எனக்கு வினையாக முடிந்த இந்த விவகாரத்தைத் திட்டமிட்டவன் யூல்தாஷ்.
லைலாக் மசூதியின் பிரதான வாயில் முகட்டின் கீழ் ஆல்ச்சிக் வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது. என் லேசான மேலங்கியின் பைகளும் கைநுனிகளும் இடுப்புக் குட்டையும் வென்று பெற்ற ஆல்ச்சிக்குகளால் நிறைந்துவிட்டன. வெற்றியால் நான் இன்ப வெறி கொண்டுவிட்டேன். அடுத்தபடி கிடைத்த வெற்றிப் பொருளைச் சட்டை மார்புக்குள் மறைத்துக்கொண்டு, “ஆகா, கோட்டைவிட்டீர்களா! வெற்றி எனக்கே!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூவினேன்.
என் அதிர்ஷ்டத்துக்கு முடிவையே காணேம். அந்த வேளையில்தான் வந்து சேர்ந்தான் யூல்தாஷ். தன் காலிக்கோ மேலங்கியின் சிக்குப் பிடித்த தலைப்பால் மூக்கைத் துடைத்துக் கொண்டே வந்து விளையட்டைப் பார்த்தான். பின்பு, ஏதோ விருப்பம் இல்லாதவன் போல, “பையன்களா, எல்லோரும் சேர்ந்து கூட்டாகப் புலவு தயாரிபபோமா?” என்றான்.
எல்லோரும் அக்கணமே அவன் பக்கம் திரும்பினார்கள். “தயாரிப்போம், தயாரிப்போம்!” என்று கத்தினார்கள். என் அதிர்ஷ்டம் என் ஒருவனைத் தவிர யாருக்கும் மகிழ்ச்சி ஊட்டவில்லை என்பது தெளிவாயிருந்தது.
யூல்தாஷ் முகத்தைச் சுளித்தான்.
“எங்கே?” என்றன்.
“எங்கே வேண்டுமானலும்! ரீஸ்க்கி-ஹல்பீயின் பழைய வீட்டு முகப்பில் தயாரிப்போம்!” (ரீஸ்க்கி-ஹல்பீ பள்ளி உதவி ஆசிரியர்.)
“சரி” என்று யார் யார் என்ன கொண்டுவர வேண்டும் எனப் பங்கிடலானன் யூல்தாஷ். ஹுஸ்னிபீ சமையல்காரனகத் தெரிந்தெடுக்கப்பட்டான். பாத்திரம், கரண்டி, உப்பு, மிளகாய், தண்ணீர் ஆகியவை கொண்டு வருவது அவன் பொறுப்பு ஆயிற்று. அரிசியும் காரட்டும் தானே கொண்டுவருவதாக யூல்தாஷ் ஏற்றுக் கொண்டான். இறைச்சி கொண்டுவருவதாக நான் வாக்களித்தேன். மற்றச் சாமான்கள்—அப்படி அனேகமாக எதுவும் மிச்சம் இல்லை என்றலும்—கொண்டுவரும் பொறுப்பு தந்திரக்காரன் புலாத்ஹோஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாங்கள் கலைந்தோம். ஆட்டத்தில் வென்ற பொருள்களைச் சுமந்து கொண்டு நான் கொழுப்பு எடுத்துவர வீட்டுக்குப் போனேன்.
அம்மா அடுக்களையில் இருந்தாள். தந்தூர் எனப்படும் கோட்டையடுப்பில் பறங்கிக்காய்ப் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் அவள். நான் ஆல்ச்சிக்குகளை என் மூலையில் கொட்டினேன். உணவுப் பண்டங்களும் வீட்டுச் சில்லறைச் சாமான்களும் எங்கள் தாழ்வான பழைய வீட்டின் பின்புறம் உக்கிரணத்தில் இருந்தன. அதற்குப் பின் வராந்தா வழியாகப் போக வேண்டும். வராந்தாவில் என் நடுவுள்ள தங்கை இளையவளைச் சீராட்டிக் கொண்டிருந்தாள். நான் ஒரு காரியமும் இல்லாதவன் போன்ற தோற்றத்துடன் அவளைக் கடந்து சென்றாலும் நான் எங்கே போகிறேன் என்று அறிய அவள் ஆசைப்படுவாள், காவல் நாய் போலக் கூச்சல் கிளப்பவாள். எனவே நான் தந்திரத்தைக் கையாள நேர்ந்தது.
“ஷபாக், உன் பெரிய பந்து எங்கே?” என்று அவளிடம் கோட்டேன்.
“என் பொம்மைகள் இருக்கும் இடத்தில். ஏன்?”
“அங்கே காணவில்லையே, அதனால் கேட்டேன்.”
“அட நீ ஒன்றுமற்றுப் போக. நீதான் எடுத்திருப்பாய். இப்போதே கொடுத்துவிடு.!”
நான் வன்மப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் தங்கையை ஒருவிதமாகப் படுக்கப் போட்டுவிட்டு, என்னைப் பார்த்துச் சீறி, தன் பொம்மைகள் இருந்த இடத்துக்கு ஒடினாள். நான் உக்கிராணத்துக்குள் பாய்ந்து, பாத்திரத்திலிருந்த கொழுப்புத் துண்டை வெளியே எடுத்துப் பாத்திரத்தை மூடியிருந்த துண்டுக் காகிதத்தில் வைத்துச்சுற்றி இடுப்பில் செருகிக்கொண்டேன். முக்கிய வேலை முடிந்துவிட்டது. விறகு வைத்திருந்த சவுக்கைக்கு அமைதியாகப் போனேன். வெங்காயக் கிடங்கறைக்கு மேலே உட்கார்ந்திருந்தது என் சாம்பல் கோழி. நான் ஒசைப்படாமல் அருகே போய் அதன் ஒரு சிறகைத் தூக்கினேன். கோழி முட்டை இட்டுவிட்டு அடைகாத்துக் கொண்டிருந்தது என்பது தெரிந்தது. ஒப்படைத்த பொறுப்புக்கும் அதிகமாகச் செய்து காட்ட அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோழியை விரட்டினேன். அது கொக்கரித்துக் கொண்டு ஒடிவிட்டது. முட்டையைத் தொப்பிக்குள் வைத்துக் கொண்டு வெளியே அவசரமாகப் புறப்பட்டேன். இப்போது ஒர் அபாயம் மட்டுமே எஞ்சியிருந்தது. அடுக்களை அருகாகப் போக வேண்டியிருந்தது. அம்மா அடுப்படியில் வேலையாய் இருப்பாள் என்ற நம்பிக்கையில் உலாவுபவன் போன்று படலை நோக்கி நடந்தேன். அட பாவமே! வேதனைப்படும் தோற்றமும் கண்ணீர் மல்கும் விழிகளுமாக, புகையை அகற்றக் கையை வீசி ஆட்டியபடி கதவருகே நின்று கொண்டிருந்தாள் அம்மா.
“அட நீ பிஞ்சிலேயே வெம்பிப் போக! மறுபடி வெளியே சவாரியா?” என்று கத்தினாள்.
நான் பணிவடன் நின்று புயல் அடங்குவதற்குக் காத்திருந்தேன்.
“ஒடுவதே குறியாய் இருக்கிறாயே, உருப்படாக் கட்டை! வா இங்கே, அடுப்பை ஊதி எரியவிடு சற்றே. கண்ணே குருடாகிவிடும் போலப் புகைகிறது!” என்று இரைந்தாள் அம்மா.
வேறு வழியில்லாமல் நான் அடுப்பருகே போய் ஊதி எரிய விடுவதில் முனைந்தேன். புகை கண்களைக் காந்திற்று. குல்லாய்க்கு அடியில் முட்டை இங்குமங்கும் உருண்டது. தருணம் பார்த்து உருண்டு வெளியே வரவோ, குஞ்சு பொரிக்கவோ அது முயல்வதுபோல இருந்தது. அடுக்களையில் தகிக்கும் வெக்கை. கடைசியில் அடுப்பு தழல் வீசி எரிந்தது. அதற்குள் என் வயிற்றிலும் ஒரு காலிலும் ஏதோ கசிவதை உணர்ந்தேன். வெப்பத்தில் உருகிய கொழுப்பு அது! கொழுப்புத் தாரை அடர்த்தியாகி வயலுக்குப் பாயும் மடை நீர் போலக் குபகுபுவென்று பெருகலாயிற்று. எனக்கு எரிச்சல் மண்டியது, அச்சமும் உண்டாயிற்று. காற்சட்டை நனைந்துவிட்டது. உருகிய கொழுப்பு தரையிலும் சொட்டத் தொடங்கியது. இதை எல்லாம் அம்மா கவனிக்கிறாளா என்று பார்ப்பதற்காகத் திரும்ப நினைத்தேன். அதற்குள் என் தலையில் விழுந்தது பேரிடி.
“நீ சின்ன வயசிலேயே படக்கென்று போய்விட! ஒகோகோ என்று தடி மரமாய் வளர்ந்திருக்கிறாய். கலியாணம் ஆகியிருந்தால் இதற்குள் நாலு குழந்தைகளுக்குத் தகப்பனாயிருப்பாய். துணியை நனைத்துக் கொண்டிருக்கிறாயே, அதிலும் பாத்திமாவடையவும் ஸீஹ்ரியுடையவும் பொருள்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புனிதத் தலத்தில். அட நீ ஒன்றுமற்றுப் போக!” என்று மரக் குழவியை ஆட்டிக் கொண்டு கூப்பாடு போட்டாள் அம்மா.
சட்டென்று அவள் கூச்சலை நிறுத்திவிட்டு என்னை நிலைக்குத்திட்டு நோக்கினாள். என் தொப்பிக்கு அடியில் இருந்த முட்டை உடைந்து மஞ்சட்கருவும் வெண்கருவும் ஒன்று கலந்து என் பொருத்து வழியாக வலது கன்னத்தில் வழிந்தன. குழவியால் என்னை அடித்தபோது நறுக்கென்ற நொறுங்கொலி அம்மா காதில் பட்டிருந்தது. தான் என் மண்டையைப் பிளந்துவிட்டதாகவும் என் மூளைதான் இப்படிக் கசிகிறது என்றும் இப்போது அவள் எண்ணிவிட்டாள். மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நான் அவள் அருகாக நழுவி வெளியேறி முகப்பை நோக்கிப் பாய்ந்தேன். அம்மா ஏதோ கத்தினாள். தங்கையின் வன்மக் கீச்சொலியும் அவள் கூச்சலுடன் சேர்ந்து கொண்டது. ஆனால் நான் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நொடிப்போதில் நான் தெருவில் வெகு தொலைவில் இருந்தேன்.
மூன்றாவது மூலை திரும்பியதும் நான் நின்று என் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்தேன். எவ்வளவு மோசமாய் இருக்க முடியுமோ அவ்வளவு மோசம் ஆகியிருந்தது அது. பையன்களிடம் போவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. வீடு திரும்பவும் என்னால் முடியாது. கொழுப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் காணவில்லை என்பதை அம்மா இதோ தெரிந்து கொள்வாள், அப்புறம் என்பாடு ஆபத்துதான். நான் எங்கே போவது? புகலின்மையும் ஏக்கமும் என்னை ஆட்கொண்டன. இந்த உலகத்தில் எனக்கு ஒதுங்கிடமே கிடையாது!
அருகிலிருந்த சுற்றுச் சுவற்றை விரலால் நோண்டியபடி நின்றேன். சுவற்றின் மறுபுறம், வீட்டில் வழக்கமான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அமைதியான குரல்கள் கேட்டன. “ஐயோ, அத்தை!” என்று எவளோ பெண் கத்தினாள்.
இதைக் கேட்டதும் எனக்குச் சட்டென ஒர் எண்ணம் உதித்தது. ஸாக்பானில் என் அத்தை இருக்கிறாளே! உடனே இந்த விஷயம் ஏன் என் மனதில் படவில்லை?
உண்மையாகவே ஸாக்பான் வீதியில் தன் கணவருடன் வசித்துவந்தாள் என் அத்தை. அத்திம்பேர் மென்மயிர்த்தோல் வினைஞர். நான் அவர்கள் வீட்டுக்கு எப்போதாவதுதான் போவேன். ஆனால் அவர்கள் என்மேல் உயிராய் இருந்தார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. வீட்டில் எப்போதும் நிசப்தமும் ஒழுங்கும் நிலவும். எல்லாம் கச்சிதமாக, துப்புரவாக இருக்கும். அக்கம்பக்கத்துப் பையன்களைக் கூட அங்கே எனக்குத் தெரியாது. எனவே ஒரே அலுப்பாய் இருக்கும். ஆனால் அவர்கள் வீடு இருக்கிறதே, காட்சிச் சாலைதான்! அங்கே இல்லாத பொருளே கிடையாது. உலகில் உள்ள வஸ்துக்களை எல்லாம் அங்கே காணலாம்.
வலிய இரும்பு உகிர்கள் கொண்ட மூன்று வேட்டைப் பறவைகள். காடை வேட்டைப் பருந்து, கவுதாரிவேட்டைப் பருந்து, குறும்பருந்து. சண்டைச் சேவல். வான்கோழி. சாதாரணச் சேவல், ஆனால் அதன்மேல் ஏறிச் சவாரி செய்யலாம்போல அவ்வளவு பெரியது, பருத்தது. அதன் முதுகு ஊதாச்சாயல் கொண்ட பசிய நிறம். விலாக்கள் கறுப்பு. கொண்டை தீ நாக்கு போலச் சிவந்தது. வில்லோ மிலாறுகளால் வனைந்த கூண்டில் வசித்தது கேக்ளிக் என்ற பட்சி. பறங்கித் தோடு அடியில் வைத்த வலையில் காடை வாழ்ந்தது. பாடும் பறவைகளில் வானம்பாடி, தேன் சிட்டு, மைனா ஆகியவை இருந்தன.
வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. ஒன்று ஒநாய் வேட்டை நாய் (இது வெறுமே ஆடம்பரத்துக்காகவே வளர்க்கப்பட்டது. அத்திம்பேர் அதனுடன் வேட்டையாடப் போவதே இல்லை). இன்னொன்று சிறு வீட்டு நாய். இதற்கு என்னைக் கண்டாலே ஆகாது. மூன்றாவது வீட்டுக் காவல் நாய். இது வாயிலருகே இருந்த பழைய நாய்க்குடிலில் வசித்தது. புஸுபுஸுத்த புஹாராப் பூனை ஒன்றுடன் அவை மூன்றும் அமைதியாக வாழ்ந்து வந்தன. நான் போன தடவை அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது பூனை ஐந்து அல்லது ஆறு குட்டிகள் போட்டிருந்தது.
வீட்டு முகப்புத் தோட்டத்தில்தான் எத்தனை வகை வகையான மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின! அரளியும் ரோஜாவும் இரவுராணியும் இன்னும் விதம்விதமான பூச்செடிகளும். எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொள்ளக் கூட முடியாது... ஒவ்வொரு செடியையும் அத்திபேரும் அத்தையும் கண்ணின் மணிபோல் காத்து வந்தார்கள். தங்கள் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து பூந்தோட்டத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு எப்படி முடிந்தது என்பது எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தது.
எப்பேர்ப்பட்டதின் பண்டங்கள் கொடுத்து உபசரித்தார்கள் அவர்கள்!...
வீடிழந்த துன்ப வாழ்க்கைக்குப் பதில் திருப்தி நிறைந்த இந்த வாழ்க்கை வாழலாமே என்று நினைத்தபோது எனக்கு இவை எல்லாம் நினைவு வந்தன. அதை எண்ணுகையிலேயே எனக்கு நாவில் நீர் ஊறிற்று. பக்கத்திலிருந்த ஒடையில் ஒருவிதமாக உடம்பைக் கழுவிக் கொண்டேன். பின்பு ஸாக்பான் வீதிக்குப் புறப்பட்டேன். வழியில் எதிர்ப்பட்ட அக்கறைக்கு உரிய விஷயங்களையும் காட்சிகளையும் கவனித்துப் பார்ப்பதற்காக அடிக்கொரு தரம் நின்றேன். புதிய, நேர்த்தியான வாழ்க்கையைக் கற்பனையில் அனுபவித்து மகிழ்ந்தவாறு சென்றேன்.
அத்தையும் அத்திம்பேரும் நான் எதிர்பார்த்ததுபோலவே மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார்கள்.
“அட என் கண்ணே, வா, உள்ளே வா! எப்படி வளர்ந்துவிட்டான் பாரேன்! என் கண் பட்டுவிடாமல் இருக்க வேண்டுமே. எப்படி வந்தாய், மகனே, உள்ளே வா! அண்ணாவே மறு உயிர் எடுத்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டது போல் இருக்கிறது. இன்றைக்கு என் கண் துடித்தது காரணமாகத்தான்” என்று கனிந்தவளாக என்னை உபசரித்தாள் அத்தை.
நான் கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டு, அவர்களுக்காக மிகவும் ஏங்கிப் போய்விட்டேன் என்றும், சில நாட்கள் அவர்களுடன் இருக்க வந்திருக்கிறேன் என்றும் சொன்னேன். இதைக் கேட்டதும் அத்தைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அத்திம்பேருக்கும் அப்படியே.
அவர் என் தலையைத் தடவினார். “சபாஷ்! எங்களை நினைத்துக் கொண்டாயே. அருமை! இன்றைக்கு யூல்-பாஷா (இது ஒரு பெரிய ஈ) அறையில் ஒயாமல் சுற்றுச் சுற்றிப் பறந்தது. எந்த விருந்தாளி வரப்போகிறார் என்று நினைத்தேன். அந்த விருந்தாளி நீயேதான்! ஈ பறந்தது நல்ல சகுனம் ஆயிற்று, நல்ல சகுனம். சபாஷ், மகனே!” என்றார்.
அன்பு மொழிகளைப் பொழிந்தவாறு அவர்கள் என்னை வீட்டுக்குள் இட்டுச் சென்றார்கள். நான் இதனாலெல்லாம் ஒரேயடியாகச் சொக்கிப்போய், நான் வந்ததற்காகக் கூறிய காரணத்தை நானே நம்பிவிட்டேன்.
எனக்கு சுவர்க்க வாழ்க்கை தொடங்கியது. ஆனால் சுவர்க்கத்தில் வசிப்பது சலிப்பூட்டுவது என்பதை எனக்கு முன்பே எத்தனையோ பெயர் கண்டிருந்தார்கள். நான் இந்த உண்மையை இரண்டாம் நாள் நடுவில் புரிந்து கொண்டேன். அத்திம்பேரின் எல்லா வளர்ப்புப் பிராணிகளிடமும் எனக்கு உள்ள உறவை அதற்குள் தெளிவுபடுத்திவிட்டேன். வீட்டு நாயை இரண்டு தடவை படபடப்பு அடைந்து குலைத்துத் தீர்க்கும்படிச் சீண்டினேன். காவல் நாய்க்கு அஜீரணம் ஏற்படும்படி இரை ஊட்டினேன். பிரமாண்டமான சேவல் மேல் ஏறிப் பூந்தோட்டத்தைச் சுற்றிச் சவாரி செய்ய முயன்றதில் அதன் மிக அழகிய சில இறகுகளை உதிர்த்துவிட்டேன். தாயும் மகளுமான இரண்டு பூனைகளுக்கும் வீட்டில் அவற்றின் உண்மையான இடம் எது என்பதைப் புரிய வைத்தேன். பூக்களை நான் முகர்ந்த ஆர்வத்தில் அவை தம் நறு மணத்தில் பாதிக்கு மேல் இழந்துவிட்டன.
வெளியே போக அனுமதி கேட்டேன். அத்திம்பேர் சில்லரைச் செலவுக்காக எனக்கு மூன்று கோப்பெக்குகள் கொடுத்தார். இது அற்பத் தொகை அல்ல. வண்டிக்கு அடியில் அகப்பட்டுக் கொள்ளதிருக்க முயலும்படியும், அப்போது நாள்தோறும் மும்மூன்று கோப்பெக்குகள் கொடுப்பதாகவும் வாக்களித்தார் அத்திம்பேர். ஆக புதிய பையன்களை அறிமுகம் செய்து கொள்ளப் புறப்பட்டேன். இந்த வட்டராம் எங்களதுபோல ஜன நெருக்கம் உள்ளதாக இல்லை. ஆனாலும் பையன்கள் நிறைய இருந்தார்கள். அவர்களும் மொத்தத்தில் எங்களைப் போலவே விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். எனவே நான் சிரமமின்றி அவக்ளுடைய ஆட்டத்தில் கலந்து கொண்டேன். இரண்டு நாட்கள் நாங்கள் முற்றுகைப் போர் விளையாட்டு ஆடினோம். பின்பு அம்பு எய்தோம், ஆல்ச்சிக்குகள் வைத்து விளையாடினோம். ஆனால் இம்முறை எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. மூன்றாம் நாள் காலையிலிருந்தே நாய்களை ஏவிச் சண்டையிடச் செய்யத் தீர்மானித்தோம். இதற்காக இரண்டு தெரு நாய்களைப் பிடித்தோம். அவற்றில் ஒன்று ஒரே பயந்தாங்கொள்ளி. முதலாவது வாய்ப்பு கிடைத்ததுமே அது கம்பிநீட்டிவிட்டது. அத்திம்பேரின் காவல் நாயைக் கொண்டுவந்து பெருமை அடித்துக் கொள்ளலாம் என்று அப்போது நான் முடிவு செய்து, அதை ஒருவரும் அறியாமல் வெளியே இட்டு வந்தேன். ஆரம்பத்தில் என் ஆதரவை உணர்ந்து அது துணிவுடன் பாய்ந்து தாக்கிற்று ஆனால் சமீபத்தில் அனுபவித்த வயிற்றுக் கோளாறு அதன் பலத்தையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகக் குலைத்துவிட்டது போலும். அது தோல்வி அடைந்து கடிபட்ட காலுடன் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்துவிட்டது. அதன்பின் தன் ஆயுள் முழுவதும் அது நொண்டிற்று என்று நினைக்கிறேன்.
காவல் நாய் மேல் எனக்கு இரக்கமாய் இருந்தது. இப்படி நேரும் என்று நான் எண்ணவே இல்லை. இதை அத்திம்பேருக்குத் தெரியாமல் எப்படி மறைப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஆனால் இப்போதும் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. அத்திம்பேரின் நண்பர்கள் நகருக்கு வெளியே முலாம்பழத் தோட்டத்துக்குப் போய், பழங்களைப் பறித்த உடனேயே தின்பதற்காக அழைத்தார்கள். அதே கையோடு, ஈத் பண்டிகை நாட்களில் தாம் பார்க்க வேண்டியிருந்த உறவுக்காரர்களையும் பார்த்துவிட்டு வருவது என்று அத்திம்பேர் தீர்மானித்தார். வேட்டை நாயையும் காடை வேட்டைப் பருந்தையும் உடன் இட்டுச் சென்றார். பறவைகள் பிடிப்பதற்கான நீண்ட பிடி வைத்த வலையையும் எடுத்துக் கொண்டார். பாவம்! காவல் நாய் தன் குடிலுக்குள் முடங்கிக் கிடந்தது. நானும் அதை முதுகால் மறைத்துக் கொண்டு நின்றேன். எனவே அதன் காயத்தை அத்திம்பேர் கவனிக்கவில்லை. புறப்படுவதற்கு முன் அவர் மூன்று புஹாராத் தன்காக்களை (வெள்ளி நாணயங்கள்) என்னிடம் கொடுத்தார்.
“பட்சிகளுக்குத் தீனி ஊட்டு. அவற்றைப் பட்டினி கிடக்க விடாதே. நான் வரத் தாதானுல் அவற்றுக்கு வேண்டிய தீனி வாங்கு. இந்தா” என்றார்.
எனக்குப் பெருமை பிடிபடவில்லை. நான் உண்மையாகவே பெரியவன் ஆகிவிட்டேன். சீக்கிரம் எனக்குப் பதினான்கு வயது ஆகிவிடும். முக்கியமான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதிலும் எவையோ அற்பப்பட்சிகள் அல்ல, பருந்தும் குறும்பருந்தும் போன்ற வலிய வேட்டைப் பறவைகள். நான் பறவைக் கூடத்துக்குப் போனேன். பருந்தும் குறும்பருந்தும் வெவ்வேறு மூலைகளில் அமர்கொம்புகளில் தலைகளை உள் இழுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன. அவற்றுக்கு அத்திம்பேர் என்ன இரை கொடுத்தார் எனபது எனக்குத் தெரியும். ஆனால் என் மூளையில் ஒர் எண்ணம் உதித்தது. அவற்றின் எச்சம் ஒரே வெள்ளை நிறம். பால் போல வெண்மையானது. ஒரு வேளை இவற்றுக்குப் பால் பண்டங்கள் உண்ணக் கொடுக்க வேண்டுமோ? வெறும் பால் உதவாது, மிகவும் நீர்த்தது அது. ஆனால் புளித்த பால்? அதாவது, தயிர்? ஒரு வேளை, இவற்றுக்கு ஏற்ற உணவு அதுதானோ? ஊட்டிப் பார்க்க வேண்டும். இதுதான் இவற்றுக்கு ஏற்ற உணவு, சந்தேகமே இல்லை. இதுவரை ஏன்தான் ஒருவரும் இதைப் புரிந்து கொள்ளவில்லையோ?
அத்தைக்குத் தெரியாமல் சமையறையிலிருந்து தயிர்க் கலயத்தை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் போனேன். இரண்டு கோப்பெக்குகளுக்குக் கலயம் நிறையத் தயிர் கிடைத்தது. வீட்டில் அதை இரண்டு கிண்ணங்களில் ஊற்றி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு கிண்ணத்தை வைத்தேன். அவை தீனியை அசட்டையாகப் பார்த்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டன. வேறு என்ன, உயர் சாதி மலைப் பறவைகள் ஆயிற்றே, எவையோ அற்பப் பட்சிகள் அல்லவே! பசியாய் இருந்தாலும், ஆட்களுக்கு எதிரே உணவைத் தொட மாட்டா. கோழியாய் இருந்தால் தன் கீழ்மையை உடனே காட்டியிருக்கும். வெட்கமில்லாமல் அக்கணமே இரைமேல் பாய்ந்திருக்கும். இவையோ—அப்படிச் செய்ய மாட்டா.
பறவைக் கூடத்திலிருந்து வெளியே வந்தேன். இரண்டொரு மணி நேரம் பொறுத்து மறுபடி அங்கே போனேன். கர்வம் கொண்ட பறவைகள் அமர் கொம்புகளிலிருந்து இறங்காமல், உணவிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு இன்னமும் அப்படியே உட்கார்ந்திருந்தன. எனக்கு லேசாகக் கோபம் வந்தது. உள்ளம் என்னவோ குருவி உள்ளம், மிடுக்குக்கு மட்டும் குறைச்சல் இல்லை! வேட்டைப் பறவைகளாம், பிரமாதம்! நான் இவற்றுக்கு முழு மரியாதை காட்டினேன். வெளியார் இல்லாமல் தனிமையில் சாப்பிட விரும்புகின்றன போலும் என்று நினைத்து வெளியோ கூடப் போனேனே. இவையோ, உதைக்க வேண்டும்! தொடக்கூட இல்லை! பறவைக்கூட முளையில் அத்திம்பேரின் பூத்தையல் கையுறைகள் தொங்கின. பறவைகளை அமர்கொம்புகளில் உட்கார வைக்கும் போது அவர் அவற்றை அணிந்து கொள்வார். நான் கையுறைகளை அணிந்து கொண்டேன், குறும்பருந்தை எடுத்து முழங்கால்களுக்கு இடையே அழுத்திக் கொண்டு வெள்ளிக் கரண்டியால் அதற்குத் தயிர் ஊட்டலானேன். குறும்பருந்து வயிறு முட்ட இரை எடுத்தாயிற்று என்று தெரிந்ததும் அதை மறுபடி அமர்கொம்பில் உட்கார்த்திவிட்டு வேட்டைப் பருந்தை எடுத்துக் கொண்டேன். அதுவும் நன்றாகச் சாப்பிட்டது.
“இப்போது எல்லாம் சரி ஆகிவிட்டது. ஒருவன் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் எப்படிக் களைத்துப் போய்விடுவான் தெரியுமா? வயிறாரச் சாப்பிட்டால் போதிய பலம் வரும், அமைதியாக உட்கார்ந்திருக்கலாம். இப்போது இஷ்டம்போல உட்கார்ந்திருங்கள். வயிறு நிறைந்திருக்கிறது, வருத்தம் இல்லை” என்று அவற்றிடம் சொன்னேன், பிறகு வெளியே போனேன்.
இவ்வாறு இன்னும் இரண்டு நாட்கள் அத்தைக்குத் தெரியாமல் பருந்துகளுக்குத் தயிர் ஊட்டினேன். குறும்பருந்து எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதற்கு அடர்ந்த தயிர் ஆடையை ஊட்டினேன். இப்போது எனக்கு வேலை நிறைய இருந்தபடியால் நான் அனேகமாக வெளியே போகவே இல்லை.அத்தை என்னைப் பார்த்து உள்ளூற மகிழ்ந்து போனாள். அவள் நல்லியல்புடன் புன்னகை பூப்பதைக் கவனிக்காததுபோல நான் நடித்தேன்.
மூன்றாம் நாள் காலையில் நான் பறவைக் கூடத்துக்குள் போனவன், இரண்டு வேட்டைப் பறவைகளும் அமர்கொம்பிலிருந்து இறங்கி, சிறகுகளைச் சிலுப்பிக் கொண்டு லேசாகப் படபடப்பதைக் கண்டேன்.
“சபாஷ்! அமர்கொம்பிலேயே ஒயாமல் உட்கார்ந்திருக்க முடியுமா என்ன! அலுத்துப் போகுமே” என்றேன்.
காலை உணவாக மறுபடி தயிரையே உட்கொண்டன பறவைகள். மதியத்தில் அவற்றுக்கு இறைச்சிப் பணியாரம் கொடுக்கத் தீர்மானித்தேன். இடைவிடாமல் இறைச்சியற்ற உணவையே சாப்பிட்டு அவை புஷ்டியான உணவுக்கு அலந்துபோயிருக்கும். ஆனால் மாலையில் மறுபடி புறவைக் கூடத்துக்குள் போனதும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! குறும்பருந்து சிறகுகளைச் சுருட்டிக் கொண்டு கால்களைப் பரத்தியவாறு மல்லாக்க விழுந்து இறந்து கிடந்தது. வேட்டைப் பருந்தும் அதே கிடையில் கிடந்தது. அது இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது, ஆனால் நெடுநேரம் தாக்குப்பிடிக்காது என்பது தெளிவாய் இருந்தது... எனக்குக் கிலி பிடித்துவிட்டது. அத்திம் பேருக்கு என்ன சமாதானம் சொல்லுவேன்? தன் பறவைகள்மேல் அவருக்கு உயிர் ஆயிற்றே! இவை எதனால்தான் செத்துத் தொலைந்தனவோ? தயிரினாலா? அழகுதான்! எனக்குந்தான் இறைச்சி பிடிக்கும். ஆனாலும் எத்தனை நாட்கள் வெறும் தயிரையே சாப்பிட்டுக் கடத்தியிருக்கிறேன்! அதுவும் அரை வயிற்றுக்கு! இப்படியும் விபத்து நேர வேண்டுமா? அத்திபேருக்கு என்னதான் சொல்லுவேன்? அவருக்கு எவ்விதச் சமாதானமும் கூற என்னால் முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நகரத்தில் என் வாழ்வு முடிந்து விட்டது. எல்லாம் தொலைந்தது. நேரம் கடந்துவிடுமுன் வெளியேறிவிட வேண்டும். கால் போன திக்கில் நடையைக் கட்டிவிட வேண்டியதுதான். சின்ன வயதில் அம்மா சொன்ன பழங்கதைகளில் வரும் இளைஞர்கள் போல. அந்தக் காலம் ஒரு வேளை இவ்வளவு மோசமாக இல்லை போலும். நான் தனியன், ஆக்கங்கெட்டவன் என்ற உணர்வினால் எனக்கும் அழுகை வரும்போல் இருந்தது. ஆனால் அழுவதோ கூடாது, அத்தை கவனித்துவிடுவாள்.
பறவைகளின் தீனிக்காக அத்திம் பேர் கொடுத்திருந்த பணத்தில் இரண்டு தன்காக்களும் ஐந்து கோப்பெருக்குகளும் மீதம் இருந்தன. அவற்றை இடுப்பில் செருகிக் கொண்டு வாயிலுக்குப் போனேன். கூரை வேய்ந்த நடைபாதையில் புறாக்கள் இருந்த கூண்டு தொங்கிற்று. இந்தப் பட்சிகள் மேல் எனக்கு மிகுந்த பிரியம். சற்று நேரம் அவற்றை வருத்ததுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் யோசனை செய்தேன். சட்டென ஒரு முடிவுக்கு வந்து கூண்டைக் கொக்கியிலிருந்து கழற்றித் தலையில் வைத்துக் கொண்டு வெளியேறினேன். வீதி அனேகமாக வெறுமையாய் இருந்தது. வீட்டிலிருந்து விரைவில் அப்பால் போய்விடும் நோக்கத்துடன் வேகமாக நடந்தேன். அத்தை என் மனக்கண் முன் தோன்றினாள். நான் கிளம்பியபோது அவள் பூனைகளுக்காக இறைச்சிப் பொங்கல் தயாரித்துக் கொண்டிருந்தாள். நான் இல்லாததைக் கண்டதும் அவள் என்ன செய்வாள்? கட்டாயம் அழுது புலம்புவாள். இந்த எண்ணங்களை விரட்டுவதற்காக நான் பிட்டத்தில் அடித்துக் கொண்டேன். இடையில் பணமும், காற்சட்டைக்குள் செருகிய அங்கித் தலைப்பும் தலைமேல் புறாக்களின் கூண்டுமாக, கதைகளில் வரும் நாயகன் போல தொலைதூரத்துக்கு நடந்தேன், நடந்தேன்... நகருக்கு வெளியே.
“விம்மியவாறு நான் நடப்பேன்
வெகுதொலை சொல்லும் பாதையிலே,
செம்மு துயர்ச் சோலையில் நீ
தேம்பியவாறு இருப்பாய்.
இரு சிறு கரும்புறாக்கள் நாம்,
ஏலாத குஞ்சுகள் போன்றோம்.
பிரிவு நமக்கிடையினிலே
முடிவற்ற பெருவழி போலும்.
ஐயோ என் ஏக்கமும் தூசும்
எரித்திடும் நண்பகல் வெயிலும்,
ஙொய்யென வழியில் பறக்கும்
நுண்கொசு எங்ஙனம் சொல்லும்?
வெந்துயர் வெப்பத்தைப் பற்றி
வேதனைப் பாட்டு நான் புனைவேன்.
இந்த வழியில் பறக்கும்
கொசு இதை என்ன அறியும்?
அந்தோ என்னிடம் கேளாதே,
அறிஞரிடம் கேட்டறிவாய்,
அந்தமில் வழியில் நடக்கும்
அகதிகள் நாம் படும் துன்பம்.”
(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)
Saturday, 25 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment