேன். அப்போது ஆற்றின் இரைச்சலின் ஊடே மனிதக் குரல்களும் குதிரைக் கனைப்பும் கேட்பது போல எனக்குப் பிரமை உண்டாயிற்று. சுற்றிலுமோ, ஒரு பூதரைக் காணோம். எதை எதிர்பார்க்கிறோமோ அல்லது அஞ்சுகிறோமோ, அதை எல்லாம் கொந்தளிக்கும் ஆற்றின் இரைச்சலில் கேட்கலாம்...

தனியே ஆற்றைக் கடக்க என்னால் முடியவில்லை, திரும்பவும் வகையில்லை. யாரேனும் சாலையில் வர மாட்டார்களா என்று காத்திருந்தேன். எங்கள் வட்டாரத்தில் நான் கேட்டிருந்த ஒரு பாட்டு அப்போது என் நினைவுக்கு வந்தது. ஏழை நாடோடிகளின் அந்தப் பாட்டு, இந்தச் சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருந்தியது. விரைந்து சென்ற வெள்ளலைகளையும் நுரையினூடே துருத்திக் கொண்டிருந்த மழமழப்பான பருத்த பாறைகளையும் நோக்கி, அந்தப் பாட்டைப் பாடினேன்:

"கொந்தளிக்கும் ஆறு,
குமிழ்த்துப் பொங்கும் பெருக்கு,
எந்த வகையில் கடப்பேன்,
நான் அறியேன் அம்மா!

நொய்ந்த நோஞ்சல் குதிரை,
நீண்ட வழிப் பயணம்!
என்றும் இலக்கைச் சேரேன்,
இதை அறிவேன் அம்மா!

தொத்தல் குதிரை பருக்கைக்
கல்லில் நடந்து துடிக்கும்,
முற்றும் புழுதி என்றன்
மூச்சில் நிறையும் அம்மா!

ஆட்கள் பறிக்க மறந்து,
பழுத்திட்ட வெள்ளரியைக்
காட்டிலுமே மஞ்சள்
பாரித்திட்டேன் அம்மா!

ஏடி, பிறை நுதலி,
நிமிர்த்து புருவ வில்லை,
நாடும் என் உளத்தின்
மதுவை முற்றும் பருகு!

அந்தக் கரையில் ஒளிரும்
அழகி, உன்றன் வீடு.
எந்தன் உயிரும் வழங்க
வருந்தேன், உறுதி சொல்வேன்!

என்னை உங்கள் இடத்துக்கு
ஈர்த்த்துதான் எதுவோ?
இன்னும் அறியேன், வெறுமே
இரங்கி அழுவேன், அம்மா!

உன்றன் நுண்ணிடைதான்
ஒளிரும் வெண்மையாக--
துன்றும் ஆடை பட்டோ,
அன்றேல் சீட்டி தானோ?

விரையும் ஆற்றுக்கில்லை
இரவோ அன்றிப் பகலோ,
நுரைகள் சுழித்துப் பொங்க
இரையும் வெள்ளம், அம்மா!

என்னை விடவும் மேலோ,
உண்மையாகச் சொல்லு--
உன் உளம் கவர்ந்த
அந்த ஆண்மகன்தான்?

அக்கரையில் காண்பேன்
அருமையான கலசம்.
பொற்கலம் கண்டு
பூரிப்பேன், அம்மா!

கையை நீட்ட மட்டும்
எனக்கு முடிந்திடாது--
பைய எடுத்து நீரால்
நிறைக்க இயலேன், அம்மா!

பொங்கி நுரைக்கும் பெருக்கை
நீந்திக் கடத்தல் கடினம்.
தங்கு தடை இல்லாத
வழியே எளிது, அம்மா!

வேண்டும் இதற்குத் துணிவு,
அற்ப விரைவு அல்ல.
வேண்டும் தயக்கம் அற்ற
துணிவு ஒன்றே, கண்டாய்!

வீரம் வேண்டும் அன்பா,
நாடோடிக்கு, மதுவை
ஆரப் பருக விரும்பின்,
அடியொட்டக் குடிப்பாய்!"

பாடி முடித்த்தும் எனக்கு உண்மையாகவே தாகம் எடுத்தது. முழங்காலளவு நீரில் நின்று இரண்டு கைகளாலும் சில மடக்குகள் இனிய ஆற்றுநீரை அள்ளிக்குடித்தேன். சில்லென்றிருந்தது, பற்கள் உதிர்ந்துவிடும்போல. தலை நிமிர்ந்தவன், முதிய உழவன் ஒருவன் நோஞ்சல் குதிரை ஏறி ஆற்றுக்கு வரக் கண்டேன். நான் அவனை எதிர்கொண்டு ஓடி, அவன் மேலங்கித் தலைப்பைப் பிடித்துக்கொண்டு, என்னையும் மறு கரை சேர்க்கும்படி கெஞ்சினேன்.
"நல்ல ஆள்தான்" என்று சிடுசிடுப்புடன் கூறி, குதிரையைக் காட்டி, "பார்த்தாயா, எப்படி எலும்புந்தோலுமாய் இருக்கிறது என்று? இப்போதுதான் குட்டி போட்டிருக்கிறது. தவிர சுமையும் கனம். இரண்டு ஆண்கள் இதன்மேல் சவாரி செய்வது வெட்கக்கேடு" என்றான்.

ஆனால் நான் விடாமல் மன்றாடவே அவன் சிடுசிடுப்புடன் இசைந்தான்.

அக்கரை சேர்ந்தபின், கலைந்த சுமையை அவன் சரிப்படுத்துதற்குள் அந்த ஆற்றின் பெயரையும் அவனைப்பற்றிய விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
அந்தக் கரைக்கு அருகே இருந்த கிராமத்தைச் சேர்ந்த முந்திரித் தோட்டக்காரன் அவன். என்னைப்பற்றிய அவசியத் தகவல்களை அவனும் விசாரித்து அறிந்துகொண்டான். நான் வீடின்றித் திரியும் அனாதை, சுற்றமோ இனமோ அற்றவன், தலை சாய்த்துப் படுக்கவும் வறட்டு ரொட்டித்துண்டு பெறவுங்கூடப் புகல் அற்றவன் என்று கேள்விப்பட்டதும் கிழவன் எனக்குச் சில யோசனைகள் கூறினான். கிராமத்தில் பிரதேச நிர்வாக அதிகாரி ஸரீபாய் என்பவன் இருப்பதாகவும் அவன் பிரபல ஜமீந்தார் என்றும் சொன்னான் கிழவன். ஜமீந்தாரின் ஆப்பிள் தோட்டம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விசாலமானது. எப்போதுமே அங்கே உழைக்கும் கரங்களுக்குத் தேவை உண்டு. இப்போதோ, ஆப்பிள் முதிரும் பருவம். எனவே இந்தத் தேவை இன்னும் அதிகமாய் இருக்கும். ஜமீந்தார் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுக்க மாட்டான்--நான் மலிவான கூலிக்கு இசைவேனே, அதனால். இன்றே இரவைப் பண்ணைக் கூலியாட்களுடன் கழிக்கலாம். தானே எனக்கு வழி காட்டுவான்-- இதுவே அவன் தெரிவித்த தகவல்...

முதிய முந்திரித் தோட்டக்காரன் என்னை ஒரு சிறு மட்ட வீட்டுக்கு அழைத்துப் போனான். அதில் சுமார் இருபது பண்ணைக் கூலியாட்கள் இருந்தார்கள். எல்லோருமே கிழவர்கள், அல்லது மிகவும் வயதானவர்கள். நான் முறைப்படி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தேன். அவர்கள் மகிழ்வுடன் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஸரீபாயிடம் கூலி வேலை செய்ய விரும்புவதாக நான் சொன்னதும் அவர்களில் ஒருவன் கூறினான்:


"அடே மகனே. இங்கே நீ என்ன செய்யப் போகிறாய்? நீ இன்னும் இளையவன். வாழ்க்கை மதிப்புள்ளது. இங்கே உன் வாழ்க்கை வீணே பாழாகிவிடும். நேரம் இருக்கும் போதே ஏதேனும் நல்ல ஊதியம் தரும் தொழிலைக் கற்றுக்கொள்." --இப்படிச் சொல்லிவரும் போதே என் முகத்தில் தென்பட்ட சோர்வைக் கண்டு, "அட ஒரு பத்து, பன்னிரண்டு நாட்கள் வேலை செய்யலாம், பரவாயில்லை. உன் நிலைமையைச் சீர்படுத்திக்கொள். அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம்" என்று நல்லியல்புடன் கூறினான்.

மண் குவளையில் ஒரு கரண்டி சோளக் கஞ்சி ஊற்றி இரண்டு ரொட்டித்துண்டுகளுடன் எனக்குக் கொடுத்தான். நான் அவற்றை நல்ல பசியுடன் சாப்பிட்டேன்.


அப்புறம் படுத்துக்கொள்வதற்கான இடத்தை எனக்கு அவர்கள் காட்டினார்கள். ஆப்பிள் வைப்பதற்கான இரண்டு காலிப் பெட்டிகளைக் கட்டிலாகவும் மரச்சீவல் குவியலைத் தலையனையாகவும் வைத்துக்கொண்டு படுத்தேன். படுக்கை அருமையாக அமைந்துவிட்டது. உறக்கமோ கரும்பாய் வந்தது. மௌல்வியின் தொழுகைக்கூடத்தைவிட இங்கே வெதுவெதுப்பாய் இருந்தது. தவிர பலபலவென்று விடிவதற்குள் தங்கள் பிரார்த்தனைகளால் எழுப்பிவிட ஸூஃபிகளும் இங்கே இல்லை.


காலையில் ஜமீந்தாரிடம் போனேன். ஆரம்பத்தில் அவன் மேலுக்குக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான். ஆப்பிள்கள் செங்கல்கள் அல்ல, அவற்றைக் கையாளத் திறமை வேண்டும் என்றான். பின்பு கூலி விஷயத்தில் நன்றாகப் பேரம் பண்ணினான். மாதத்துக்குச் சுமார் இரண்டேகால் மணங்கு ஆப்பிள்கள் கூலி என்று முடிவில் ஒத்துக்கொண்டான். இந்த ஆப்பிள்கள் முதிர்ந்தவையும் பிஞ்சுகளுமாகப் பலதரப்பட்டவையாக இருக்கும் என்று வேறு நிபந்தனை சேர்த்தான்! அறியாச்சிறுவன் என்று ஏமாற்றப் பார்க்கிறான் என்பது குருடனுக்குக் கூடத்தெரியக்கூடியதாக இருந்தது. எனக்குக் கடுங்கோபம் வந்தது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவில்லை. என்னிடமோ இழப்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே ஒரு நிபந்தனை
போடத் தீர்மானித்தேன். சற்று யோசித்துவிட்டுச் சொன்னேன்:


"ஜமீந்தார் ஐயா, நாம் கூலியெல்லாம் பேசி முடிவு பண்ணிவிட்டோம். ஆனால் என்னிடம் உள்ள ஒரு குறையை உங்களிடமிருந்து மறைக்க மனச்சாட்சி இடந்தர மாட்டேன் என்கிறது. இதை நான் சொல்லிவிடாவிட்டால் ஒப்பந்தம் இஸ்லாம் மத விதிகளின் பிரகாரம் செல்லுபடி ஆகாது... என்னிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு, என்றாலும்..."

"சரி, சரி சொல்லித்தொலை. என்ன குறை உன்னிடம்? தூங்கும்போது துணிகளை நனைத்துக்கொள்கிறாயோ? வலிப்பு வருவது உண்டோ?"

"இல்லை ஜமீந்தார் ஐயா, இதெல்லாம் கிடையாது. ஆனால் குழந்தையிலிருந்தே எனக்கு உள்ள கெட்ட பழக்கம் என்ன என்றால் சமயாசமயங்களில் என் விருப்பம் இல்லாமலே பொய் சொல்லுவேன். என்னால் இதைத் தவிர்க்க முடியாது. அப்புறம் நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜமீந்தார் ஐயா, சொல்லிவிட்டேன். கூலி நீங்கள் சொன்னபடியே கொடுக்க வேண்டும்!"

"அட, குட்டிப் பிசாசே! தந்திரக்காரன் நீ, பையா, நல்லது, வேலை செய்யப் போ. அடிக்கடி மட்டும் பொய் சொல்லாதே!..."


இந்த மாதிரி நான் ஜமீந்தாரின் பண்ணைக்கூலியாள் ஆகிவிட்டேன்! என் வேலை ரொம்பக் கடினம் அல்ல. ஆப்பிள் மரங்களுக்கு முட்டுக்கால் கொடுப்பது, விழுந்த ஆப்பிள்களைச் சேகரித்து உலர்த்துவது, ஜமீந்தாருக்குப் பணம் தேவைப்படும் போது, நன்கு முதிராத ஆப்பிள்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு தர்பாஜா அல்லது ஸரீ-அகாச்சுக்கு விற்கப் போவது, தோட்டத்தைப் பேணிப் பாதுகாப்பது--இவையே என் வேலை. .. இவை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஜமீந்தாரின் பாழாய்ப்போன சுபாவந்தான் தலை வேதனையாய் இருந்தது. இவ்வளவு நச்சுப்பிடுங்கியை நான் அவனுக்கு முன்னும் அப்புறமும் கண்டதே இல்லை. இங்கே வேலைக்கு அமர வேண்டாம் என்று யோசனை சொன்ன முதிய பண்ணைக்கூலியாள் சரியாகவே கூறினான். ஏதேனும் காரியமாக ஸரீபாயிடம் போனால் அவனிமிருந்து லேசில் விடுபட முடியாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடலாம். ஒவ்வோர் அற்ப விஷயத்துக்குப் பிறகும் "அப்புறம் என்ன?" என்ற ஒரே கேள்வியைப் பன்னிப் பன்னிக் கேட்கும் படுமோசமான வழக்கம் அவனிடம் இருந்தது. உதாரணமாக நீங்கள் அவனிடம் வந்து, "கந்தீல் ஆப்பிள் பழுத்துவிட்டது" என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இது புரியும் விஷயந்தானே என்கிறீர்களோ? ஆனால் ஆவனோ, "அப்புறம் என்ன?" என்பான். "ஆப்பிள்களைப் பறிக்க வேண்டும்" என்பீர்கள் நீங்கள். அவனோ, சாபத்தீடான அதே வெட்டிக் கேள்வியை மறுபடி கேட்பான், "அப்புறம் என்ன?" என்று. "விற்க வேண்டும்" என்று சொல்வீர்களாக்கும். அவ்வளவுதானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. அவனால் நிறுத்த முடியாது. "சரி, அப்புறம் என்ன?" என்பான். இதற்கு மட்டும் பதில் உங்களிடம் தயாராக இல்லையோ, சரியான ஆபாசத்திட்டு வாங்கிக்கட்டிக் கொள்வீர்கள். சில வேளைகளில் முதுகில் பளீரென்று சவுக்கடி கூடக் கிடைப்பது உண்டு.


வியப்பு அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா? இந்த மாதிரி ஆட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டந்தான்! அல்லாவிடம் பாவ புண்ணியப் பேரேடுகளில் சரியானபடி கணக்கு எழுதப்படுவதில்லை என நினைக்கிறேன். அதுதான் உலகத்தில் ஏற்படும் எல்லாக்குழப்பங்களுக்கும் மூல காரணம். நல்லதிர்ஷ்டமும் துரதிர்ஷ்மும் உரியபடி கிடைக்க வேண்டியவர்களுக்கு அன்றி யார் யாருக்கோ வாய்க்கின்றன. ஏற்கனவே அப்பத்தின்மீது நெய்
மிதந்து கொண்டிருந்தது ஸரீபாய்க்கு. செல்வம் கணக்கில்லாமல் கொட்டிக் கிடந்தது. இது போதாது என்று சுவாலாச்சியைச் சேர்ந்த யூஸூஃப்--கந்தோரிடம் அவனுடைய பழத்தோட்டம், வீடு, அதிலுள்ள தட்டுமுட்டு சாமான்கள் எல்லாவற்றையும் வேறு ஏதோ சூதாட்டத்தில் ஜெயித்துவிட்டான்... இந்தப் பழத்தோட்டம், சிறப்பாக குளுகுளுவவென்று காற்று வீசும் கொடி வீடு, ஸரீபாயின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. ஆகவே அவன் நெடு நேரம் சிந்திக்காமல் ஓர் இளம் கிர்கீஸியப் பெண்ணை அங்கே இன்னொரு தரமாக மணந்து கொண்டான். இப்போது அடிக்கடி அங்கே போய், பத்து, பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வருவான்...


இம்முறையும் ஸரீபாய் தன் கிர்கீஸிய மனைவியிடம் போயிருந்தான். இங்கேயோ ஆப்பிள்கள் பழுத்துவிட்டன, உதிரவும் தொடங்கின. ஆனாலும் எஜமானின் உத்தரவு இல்லாமல் பறிப்பை ஆரம்பிக்க எவனும் துணியவில்லை. இதற்கிடையே குதிரைகளின் தீனியும் தீர்ந்து போய்விட்டது. பண்ணையாட்கள் அரைப்பட்டினி கிடந்தார்கள். அப்படியும் ஜமீந்தாரிடம் போக ஒருவருக்கும் விருப்பம் இல்லை. அவனுடைய "அப்புறம் என்ன?" என்ற
கேள்வி எல்லோருக்கும் அவ்வளவு கசப்பாயிருந்தது. ஆனால் போகாமல் வேறு வழியும் இல்லை. எனவே மாலையில் எங்கள் பொதுவீட்டில் நாங்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டோம்--ஜமீந்தாரிடம் யார் போவது என்று தீர்மானிப்பதற்காக. என் தலைவிதி, சீட்டு எனக்கு விழுந்து தொலைந்தது.


இது எனக்கு களிப்பு ஊட்டியது. என்று நான் சொன்னால் பெரும் பாவம் செய்தவன் ஆவேன். பாவங்களோ, ஏற்கனவே என்மேல் ஏராளமாய்ச் சுமந்திருக்கின்றன. ஸரீபாயுடன் நடக்கப்போகும் உரையாடலை எண்ணிப் பார்த்த போதே எனக்குக் குப்பென்று வியர்த்துவிட்டது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கில்லை. மறுநாள் காலை எனக்கு ஒரு குதிரை தரப்பட்டது. அதில் ஏறிக்கொண்டு சுவாலாட்சிக்குப் புறப்பட்டேன். நடக்கப் போகும் உரையாடலை வழி நெடுகப் பல விதமாகக் கற்பனை செய்து பார்த்தேன். ஜமீந்தாரின் அப்புறம் என்ன?" என்ற முடிவற்ற கேள்விக்கு எப்படி எப்படிப் பதில் அளிப்பது என்று சிந்தித்தேன். திடீரென்று என் கற்பிதக் `குறை` எனக்கு நினைவு வந்தது. வந்ததுமே எனக்கு உண்டான மகிழ்ச்சியில் கைகள்கூட அரிக்கத் தொடங்கிவிட்டன.


நான் போனபோது ஜமீந்தார் வெந்த ஆட்டுத்தலை இறைச்சியைத் தன் உளங்கவர்ந்த கொடிவீட்டில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தான். நான் அவனிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். சந்தடி செய்யாமல் வாயில் அருகே உட்கார்ந்தேன்.

“ஊம்? என்ன காரியமாக வந்தாய்?” என்று கேட்டான்.

“சும்மாதான், ஜமீன்தார் ஐயா. உங்களுக்காக நாங்கள் எல்லோரும் ஏங்கிப் போனோம். உங்களைப் பார்த்து வரும்படி மற்றவர்கள் என்னை அனுப்பினர்கள்...”

“நல்லது, நல்லது, அருமையான ஆட்கள். ஆனால் வெட்டியாக உன்னை
அனுப்பியிருக்க மாட்டார்களே. ஏதேனும் காரியம் இருக்கும். சொல்லு, அப்புறம் என்ன?”

