Friday, 14 March 2008

மீஷ்கா சமைத்த பொங்கல்



சென்ற கோடையில் நான் அம்மாவோடு கிராமத்தில் இருந்தபோது, மீஷ்கா எங்களுடன் தங்குவதற்கு வந்தான். அவன் இல்லாமல் தனிமையில் வாடிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கும் பெருமகிழ்ச்சி.


'நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாக இருக்கலாம். நான் நாளை அதிகாலையில் கிளம்பி நகரத்துக்குச் செல்ல வேண்டும்; எப்போது திரும்பி வருவேன் என்று தெரியவில்லை. நீங்களாக சமாளித்துக் கொள்வீர்கள்தானே?'


'நிச்சயமாக', என்றறேன். 'நாங்கள் ஒன்றும் பாப்பாக்கள் அல்ல.'


'காலை உணவை நீங்களாகவேதான் சமைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பொங்கல் செய்யத் தெரியுமா?'


'எனக்குத் தெரியும்', மீஷ்கா சொன்னான். 'அது ரொம்ப சுலபம்.'


'மீஷ்கா', நான் கேட்டேன். 'நிஜமாகத்தான் சொல்கிறாயா? நீ எந்தக்காலத்தில் பொங்கல் செய்திருக்கிறாய்?'


'கவலைப்படாதே. அம்மா பொங்கல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதை என்னிடம் விடு. நான் உன்னைப் பட்டினி போட்டுவிட மாட்டேன். நீ சாப்பிட்டதிலேயே ஆகச் சிறந்த பொங்கலைச் சமைத்துத் தருகிறேன் பார்.'


காலையில் அம்மா எங்களுக்குத் தேநீருடன் சாப்பிடுவதற்காக் கொஞ்சம் ரொட்டியும் ஜாமும் கொடுத்துவிட்டு நொய்யரிசி இருக்குமிடத்தைக் காட்டினாள். அதை எப்படி சமைப்பது என்றும் சொன்னாள், ஆனால் நான் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. அதுதான் மீஷ்காவுக்கு நன்றாகத் தெரியுமே, அப்புறம் எனக்கென்ன கவலை என்று எண்ணிக்கொண்டேன்.


அம்மா போன பிறகு மீஷ்காவும் நானும் மீன் பிடிக்க ஆற்றுக்குப் போக நினைத்தோம். எங்கள் தூண்டிலையும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் புழுக்களை சேகரித்துக்கொண்டோம்.


'ஒரு நிமிஷம்', 'நான் சொன்னேன். 'நாம் ஆற்றுக்குப் போய்விட்டால் பொங்கல் சமைப்பது யார்?'



'யாருக்கு வேண்டுமாம் சமையலும் சங்கடமும்?' என்றான் மீஷ்கா. 'அது ரொம்ப சிரமம். நாம் ரொட்டியும் ஜாமும் சாப்பிட்டுக்கொள்வோம். ரொட்டி நிறையவே இருக்கிறது. நமக்குப் பசிக்கும்போது பொங்கல் செய்துகொண்டால் போயிற்று.'



நிறைய ஜாம் சான்ட்விச்கள் செய்துகொண்டு ஆற்றுக்குப் போனோம். ஆற்றில் நீச்சலடித்துவிட்டு மணலில் காய்ந்தபடி சான்ட்விச்களைச் சாப்பிட்டோம். பிறகு மீன் பிடித்தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தும் மீன் எதுவும் சிக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தவையெல்லாம் சுமார் டஜன் சின்னஞ்சிறு அயிரை மீன்கள் மட்டுமே. அன்று பகல் முழுவதையும் ஆற்றோரமே செலவிட்டோம். மாலை நெருங்கியபோது பயங்கரமாகப் பசிக்க ஆரம்பிக்கவே, ஏதாவது சாப்பிடலாம் என்று வீட்டுக்கு வந்தோம்.



'அப்புறம் என்ன மீஷ்கா', நான் கேட்டேன். 'நீ தானே நிபுணன். சொல் நாம் என்ன சமைக்கலாம்?'



'கொஞ்சம் பொங்கல் செய்யலாம்,' மீஷ்கா சொன்னான். 'அதுதான் சுலபம்.'
'ஆகட்டும்,' என்றேன்.



அடுப்பை மூட்டினோம். மீஷ்கா நொய்யையும் பாத்திரதையும் எடுத்தான்.
'கொஞ்சம் அதிகமாகவே செய். எனக்கு ரொம்பப் பசி.'



அவன் ஏறக்குறைய பாத்திரம் முழுவதும் நொய்யை நிரப்பிவிட்டு விளிம்பு வரை நீரை நிரப்பினான்.



'தண்ணீர் கொஞ்சம் அதிகமில்லை?' நான் கேட்டேன்.



'இல்லை. அம்மா இப்படித்தான் செய்வாள். நீ அடுப்பை மட்டும் பார்த்துக்கொள். பொங்கலை என்னிடம் விட்டுவிடு.'



ஆகவே நான் தீயைக் கவனிக்க, மீஷ்கா பொங்கலைச் சமைத்தான்; அதாவது அவன் பேசாமல் பாத்திரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பொங்கல் தன்னைத்தானே சமைத்துக்கொண்டது.



சற்றைக்கெல்லாம் இருட்டிவிட நாங்கள் விளக்கை ஏற்றினோம். பொங்கல் இன்னும் வெந்துகொண்டிருந்தது. திடீரென்று நான் பாத்திரத்தின் மூடி உயருவதையும், பொங்கல் எல்லாப் பக்கமும் வழிவதையும் கவனித்தேன்.



'ஏ மீஷ்கா,' நான் கூப்பிட்டேன். 'பொங்கலுக்கு என்ன ஆயிற்று?'



'ஏன், பொங்கலுக்கு என்ன?'



'அது பாத்திரத்தைவிட்டு வெளியே எழும்புகிறது!'



மீஷ்கா ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு பொங்கலை திரும்பவும் பாத்திரத்துக்குள் தள்ள ஆரம்பித்தான். அவன் தள்ளத்தள்ள அது எழும்பிவந்து பக்கங்களில் வழிந்துகொண்டே இருந்தது.



'இதற்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. ஒருவேளை தயாராகிவிட்டதோ என்னவோ?'



ஒரு தேக்கரண்டியை எடுத்து கொஞ்சம் சுவைத்துப் பார்த்தேன். நொய் இன்னும் உலர்ந்தும் கெட்டியாகவுமே இருந்தது. 'அவ்வளவு தண்ணீரும் எங்கேதான் போயிற்று?'



'எனக்குத் தெரியாது,' மீஷ்கா சொன்னான். 'நான் ஏகப்பட்ட தண்ணீரை ஊற்றினேன். ஒருவேளை பாத்திரத்தில் ஓட்டை ஏதாவது உள்ளதோ?'



பாத்திரத்தை நாங்கள் நன்கு பரிசீலித்தோம். ஓட்டை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. 'ஆவியாகியிருக்கவேண்டும்,' அவன் சொன்னான். 'நாம் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்ப்போம்.'



அவன் கொஞ்சம் பொங்கலைப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்தான்; தண்ணீருக்கு இடமளிப்பதற்காக, கொஞ்சம் நிறையவே எடுக்கவேண்டியிருந்தது. அப்புறம் நாங்கள் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து மேலும் கொஞ்சம் சமைத்தோம். அது வெந்தது, வெந்தது நீண்ட நேரம். பிறகு திரும்பவும் வெளியில் வழிய ஆரம்பித்தது.



'ஏய், என்னாச்சு இதற்கு!' மீஷ்கா கத்தினான். 'ஏன் பாத்திரத்துக்குள்ளேயே இருக்கமாட்டேனென்கிறது?'



அவன் தன் கரண்டியை எடுத்து இன்னும் கொஞ்சம் பொங்கலை எடுத்துவிட்டு, மேலும் ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றினான்.



'பார்த்தாயா,' அவன் சொன்னான். 'நீ என்னடாவென்றால் தண்ணீர் அதிகம் என்று நினைத்தாய்.'



பொங்கல் தொடர்ந்து வேக ஆரம்பித்தது. அப்புறம், நீங்கள் நம்புவீர்களா, சற்றைக்கெல்லாம் மூடியைத் தூக்கிக்கொண்டு வெளியே ஊர்ந்துவர ஆரம்பித்தது!



நான் சொன்னேன்: 'நீ அதிகப்படியாக நொய்யைப் போட்டிருந்திருக்கவேண்டும். சமைக்கும்போது அது உப்புகிறது; அப்பொழுது பாத்திரதில் இடம் போதவில்லை.'



'ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும்,' என்றான் மீஷ்கா. 'அது உன் தப்புதான். பசிக்கிறது, நிறையப்போடு என்று நீதானே சொன்னாய், நினைவில்லை?'



'எவ்வளவு போட வேண்டும் என்று எனக்கு எப்படித் தெரியும்? சமைக்கத்தெரிந்தவன் நீதான்.'



'ஆமாம், எனக்கு சமைக்கத்தெரியும். நீ மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் இந்நேரம் சமைத்திருப்பேன்.'



'அப்படியென்றால் சரி. நீயே சமைத்துக்கொள், நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.'



நான் வேகமாக வெளியேறிவிட்டேன். மீஷ்கா தொடர்ந்து பொங்கலை சமைத்தான். அதாவது, மென்மேலும் பொங்கலை எடுப்பதும் தண்ணீரை சேர்ப்பதுமாக இருந்தான். சீக்கிரத்திலேயே மேசை பாதி வெந்திருந்த பொங்கல் வைக்கப்பட்ட தட்டுகளால் நிரம்பிவிட்டது. அவன் ஒவ்வொரு தடவையும் தண்ணீரை சேர்த்துக்கொண்டிருந்தான்.



கடைசியில் எனக்கு பொறுமை போய் விட்டது.



'நீ இதைச் சரியாகச் செய்யவில்லை. இப்படியே போனால் பொங்கல் தயாராவற்குள் விடிந்துவிடும்.'



'அது சரி. பெரிய உணவகங்களில் அப்படித்தான் சமைப்பார்கள், தெரியாதா உனக்கு? எப்பொழுதுமே மறுநாள் சாப்பாட்டை முதல்நாள் இரவே சமைத்துவிடுவார்கள். அப்போதுதான் காலையில் தயாராகியிருக்கும்.'



'உணவகங்களுக்கு அது சரிதான். அவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை, அவர்களிடம் வேறு சாப்பாடு மலைபோல இருக்கும்.'



'நாமும் அவசரப்பட வேண்டியதில்லை.'



'வேண்டியதில்லையா! நான் பட்டினி கிடக்கிறேன். அதோடு படுக்கவேண்டிய நேரமும் ஆகிவிட்டது. எவ்வளவு நேரமாகிவிட்டது பார்.'



'உனக்குத் தூங்க எவ்வளவோ நேரம் இருக்கும்,' இன்னொரு தம்ளர் நீரை பாத்திரதில் ஊற்றியபடியே கூறினான். தவறு எங்கே என்று சட்டென்று எனக்குப் புரிந்துவிட்டது.



'நீ பச்சைத் தன்ணீரை ஊற்றிக்கொண்டிருக்கும்வரை அது வேகப்போவதில்லை.'



'தண்ணீர் இல்லாமலே பொங்கல் சமைத்துவிடலாம் என்று நினைக்கிறாயா?'


'இல்லை. இன்னும் பாத்திரத்தில் நொய் அதிகமாக உள்ளது என்கிறேன்.'
நான் பாத்திரத்தை எடுத்து, பாதி நொய்யை வெளியே கொட்டிவிட்டு தண்ணீரை நிரப்பும்படி அவனிடம் சொன்னேன்.



குவளையை எடுத்துக்கொண்டு வாளிக்குச் சென்றான்.



'சே.' அவன் சொன்னான். 'தன்ணீர் முழுவதும் தீர்ந்துவிட்டது.'



'இப்பொழுது என்ன செய்வது? ஒரே கும்மிருட்டு. நம்மால் கிணற்றையே பார்க்க முடியாது.'



'என்ன! சரி நான் போய் ஒரு நொடியில் கொண்டுவருகிறேன்.'



அவன் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு, வாளியில் ஒரு கயிற்றை முடிந்து கிணற்றுக்குச் சென்றான். சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.



'எங்கே தண்ணீர்?' நான் கேட்டேன்.



'தண்ணீரா? கிணற்றில் இருக்கிறது.'



'உளறாதே. வாளியை என்ன செய்தாய்?'



'வாளியா? அதுவும் கிணற்றில்தான் இருக்கிறது.'



'கிணற்றிலா?'



'ஆமாம்.'



'உள்ளே போட்டுவிடாயா என்ன?'



'ஆமாம்.'



'அட மடக்கழுதையே. அப்படியானால் நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். தண்ணீருக்கு இப்போது என்ன செய்வது?'



'நாம் கெட்டிலை உபயோகிக்கலாமே.'



நான் கெட்டிலை எடுத்தேன். 'கயிற்றைக் கொடு.'



'என்னிடம் இல்லை.'



'எங்கே இருக்கிறது?'



'அங்கே அடியில்.'



'எங்கே அடியில்?'



'கிணற்றில்.'



'ஆக, நீ வாளியைக் கயிற்றோடு உள்ளே போட்டுவிட்டாய்?'



'ஆமாம்.'



நாங்கள் வேறு கயிறு தேட ஆரம்பித்தோம், ஆனால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.



'நான் போய் பக்கத்து வீட்டாரைக் கேட்டு வருகிறேன்,' மீஷ்கா சொன்னான்.



'உன்னால் அது முடியாது. 'மணியைப்பார். எல்லோரும் எப்போதோ தூங்கியிருப்பார்கள்.'



அந்த நேரம் பார்த்துத்தானா எனக்குத் தாகம் எடுக்க வேண்டும்? எனக்கு தண்ணீர் குடித்தே தீரவேண்டியிருந்தது.



மீஷ்கா சொன்னான்: 'அது அப்படித்தான். தண்ணீர் இல்லாதபோதுதான் தாகம் எடுக்கும். அதனால்தான் பாலைவனத்தில் மக்களுக்குத் தாகம் எடுக்கிறது--ஏனென்றால் பாலைவனத்தில் தண்ணீர் கிடையாது.'



'பாலைவனத்தை விடு,' நான் சொன்னேன். 'போய் ஏதாவது கயிறு தேடிவா.'



'எங்கே தேடுவதாம்? எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். நாம் தூண்டில் கயிறைப் பயன்படுத்துவோம்.'



'அது வலுவாக இருக்குமா?'



'அப்படித்தான் நினைக்கிறேன்.'



'இல்லையென்றாலோ?'



'இல்லையென்றால், அறுந்துவிடும்.'



நாங்கள் தூண்டில் கயிறைக் கழற்றி கெட்டிலில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குச் சென்றோம். நான் கெட்டிலைக் கிணற்றுக்குள் இறக்கி, நீரை நிரப்பினேன். கயிறு ஒரு வயலின் தந்தியைப் போல விறைப்பாக இருந்தது.



'இது அறுந்துதான் போகப்போகிறது,' என்றேன். 'வேண்டுமானால் பார்.'



'நாம் மிக மிகக் கவனமாக மேலே தூக்கினால் ஒருவேளை தாங்கலாம்.' என்றான் மீஷ்கா. நான் என்னால் ஆனமட்டும் கவனமாக அதை உயர்த்தினேன். தண்ணீர்மட்டத்துக்கு மேலே உயர்த்தினேனோ இல்லையோ, தொபீர் என்ற சப்தம் கேட்டது. கெட்டில் போய்விட்டது.



'அறுந்துவிட்டதா என்ன?' மீஷ்கா கேட்டான்.




'பின்னே இல்லையா? நாம் தண்ணீருக்கு என்ன செய்வது?'



'சமோவாரை வைத்து முயற்சி செய்யலாம்', என்றான் மீஷ்கா.



'வேண்டாம். அதற்குப் பேசாமல் சமோவாரை நாமே நேரடியாகக் கிணற்றுக்குள் எறிந்துவிடலாம். வேலை மிச்சம். அதோடு நம்மிடம் வேறு கயிறும் கிடையாது.'



'அப்படியானால், பானையை உபயோகியேன்.'



'தூக்கிப்போடுவதற்கு அத்தனை பானைகள் எங்களிடம் இல்லை', என்றேன்.
'நல்லது. ஒரு தம்ளரை வைத்து முயற்சிசெய்.'



'தம்ளர் தம்ளராக இரவு முழுவதும் தண்ணீர் இறைக்கலாமென்கிறாயா?'



'வேறு என்னதான் செய்வது? பொங்கலை சமைத்தாகவேண்டுமே? அதோடு எனக்கு ரொம்ப தாகமாகவேறு இருக்கிறது.'



'தகரப் போகணியை பயன்படுத்துவோம்.' என்று சொன்னேன். 'அது தம்ளரை விட கொஞ்சம் பெரியதும் கூட.'



நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச்சென்று தூண்டில் கயிறை போகணியில் அது கவிழ்ந்துவிடாதபடிக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குத்திரும்பினோம். நாங்கள் தாகத்தைத் தணித்துக்கொண்டபின் மீஷ்கா சொன்னான்:



'எப்பொழுதும் இப்படித்தான் நடக்கும்--உனக்கு தாகமாக இருக்கும்போது ஒரு கடலையே குடித்துவிடலாம்போலத் தோன்றும். குடிக்க ஆரம்பித்தால் ஒரு குவளையே போதுமென்று இருக்கும். ஏனென்றால், மக்கள் இயல்பிலேயே பேராசைக்காரர்கள்.'



'உன் பிதற்றலை நிறுத்திவிட்டு பாத்திரத்தை இங்கே கொண்டுவா. அப்போதுதான் நாம் டஜன் தடவைகள் உள்ளேயும் வெளியேயும் ஓடவேண்டியிருக்காது.'



மீஷ்கா பாத்திரத்தைக் கொண்டுவந்து அதை சரியாகக் கிணற்றின் விளிம்பில் வைத்தான். ஏறக்குறைய அதை என் முழங்கையால் தட்டிவிடத்தெரிந்தேன்.
'மடக் கழுதையே,' நான் சென்னேன். 'எதற்காக என் முழங்கைக்கடியிலேயே வைத்தாயாம்? அதைக் கையில் எடுத்து முடிந்த அளவுக்குத் தள்ளிப்பிடி. இல்லை, இதையும் தண்ணீரில் போட்டுவிடுவாய்.'



மீஷ்கா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிணற்றிலிருந்து தள்ளிப்போனான். நாங்கள் அதை நிரப்பிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். இதற்குள்ளாக எங்கள் பொங்கல் ஆறிப்போய், அடுப்பும் அணைந்துவிட்டிருந்தது. மீண்டும் அடுப்பை மூட்டி, பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினோம். வெகுநேரத்துக்குப் பிறகு அது கொதிக்க ஆரம்பித்து, மெதுவே கெட்டியாகி, தளப்புளவென்று சப்தமிட்டது.


'கேட்டாயா?' என்றான் மீஷ்கா. 'சீக்கிரத்தில் அருமையான பொங்கலைச் சாப்பிடப் போகிறோம்.'


நான் கொஞ்சமாகத் தேக்கரண்டியில் எடுத்து சுவைத்துப் பார்த்தேன். சகிக்கவில்லை! தீய்ந்துபோன கசப்புச் சுவையில் இருந்தது; நாங்கள் உப்புப் போடவும் மறந்துவிட்டோம். மீஷ்காவும் வாயில் போட்டுவிட்டு, உடனே துப்பிவிட்டான். 'இல்லை,' அவன் சொன்னான், 'இதைச் சாப்பிடுவதற்குப்பதில் பட்டினி கிடந்தே சாவேன்.'


'வேறு என்ன பண்ணுவது?'




'எனக்குத் தெரியாது.'


'மடத்தனம்!' கத்தினான் மீஷ்கா. 'நாம் மீன்களை மறந்துவிட்டோமே.'


'இப்போதுபோய் மீன்களோடு கஷ்டப்படவேண்டாம். சீக்கிரத்தில் விடியப்போகிறது.'


'நாம் அவற்றை வேகவைக்கப் போவதில்லை. வறுப்போம். ஒரே நிமிடத்தில் தயாராகிவிடும், வேண்டுமனல் பாரேன்.'


'அப்படியானால் சரி,' என்றேன். 'ஆனால் அதுவும் பொங்லைப்போல நேரம் பிடிக்குமென்றால் எனக்கு வேண்டவே வேண்டாம்.'


'ஐந்தே நிமிடத்தில் தயாராகிவிடும், பார்க்கத்தான் போகிறாய்.'


மீஷ்கா ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி அடுப்பில் நேராகத் தணல் மேல் வைத்தான், சீக்கிரம் ஆகவேண்டுமென்று.


என்ணெய் சடப்புடவென்று பொரிய ஆரம்பித்து, சட்டென்று தீப்பற்றிக்கொண்டது. மீஷ்கா வாணலியை வெடுக்கென்று எடுத்தான். நான் அதில் நீரை ஊற்ற விரும்பினேன். அனால் வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. எனவே எண்ணெய் முழுவதும் தீரும்வரை எரிந்து முடித்தது. அறையே புகையால் நிரம்பியது. மீனில் ஒரு சில கரித்துண்டுகளே மிச்சமிருந்தன.


'நல்லது,' மீஷ்கா சொன்னான், 'இப்பொழுது எதை வறுப்பது?'


'இனி வறுக்கிற வேலையே வேண்டாம். நல்ல சாப்பாட்டை வீணாக்குவதுடன் வீட்டையே எரித்து சாம்பலாக்கிவிடுவாய். இன்றைக்கு நீ சமைத்தது போதும்.'


'ஆனால் நாம் எதைச் சாப்பிடுவதாம்?'


நாங்கள் பச்சை மாமிசத்தைச் சாப்பிடப்பார்த்தோம், ஆனால் அதுவொன்றும் உவப்பாயில்லை. பச்சை வெங்காயத்தைச் சாப்பிட முயன்றோம், அது கசந்தது. சமையல் எண்ணெயோ குமட்டியது. கடைசியில் ஜாம் பாட்டிலைத்தேடியெடுத்து, சுத்தமாக வழித்துச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப்போனோம். அதற்குள் நிரம்ப நேரம் ஆகிவிட்டது.


காலையில் ஓநாய்களைப் போலப் பசியோடு எழுந்தோம். மீஷ்கா கொஞ்சம் பொங்கல் வைக்க விரும்பினான். அவன் நொய்யை எடுப்பதைப் பார்த்தபோது நான் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.


'தொடாதே,' நான் சொன்னேன். 'எங்கள் வீட்டுக்காரர் நடாஷா அத்தையிடம் போய் நமக்காகக் கொஞ்சம் பொங்கல் செய்து தரும்படிக் கேட்கிறேன்.'


நாங்கள் நடாஷா அத்தையிடம் போய் எல்லாவற்றையும் சொல்லி, எங்களுக்காகப் பொங்கல் சமைத்துத் தந்தால், அவளது தோட்டத்தைக் களையெடுத்துத் தருவதாக வாக்குறுதியளித்தோம். அவள் எங்கள் மேல் இரக்கப்பட்டு, கொஞ்சம் பாலும் முட்டைக்கோஸ் அடையும் கொடுத்துவிட்டு, பொங்கல் சமைக்க ஆரம்பித்தாள். நாங்கள் அதை மேலும் மேலும் சாப்பிட்டோம். நடாஷா அத்தையின் பையன் வோவ்கா கண்கள் விரிய எங்களைப் பார்த்தான்.


ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். நடாஷா அத்தை ஒரு கொக்கியும் கொஞ்சம் கயிறும் தந்தாள். அவற்றை எடுத்துக்கொண்டு வாளியையும், கெட்டிலையும் கிணற்றிலிருந்து எடுக்கப்போனோம். அவற்றை எடுப்பதற்கு எங்களுக்கு நீண்ட நேரம் பிடித்தது. நல்லவேளையாக எதுவும் தொலையவில்லை. அதன் பின்னர், மீஷ்காவும், நானும், சிறுவன் வோவ்காவும் நடாஷா அத்தையின் தோட்டத்தில் களையெடுத்தோம்.


மீஷ்கா சொன்னான்: 'களை எடுப்பது ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது சுலபம். எப்படியும் பொங்கல் சமைப்பதைவிட சுலபம்தான்.'



[கதை: நிக்கொலாய் நோசோவ்; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/; ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்க.]

5 comments:

Radha Sriram said...

படித்துவிட்டேன் சரவணன்.......இந்த கதையின் மூலத்தை(original!!) படித்ததாக நியாபகம் இல்லை:):)

சரவணன் said...

தமிழ்மணத்தில் கொஞ்சம் நேரமே தோன்றி மறைந்துவிட்டதைத் தேடிப்பிடித்துப் படித்திருக்கிறீர்கள்! ரொம்ப மகிழ்ச்சி :-)

Anonymous said...

thanks for the ezhu nirapoo. i have told this story to my daughters when they were young as a bed time story.now i am reminded of the story and their sweet childhood days.my nephew even asked me a q " she could have asked for another flower wishing on the last petal!!" . i was surprised at his sharp wit a very young age.

vaasu said...

///தாகமாக இருக்கும்போது ஒரு கடலையே குடித்துவிடலாம்போலத் தோன்றும். குடிக்க ஆரம்பித்தால் ஒரு குவளையே போதுமென்று இருக்கும்///

எவ்வளவு சத்தியமான உண்மை.
நல்ல கதைகள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

Anonymous said...

hmmm:) i too have same experience like them :):)