Monday, 6 July 2009

குறும்பன் அத்தியாயம் 9: ஆட்டு மந்தையை ஓட்டினோம்

அத்தியாயம்: 9 ஆட்டு மந்தையை ஓட்டினோம்

மறுபடி நடை!...

மீண்டும் அலைச்சல், மீண்டும் நாடோடி வாழ்க்கை!... வேற்றுப்பறவைக்கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குயில் குஞ்சு நான். இப்போது விதி என்னை எங்கு இட்டுச் செல்லும்? எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்?

ஜமீன்தாரை நாசமாய்ப் போகும்படி ஆயிரந்தடவை சபித்தேன். இந்த வகையில் சம்பளம் வாங்கிக்கொள்ள இசைந்த தற்காக என்னையே நொந்து கொண்டேன். ஆப்பிள்களின் சுமையால் நெளிந்தவாறு தளர்நடை நடந்தேன். “ரொக்கப் பணம், மகனே, ரொக்கப் பணம்! எடுத்துப் போவது லேசு, மறைத்து வைத்துக்கொள்ளச் சௌகரியம்...” என்று மகாபுனிதரான மௌல்வி என்னிடம் சொன்னாரே, அது சரியான வார்த்தை. இந்தச் சனியன் பிடித்த இழவை மறுபடி கண்ணிலேயே படாதபடி எங்கேனும் மறைத்து வைக்க எனக்குச் சம்மதந்தான். ஆனாலும் ஒரு மாதம் உழைத்துச் சம்பாதித்ததை இப்படி வீணாக எறிந்துவிட வருத்தமாய் இருந்தது.

இதற்குள் சாலை மலைப்பாங்கான இடம் வழியே சென்றது. மணம் வீசும் ஸ்தெப்பிப் புறகள் சுற்றிலும் எங்கும் தளதளவென்று வளர்ந்திருந்தன. தொடுவானில் அஸ்தமனச் செவ்வொளி பெருகியது. கிழக்கேயிருந்து இருள் படர்ந்தது. குன்றுகளின் பக்கத்துச் சரிவுகள் கறுப்பாய்த் தோற்றம் அளித்தன. தொலைவில், சாலையிலிருந்து ஒரு புறம் விலகி இருந்த கூடாரத்தைக் கண்டு அதை நோக்கி விரைந்தேன். கூடாரத்தின் பக்கத்தில் ஒருவரும் இல்லை. அவிந்து கறுத்த அடுப்பும் வெற்றுப் பாத்திரமும் மட்டுமே இருந்தன. நாய்களோ, கால்நடைகளோ இல்லை. கூடாரத்தின் கதவைத் தட்டினேன். “யார் அங்கே?” என்ற கம்மிய குரல் உள்ளிருந்து கேட்டது. “ஆண்டவனின் விருந்தாளி” என்றேன். வீட்டுக்கரர்கள் எட்டிப்பார்த்தார்கள். என்னையும் என் மூட்டையையும் சத்தேகத்துடன் நோக்கினர்கள். யாரோ திருடன் களவாடிய பொருள்களுடன் வந்திருக்கிறன் என்று எண்ணினார்கள் போலும். ஆயினும் உள்ளே வர அனுமதித்தார்கள். நான் என் மூட்டையை அவிழ்த்து வீட்டுக் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடுத்ததும் அவர்களுடைய மனநிலை ஒரேயடியாக மாறிவிட்டது. பூச்சி வைத்த ஆப்பிள்களை எந்தத் திருடனும் மூட்டைகட்டித் தன் முதுகில் சுமந்துகொண்டு வரமாட்டானே! பாத்திரத்தில் சுட்ட பாதி ரொட்டி எனக்கு முன் வைக்கப்பட்டது. நான் அதைச்சவைத்தேன். களைப்பினால் எனக்கு உணவு செல்லவில்லை. தலையணைக்குப் பதில் ஆப்பிள் மூட்டையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு படுத்தேன். உடனே உறங்கிவிட்டேன்.

ஸரீ-அகாச் போய்ச் சுருக்கு வழி எது என்று காலையில் வீட்டுக்காரர்களிடம் கேட்டுக் கொண்டு மறுபடி மூட்டையைச் சுமந்தவாறு புறப்பட்டேன். நடுப்பகலில் அங்கு போய்ச் சேர்ந்தேன். களைப்பு மிகுதியால் நிற்கக்கூட எனக்கு வலுவில்லை. என போதாத காலம், அன்று சந்தை நாள். சுற்று வட்டாரங்களிலிந்து ஆட்கள் எல்லா வகைப் பண்டங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். எனவே நான் என்னதான் பாடுபட்டும் என் ஆப்பிள்களைச் சீத்துவார் இல்லை.

ஆப்பிள்கள் என் முதுகின் மேல் அல்ல, தரையில் கிடந்தன என்பதே எனக்கு நிதி கிடைத்தாற்போல் இருந்தது. “வாருங்கள், வருந்த மாட்டீர்கள்! சல்லிசான விலைக்குக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன்! வாருங்கள்! இந்த ஆப்பிளைத் தின்றால் ரொட்டியே வேண்டாம்! தோட்ட விளைச்சலை மதிப்பிடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே விலைக்குக் கொடுப்பேன் வாருங்கள், வருந்த மாட்டீக்ள்!” என்று கத்தினேன்.

கொஞ்சங் கொஞ்சமாக எப்படயோ அவற்றை விற்றேன். அப்புறம் காசுகளை எண்ணிப்பார்த்தபோது ஆறு தன்காக்களும் ஐந்து கோப்பெக்குகளும் இருந்தன. இவ்வளவு பணம் கிடைக்கும் என்று நான் நினைடக்கவே இல்லை!

பணத்தோடு சந்தையில் சுற்றி வருவதே இன்பம். கண்ணில் பட்டது, நாக்கில் உதித்தது எதையும் தேவைப்பட்டால் வாங்கலம் என்று தெரியும் போது நாம் எல்லாவற்றையும் மதிப்பிடும் விதமே வேறு. எவனோ இளைஞனிடம் ஒர் இரும்புத் தொட்டியைச் சுமார் பத்து நிமிடங்கள் பேரம் பேசினேன். ஆனால் மிகமிகக் குறைந்த விலைக்கு அதைக் கேட்டேன், அவனிடம் கடுமையான திட்டு வாங்கிக் கட்டி கொண்டேன். வெல்வெட் கழுத்துப் பட்டை வைத்த மெல்கோட்டு ஒன்றை வெகு நேரம் பேரம் பேசினேன், முடிவில் போட்டுக்கொண்டுகூடப் பார்த்தேன். அது எனக்கு மட்டும் அல்ல, என் வருங்காலக் குழந்தைகளுக்கும்—அவர்கள் எத்தனை பெயராய் இருந்தாலும் சரி—சேர்த்துத் தைக்கப்பட்டது போல் அவ்வளவு விசாலமாய் இருந்தது. என் உயரமும் பருமனும் என்ன என்பதை விற்பவன் ஆரம்பத்திலிருந்தே நன்றகப் பாத்திருந்தான். மேல்கோட்டின் அளவோ அவனுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் அவன் என் மேல் சள்ளுப்புள்ளென்று விழுந்தான்.

அப்புறம் நான் கால்நடைச் சந்தைக்குப் போனேன். எதுவோ என்னை அங்கே ஈர்த்தது. மதப்பள்ளி மாணவனின் தலைப்பாகை போல முறுக்கிய கொம்புகளும் செங்குத்தான நெற்றியும் கொண்ட பெரிய செம்மறிக்கடா ஒன்றை விலை கேட்கத் தொடங்கினேன். அதற்குள் ஏதோ தெரிந்த முகம் என் முன்னே பளிச்சிட்டது. கவனித்துப் பார்த்தேன். ஒரே கயிற்றில் இணைத்த செம்மறிக்கடாக்களின் மந்தையின் அருகே நின்றான் ஒர் இளைஞன். கஸாஃகிய மேல் கோட்டும் உள்வெளியாகத் திருப்பட்ட மென்மயிர்த் தொப்பியும் அணிந்திருந்தான் அவன். நுனி பருத்த தடி ஒன்று அவன் கையில் இலகியது. என்ன இது, என் நண்பர்களில் எவனும் இந்த மாதிரி உடை அணிவது கிடையாதே. அப்படியும் இந்த முகம் எனக்கு மிக மிகப் பழக்கமனதாகத் தோன்றியது. புழுதியிலும் வெயிலிலும் அடிபட்டு நமுதாபோலப் பழுப்பேறிருந்தது அந்த முகம். புழுதி படிந்த இமைமயிர்களுக்கு அடியே தெரிந்த பழுப்பு விழிகளும். பழக்கமானவையாகத் தோன்றின. போதாக்குறைக்கு அவை தாமும் என்னை நம்பிக்கையோடு நோக்கின...

“அமன்!” என்று வீரிட்டு அவனிடம் தாவினேன். அவனும் என்னைவிட உரக்கக் கத்திக்கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். நாங்கள் தழுவிக்கொண்டோம், ஒருவர் தோள்மேல் ஒருவர் தட்டிக்கொடுத்தோம். பிறகு அக்கம் பக்கமாக உட்கார்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் விசாரிக்கலானோம். மேய்ப்பர்களிடமிருந்து தப்பி ஒடியபோது பிரிந்தவர்கள் தாம், அப்புறம் நாங்கள் சந்திக்கவே இல்லையே. மற்றவனுக்கு மேய்ப்பர்களின் வன்மத்திலிந்து தப்ப முடிந்ததா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லையே.

அமன் பிழைத்தது மறுபிழைப்புத்தானாம். மேய்ப்பர்கள் அவனை நெருங்கி விட்டார்களாம். அதற்குள் ஒரு மேய்ப்பன் புதிய குதிரைச் சாணத்தில் வழுக்கி விழுந்தானம், அவன்பின் வந்தவன் அவன்மேல் இடறி விழுந்து விட்டானாம். இருவரும் எழுந்திருப்பதற்குள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்துடன் கிராமம் கிராமமாகச் சுற்றி அலைந்தானாம். முல்லாவின் கதி என்ன ஆயிற்று என்பதுபற்றி என்னைப் போலவே அவனும் ஒன்றும் கேள்விப்படவில்லையாம். உண்மையைச் சொன்னால் அவன் யாரையும் கேட்கவே இவ்லை. வீடு திரும்ப ஆசை உண்டாயிற்றாம், ஆனால் வெறுங்கையோடு திரும்பத் தயங்கினானாம். சீம்கந்த் நகரில் இருந்த ஒன்றுவிட்ட சித்தப்பா வீட்டுக்குப் போக முதலில் முடிவு செய்தானாம். ஆனால் அவன் துரதிர்ஷ்டம், அவர் அதற்கு ஒரு மாதம் முன்பே காலமாகிவிட்டாராம். இந்த நிலையில் பணக்காரக் கால்நடைப் பண்ணைக்காரன் ஒருவனின் மந்தையை வழியில் கண்டானாம். பிடித்ததோ பிடிக்கவில்லையோ, அந்தப் பண்ணைக்காரனிடமே வேலைக்கு அமர்ந்துவிட்டானாம். இப்போது ஒரே சந்தோஷமாய் இருக்கிறானாம். பாங்கான உடையும் வயிறார உணவும் கிடைக்கின்றனவாம். வருஷத்துக்கு இரண்டு செம்மறிகளும் ஒரு வெள்ளாடும் மேய்ப்பர்களுக்குக் கூலியாம். ஆகவே, செம்மறிகள் இரண்டிரண்டு குட்டிகள் போட்டால், நாளடைவில் அமன் தானே பெரிய மந்தைக்குச் சொந்தக்காரன் ஆகிவிடலாம். இப்போது அவர்கள் தாஷ்கந்த் சந்தைக்கு மந்தையை ஒட்டிப்போவதாகவும், அங்கே வீட்டுக்குப் போய் அப்பனிடம் விவரங்களைச் சொல்லப் போவதாகவும் அவன் மகிழ்ச்சியுடன் கூறினான். ஸரீ-அகாச்சில் இன்று சந்தை நாளாய் இருப்பதால் தக்கவிலை கிடைத்தால் ஆடுகளை இங்கேயே விற்றுவிடலாமே, தாஷ்கந்த் ஒட்டிப்போக வேண்டாமே என்ற எண்ணத்துடன் தங்கிவிட்டதாகச் சொன்னான்.

எனக்கு அமன்மேல் பொறாமையாய் இருந்தது. இவனுக்கு எவ்வளவு நல்லதிர்ஷ்டம்! என்னைப்போலவா, பூச்சி அரிந்த ஆப்பிள்களைக் கூலியாகப் பெற? ஆப்பிள்களைப் பற்றி நான் அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. என் பணத்தை மட்டுமே அவனுக்கு காட்டினேன். சம்பாத்தியத்தில் பெருந்தொகையைச் செலவிட்டுவிட்டதாகவும் இல்லாவிட்டால் நானே ஆடுகளை வாங்கியிருக்கலாம் என்றும் கதை விட்டேன். சுருங்கச் சொன்னால் அவன் என்முன் பெருமை அடித்துக் கொள்ள நான் இடம் தரவில்லை. அவனுடைய வேலை எனக்கும் பிடித்திருக்கிறது என்றும், தவிர தாஷ்கந்த் திரும்பவும் வேளை வந்து விட்டது என்றும் அப்புறம் ஜாடையாகக் கூறினேன். என்னையும் வேலைக்கு வைத்துக்கொள்ளும்படித் தன் எஜமான் காதில் அவன் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் நன்றாய் இருக்கும் என்றும், நான் நாணயமாகவும் தன்னலம் இன்றியும் உழைப்பேன் என்றும் சொன்னேன். அமனுக்கு என் வேண்டுகோள் பிடித்துவிட்டது என்பதைக் கண்டேன். முதலாவதாக, என்னைச் சந்தித்ததில் அவனுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி, இரண்டு பேராக இருந்தால் அதிகக்குதூகலமாய் இருக்கும். இரண்டாவதாக, முக்கியமான சிபார்சு செய்பவன் பாத்திரம் வகிப்பது அவனுக்கு உவப்பாய் இருந்தது.

புருவத்தை உயர்த்தி, “நல்லது! கோக்-தெராக் போய்ச் சேர்ந்ததும் எஜமானைக் கேட்கிறேன்” என்றான்.

ஆனால் விஷயம் இன்னும் நன்றாக முடிந்துவிட்டது. அவன் எஜமானிடம் கேட்கவே தேவைப்படவில்லை. மந்தையைப் பார்த்துக்கொள்வதில் மாலை வரை நான் அவனுக்கு ஒத்தாசை செய்தேன். அந்த வெள்ளிக்கிழமை ஸரி-அகாச்சில் வெள்ளாடுகளுக்குப் பலத்த கிராக்கி. அமனுடைய எஜமானன் தன் வெள்ளாடுகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டான். ஆனால் செம்மறியாடுகள்—ஒர் எழுபது உருப்படிகள்—எஞ்சியிருந்தன. மாலைத் தறுவாயில் மந்தைச் சொந்தக்காரன் புறப்படத் தயாராகிக் குதிரைமேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அமனிடம் சொன்னான்.

“உன் நண்பன் நல்ல பையனாகக் காண்கிறான். ஆடுகளும் அப்படி அதிகமாய் இல்லை. செம்மறிகளை ஒட்டிக்கொண்டு விடியற்காலையில் கோக்-தெராக் சந்தை வந்து சேருங்கள். நீங்கள் இரண்டு பேரும் சுலபமாகச் சமாளித்துவிடுவீர்கள். நான் முன்னே போகிறேன்.”

நாங்கள் களிப்போடு இசைந்தோம். மார்பில் கையைச் சேர்த்து வைத்து மந்தைக்காரனுக்கு வணக்கம் தெரிவித்தோம். அவன் சவுக்கைச் சொடுக்கிக் குதிதையை விரட்டிச் சென்று விட்டான். நாங்கள் செம்மறிகளைக் கொட்டடைக்கு ஓட்டிப் பட்டியில் அடைத்துவிட்டுப் பொழுதுசாயும் வரை இளைப் பாறுவதற்காகப் படுத்தோம். நிலவு எழுந்ததுமே நாங்கள் கோக்-தெராக் புறப்பட்டோம்.

சீட்டியடித்தும் கூவியும் ஆடுகளை உசுப்பிக்கொண்டும், மந்தையை அடிக்கடி சுற்றிவந்து அது சிதறிவிடமல் கண்காணித்துக் கொண்டும் நாங்கள் முன்னேறினோம். நாங்கள் சுமார் ஒரு மைல் கூடப் போயிருக்க மாட்டோம், அதற்குள்ளாகவே நாங்கள் செய்யப்போவது உல்லாச இரவு உலா அல்லா, சித்திரவதை நிறைந்த கடும் பயணம் என்பதை நான் பிரிந்துகொண்டேன். “மட்டி, ஆடு மாதிரி” என்று நான் எத்தனையோ தடவைகள் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் அப்படித் திட்டியவர்களில் எவருமே இந்தச் செங்குத்து நெற்றி அசமந்தங்களில் பாதி அளவுகூட முட்டாள் அல்ல என்பதை இப்போது தான் கண்டேன். செம்மறி ஆட்டின் மடத்தனத்துக்கு எதையாவது நிகராகச் சொல்ல முடியுமானால் அது செம்மறி ஆட்டின் மூர்க்கம்தான். இந்த மாதிரி மூளையை வைத்துக் கொண்டு இத்தகைய மூர்க்க சுபாவத்தைப் பெற உலகில் தோன்றிய முதல் செம்மறி ஆடு மிகுந்த சிரமப்பட்டு முயன்றிருக்கும். என் கருத்துப்படி, இந்த இரண்டில் ஒன்றே தாராளமாகப் போதும். செம்மறி ஆடு ஒன்று மட்டுமே இருந்தபோது—தொடக்கத்தில் ஒரே ஒரு செம்மறி தான் இருந்திருக்கும்—இந்தப் பயங்கரமான குணச் சேர்க்கை அவ்வளவாகக் கருத்தை ஈர்த்திருக்காது. இன்றுவரை நிலைமை இவ்வாறே இருந்துவருகிறது. தனிச் செம்மறியாட்டை எப்படியாவது சரிப்படுத்திச் சமாளித்துவிடலாம். நாம் தனி ஆளாக இருந்து செம்மறிகள் நிறைய இருந்தாலோ, அவை சரியான சைத்தான்களாக மாறிவிடுகின்றன. (சைத்தான் தலையில் ஆட்டுக் கொம்புகள் ஏன் இருக்கின்றன என்பது இப்போது எனக்குப் புரிகிறது.) நரகத்தில் பாவியை முழுச் செம்மறி மந்தையைத் தனியாகச் சமாளிக்கும்படி விடுவதுதான் தண்டனை போலும்.

இவற்றை உண்மையில் சமாளிக்க வல்ல ஒரே பிரகிருதி மனிதனே அல்ல, வெள்ளாடுதான். இது தெரிந்த விஷயம். இதன் காரணம், வெள்ளாடு தன் மூர்க்க குணத்தால் செம்மறிகளின் பிடிவாதத்தை முறிக்கக் கூடும் என்பதாய் இருக்கலாம். அவை அதனிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குள் அது அவற்றிடம் பத்து வார்த்தைகள் செல்லிவிடும் போலும். வெள்ளாட்டுக்கு அவை சொந்தத் தகப்பனுக்குப் போலக் கீழ்ப்படிகின்றன. உண்மையைச் சொன்னால் சொந்தத் தகப்பனை அவை அடையாளம் கண்டுகொண்டால் கூட ஒரு சிறிதும் மதிப்பதில்லை. வெள்ளாடு இல்லாவிட்டால் செம்மறிகள் மனம் போன திக்கில் கண்மண் தெரியாமல் நடக்கும். மேய்ப்பன் கழுதைமேல் உட்கார்ந்து, மந்தைக்கு முன்னே போய் வெள்ளாடு போல மே-ஏ-ஏ என்று கத்த வேண்டும். அப்போது செம்மறிகள் அவன் பின்னே ஒருங்காக வரும். எங்களிடமோ, வெள்ளாடும் இல்லை, கழுதையும் இல்லை. இந்த அழகில் அனுபவக் குறைவு காரணமாக நான் மே-ஏ-ஏ என்று கத்தியது, அடி முட்டாளான செம்மறியைக் கூட ஏமாறச் செய்திருக்க முடியாது.

ஆனாலும், ஆண்டவன் உதவியால் நாங்கள் எப்படியோ முன்னே நகர்ந்தோம். இரவோ, எழில் ஒவியமாய்க் காட்சி தந்தது. மலைப்பாங்கான ஸ்தெப்பி வெளி நாற்புறமும் நீண்டு பரந்திருந்தது. மலை சரிவுகள் நிலவில் வெள்ளியாக மினுமினுத்தன. கரு நிழல்கள் வெல்வெட் மென்மை உள்ளவை போலத் தோற்றம் அளித்தன. செங்குத்து நெற்றியும் பொன்னிறமும் கொண்ட நிலாகூடக் காற்றால் திரட்டிக் கூட்டப்படும் மேகங்களுக்கிடையே பிடிவாதமாக இடித்துப் புகுந்த வழி செய்துகொண்டு வானில் நீந்தியது. புற்கள் சிலு சிலுக்க, நறிய குளுமையை ஏந்தித் தரைமீதும் வீசியது காற்று. இரவின் இந்த வனப்பும் இன்பக் கவர்ச்சியும் செம்மறி ஆடுகளைக் கூடச் சொக்க வைத்து விட்டன. அவை அமைதியாக வழியோடு நடந்தன. எப்போதாவது அவை கத்தியதுகூட எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல, இசைவைக் காட்டுவதற்காகவே. விரைவில் எங்கள் சாலை இருப்புப் பாதையை நெருங்கி, பாதையோரமாக எங்களை இட்டுச் சென்றது. தந்திக் கம்பிகளின் மெல்லிசை பாதையைத் தொடர்ந்து வந்தது. எனக்கும் பாட வேண்டும் போல் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயியில் நீண்ட கார்வை கொடுத்துப் பாடினேன்.

“நன்றாகப் பாடுகிறாய். தெரிந்த பாட்டை நான் கேட்டு வெகு காலம் ஆகிவிட்டது” என்று கனவு காண்பவன்போலக் கூறினான் அமன்.

இந்தப் புகழ்ச்சியால் உற்சாகம் அடைந்து நான் மேலும் மேலும் குரலை உயர்த்திக் கொண்டு போனேன். நானே மெல்லிய ஸ்வரங்களில் ஆரோகணித்து மேலே மேலே போய், வான விதானத்தை எட்டி விட்டேன்—விண்ணவர்கள் என் பாட்டைக் கேட்கும்படியும் விளிம்புகள் வரை வானம் அதிரும் படியும். எதைப் பற்றிப் பாடினேன் என்பது நினைவில்லை. இரவையும் நிலாவையும் நெடுஞ் சாலையையும், இரண்டு வெள்ளி நூல்கள் போல வெகு தூரம் நீண்டு சென்று முன்னே எங்கோ தொலைவில் இணைந்து (எல்லாத் தரைப்பாதைகளும் ஒன்றுகலப்பது போலவே) ஒன்றாகும் தண்டவாளங்களையும் பற்றிப் பாடினேன் போலும்.

இதற்கிடையே செம்மறிகள் அடிக்கடி ரயில்வே மேட்டில் ஏறலாயின. ஒரு வெள்ளாடு இல்லாதது எங்களை மீண்டும் உறுத்தத் தொடங்கிற்று. முன்னே ஒரு சிறு கிராமம் தெரிந்தது, இருப்புப் பாதையோடு ஒட்ட வைத்தது போல. கப்பிச் சாலை கிராம வீதி வழியே வீடுகளின் முன் சுவர்களின் இடையே போயிற்று. நாங்கள் செம்மறிகளை முன்னே விரட்டினோம். அப்பால் கப்பி ரஸ்தா இருப்புப் பாதையை அடுத்துச் சொல்லலாயிற்று. அமன் இருப்புப் பாதையைத் தலைசைப்பால் சுட்டினான்.

“ரயிலில் பயணம் செய்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்” என்று சொல்லிவிட்டு, “நாமும் ரயிலேறி உட்கார்ந்து எங்கேனும் மிக மிகத் தொலைவுக்குப் பயணம் செய்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!” என்று ஆர்வம் பொங்கக் கூறினான்.

“ஆமாம், அருமையாய் இருக்கும். கணக்கில்லாத பயணம் இருந்து இஷ்டம்போல ரயில் பயணம் செய்ய வேண்டும்! கவூன்சிக்கு, துர்க்கிஸ்தானத்துக்கு, சீனத்துக்கு அல்லது வேண்டுமானால் மாஸ்கோவுக்குப் போகலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், இதுதான் முறை போல. நாமோ மேலும் மேலும் ரயில் சவாரி செய்யலாம்...”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ கதையில் வருவதுபோல உண்மையாகவே காதில் பட்டது ரயிலின் ஒசை! தண்டவாளங்கள் மேல் விரைந்து வந்தன இரண்டு நெருப்புக் கண்கள். அவை வர வர எங்களை வேகமாய் நெருங்கின. அமனும் நானும் இன்னமும் எங்கள் மனக்கோட்டையின் பாதிப்பில் இருந்தோம் ஆகையால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவற்றையே நிலைக்குத்திட்டு நோக்கியவாறு இருந்தோம். எங்கள் கனவு இதோ பலித்துவிடும் என்று எங்களுக்குத் தோன்றியது. வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் இவ்வளவு பக்கமாக ஓடும் ரயிலைக் கண்ணாரக் கண்டு களிக்கலாமே. எங்களைப் போன்ற பையன்களுக்கு இந்த வாய்ப்பு ஒவ்வொரு நாளும் கிடைத்துவிடுவது இல்லையே. அது பிரயாணி வண்டியே அல்ல, சரக்கு வண்டி, என்றாலும் அதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு எஞ்சின்கள் இணைத்திருந்தன. பெட்டிகளோ—பெரிய சிவப்பு நிறப் பெட்டிகள் அவை—முடிவே கண்ணுக்கு எட்டாதபடி அத்தனை நிறையக் கோத்திருந்தன.

எஞ்சின்கள் அருகாகத் தடதடத்து விரைந்தன. திடீரென இரண்டும் காது செவிடுபடும்படிச் சங்கூதின. அவற்றுக்கு என்ன தான் நேர்ந்ததோ, இன்றளவும் எனக்கு விளங்கவில்லை. ஒரு பத்து லட்சம் எருதுகள் நடு நிசியில் தங்கள் சொந்தக்காரனை மாற்ற முடிவு செய்து எல்லோரும் கேட்கும்படி இந்த முடிவை அறிவித்தது போல் இருந்தது அந்த இரண்டு எஞ்சின்களும் செய்த முழக்கம். சுற்று வட்டாரம் முழுவதும் அந்த கர்ஜனையால் திடுக்கிட்டு அதிர்ந்தது. நானும் அமனும் கூடப் பதறிப் போய்விட்டோம். எங்கள் செம்மறிகளோ, உலகமே முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்து வேறு இடத்துக்குச் செல்லும் சாலையை உடனே தேடுவது அவசியம் என்று தீர்மானித்து விட்டன. வீடுகளின் சுற்றுச் சுவர்களோடு நெருங்கியிருந்த சில செம்மறிகள், திகிலால் சுவர்கள் மேல் பூனைகள் போலத் துள்ளி ஏறிக்கொண்டன. ஆனால் இந்தக் கலையில் பூனைகளுக்கும் அவற்றுக்கும் வெகு தூரம். எனவே அவை மறுபடி சரிந்து விழுந்தன. மடமடவென்று சரிந்து ஒன்றன்மேல் ஒன்றாக அவை விழுந்து குமைந்தது, இந்த வட்டாரத்தில் இதற்கு முன் ஒரு போதும் காணாத காட்சியாக இருக்கும். மற்ற ஆடுகள் வந்த வழியாகவே இருண்ட வீதியில் திரும்பி ஒடின. வேறு சிலவோ, மூளையை அறவே பறிகொடுத்துவிட்டு, ரயில் மேட்டின் மேல் ஏறப் போயின. நல்ல வேளையாக, தக்க சமயத்தில் அவை பின் வாங்கி ஒடி வந்துவிட்டன. சுருங்கச் சொன்னால் அவை விந்தையான ‘கண்ணா மூச்சி’ ஆடத் தொடங்கின. ரயில் வண்டி கனத்த தடதடப்புடன் எங்கள் அருகாகக் கடந்து விரைந்தது. முடிவில் சிவப்பு விளக்குகள் பொருத்திய கடைசிப் பெட்டியும் போய்விட்டது. கோபத்தால் சிவந்த சைத்தானின் கண்கள் போன்று ஒளிர்ந்தன அவ்விளக்குகள். வண்டி போய்விட்ட பிறகு பார்க்கிறோமோ, எங்கள் செம்மறி மந்தையைக் காணோம்!

செங்கல் சூளையிலிருந்து புகை வருவது போலப் புழுதி படலம் படலமாகக் கிளம்பியது. செம்மறி ஆடுகளின் பரிதாபக் கமறல் ஒலிகளும் அருகாமையில் கேட்டன. வீடுகளின் சுற்றுச்சுவர்களோடு நசுக்கப்பட்டிருந்த சில நொண்டி ஆடுகளும் சினைப்பட்டிருந்த செம்மறிகளுமே இவை. எங்கள் மந்தையில் எஞ்சி இருந்தவை இவை மட்டுமே.

சிதறிவிட்ட செம்மறிகளைக் கூவி அழைத்தவாறு நாங்கள் ஒரே கலக்கத்துடன் வெவ்வேறு புறங்களில் ஒடினோம். இருட்டில் நான் ஒர் ஆட்டுடன் மோதிக்கொண்டு அதைப் பின்னே இழுத்து வந்தேன். அமனின் நிழலுரு புழுதிக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

“எங்கேதான் ஒழிந்தீர்கள், பாழும் விலங்குகளே!” என்று அழுங்குரலில் ஓலமிட்ட அமன் என்மேல் மோதிக்கொண்டான்.

“ஆடுகள் எங்கே?” என்று இருவரும் ஏககாலத்தில் ஒருவரையொருவர் கரகரத்த குரல்களில் கேட்டோம்.

அமன் என்னை வன்மத்துடன் பார்த்து, இடையிலிருந்து கயிற்றை அவிழ்த்து, எஞ்சிய ஆடுகளை அதனால் ஒன்றாக இணைத்துக் கட்டினான். பின்பு நாங்கள் கிராம வீதியில் மறுபடி ஓடினோம். சுற்றுச் சுவர்கள் சில இடங்களில் இடிந்திருந்தன. இங்கே செம்மறிகள் மலையாடுகள் போல அவற்றைத் தாண்டியிருக்கும் என்று தோன்றியது. நாய்கள் எதிர்ப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நாங்கள் ஒவ்வொரு சுவராக ஏறிக் குதித்தோம். கறுப்பு விரிப்பில் எறும்புகளைத் தேடுவது போன்ற வேலை இது. ஆனாலும் நாங்கள் சுமார் மூன்று மணி நேரம் வீடு வீடாகத் தாண்டிக் குதித்துத் தேடி, ஒரு வீட்டு முகப்பில் ஐந்து செம்மறிகளையும் மற்றென்றில் மூன்றையும் ஒரு பாழ் மனையின் இடிபாடுகளில் இன்னும் சிலவற்றையும் பயிர்களுக்கிடையே ஒரு பத்தையும் கண்டுபிடித்தோம்... களைப்பால் நாங்கள் செத்துச் சாவடைந்து போனோம். சற்று இளைப்பாறிய பின் ஆடுகளை மறுபடி எண்ணத் தொடங்கினேம். ஏழு செம்மறிகள் குறைந்தன. நான் அமனைப் பார்த்தேன், அவன் என்னை உறுத்து நோக்கினான். மண்சுவரில் பதித்த பாசி மணிகள் போல இருளில் புழுதிப்படிவுகளினூடே பளிச்சிட்டன அவனுடைய விழிகள்.

“இப்போது என்ன செய்வது?” என்றான்.

எனக்கோ, அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

“நாம் இரண்டு பேரும் இரண்டு வருஷங்கள் வேலை செய்தாலும் ஏழு செம்மறிகளின் கணக்கைத் தீர்க்க முடியாது!”

“வா, இன்னும் தேடுவோம்.”

பலபலவென்று விடியலாயிற்று. நாங்கள் ரயில் மேட்டின் மறு பக்கம் போய், ஆட்டுப் புழுக்கைக் குவியல்களை இங்குமங்கும் கண்டு, அவற்றைத் தடம் பற்றிச் சென்று, சிறிது தூரத்தில் ஓடைக்கரையில் இன்னும் இரண்டு ஓடுகாலிகளைப் பிடித்தோம். மற்றவற்றைக் காணவில்லை, தேடவும் நேரமில்லை. கோக்-தெராக் தூரத்தில் இருந்தது. ஆட்டுக்காரன் அங்கே சந்தையில் எங்களுக்காகக் காத்திருத்தான்.

வழியில் ஒரு செம்மறி மந்தையிலிருந்து பின்தங்கத் தொடங்கிற்று, மே என்று கத்திற்று, லொக்கு லொக்கென்று இருமிற்று. அதன் விழிகள் பளிச்சிட்டன. மற்றவற்றோடு சேர்த்து ஓட்ட நாங்கள் என்னதான் முயன்றும் அது மசியவில்லை. குந்தப்போவது போல அடிக்கடி பின் கால்களை அகற்றி வைத்துக் கொண்டது.

எங்களுக்கு எதிராகப் பழுப்புக் குதிரை ஏறிவந்த ஒரு கஸாஃகியன், “டேய், தம்பிகளா! இந்த ஆட்டை விரட்டாதீர்கள். இது குட்டி போடப் போகிறது!” என்று கத்தினான்.

முதலில் நாங்கள் இதை நம்பவில்லை. ஆனால் ரயில் எஞ்சின்களின் அலறலால் மிரண்டுபோன செம்மறிக்குப் பிரசவ வேதனை உரிய நேரத்துக்கு முன்பே உண்மையில் தொடங்கிவிட்டது! இது ஒன்றுதான் எங்களுக்குக் குறையாய் இருந்தது!... வேளை வரும் முன்பே உலகில் தோன்ற அவசரப்படும் இந்தக் கலப்புசாதிக் குட்டி உருப்படாமல் போக! ஆனால் பாவம் செம்மறியின் விழிகள் பிதுங்கின. அது முனகிற்று, துடிதுடித்தது. இதைக் கண்டதும் எங்கள் வன்மம் போன சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது. மற்ற ஆடுகளை விலக்கி ஓட்டிவிட்டு நாங்கள் எங்களால் முடிந்த வகையில் பிரசவம் பார்க்கத் தொடங்கினோம். செம்மறிக்கு வலி எடுக்க ஆரம்பித்ததும் நாங்களும் அதனுடன் சேர்ந்து முக்கி முனகினோம், ஏதோ நாங்களே குட்டி போடப் போகிறவர்கள் போல உரக்கத் தொண்டையைக் கனைத்துக்கொண்டோம். முடிவில் நாங்கள் ஈன்றுவிட்டோம். தாய் ஆடு குட்டியைக் கால் முதல் தலைவரை நக்கிக் கொடுத்தது. நாங்களும் அப்படியே செய்திருப்போம். ஆனால் பொங்கிப்பெருகிய அன்பில் திளைத்த தாய் ஆடு எங்களுடன் அன்பைப்பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டது. தவிர குடும்ப பாசத்துக்கெல்லாம் நேரமும் இல்லை. நாங்கள் போய்ச் சேருமுன் சந்தையை மூடிவிடுவார்களோ என்ற ஆபத்து இருந்தது.

சினை ஆடு எங்களை வெகு நேரம் தாமதப்படுத்திவிட்டது. கூடவே இப்போது அதற்குப் பதில் நாங்கள் குட்டியை இடுப்புக் குட்டையால் சுற்றிச் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. ஆயினும் மந்தையைச் சமாளிப்பது இப்பொழுது எவ்வளவோ சுளுவாகிவிட்டது. அப்போதுதான் ஈன்ற ஆடு எங்களில் எவன் குட்டியை வைத்துக் கொண்டிருந்தானோ அவன் பின்னால் களைப்பின்றி ஓடியது. மந்தையின் மற்ற ஆடுகள் கும்பலாக அதைத் தொடர்ந்தன. ஆகவே, தலையாடு இல்லை என்ற குறை இப்போது தீர்ந்துவிட்டது. வெள்ளாட்டினுடைய வெற்றியின் இரகசியம் தன்னம்பிக்கையே என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். போதிய தன்னம்பிக்கை உள்ள தோற்றத்துடன் கம்பீரமாக நடக்கும் எந்த ஆட்டையும் தொடந்து செம்மறிகள் எங்கு வேண்டுமனாலும் போகும்—அதல பாதாளத்துக்குக் கூட.

புனிற்றிளங் குட்டி தாய் ஆட்டின் பார்வையிலிருந்து எப்போதேனும் மறைந்து விட்டால், அதற்குப் பதில் நாங்கள் ஆடு போலக் கத்துவோம். எங்களுக்கு இது ஒருவேளை நன்கு வாய்க்காமல் இருக்கலாம். ஆனால் ஆட்டுக் குட்டியும் இப்போது தானே பிறந்தது. அதற்கும் என்ன பிரமாத அனுபவம் இருந்தது!—இப்படியாக நாங்கள் ஆற்றை அடைந்தோம்.

ஆற்றைக் கடக்க வேண்டும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது, அதாவது அமனுக்குத் தெரியும், அவன் என்னிடம் சொல்லியிருந்தான். ஆனாலும் இரவில் பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாக நேர்ந்ததால் நாங்கள் இதை மறந்துவிட்டோம். இப்போதோ, திகைத்துத் தடுமாறிப் போனோம். இந்த இழிபிறவிகளின் கும்பல் முழுவதையும் தாமே விரும்பித் தண்ணீரில் இறங்க வைக்க முயன்று பார்த்தால் தெரியும்! ஒவ்வொன்றாகத் தூக்கிச் சென்று அக்கரை சேர்ப்பதும் நடவாது. ஆறு ரொம்ப அகலமில்லை, பிரசண்டமானதும் இல்லைதான். என்றாலும் அதனிடம் வேடிக்கை செல்லாது என்பது நிச்சயம். நாங்கள் கலந்து ஆலோசித்து, தாயன்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தோம். அமன் உடைகளைக் களைந்துவிட்டு ஆடடுக் குட்டியைக் கைகளில் தூக்கித் தாய்க்கு அதைக் காட்டியபின் உரக்க மே என்று கத்தியவாறு ஆற்றில் இறங்கி நடக்கலானான். ஆற்றின் இரைச்சல் அவனுக்கு உதவிற்று. அவனும். மோசமில்லாமல் கத்தினன். நான் செம்மறியாய் இருந்ததால் அது நிஜ ஆட்டின் கத்தலே என்று நம்பியிருப்பேன். தாய் ஆடு கலவரத்துடன் மிரள விழித்தவாறு கரையில் தயங்கி நின்றது. ஆனால் தாய் அன்பே முடிவில் வென்றது. அது நீரில் தாவிக் குதித்து அமன் பின்னே நீந்திச் சென்றது. மற்ற ஆடுகளும் அதைத் தொடர்ந்து நீரில் குதித்தன. மிகப் பயங்கொள்ளிகளான ஆடுகளை நான் ஆற்றில் நெட்டித் தள்ளி விரட்டினேன். விரைவில் மந்தை முழுவதும் ஆற்றில் இறங்கிவிட்டது. பாலில் விழுந்த சுண்டெலிபோலத் தலையை மேலே நிமிர்த்தியவாறு நீந்தின செம்மறிகள். சில வேலைகளில் பெருக்கு அவற்றை இழுத்துப் போகும். நாங்கள் அவற்றை லாவிப் பிடிப்போம். முடிவில் அதிர்ஷ்டம் எங்கள்மீது கருணை கொண்டது. மேற்கொண்டு நஷ்டம் இல்லாமல் மந்தை மறுகரை சேர்ந்துவிட்டது.

நாங்கள் மேலே நடந்தோம். சூரியன் மேற்கே சாய்ந்தது. கோக்-தெராக்கின் அறிமுகமான வரையுருக்கள் முன்னே தென்பட்டன.

ஆடுகள் களைத்திருந்தன. பசியினால் அவற்றின் விலாக்கள் ஒட்டிப் போயிருந்தன. நாங்களும் ஓரேயடியாகச் சோர்ந்துபோயிருதோம். எங்களுக்கு ஒரே ஓநாய்ப்பசி. ஆயினும் முதலில் ஆடுகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. அவைதாமே விலை போக வேண்டும். நாங்கள் அல்லவே! அவற்றைக் கொஞ்சமாவது மேயவிடுவது அவசியமாய் இருந்தது. அப்போதுதான் அவை உப்பிய வயிறுகளுடன் சந்தை போய்ச் சேரும். இல்லாவிட்டால் வாங்குபவர்கள் எங்கள் பக்கமே அண்ட மாட்டார்கள். அப்போது நாங்கள் புல் அடர்ந்த பெரிய திடலின் அருகாக நடந்து கொண்டிருந்தோம். கலந்து ஆலோசனை செய்தபின் நாங்கள் மந்தையை நிறுத்தி ஆடுகளைப் புல்வெளியில் மேயவிட்டோம். நாங்களும் சற்று தூரத்தில் சாய்ந்துகொண்டோம். மேலங்கிகளை விரித்துப் பேசாமல் படுத்துக்கொண்டு, மேயும் மந்தையைக் கண்காணித்தவாறு, ஆடுகள் தொலைந்து போனதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்று சிந்தித்தோம். சிந்திக்க எளிதாய் இருக்கும் பொருட்டுக் கண்களை லேசாக மூடிக்கொண்டோம்... உரத்த வசவுகளைக் கேட்டு விழித்து எழுந்தோம்!

எங்கள் அருகே நின்றது மிகப் பெரிய வெளிர் மஞ்சள் குதிரை. சாட்டையை வீசி ஆட்டியபடி எங்களை வைது நொறுக்கிக்கொண்டு அதன்மேல் உட்கார்ந்திருந்தான் பருத்த ஆள் ஒருவன், அமன் தள்ளி எழுந்து நின்றன். அவன் முதுகில் விழுந்தன சில சாட்டையடிகள். நான் தாமதித்து உணர்வுக்கு வந்தேன், ஆனால் அமனின் தவற்றைக் கருத்தில் கொண்டு, அடி படாமல் விலகித் தப்பினேன். அந்த ஆள் வாய்க்கு வந்தபடித் தொடர்ந்து வசவுமாரி பொழிந்தான். அவனது நீண்ட, நரையோடிய தாடி கோபத்தால் கலைந்து பறந்தது. சப்பை மூக்கு பருத்தி மேலங்கியில் இறுகத் தைத்த பெத்தான் போல் இருந்தது. அவன்தான் சுற்றுப்புற நிலங்களின் சொந்தக்காரன் ஆன பிரபல ஜமீன்தார், சப்பைமூக்கன் அஜீஸ் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டோம். ஆனால் அவன் இந்த நிலங்களின் சொந்தக்காரன் என்பது எங்களுக்கு அக்கம் பக்கம் கண்ணோட்டிய உடனே விளங்கிவிட்டது. எங்கள் செம்மறிகள் பருத்தி வயலில் புகுந்து பருத்திச் செடிகளை அறவே மொட்டையடித்து விட்டன... சப்பைமூக்கு ஜமீன்தாரின் திட்டல்களாலும் புகலின்மையாலும் வரப்போகும் விபத்து பற்றிய கவலை தோய்ந்த முன்னுணர்வாலும் உந்தப்பட்டு நங்கள் ஆடுகளைத் திரட்டிச் சேர்க்க விரைந்தோம். அதற்குள் அவை வருங்காலப் பயிரின் ஒரு பகுதியைச் சரியானபடித் தின்று தீர்த்திருந்தன. எங்கள் தொல்லைகொடுக்கிகளை நாங்கள் வயலிலிருந்து ஓட்டி வந்ததும் ஜமீன்தார் சற்று தூரத்தில் வேலை செய்து கெண்டிருந்த பணியாட்களைக் கூவி அழைத்து ஆடுகளைத் தன் பண்ணைவீட்டுக்கு விரட்டிச் செல்லும்படிக் கட்டளை இட்டான்.

நாங்கள் அங்கபடியைப் பற்றிக்கொண்டு அவனைக் கெஞ்சாதவண்ணம் கெஞ்சினோம்:

“ஜமீன்தார் ஐயா, நாங்கள் ஏழை அனாதைகள். எங்கள்மேல் கருணைகூருங்கள் . வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்ய விடுங்கள். எங்கள் ஆயுள் காலம் முழுவதும் உங்கள் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்...”

ஜமீன்தாரோ தன்னை மறந்த வெறியுடன் மேலும் மேலும் திட்டினான், எங்களை மாற்றிச் சாட்டையால் விளாறினான், பின்பு மந்தையின் பின்னே குதிரையை விரட்டிச் சென்றான். நாங்கள் அவனைத் தொடர்ந்து போனோம். அமன் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தான். பண்ணை வீட்டை நெருங்கியதும் ஜமீன்தார் வேகத்தைக் குறைந்தான். நாங்கள் அவனை எட்டிப்பிடித்து மறுபடி கெஞ்சத் தொடங்கினோம்:

“ஜமீன்தார் ஐயா, இரக்கம் கட்டுங்கள். இன்று சந்தை நாள் எங்கள் எஜமானர் சந்தையில் எங்களை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்குமே. நாங்கள் ஆடுகளைக் கொண்டு சேர்க்காவிட்டால் அவர் எங்களைக் கொன்றே போடுவார்!...”

ஜமீன்தார் எங்களை ஒரக் கண்ணால் பார்த்தான் .

“யார் உங்கள் எஜமானர்?”“கராஹேஜாபாய். அல்லா உங்களுக்கு அருள்வாராக...”

ஜமீன்தாரின் மனம் கொஞ்கம் இளகிவிட்டது போலத் தோன்றியது. அவன் ஒரக் கண்ணால் எங்களை மறுபடி பார்த்தான்.

“நல்லது, நான் உங்களை எஜமானருடன் பேசுகிறேன்.” —அவன் துப்பினான். அவரிடம் சொல்லுகிறேன் — அவன் மறுபடி துப்பினான் — கயவாளிப் பயல்களான உங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்கும்படி! இதற்காகவே இன்று சந்தைக்குப் போகிறேன்! மதபக்தியுள்ள முஸல்மானின் சொத்தை, இவ்வளவு பாடுபட்டுச் சம்பாதித்த சொத்தை, நீங்கள் எப்படி ஆழும் பாழும் ஆக்குகிறீர்கள் என்பதை அவடம் சொல்லுகிறேன், கீழ்மக்களா! கராஹோஜாவின் செம்மறிகள் விஷயத்திலும் நீங்கள் இப்படித்தான் செய்திருப்பீர்கள்!” —இப்படி அவன் இலக்குப் பார்த்துத் தாக்கவே நாங்கள் அச்சத்தால் விலவிலத்துப் போனோம்— “ஊம்! ஆடுகளைத் திரட்டிச் சந்தைக்கு ஒட்டிப் போங்கள்! பகல் பொழுது பாதி கழிந்துவிட்டது, நாய்ப் பயல்களா, நீங்கள் என்னடா என்றால் நிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்! ஆ-ஆ!”. என்று பெருங் குரலில் அதட்டி மறுபடி சாட்டையை வீசினான். நாங்கள் இதை எதிர்பார்த்துத் தயாராய் இருந்தோம் ஆதலால் அடி விழும்வரை காத்திருக்கவில்லை.

அல்லாவுக்கு நன்றி செலுத்தி, மேலும் கருனை பாலிக்கும் படி வேண்டிக் கொண்டு நங்கள் ஆடுகளைச் சந்தைக்கு ஒட்டிப்போனோம்.

எஜமானன் கோபத்தால் உடல் பதற எங்களுக்காகக் காத்திருந்தான். நாங்கள் பக்கத்தில் போனதுமே அவன் எங்கள் மேல் பாய்ந்து ஆபாச வசவுகளைப் பொழியத் தொடங்கினான். நாங்கள் அவற்றை எல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டோம். இன்னும் சரியாகச் சொன்னால், ஆடுகள் குறைவதைக் கராஹோஜாபாய் கண்டுகொண்டதும் என்ன நடக்கும் என்ற காட்சியைக் கற்பனைக் கண்களால் நோக்கி நாங்கள் உணர்வற்று நின்றோம். ஆடுகளைப் பத்து பத்தாகச் சேர்த்துக் கட்டும்படி அவன் உத்தரவிட்டான். நாங்கள் அவ்வாறு செய்யத் தலைப்பட்டோம். எங்கள் நெஞ்சுகளோ, பாப்ளார் இலைகள் துடிப்பதுபோலப் பதைபதைத்துக் கொண்டிருந்தன. பத்து பத்து ஆடுகளாக மூன்று கும்பல்களைக் கட்டிவிட்டி நான்காவது பத்தைக் கட்டி முடிக்கும் தறுவாயில் அமன் பதினோராவது ஆட்டை அந்தக்கும்பலில் சட்டெனச் சேர்த்துவிட்டு எனக்குக் கண் ஜாடை காட்டினான். அவன் மூளையில் ஏதோ தந்திரம் உதித்திருக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன். நாலாவது கும்பலை மற்ற மூன்றின் பக்கத்தில் நான் இழுத்துச் சென்றபோது அமன் திடீரென என்னை அதட்டிக் கூப்பாடு போட்டான்.

“அட வலிப்பு கண்ட மடையா, சரியாக எண்ணக்கூடத் தெரியவில்லையே உனக்கு! பாருங்கள், ஜமீன்தார் ஐயா, பத்துக்குப் பதில் பதினொரு ஆடுகளை ஒவ்வொரு கும்பலிலும் கட்டியிருக்கிறான்! அட மதிகெட்ட மூடமே, உன்னால் ஜமீன்தார் ஐயா நஷ்டப்பட்டுப் போவாரே, உலக்கைக் கழுந்து, பாழாய்ப் போகிற குறைப்பிறவிப் பயலே!”

ஜமீன்தார் உடனே இந்த வலையில் விழுந்துவிட்டான். நாலாவது கும்பலில் இருந்த ஆடுகளை மறுபடி எண்ணினான், என்னைத் திட்டினான், பின்பு மற்றக் கும்பல்களை எண்ணிச் சரி பார்ப்பதற்காகத் திரும்பினான். அப்போது அமன் என் மேலங்கிக் கையைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நாங்கள் இருவரும் ஒரு புறம் துள்ளித் தாவி, நொடிப்போதில் சந்தைக் கூட்டத்தில் மூழ்கிவிட்டோம்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

No comments: