Tuesday, 11 March 2008

ஏழு நிறப்பூ

கதை: வாலண்டின் கட்டயேவ்; சித்திரம்: வி. லோசின்; ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபைனா க்ளாகோலேவா; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/books/flower/7.html (இந்தச் சுட்டியை அளித்து உதவியவர்: ராதா ஸ்ரீராம்; ஆங்கில வடிவில் படிக்க இங்கு செல்க)













முன்னொரு காலத்தில் ஷேன்யா என்றொரு சிறுமி வாழ்ந்து வந்தாள்.


ஒருநாள் ஷேன்யாவை அவளுடைய அம்மா, வளைய பிஸ்கோத்துகள் வாங்கிவருவதற்காக ரொட்டிக்கடைக்கு அனுப்பினாள். ஷேன்யா ஏழு வளைய பிஸ்கோத்துகளை வாங்கினாள்: அப்பாவுக்காக ஓமம் போட்டவை இரண்டு, அம்மாவுக்காக கசகசா போட்டவை இரண்டு, அவளுக்காக சர்க்கரை தடவியவை இரண்டு, தம்பி பாவ்லிக்குக்காக சிறிய இளஞ்சிவப்பு நிறமுடைய ஒன்று. வளைய பிஸ்கோத்துகள் பாசிமணிகளைப் போன்று நூலில் கோர்க்கப்பட்டிருந்தன. வளைய பிஸ்கோத்து மாலையை எடுத்துக்கொண்டு ஷேன்யா வீட்டை நோக்கித் திரும்பினாள். அவள் அங்குமிங்கும் பராக்குப் பார்த்தபடி, பெயர்ப் பலகைகளை வாசித்துக்கொண்டு சாவகாசமாக நடைபோட்டாள். அப்பொழுது தெரு நாய் ஒன்று அவள் பின்னாள் வந்து வளைய பிஸ்கோத்துகளைத் தின்னத் தொடங்கியது. முதலில் அப்பாவுக்கான ஓமம் போட்டவைகளையும், பின் அம்மாவுக்குறிய கசகசா போட்டவைகளையும், பின்பு சர்க்கரை தடவிய அவளுடய பிஸ்கோத்துகளையும் தின்றுவிட்டது.



ஷேன்யா அப்பொழுதுதான் வளைய பிஸ்கோத்துகள் கோர்த்த நூல் ரொம்ப இலேசாக இருப்பதை உணர்ந்தாள். அவள் திரும்பிப் பார்த்தபோது நேரம் கடந்துவிட்டது. நூல் கயிற்றில் ஒன்றும் இல்லை; நாய் அப்போதுதான் தம்பி பாவ்லக்கின் சிறிய பிங்க் நிற வளைய பிஸ்கோத்தைத் தின்றுவிட்டு, தாடையை நக்கிக்கொண்டிருந்தது.


'அட பாழாய்ப்போன நாயே!' ஷேன்யா கத்திக்கொண்டு அதன் பின்னால் ஓடினாள். ஓடோடிச்சென்றும் அவளால் நாயைப் பிடிக்க முடியவில்லை.




அப்படியே சென்றவள் வழி தவறிவிட்டாள். ஓடியவள் நின்ற போது தான் ஒரு புது இடத்தில் இருப்பதைக் கண்டாள்.


அங்கு பெரிய வீடுகள் எதுவும் இல்லை, சிறுசிறு வீடுகளே இருந்தன. ஷேன்யா அழத்தொடங்கினாள். அப்பொழுது ஒரு வயதான பாட்டி அங்கு தோன்றினாள்.

'எதற்காக அழுகிறாய், சின்னப் பெண்ணே?' என்று அவள் கேட்டாள். ஷேன்யாவும் அந்தப் பாட்டியிடம் நடந்ததைக் கூறினாள்.



பாட்டிக்கு ஷேன்யாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளைத் தன் சிறிய தோட்டத்துக்கு அழைத்துச்சென்று சொன்னாள்: 'அழாதே. நான் உனக்கு உதவுகிறேன். என்னிடம் வளைய பிஸ்கோத்துகள் இல்லை, காசும் இல்லை, ஆனால் ஒரு அதிசயமான பூ என் தோட்டத்தில் வளர்கிறது. அது ஒரு ஏழு நிறப்பூ; அது நீ என்ன கேட்டாலும் கொடுக்கும்.கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் நீ ஒரு நல்ல பெண் என்று தெரிகிறது. ஏழு நிறப்பூவை உனக்குத் தருகிறேன். அது உனக்கு உதவி செய்யும்.'




இப்படிச் சொல்லிவிட்டு, பாட்டி மலர்ப் படுகையிலிருந்து வெகு அழகான மலர் ஒன்றைக் கொய்தாள். அது பார்ப்பதற்கு டெய்சியைப் போல இருந்தது. அதற்கு ஏழு மெல்லிய இதழ்கள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம். ஒன்று மஞ்சள் நிறம், ஒன்று சிவப்பு, ஒன்று நீலம், ஒன்று பச்சை, ஒன்று ஆரஞ்சு, ஒன்று வயலட், மற்றொன்று வெளிர் நீலம்.



'இதுவொரு சாதாரணமான பூ அல்ல', பாட்டி சொன்னாள். 'அது கேட்ட வரத்தைக் கொடுக்கும். நீ செய்யவேண்டியது ஒரு இதழைக் கிள்ளி எறிந்து இப்படிச் சொல்லவேண்டியதுதான்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



பிறகு உனக்கு என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். உடனே அது நடக்கும்.'



ஷேன்யா பாட்டிக்கு நன்றி சொன்னாள். தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள். அப்பொழுதுதான் அவள் தொலைந்துபோய் விட்டதும், வீட்டுக்கு வழி தெரியாததும் நினைவுக்கு வந்தது.



திரும்பவும் பாட்டியைப் பார்த்து, பக்கத்திலுள்ள மிலீஷியாக்காரரிடம் தன்னை விட்டு விடும்படிக் கேட்க விரும்பினாள். ஆனால் பாட்டி, தோட்டம் இரண்டும் மறைந்துவிட்டிருந்தன. அவள் என்ன செய்வாள், பாவம். வழக்கம் போல அழ ஆரம்பிக்கப் போனாள்; மூக்கைக்கூட கோணிவிட்டாள்; அப்பொழுது சட்டென்று அவளுக்கு மந்திரப் பூவின் நினைவு வந்தது. அது நிஜமாகவே ஒரு அதிசய மலரா என்று இதோ இப்பொழுது தெரிந்துவிடும்! ஷேன்யா மஞ்சள் இதழைக் கிள்ளி எறிந்து விட்டுச் சொன்னாள்:




பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



நான் இப்பொழுதே வளைய பிஸ்கோத்துகளுடன் வீட்டில் இருக்க வேண்டும்!





அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே, தன் வீட்டில் வளைய பிஸ்கோத்துகளுடன் இருந்தாள்!






ஷேன்யா அவற்றை அம்மாவிடம் தந்துவிட்டு, 'உண்மையிலேயே இது அதிசயப் பூ தான். இதை நம்மிடம் இருப்பதிலேயே மிக அழகான பூ ஜாடியில் வைக்க வேண்டும்!'




ஷேன்யா சிறுமிதானே, ஆகவே அவள் ஒரு நாற்காலி மேல் ஏறி நின்று, மேல் தட்டில் இருந்த அம்மாவுக்குப் பிரியமான ஜாடியை நோக்கிக் கைகளை நீட்டினாள். சரியாக அதே சமயத்தில் சில காகங்கள் ஜன்னலை ஒட்டிப் பறந்தன. ஷேன்யாவுக்கு அவை எத்தனை என எண்ணியே ஆக வேண்டும்--ஏழா, எட்டா? விரல்விட்டு எண்ண ஆரம்பித்தாள். அப்பொழுது--டமார்--அந்த ஜாடி தவறி விழுந்து சுக்குநூறாகச் சிதறியது.



'கடவுளே, என்ன ஒரு குழந்தை!' அடுக்களையிலிருந்து அம்மா கோபமாகக் கேட்டாள். 'இம்முறை எதை உடைத்தாய்? என் பிரியமான ஜாடியை அல்லவே!'
'அட, இல்லவே இல்லை அம்மா! நான் எதையும் உடைக்கவில்லை!' ஷேன்யா கத்தினாள். வேகமாக சிவப்பு நிற இதழைக் கிள்ளி, விட்டெரிந்து,முணுமுணுத்தாள்:


பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்




அம்மாவின் அழகான ஜாடியை மீண்டும் முழுதாக்கு!



அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே உடைந்து கிடந்த துண்டுகள் எல்லாம் நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன.



அம்மா அடுக்களையிலிருந்து வந்தாள்--அவளது ஜாடி வழக்கம் போலவே அதனிடத்தில் ஒழுங்காக அமர்ந்திருந்தது. இருந்தாலும், சும்மாவேனும் ஷேன்யாவை நோக்கி விரல்களை ஆட்டி, அவளை வெளியே போய் விளையாடும்படி அனுப்பினாள்.




ஷேன்யா வெளியே சென்றபோது, அங்கு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்--அவர்கள் வட துருவப் பயணிகள். அவர்கள் பழைய மரப் பலகைகளின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்தில் மணலில் ஒரு குச்சி நட்டுவைக்கப்பட்டிருந்தது.




'நானும் விளையாட வரலாமா?' அவள் கேட்டாள்.


'ஊஹூம். அதெல்லாம் முடியாது. உனக்குத் தெரியவில்லை, இது வட துருவம்! எங்களால் வட துருவத்துக்குப் பெண்பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல முடியாது!'



'இது ஒன்றும் வட துருவம் அல்ல. வெறும் பலகைக் குவியல்தான்!'


'இதெல்லாம் பலகைகள் அல்ல, பனிப் பாளங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாமல் போய்ச்சேர் இங்கிருந்து! பனி உடைய ஆரம்பிப்பது உனக்குத் தெரியவில்லையா?'






'அப்படியானால் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்?'



'இல்லை. போ, போ!'



'எனக்கென்ன கவலை? நீங்கள் யாரும் இல்லாமலேயே என்னால் வட துருவத்துக்குப் போக முடியும். அதுவும் இப்படிப் பாடாவதியான பலகைக் குவியல் இல்லை. நிஜமான வடதுருவம். போய் வருகிறேன்' ஷேன்யா வெளி முற்றத்தின் ஒரு மூலைக்குச் சென்று, உடையின் பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து, நீல இதழைக் கிள்ளியெறிந்துவிட்டுச் சொன்னாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்


இந்த நிமிடமே என்னை வட துருவத்தில் இருக்கச் செய்!



அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே நாலாப்புறமும் பனிக்காற்று வீசிற்று; சூரியன் மறைந்தது; எல்லாம் ஒரே இருட்டாகியது; அவள் காலடியில், பூமி ஒரு பம்பரம் போலச் சுற்றியது.



ஷேன்யா தான் வட துருவத்தில் தன்னந்தனியாக இருக்கக் கண்டாள். அவள் அணிந்திருந்தது ஒரு சிறிய, வேனில் காலத்துக்கான உடை; காலில் சாதாரண ரப்பர் செருப்புகள்; குளிரோவெனில் மிகக் கடுமையானதாக இருந்தது!



'ஐயோ, அம்மா, நான் உறைகிறேன்!' அவள் அலறினாள். ஆனால், அவள் கண்ணீர் பனித்துளிகளாக மாறி அவளுடைய மூக்கிலிருந்து தொங்கியது. இதற்கிடையே ஏழு துருவக்கரடிகள் ஒரு பனிக்குன்றுக்குப் பின்னாலிருந்து தோன்றி, அவளை நோக்கி வந்தன. அவை ஒன்றுக்கொன்று பயங்கரத்தில் கூடுதலாக இருந்தன: முதலாவது துள்ளுவது, இரண்டாவது தீயது, மூன்றாவது கடுகடுப்பானது, நான்காவது ஒல்லி, ஐந்தாவது தொப்பிவைத்தது, ஆறாவது பிராண்ட விரும்புவது, ஏழாவது எல்லாவற்றிலும் பெரியது.






ஷேன்யா பயந்து நடுங்கிவிட்டாள். உறைந்த விரல்களால் பச்சை நிற இதழைக் கிள்ளியெறிந்து முடிந்தவரை சத்தமாகக் கத்தினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



நான் இப்பொழுதே வீட்டு முற்றத்தில் இருக்கும்படி செய்!




அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே மீண்டும் முற்றத்தில் இருந்தாள். பையன்கள் அவளைக் கேலி செய்தார்கள்.





'உன் வட துருவம் எங்கே, புத்திசாலியே?'


'இப்பொழுதுதான் அங்கிருந்து வருகிறேன்.'





'நாங்கள் உன்னை அங்கு பார்க்கவில்லையே. அதை நிரூபி!'


'பார்த்தீர்களா, இங்கே இன்னும் ஒரு பனித்துளி இருக்கிறது'

'அது ஒன்றும் பனித்துளி அல்ல. அது வெறும் பஞ்சுத் துகள், உளறாதே'



ஷேன்யா அந்தப் பையன்கள் ரொம்ப மோசம், அவர்களுடன் இனி விளையாடவே கூடாது என்று நினைத்துக்கொண்டாள். ஆகவே அடுத்த வாசலுக்கு அங்கிருந்த சிறுமிகளுடன் விளையாடச் சென்றாள்.




அந்தச் சிறுமிகள் ஏராளமான விளையாட்டுச் சாமன்கள் வைத்திருந்தார்கள். ஒரு சிறுமியிடம் பொம்மை வண்டி இருந்தது, ஒரு சிறுமியிடம் பந்து, ஒரு சிறுமியிடம் தாண்டும் கயிறு, ஒரு சிறுமியிடம் மூன்று சக்கர சைக்கிள், ஒரு சிறுமியிடம் பொம்மை-ஜோடுகள் அணிந்த பொம்மைத்தொப்பி வைத்த பேசும் பொம்மை இருந்தது. ஷேன்யா ரொம்ப வருத்தப்பட்டாள். பொறாமையால் அவள் கண்கள் பூனைக்கண்களைப் போல் பச்சையாகிவிட்டன.


'ஹூம். யாரிடம் மிகச்சிறந்த விளையாட்டுச் சாமன்கள் உள்ளன என்று காட்டுகிறேன்', என நினைத்துக்கொண்டாள். பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து ஆரஞ்சு நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து கூறினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!




அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின.






முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி 'மா-மா', 'மா-மா' என்று விடாமல் கூறின.



முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் 'மா-மா, மா-மா!' என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.





ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.




ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.



இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.




'நிறுத்து, நிறுத்து!' ஷேன்யா ஓலமிட்டாள். 'இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது...' அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்--விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:




பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்




எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!





அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது.





'அடக் கடவுளே!' அவள் சொன்னாள். 'ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்த தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.'



ஷேன்யா யோசித்தபடியே சாலையில் நடந்தாள்.


'வேறு எதைக் கேட்பது? தெரியும், ஒரு பவுண்டு சாக்கலேட் மிட்டாய் கேட்கிறேன். இல்லை, ஒரு பவுண்டு பெப்பர்மின்ட் பரவாயில்லை. இல்லை, எனக்கு அரை பவுண்டு சாக்கலேட் மிட்டாய், அரை பவுண்டு பெப்பர்மின்ட், ஒரு பொட்டலம் அல்வா, ஒரு பை கொட்டைகள், அப்புறம் பாவ்லிக்குக்காக ஒரு இளஞ்சிவப்பு வளைய பிஸ்கோத்தும் கேட்கிறேன். ஆனால் என்ன பயன்? எல்லா மிட்டாய்களும் கிடைத்தால் மட்டும் என்ன? எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுவேன், பிறகு ஒன்றும் இருக்காது. வேண்டாம், ஒரு மூன்று சக்கர சைக்கிள் கேட்கிறேன். இல்லை, அதுவும் பயன்படாது. நான் ஓரிரண்டு தடவை ஓட்டிய பிறகு பையன்கள் அனேகமாக எடுத்துக்கொண்டு விடுவார்கள். அவர்களை ஓட்ட விடாவிட்டால் அடிப்பார்கள்! பேசாமல் சினிமாவுக்கோ, சர்க்கஸுக்கோ டிக்கெட் வாங்கிக் கொள்கிறேன். அது எவ்வளவோ கேளிக்கையாக இருக்கும். ஆனால், ஒரு ஜோடி புது செருப்புகள் கேட்டால் தேவலையோ? அது நன்றாயிருக்கும். இருந்தாலும் ஒரு ஜோடி புது செருப்பில் என்ன பிரயோசனம்? அதைவிட நன்றாக ஏதாவது கேட்க முடியும். அவசரப்படக் கூடாது என்பதுதான் முக்கியம்.' இப்படித்தான் ஷேன்யா சிந்தித்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது திடீரென்று ஒரு ரொம்ப நல்ல பையன் அங்கு ஒரு பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனுடைய பெரிய நீலக் கண்கள் மகிழ்ச்சியாகக் காணப்பட்டன. அவன் ரொம்ப நல்லவன், முரடன் அல்ல என்பது பார்க்கும்போதே தெரிந்தது. ஷேன்யா அவனோடு நட்புக்கொள்ள விரும்பினாள். அவள் நெருங்கி வந்தாள். அவளது முகம் அவன் கண்களில் பிரதிபலித்தது: அவளுடைய ஜடைகள் அவனுடைய தோள்களைத் தொட்டன.



'வணக்கம். உன் பெயர் என்ன?' அவள் கேட்டாள்.


'வீத்யா. உன் பெயர்?'


'ஷேன்யா. நாம் ஓடிப்பிடித்து விளையாடலாமா?'


'என்னால் முடியாது. நான் நடக்க முடியாதவன்'


அப்பொழுதுதான் ஷேன்யா கவனித்தாள். அவன் பெரிய அடிப்பாகம் கொண்ட, பார்க்கச் சகிக்காத ஜோடு ஒன்றை அனிந்திருந்தான்.


'அடப் பாவமே!' அவள் சொன்னாள். 'எனக்கு உன்னைப் ப்டித்திருக்கிறது. நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாண்டிருந்தால் மிகவும் மகிழ்சியாக இருந்திருக்கும்'


'எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னோடு ஓடிப்பிடித்து விளையாடினால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அனால் முடியாதே. என்னால் ஒருபோதும் இயலாது. என் கால்கள் வாழ்க்கை முழுவதுமாக முடங்கிப்போய்விட்டன.'




'உளறாதே, வீத்யா!' ஷேன்யா சொல்லிவிட்டு பொக்கிஷமான ஏழு நிறப்பூவைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்தாள். 'இதோ!'


அவள் கவனமாக வெளிர் நீல நிறம் கொண்ட கடைசி இதழைக் கிள்ளி எடுத்தாள். தன் கண்களுக்கு நேராக ஒரு நொடி பிடித்தாள். பிறகு விரல்களைத் திறந்து, அதைப் பறக்க விட்டுவிட்டு, உரத்த, மகிழ்ச்சியான குரலில் பாடினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



வீத்யாவை மீண்டும் நலமடைய வை!


அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே வீத்யா பெஞ்சிலிருந்து தாவிக்குதித்து அவளோடு ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தான். அவன் படு வேகமாக ஓடினான்; ஷேன்யா எவ்வளவு முயன்றாலும் அவனைப் பிடிக்க முடியவில்லை.




[முடிந்தவரை பூ. சோமசுந்தரம் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்த முயன்றுள்ளேன். கதை பற்றி மற்றும் என் மொழிபெயர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.]


8 comments:

Radha Sriram said...

சபாஷ் சரவணன் நன்றாகவே மொழி பெயர்த்திருக்கிரீர்கள்.:):)

வித்யா - விட்யா.??

இந்த புத்தகக்ங்கள் எல்லாம் ந்யூ சென்சுரி புக்ஹவுஸ் பப்லிகேஷன்னு நினைக்கிரேன்..!ஒரு வேளை அங்கு தேடினால் கிடைக்குமோ??

சரவணன் said...

மகிழ்ச்சி! சோமசுந்தரம் அவர்கள் பொன் வைத்த இடத்தில் பூவாவது வைக்க முடிந்ததே :-)

அந்தப் பாட்டுதான் கொஞ்சம் திருப்தியில்லாமலே உள்ளது.

//வித்யா - விட்யா.?? //

உண்மையில் தமிழில் வீத்யா என்று படித்த மாதிரி ஞாபகம். உறுதிப்படுத்திக்கொண்டு தேவைப்படின் மாற்றுகிறேன்.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே நியூ செஞ்சுரிதான் ராதா. அங்கு கிடைப்பதாயிருந்தால் இப்படி ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

நீங்கள் கொடுத்த தள முகவரி அருமை. அவரும் இதே காரணத்துக்காகவே அதை நடத்துவதாகக் கூறியுள்ளார். 'வலைஞனும் மீனும்' அதில் உள்ளது. புஷ்கின் கவிதை நடையில் எழுதியுள்ளார். முதலில் 'Mishka's poridge' (மீஷ்கா சமைத்த பொங்கல்)தமிழில் தரலாம் என்று எண்ணம்.

ஊக்கப் படுத்தியதற்கு நன்றி!

Anonymous said...

Cute story! Thanks.

Tech Shankar said...


For making PDF from word


I know this way..
If I am getting new links.. I will inform to you..

Thanks

இளங்கோ-டிசே said...

நன்றாக இருக்கிறது. இந்தப் புத்தகம் என்னிடம் சிறுவயதில் இருந்தது. உங்களால் அந்தக் கதையை திருப்பவும் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. நன்றி.
......
சோவியத்து புத்தகங்களை வாசிப்பதில் இருக்கும் சுவையே ஒரு தனிச்சுவைதான்.

M.Rishan Shareef said...

அன்பின் சரவணன்,

அதிர்ஷ்டங்கள் நிரம்பிய ஏழுநிறப் பூக்களின் அத்தனை இதழ்களின் வரங்களையும் உங்கள் விரல்களில் கொண்டிருக்கிறீர்களென எண்ணுகிறேன்.

மிக அழகான வரிகளுடனான வரிகள் திரும்பவும் பால்யத்துக்கு மீட்டுச் செல்கின்றன.

பாராட்டுக்கள் நண்பரே..!
தொடர்ந்து எழுதுங்கள்.அடிக்கடி வருவேன். :)

Unknown said...

வணக்கம்,

நீச்சல் பயிற்சி என்ற குழந்தைகள் சிறுகதை தொகுப்பு புத்தகம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் அந்த கதைகளையும் இங்கு பிரசூரியுங்களேன்.

சோவியத் சிறுவர் கதைகள் மீண்டும் குழந்தை பருவத்து நியாபகங்களை கிளறுகிறது.

வாழ்த்துக்கள்,

மு.உ.மு

சரவணன் said...

தமிழ் நெஞ்சம், டி.சே. தமிழன், ரிஷான் ஷெரீப், மு.உ.மு. ஆகியோருக்கு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், கருத்துகளுக்கும் நன்றி!

மு.உ.மு- நீச்சல் பயிற்சியில் சில கதைகள் வெளியிட்டுள்ளேன். தவிர, அந்தப் புத்தகம் என்.சி.பி.எச். வெளியீடாக மறு பதிப்பு வந்துள்ளது.