நான் தலையைக் குனிந்து கொண்டு தரையைப் பாத்தபடியே சொன்னேன்:

“அதுதான் வந்து... உங்கள் கத்தி இருக்கிறதே, தந்தப் பிடி வைத்தது, அது முறிந்து போயிற்று. அதைத்தான் உங்களிடம் சொல்ல வந்தேன்... “

“அப்படியா, அப்புறம் என்ன? எப்படி முறிந்தது அது? நாசமாய்ப்போகிற பயல்களா, என்னத்தை நறுக்கினீர்கள் அதைக் கொண்டு? வீட்டிலுள்ள மற்றக் கத்திகள் எல்லம் தொலைந்து போய்விட்டனவா என்ன?”

“உங்கள் வேட்டை நாயின் தோலை உரித்தோம். அப்போது கத்தி எலும்பில் புகுந்து மாட்டி முறிந்து போயிற்று.”

“என்ன? வேட்டை நாயின் தோலையாவது, உரிக்கவாவது? அதிலும் தந்தப் பிடி வைத்த கத்தியால்? த்தூ! எதற்காக உரித்தீர்கள் தோலை?”

“எங்களுக்கு நேரமில்லை, ஜமீன்தார் ஐயா! நாய் செத்ததுமே அதன் தோலை உரிக்க வேண்டியிருந்ததே. இல்லாவிட்டல் தோல் கெட்டுப் போகுமே. அதனால் தான் வேறெரு கத்தியைத் தேடநேரம் இல்லை.”

“நீங்கள் எல்லோரும் அடியோடு பாழாய்ப்போக! வேட்டை நாய் எதனால் செத்தது?”

“செத்த குதிரையின் மாமிசத்தை அளவுமீறித் தின்றுவிட்து.”

“அதற்குச் செத்த குதிரையின் இறைச்சியைக் கொடுத்தது யார்? அது கிடக்க, குதிரை சாக வேண்டிய காரணம் என்ன?”

“ஒருவரும் கொடுக்கவில்லை, ஜமீன்தார் ஐயா, அதுவேதான் தின்றது. குதிரையும் வேற்றருடையது அல்ல, உங்களுடையதேதான். நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை...”

ஜமீன்தார் கணப்போது திக்கு முக்காடிப் போனான்.

“டேய், பையா, முதலில் யோசி, அப்புறம் பேசு... நீ என்ன சொன்னாய், நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை செத்துப் போய் விட்டதா? அல்லாவே, காப்பாற்றும்! அது எப்படியடா சாக முடிந்தது?”

“அது வேலைக்கு லாயக்கற்றது, அதனால்தான்.”

“வேலைக்கு லாயக்கற்றதா? எந்த வேலைக்கு? என்னடா உளறுகிறய்?”

“நான் ஒன்றும் உளறவில்லை. அது தண்ணீர் வண்டியை இழுக்க உதவாது என்று தெரிந்தது. அதை வண்டியில் பூட்டியதே இல்லை போலிருக்கிறது. இப்போது பூட்டினேம், அது தண்ணீர் வண்டியை இழுத்து வரும் போது சுமை தாங்க மாட்டாமல் செத்துப்போயிற்று.”

ஜமீன்தார் இருக்கை விட்டுத் துள்ளி எழுந்து, “அட கயவாளிப் பயலே, என்னடா கன்னா பின்னா என்று பிதற்றுகிறாய்? சுமை வண்டிக் குதிரைகள் அத்தனை இருக்கும்போது, பந்தய ஓட்டத்திற்காக நான் ஊட்டி வளர்த்த ஒரே குதிரையைத் தண்ணீர் வண்டியில் பூட்டும் யோசனை எவனுக்குத் தோன்றிற்று சொல்லடா, கடைத்தேறா ஜென்மமே!” என்று தொண்டையைப் பிய்த்துக் கொண்டு கத்தினான். குப்பென்று இரத்தம் ஏறி அவன் முகம் சிவுசிவுத்தது. உதடுகள் துடித்தன.

“ஜமீன்தார் ஐயா, தீப்பிடித்த பிறகு, பந்தயக் குதிரையா வண்டிக் குதிரையா என்று நிதானித்துப் பார்க்க நேரம் ஏது? கைக்கு அகப்பட்ட குதிரையை வண்டியில் பூட்டினேம், ஒரு வாளித் தண்ணீராவது கொண்டு வாட்டுமே என்று!”

நான் பேசிக் கொண்டிருக்கையில் ஜமீன்தார் தன் உணர்வு இன்றியே கையிலிருந்த ஆட்டு நாக்கை ஒரு துண்டு கடித்தான். ஆனால் தீ விபத்து பற்றிய என் சொற்கள் அறிவுக்கு எட்டியதுமே கபக்கென்று அதை விழுங்கவே அது தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது. அரும்பாடு பட்டு அதை உள்ளே செலுத்தி விட்டு, எருதுபோலத் துருத்திய விழிகளை என்மேல் நாட்டியவாறு ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்திருந்தான். ஆட்டின் நாக்குக்குப்பதில் சொந்த நாக்கையே விழுங்கிவிட்டானோ என்று நான் பயந்துகூடப் பேனேன். ஆனால் அவன் சற்று நேரத்துக்குப் பேச்சு இழந்துவிட்டான், அவ்வளவு தான். முடிவில் அவனுக்கு மறுபடி பேச்சு வெடித்துக் கிளம்பிற்று.

“நீ... உனக்கு என்ன, கிறுக்கு பிடித்துவிட்டதா? தீப்பிடித்துக் கொண்டது என்றாயே, என்ன அர்த்தம் அதற்கு? எங்கே பிடித்துக் கொண்டது தீ? எதனால் பிடித்துக் கெண்டது?...”

“நான் நல்ல மூளையோடு தான் இருக்கிறேன், எஜமானே. நெருப்பு முதலில் குதிரை லாயத்தில் பிடித்தது. பாவம், எல்லாக் குதிரைகளும் தீக்கிரை ஆகிவிட்டன.”

“என்ன... என்ன... என்ன காரணத்தால் குதிரை லாயத்தில் நெருப்பு பற்றியது?”

“அறியேன். மற்றவர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். அதாவது களஞ்சியத்தில் பிடித்த நெருப்புதான் குதிரை லாயத்துக்குப் பரவி இருக்க வேண்டும்.”

“அட என் அல்லாவே! எத்தகைய பேரிடி என்மேல் விழுந்துவிட்டது. களஞ்சியத்தில் நெருப்பு மூளும்படி எதுவும் இல்லையே. கோதுமையும் அரிசியும் கொழுப்பும் துணிகளும் தாமே இருந்தன. அவை தாமே பற்றி எரியக் கூடியவை அல்லவே!”

“பொறுங்கள் எஜமான், பூராவும் சொல்ல விடுங்கள். பண்ணை வீட்டிலிருந்து நெருப்பு களஞ்சியத்துக்குத் தாவிற்று. அங்கிருந்து குதிரை லாயத்துப் பரவிற்று. இப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் போயிற்று.”

“அப்படியானால் வீடும் எரிந்து போயிற்றா?”

“வீடு சாம்பலாகிவிட்டது, களஞ்சியமும் குதிரை லாயமும் வெந்து போய்விட்டன, குதிரைகள் நெருப்பில் மடிந்தன, செம்பழுப்புக் குதிரை செத்துப் போயிற்று, கத்தி முறிந்து போய்விட்டது... "

“ஒ-ஒ-ஒ! அட துன்பமே! ஐயோ,வீடு எதனால் தீப்பிடித்துக் கொண்டது? ஊம்?”

“மெழுகு வந்தியால், எஜமான், மெழுகு வத்தியால்.”

“மெழுகு வத்தியாவது ஒன்றவது? உனக்கென்ன மூளை அறவே பிசகிவிட்டதா? என் விட்டில் எங்காவது மெழுகு வத்திகள் எரிவது உண்டா? நான் தாஷ்கந்திலிருந்து அத்தனை விளக்குகள் வாங்கிவந்தேனே, அவை எல்லாம் எங்கே போய்விட்டன? ஊம்? எங்கே போய்த் தொலைந்தன? மண்ணெண்ணெய் பீப்பாய்க் கணக்கில் வாங்கி, ஒரு வருஷம் பூராவுக்கும் சேமித்து வைத்திருந்தேனே மெழுகு வத்திகளை ஏன் ஏற்றினீக்ளாம்?”

“எஜமான், ஆளைப் பேசவே விடமாட்டேன் என்கிறீர்களே! ஒருவர் இறந்துபோனபின் அவர் சவத்துக்கு மேலே மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றுவதை எங்காவது கண்டதுண்டா?”

இதைக் கேட்டதும் ஜமீன்தார் ஒரேயடியாக முடங்கிவிட்டான். என் புளுகுகளால் அவன் மூளை அடியோடு குழம்பிப்போய்விட்டது, எந்த உலகில் இருக்கிறேம் என்பதே அவனுக்கு விளங்கவில்லை என்பது தெரிந்தது. இதற்கிடையே நான் குழந்தைக்கு விளக்குவதுபோல அளந்து கொண்டு போனேன். “உங்களுக்குத் தெரியாதா எஜமான், பிணத்துக்கு மேலே ஏற்றுகிற விளக்குக்கு விட்டில் பூச்சி பறந்து வர வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் ஆவி எதற்குள் புகும்? அதற்காகத்தானே கோப்பையில் தண்ணீர் நிரப்பி ஆப்பிள் கிளையை அதிலே வைப்பார்கள். விட்டில் பறந்துவந்து
முதலில் கிளைமேல் உட்கார்ந்து களைப்பாறும், அப்புறம் சுற்றிப் பறக்கத் தொடங்கும்...”

ஜமீன்தாருக்குப் பேசத் திராணி இல்லை. கையசைப்பால் என்னைப் பேசாதிருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, “யார்... யார் இறந்து போனது?” என்று ஈன சுரத்தில் வினவினான்.

நான் உடனே கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு உரக்க ஒப்பாரி வைத்து, அழுகைக்கு இடையே சொன்னேன்:

“உங்கள் இளைய... மகன், ஜயோ! பூரிபாய்வச்சா... ஒ-ஒ-ய்யோ... மரத்தில் ஏறி... ஐயையோ... பறவைக் குஞ்சைப் பிடிக்கப் போனார்... ஆ- ஆ- ஆ... ம... மரத்திலிருதந்து... வி... விழுந்து... இறந்து போனர்... ஒரே ஒரு தரம்... மட்டும்... “அப்பா!” என்று கத்தினாராம்...”

ஜமீன்தார் நான் சொன்னதை முடிவுவரை கேட்டானோ இல்லையோ, தெரியாது. தேநீர்க் கோப்பையால் மண்டையில் அடித்துக்கொண்டான். கோப்பை உடைந்து போயிற்று. அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் தேயிலைத் துணுக்குகளுடன் கன்னப் பொருத்தில் வழிந்தது. அவன் தாடியைப் பிய்த்துக் கொண்டு கோவெனக் கதறி அழுதான். நான் அவனோடு கூடி அழுதேன்.
முடிவில் இருவரும் அடங்கினோம். ஜமீன்தார் உட்கார்ந்து துயரம் ததும்ப அசைந்தாடினான்.

எல்லைமீறிச் சென்றுவிட்டோம், ஏதாவது ஆறுதல் அளிக்கக்கூடியதாகக் கதைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

லேசான விம்மலுடன், ஆனால் களி பொங்கும் முகத்துடன் சொன்னேன்: “ஐயோ, எஜமானே. உங்கள் மகன் மாண்டுபோனார், வீடு சாம்பலாகி விட்டது, குதிரைகள் வெந்துபோயின, வேட்டை நாய் மண்டையைப் போட்டுவிட்டது, இருந்தாலும்...”

ஜமீன்தார் என்னை வெறுப்புடன் நோக்கினான். எனவே நான் ஆறுதல் அளிக்கும் விஷயத்துக்கு விரைவில் வரும்பொருட்டு இந்த அவலப் பேச்சை நடுவிலேயே விட்டுவிட்டேன்.

“இருந்தாலும் அல்லா உங்களுக்கு அபரிமிதமாகப் பரிசு வழங்குவானாக! ஜமீன்தார் ஐயா, ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன். அது எல்லாத் துயரங்களிலும் உங்களைத் தேற்றும்!” என்றேன்.

“உஹ்” என்ற சீறல் ஒசை அவனிடமிருந்து வெளிப்பட்டது.

“அடியோடு நாசமாய்ப்போக உன் நல்ல சேதி! இன்னும் என்ன சேதி கொண்டுவந்திருக்கிறாய், உருப்படாத பயலே, சொல்லித் தொலை!” என்றான்.

“உங்கள் நடுவுள்ள மகள் அதல்-அபா அழகான ஆண் மகவைப் பெற்றெடுத்திருக்கிறாள். எந்தச் செல்வமும் அந்தக் குழந்தைக்கு ஈடாகாது!” என்றேன்.

“என்ன –அ?” என்று பொங்கினான் ஜமீன்தார். அவன் கண்கள் பிதுங்கி விட்டன. எந்த அதல்-அபா? --கணநேரம் பேசாதிருந்த பின் அவன் எருது போல எக்காள முழக்கம் இட்டான்: “என் மகளுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே!”

நான் தோள்களைக் குலுக்கினேன்:

“நாங்களுந்தாம் ஒரே ஆச்சரியம் அடைந்தோம். ஆனால் அல்லா திருவுளம் கொண்டால் கலியாணம் ஆகாத கன்னிகளுக்குக் கூடப் பிள்ளை வரம் அருள முடியுமே. ஆனால் குழந்தை இருக்கிறதே, ஜமீன்தார் ஐயா, அதுதான் உங்கள் பேரப்பிள்ளை, என்ன அழகு தெரியுமா?” -–நொடிநேர இடைவெளி விட்டு, அடக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தேன்: “பாதல் தெரியும் அல்லவா? அவன்தான், உங்கள் வண்டிக்காரன்? அவனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது...”

இதை ஜமீன்தாரால் தாங்க முடியவில்லை. அவன் உணர்விழந்து தரை விரிப்பில் சாய்ந்தான். நானும் நேரத்தை வீணாக்க விரும்பாமல் உடனே குதிரையேறிக் கம்பி நீட்டினேன். இவ்வளவு நல்ல சேதிகளுக்குப் பரிசு ஒரு சாட்டையடியோடு நிற்காது. இந்தப் பரிசுக்கு மெய்யாகவே நான் ஏற்றவன் தான். தன்னடக்கம் காரணமாக இதை ஏற்காமலே விட்டுவிடத் தீர்மானித்தேன்.

நான் பண்ணை வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் ஸரீபாயும் தன் வெண் மஞ்சள் குதிரைமேல் ஏறி அங்கே வந்து சேர்ந்தான். இடைக்குட்டை கட்டிக் கொள்ளாமையால் அவனுடைய மேலங்கி நுனிகள் காற்றில் படபடத்தன. ஒரு கண்ணால் வானையும் மறு கண்ணால் தரையையும் நோக்கியவாறு அவன் சவாரி செய்தான். நம் தலையில் என்ன விபத்து விடியுமோ என்று எண்ணி நான் ஒளிந்துகொண்டேன். ஜமீன்தாரின் வீட்டார் அவனுடைய அழுகையையும் புலம்பலையும் கேட்டு ஏதோ துன்பம் நேர்ந்துவிட்டது என்று முடிவு செய்து அழுது அரற்றியவாறு அவனை எதிர்கொண்டார்கள். ஸரீபாய் குதிரை மேலிருந்து இறங்கினான். அலறல்களும் துயரத் தழுவல்களும் தொடங்கின, அந்தச் சமயத்தில் வெளிவாயிலிருந்து எல்லோருடனும் சேர்ந்து அழுவதற்காகப் பாய்ந்துவந்தான் சளிமூக்கன் பூரிபாய்--ஜமீன் தாரின் இளைய மகன். “அப்பா” என்று வீரிட்டுத் தகப்பனிடம் ஒடினான் அவன். ஸரீபாய் தொப்பென்று தரையில் உட்கார்ந்துவிட்டான். இது தோற்ற மயக்கமா அல்லது ஆவி தான் தென்படுகிறதா என்று அவனுக்குப் பிடிபடவில்லை. அப்புறம் எல்லாம் விளங்கிவிட்டது. குதிரைகள் பத்திரமாய் இருக்கின்றன, வேட்டை நாயும் உயிரோடு இருக்கிறது, பண்ணை வீடு தீக்கிரையாகவில்லை, தந்தப் பிடி வைத்த கத்தி கூடவில்லை மதிப்புள்ள மற்றப் பொருள்களோடு சேதமின்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பவற்றை அவன் தெரிந்துகொண்டான்.

என்னை எல்லோரும் மும்முரமாகத் தேடினார்கள். நான் அவர்களுக்குக் கடுகாய் கொடுத்துவிட்டு அன்று முழுவதும் தலைமறைவாய் இருந்தேன். ஆனால் அடுத்த நாள் நான் அகப்பட்டுக்கொண்டேன். ஆட்கள் என்னைக் கட்டி இழுத்து வந்து ஜமீன்தார் முன்னே நிறுத்தினார்கள். முதல் காரியமாக எனக்கு இருபது சவுக்கடிகள் கிடைத்தன (இவற்றைப் பெறாமல் தப்பவே நான் முயன்றேன்). பிறகு ஜமீன்தார் மூச்சு திணற, முகத்தைக் கோணிக் கொண்டு, “ஏனடா நாய் மகனே, இது என்ன ஏமாற்று வித்தை?” என்று கேட்டான்.

இம்முறை நான் உண்மையாகவே விம்மினேன்--எனக்கு உடம்பெல்லாம் கடுமையாக வலித்தது.

“ஆரம்பத்திலேயே நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே, ஜமீன்தார் ஐயா (விம்மல்), நான் சில வேளைகளில், (விம்மல்) பொய் பேசுவது உண்டு என்று! இந்த வழக்கம் (விம்மல்) குழந்தைப் பருவம் முதலே எனக்கு உண்டு என்று நான் தான் உங்களை எச்சரித்திருந்தேனே, எஜமான் (விம்மல்)!”

“அப்படியா. இதோடு முடிந்ததா உன் புளுகு?”

“இல்லை, ஜமீன்தார் ஐயா, முடியவில்லை...”

“முடியவில்லை என்றால், நீ எல்லாப் பொய்யும் சொல்லித் தீர்ப்பதற்குள் நான் குடும்பத்தை இழந்து வீடு அற்றவன் ஆகிவிடுவேன். தொலை இங்கிருந்து! நீ பிஞ்சிலேயே கருகிப் போவாயாக! வயிறு நிறைய உணவில்லாமல் வாழ்நாள் முழுவதும் தவிப்பாயாக! விரட்டுங்கள் இந்தப் புளுகனை!”

ஆட்கள் என்னைக் கட்டவிழ்த்து வெளியே துரத்தப் பார்த்தார்கள். ஆனால் நானோ, என் கூலியைக் கணக்குத் தீர்த்துக் கொடுக்கும்படிக் கூக்குரல் இட்டேன். ஒரு மாதமும் ஒன்பது நாட்களும் நான் ஜமீன்தார் வீட்டில் வேலை செய்திருந்தேன். ஜமீன்தார் கையை வீசி ஆட்டி என் கணக்கைத் தீர்க்கும் படி கட்டளையிட்டான். சில்லறைச் செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்ட இருபத்திரண்டு கோப்பெக்குகளைப் பிடித்துக்கொண்டான். பூச்சி அடித்த ஆப்பிள் பழங்கள் சுமார் ஒரு மணங்கு ஒரு கோணிச் சாக்கில் எனக்குத் தரப்பட்டன. ஆனால் இது கூட எனக்குத் திருப்தி அளித்தது, மூட்டையை எப்படியோ ஒரு விதமாகத் தோள்மேல் தூக்கிக் கொண்டு மறுபடி சாலையில் நடந்தேன்.

(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

No comments: