Friday, 14 March 2008

மீஷ்கா சமைத்த பொங்கல்சென்ற கோடையில் நான் அம்மாவோடு கிராமத்தில் இருந்தபோது, மீஷ்கா எங்களுடன் தங்குவதற்கு வந்தான். அவன் இல்லாமல் தனிமையில் வாடிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கும் பெருமகிழ்ச்சி.


'நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாக இருக்கலாம். நான் நாளை அதிகாலையில் கிளம்பி நகரத்துக்குச் செல்ல வேண்டும்; எப்போது திரும்பி வருவேன் என்று தெரியவில்லை. நீங்களாக சமாளித்துக் கொள்வீர்கள்தானே?'


'நிச்சயமாக', என்றறேன். 'நாங்கள் ஒன்றும் பாப்பாக்கள் அல்ல.'


'காலை உணவை நீங்களாகவேதான் சமைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பொங்கல் செய்யத் தெரியுமா?'


'எனக்குத் தெரியும்', மீஷ்கா சொன்னான். 'அது ரொம்ப சுலபம்.'


'மீஷ்கா', நான் கேட்டேன். 'நிஜமாகத்தான் சொல்கிறாயா? நீ எந்தக்காலத்தில் பொங்கல் செய்திருக்கிறாய்?'


'கவலைப்படாதே. அம்மா பொங்கல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதை என்னிடம் விடு. நான் உன்னைப் பட்டினி போட்டுவிட மாட்டேன். நீ சாப்பிட்டதிலேயே ஆகச் சிறந்த பொங்கலைச் சமைத்துத் தருகிறேன் பார்.'


காலையில் அம்மா எங்களுக்குத் தேநீருடன் சாப்பிடுவதற்காக் கொஞ்சம் ரொட்டியும் ஜாமும் கொடுத்துவிட்டு நொய்யரிசி இருக்குமிடத்தைக் காட்டினாள். அதை எப்படி சமைப்பது என்றும் சொன்னாள், ஆனால் நான் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. அதுதான் மீஷ்காவுக்கு நன்றாகத் தெரியுமே, அப்புறம் எனக்கென்ன கவலை என்று எண்ணிக்கொண்டேன்.


அம்மா போன பிறகு மீஷ்காவும் நானும் மீன் பிடிக்க ஆற்றுக்குப் போக நினைத்தோம். எங்கள் தூண்டிலையும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் புழுக்களை சேகரித்துக்கொண்டோம்.


'ஒரு நிமிஷம்', 'நான் சொன்னேன். 'நாம் ஆற்றுக்குப் போய்விட்டால் பொங்கல் சமைப்பது யார்?''யாருக்கு வேண்டுமாம் சமையலும் சங்கடமும்?' என்றான் மீஷ்கா. 'அது ரொம்ப சிரமம். நாம் ரொட்டியும் ஜாமும் சாப்பிட்டுக்கொள்வோம். ரொட்டி நிறையவே இருக்கிறது. நமக்குப் பசிக்கும்போது பொங்கல் செய்துகொண்டால் போயிற்று.'நிறைய ஜாம் சான்ட்விச்கள் செய்துகொண்டு ஆற்றுக்குப் போனோம். ஆற்றில் நீச்சலடித்துவிட்டு மணலில் காய்ந்தபடி சான்ட்விச்களைச் சாப்பிட்டோம். பிறகு மீன் பிடித்தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தும் மீன் எதுவும் சிக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தவையெல்லாம் சுமார் டஜன் சின்னஞ்சிறு அயிரை மீன்கள் மட்டுமே. அன்று பகல் முழுவதையும் ஆற்றோரமே செலவிட்டோம். மாலை நெருங்கியபோது பயங்கரமாகப் பசிக்க ஆரம்பிக்கவே, ஏதாவது சாப்பிடலாம் என்று வீட்டுக்கு வந்தோம்.'அப்புறம் என்ன மீஷ்கா', நான் கேட்டேன். 'நீ தானே நிபுணன். சொல் நாம் என்ன சமைக்கலாம்?''கொஞ்சம் பொங்கல் செய்யலாம்,' மீஷ்கா சொன்னான். 'அதுதான் சுலபம்.'
'ஆகட்டும்,' என்றேன்.அடுப்பை மூட்டினோம். மீஷ்கா நொய்யையும் பாத்திரதையும் எடுத்தான்.
'கொஞ்சம் அதிகமாகவே செய். எனக்கு ரொம்பப் பசி.'அவன் ஏறக்குறைய பாத்திரம் முழுவதும் நொய்யை நிரப்பிவிட்டு விளிம்பு வரை நீரை நிரப்பினான்.'தண்ணீர் கொஞ்சம் அதிகமில்லை?' நான் கேட்டேன்.'இல்லை. அம்மா இப்படித்தான் செய்வாள். நீ அடுப்பை மட்டும் பார்த்துக்கொள். பொங்கலை என்னிடம் விட்டுவிடு.'ஆகவே நான் தீயைக் கவனிக்க, மீஷ்கா பொங்கலைச் சமைத்தான்; அதாவது அவன் பேசாமல் பாத்திரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பொங்கல் தன்னைத்தானே சமைத்துக்கொண்டது.சற்றைக்கெல்லாம் இருட்டிவிட நாங்கள் விளக்கை ஏற்றினோம். பொங்கல் இன்னும் வெந்துகொண்டிருந்தது. திடீரென்று நான் பாத்திரத்தின் மூடி உயருவதையும், பொங்கல் எல்லாப் பக்கமும் வழிவதையும் கவனித்தேன்.'ஏ மீஷ்கா,' நான் கூப்பிட்டேன். 'பொங்கலுக்கு என்ன ஆயிற்று?''ஏன், பொங்கலுக்கு என்ன?''அது பாத்திரத்தைவிட்டு வெளியே எழும்புகிறது!'மீஷ்கா ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு பொங்கலை திரும்பவும் பாத்திரத்துக்குள் தள்ள ஆரம்பித்தான். அவன் தள்ளத்தள்ள அது எழும்பிவந்து பக்கங்களில் வழிந்துகொண்டே இருந்தது.'இதற்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. ஒருவேளை தயாராகிவிட்டதோ என்னவோ?'ஒரு தேக்கரண்டியை எடுத்து கொஞ்சம் சுவைத்துப் பார்த்தேன். நொய் இன்னும் உலர்ந்தும் கெட்டியாகவுமே இருந்தது. 'அவ்வளவு தண்ணீரும் எங்கேதான் போயிற்று?''எனக்குத் தெரியாது,' மீஷ்கா சொன்னான். 'நான் ஏகப்பட்ட தண்ணீரை ஊற்றினேன். ஒருவேளை பாத்திரத்தில் ஓட்டை ஏதாவது உள்ளதோ?'பாத்திரத்தை நாங்கள் நன்கு பரிசீலித்தோம். ஓட்டை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. 'ஆவியாகியிருக்கவேண்டும்,' அவன் சொன்னான். 'நாம் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்ப்போம்.'அவன் கொஞ்சம் பொங்கலைப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்தான்; தண்ணீருக்கு இடமளிப்பதற்காக, கொஞ்சம் நிறையவே எடுக்கவேண்டியிருந்தது. அப்புறம் நாங்கள் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து மேலும் கொஞ்சம் சமைத்தோம். அது வெந்தது, வெந்தது நீண்ட நேரம். பிறகு திரும்பவும் வெளியில் வழிய ஆரம்பித்தது.'ஏய், என்னாச்சு இதற்கு!' மீஷ்கா கத்தினான். 'ஏன் பாத்திரத்துக்குள்ளேயே இருக்கமாட்டேனென்கிறது?'அவன் தன் கரண்டியை எடுத்து இன்னும் கொஞ்சம் பொங்கலை எடுத்துவிட்டு, மேலும் ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றினான்.'பார்த்தாயா,' அவன் சொன்னான். 'நீ என்னடாவென்றால் தண்ணீர் அதிகம் என்று நினைத்தாய்.'பொங்கல் தொடர்ந்து வேக ஆரம்பித்தது. அப்புறம், நீங்கள் நம்புவீர்களா, சற்றைக்கெல்லாம் மூடியைத் தூக்கிக்கொண்டு வெளியே ஊர்ந்துவர ஆரம்பித்தது!நான் சொன்னேன்: 'நீ அதிகப்படியாக நொய்யைப் போட்டிருந்திருக்கவேண்டும். சமைக்கும்போது அது உப்புகிறது; அப்பொழுது பாத்திரதில் இடம் போதவில்லை.''ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும்,' என்றான் மீஷ்கா. 'அது உன் தப்புதான். பசிக்கிறது, நிறையப்போடு என்று நீதானே சொன்னாய், நினைவில்லை?''எவ்வளவு போட வேண்டும் என்று எனக்கு எப்படித் தெரியும்? சமைக்கத்தெரிந்தவன் நீதான்.''ஆமாம், எனக்கு சமைக்கத்தெரியும். நீ மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் இந்நேரம் சமைத்திருப்பேன்.''அப்படியென்றால் சரி. நீயே சமைத்துக்கொள், நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.'நான் வேகமாக வெளியேறிவிட்டேன். மீஷ்கா தொடர்ந்து பொங்கலை சமைத்தான். அதாவது, மென்மேலும் பொங்கலை எடுப்பதும் தண்ணீரை சேர்ப்பதுமாக இருந்தான். சீக்கிரத்திலேயே மேசை பாதி வெந்திருந்த பொங்கல் வைக்கப்பட்ட தட்டுகளால் நிரம்பிவிட்டது. அவன் ஒவ்வொரு தடவையும் தண்ணீரை சேர்த்துக்கொண்டிருந்தான்.கடைசியில் எனக்கு பொறுமை போய் விட்டது.'நீ இதைச் சரியாகச் செய்யவில்லை. இப்படியே போனால் பொங்கல் தயாராவற்குள் விடிந்துவிடும்.''அது சரி. பெரிய உணவகங்களில் அப்படித்தான் சமைப்பார்கள், தெரியாதா உனக்கு? எப்பொழுதுமே மறுநாள் சாப்பாட்டை முதல்நாள் இரவே சமைத்துவிடுவார்கள். அப்போதுதான் காலையில் தயாராகியிருக்கும்.''உணவகங்களுக்கு அது சரிதான். அவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை, அவர்களிடம் வேறு சாப்பாடு மலைபோல இருக்கும்.''நாமும் அவசரப்பட வேண்டியதில்லை.''வேண்டியதில்லையா! நான் பட்டினி கிடக்கிறேன். அதோடு படுக்கவேண்டிய நேரமும் ஆகிவிட்டது. எவ்வளவு நேரமாகிவிட்டது பார்.''உனக்குத் தூங்க எவ்வளவோ நேரம் இருக்கும்,' இன்னொரு தம்ளர் நீரை பாத்திரதில் ஊற்றியபடியே கூறினான். தவறு எங்கே என்று சட்டென்று எனக்குப் புரிந்துவிட்டது.'நீ பச்சைத் தன்ணீரை ஊற்றிக்கொண்டிருக்கும்வரை அது வேகப்போவதில்லை.''தண்ணீர் இல்லாமலே பொங்கல் சமைத்துவிடலாம் என்று நினைக்கிறாயா?'


'இல்லை. இன்னும் பாத்திரத்தில் நொய் அதிகமாக உள்ளது என்கிறேன்.'
நான் பாத்திரத்தை எடுத்து, பாதி நொய்யை வெளியே கொட்டிவிட்டு தண்ணீரை நிரப்பும்படி அவனிடம் சொன்னேன்.குவளையை எடுத்துக்கொண்டு வாளிக்குச் சென்றான்.'சே.' அவன் சொன்னான். 'தன்ணீர் முழுவதும் தீர்ந்துவிட்டது.''இப்பொழுது என்ன செய்வது? ஒரே கும்மிருட்டு. நம்மால் கிணற்றையே பார்க்க முடியாது.''என்ன! சரி நான் போய் ஒரு நொடியில் கொண்டுவருகிறேன்.'அவன் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு, வாளியில் ஒரு கயிற்றை முடிந்து கிணற்றுக்குச் சென்றான். சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.'எங்கே தண்ணீர்?' நான் கேட்டேன்.'தண்ணீரா? கிணற்றில் இருக்கிறது.''உளறாதே. வாளியை என்ன செய்தாய்?''வாளியா? அதுவும் கிணற்றில்தான் இருக்கிறது.''கிணற்றிலா?''ஆமாம்.''உள்ளே போட்டுவிடாயா என்ன?''ஆமாம்.''அட மடக்கழுதையே. அப்படியானால் நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். தண்ணீருக்கு இப்போது என்ன செய்வது?''நாம் கெட்டிலை உபயோகிக்கலாமே.'நான் கெட்டிலை எடுத்தேன். 'கயிற்றைக் கொடு.''என்னிடம் இல்லை.''எங்கே இருக்கிறது?''அங்கே அடியில்.''எங்கே அடியில்?''கிணற்றில்.''ஆக, நீ வாளியைக் கயிற்றோடு உள்ளே போட்டுவிட்டாய்?''ஆமாம்.'நாங்கள் வேறு கயிறு தேட ஆரம்பித்தோம், ஆனால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.'நான் போய் பக்கத்து வீட்டாரைக் கேட்டு வருகிறேன்,' மீஷ்கா சொன்னான்.'உன்னால் அது முடியாது. 'மணியைப்பார். எல்லோரும் எப்போதோ தூங்கியிருப்பார்கள்.'அந்த நேரம் பார்த்துத்தானா எனக்குத் தாகம் எடுக்க வேண்டும்? எனக்கு தண்ணீர் குடித்தே தீரவேண்டியிருந்தது.மீஷ்கா சொன்னான்: 'அது அப்படித்தான். தண்ணீர் இல்லாதபோதுதான் தாகம் எடுக்கும். அதனால்தான் பாலைவனத்தில் மக்களுக்குத் தாகம் எடுக்கிறது--ஏனென்றால் பாலைவனத்தில் தண்ணீர் கிடையாது.''பாலைவனத்தை விடு,' நான் சொன்னேன். 'போய் ஏதாவது கயிறு தேடிவா.''எங்கே தேடுவதாம்? எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். நாம் தூண்டில் கயிறைப் பயன்படுத்துவோம்.''அது வலுவாக இருக்குமா?''அப்படித்தான் நினைக்கிறேன்.''இல்லையென்றாலோ?''இல்லையென்றால், அறுந்துவிடும்.'நாங்கள் தூண்டில் கயிறைக் கழற்றி கெட்டிலில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குச் சென்றோம். நான் கெட்டிலைக் கிணற்றுக்குள் இறக்கி, நீரை நிரப்பினேன். கயிறு ஒரு வயலின் தந்தியைப் போல விறைப்பாக இருந்தது.'இது அறுந்துதான் போகப்போகிறது,' என்றேன். 'வேண்டுமானால் பார்.''நாம் மிக மிகக் கவனமாக மேலே தூக்கினால் ஒருவேளை தாங்கலாம்.' என்றான் மீஷ்கா. நான் என்னால் ஆனமட்டும் கவனமாக அதை உயர்த்தினேன். தண்ணீர்மட்டத்துக்கு மேலே உயர்த்தினேனோ இல்லையோ, தொபீர் என்ற சப்தம் கேட்டது. கெட்டில் போய்விட்டது.'அறுந்துவிட்டதா என்ன?' மீஷ்கா கேட்டான்.
'பின்னே இல்லையா? நாம் தண்ணீருக்கு என்ன செய்வது?''சமோவாரை வைத்து முயற்சி செய்யலாம்', என்றான் மீஷ்கா.'வேண்டாம். அதற்குப் பேசாமல் சமோவாரை நாமே நேரடியாகக் கிணற்றுக்குள் எறிந்துவிடலாம். வேலை மிச்சம். அதோடு நம்மிடம் வேறு கயிறும் கிடையாது.''அப்படியானால், பானையை உபயோகியேன்.''தூக்கிப்போடுவதற்கு அத்தனை பானைகள் எங்களிடம் இல்லை', என்றேன்.
'நல்லது. ஒரு தம்ளரை வைத்து முயற்சிசெய்.''தம்ளர் தம்ளராக இரவு முழுவதும் தண்ணீர் இறைக்கலாமென்கிறாயா?''வேறு என்னதான் செய்வது? பொங்கலை சமைத்தாகவேண்டுமே? அதோடு எனக்கு ரொம்ப தாகமாகவேறு இருக்கிறது.''தகரப் போகணியை பயன்படுத்துவோம்.' என்று சொன்னேன். 'அது தம்ளரை விட கொஞ்சம் பெரியதும் கூட.'நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச்சென்று தூண்டில் கயிறை போகணியில் அது கவிழ்ந்துவிடாதபடிக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குத்திரும்பினோம். நாங்கள் தாகத்தைத் தணித்துக்கொண்டபின் மீஷ்கா சொன்னான்:'எப்பொழுதும் இப்படித்தான் நடக்கும்--உனக்கு தாகமாக இருக்கும்போது ஒரு கடலையே குடித்துவிடலாம்போலத் தோன்றும். குடிக்க ஆரம்பித்தால் ஒரு குவளையே போதுமென்று இருக்கும். ஏனென்றால், மக்கள் இயல்பிலேயே பேராசைக்காரர்கள்.''உன் பிதற்றலை நிறுத்திவிட்டு பாத்திரத்தை இங்கே கொண்டுவா. அப்போதுதான் நாம் டஜன் தடவைகள் உள்ளேயும் வெளியேயும் ஓடவேண்டியிருக்காது.'மீஷ்கா பாத்திரத்தைக் கொண்டுவந்து அதை சரியாகக் கிணற்றின் விளிம்பில் வைத்தான். ஏறக்குறைய அதை என் முழங்கையால் தட்டிவிடத்தெரிந்தேன்.
'மடக் கழுதையே,' நான் சென்னேன். 'எதற்காக என் முழங்கைக்கடியிலேயே வைத்தாயாம்? அதைக் கையில் எடுத்து முடிந்த அளவுக்குத் தள்ளிப்பிடி. இல்லை, இதையும் தண்ணீரில் போட்டுவிடுவாய்.'மீஷ்கா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிணற்றிலிருந்து தள்ளிப்போனான். நாங்கள் அதை நிரப்பிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். இதற்குள்ளாக எங்கள் பொங்கல் ஆறிப்போய், அடுப்பும் அணைந்துவிட்டிருந்தது. மீண்டும் அடுப்பை மூட்டி, பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினோம். வெகுநேரத்துக்குப் பிறகு அது கொதிக்க ஆரம்பித்து, மெதுவே கெட்டியாகி, தளப்புளவென்று சப்தமிட்டது.


'கேட்டாயா?' என்றான் மீஷ்கா. 'சீக்கிரத்தில் அருமையான பொங்கலைச் சாப்பிடப் போகிறோம்.'


நான் கொஞ்சமாகத் தேக்கரண்டியில் எடுத்து சுவைத்துப் பார்த்தேன். சகிக்கவில்லை! தீய்ந்துபோன கசப்புச் சுவையில் இருந்தது; நாங்கள் உப்புப் போடவும் மறந்துவிட்டோம். மீஷ்காவும் வாயில் போட்டுவிட்டு, உடனே துப்பிவிட்டான். 'இல்லை,' அவன் சொன்னான், 'இதைச் சாப்பிடுவதற்குப்பதில் பட்டினி கிடந்தே சாவேன்.'


'வேறு என்ன பண்ணுவது?'
'எனக்குத் தெரியாது.'


'மடத்தனம்!' கத்தினான் மீஷ்கா. 'நாம் மீன்களை மறந்துவிட்டோமே.'


'இப்போதுபோய் மீன்களோடு கஷ்டப்படவேண்டாம். சீக்கிரத்தில் விடியப்போகிறது.'


'நாம் அவற்றை வேகவைக்கப் போவதில்லை. வறுப்போம். ஒரே நிமிடத்தில் தயாராகிவிடும், வேண்டுமனல் பாரேன்.'


'அப்படியானால் சரி,' என்றேன். 'ஆனால் அதுவும் பொங்லைப்போல நேரம் பிடிக்குமென்றால் எனக்கு வேண்டவே வேண்டாம்.'


'ஐந்தே நிமிடத்தில் தயாராகிவிடும், பார்க்கத்தான் போகிறாய்.'


மீஷ்கா ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி அடுப்பில் நேராகத் தணல் மேல் வைத்தான், சீக்கிரம் ஆகவேண்டுமென்று.


என்ணெய் சடப்புடவென்று பொரிய ஆரம்பித்து, சட்டென்று தீப்பற்றிக்கொண்டது. மீஷ்கா வாணலியை வெடுக்கென்று எடுத்தான். நான் அதில் நீரை ஊற்ற விரும்பினேன். அனால் வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. எனவே எண்ணெய் முழுவதும் தீரும்வரை எரிந்து முடித்தது. அறையே புகையால் நிரம்பியது. மீனில் ஒரு சில கரித்துண்டுகளே மிச்சமிருந்தன.


'நல்லது,' மீஷ்கா சொன்னான், 'இப்பொழுது எதை வறுப்பது?'


'இனி வறுக்கிற வேலையே வேண்டாம். நல்ல சாப்பாட்டை வீணாக்குவதுடன் வீட்டையே எரித்து சாம்பலாக்கிவிடுவாய். இன்றைக்கு நீ சமைத்தது போதும்.'


'ஆனால் நாம் எதைச் சாப்பிடுவதாம்?'


நாங்கள் பச்சை மாமிசத்தைச் சாப்பிடப்பார்த்தோம், ஆனால் அதுவொன்றும் உவப்பாயில்லை. பச்சை வெங்காயத்தைச் சாப்பிட முயன்றோம், அது கசந்தது. சமையல் எண்ணெயோ குமட்டியது. கடைசியில் ஜாம் பாட்டிலைத்தேடியெடுத்து, சுத்தமாக வழித்துச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப்போனோம். அதற்குள் நிரம்ப நேரம் ஆகிவிட்டது.


காலையில் ஓநாய்களைப் போலப் பசியோடு எழுந்தோம். மீஷ்கா கொஞ்சம் பொங்கல் வைக்க விரும்பினான். அவன் நொய்யை எடுப்பதைப் பார்த்தபோது நான் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.


'தொடாதே,' நான் சொன்னேன். 'எங்கள் வீட்டுக்காரர் நடாஷா அத்தையிடம் போய் நமக்காகக் கொஞ்சம் பொங்கல் செய்து தரும்படிக் கேட்கிறேன்.'


நாங்கள் நடாஷா அத்தையிடம் போய் எல்லாவற்றையும் சொல்லி, எங்களுக்காகப் பொங்கல் சமைத்துத் தந்தால், அவளது தோட்டத்தைக் களையெடுத்துத் தருவதாக வாக்குறுதியளித்தோம். அவள் எங்கள் மேல் இரக்கப்பட்டு, கொஞ்சம் பாலும் முட்டைக்கோஸ் அடையும் கொடுத்துவிட்டு, பொங்கல் சமைக்க ஆரம்பித்தாள். நாங்கள் அதை மேலும் மேலும் சாப்பிட்டோம். நடாஷா அத்தையின் பையன் வோவ்கா கண்கள் விரிய எங்களைப் பார்த்தான்.


ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். நடாஷா அத்தை ஒரு கொக்கியும் கொஞ்சம் கயிறும் தந்தாள். அவற்றை எடுத்துக்கொண்டு வாளியையும், கெட்டிலையும் கிணற்றிலிருந்து எடுக்கப்போனோம். அவற்றை எடுப்பதற்கு எங்களுக்கு நீண்ட நேரம் பிடித்தது. நல்லவேளையாக எதுவும் தொலையவில்லை. அதன் பின்னர், மீஷ்காவும், நானும், சிறுவன் வோவ்காவும் நடாஷா அத்தையின் தோட்டத்தில் களையெடுத்தோம்.


மீஷ்கா சொன்னான்: 'களை எடுப்பது ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது சுலபம். எப்படியும் பொங்கல் சமைப்பதைவிட சுலபம்தான்.'[கதை: நிக்கொலாய் நோசோவ்; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/; ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்க.]

Tuesday, 11 March 2008

ஏழு நிறப்பூ

கதை: வாலண்டின் கட்டயேவ்; சித்திரம்: வி. லோசின்; ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபைனா க்ளாகோலேவா; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/books/flower/7.html (இந்தச் சுட்டியை அளித்து உதவியவர்: ராதா ஸ்ரீராம்; ஆங்கில வடிவில் படிக்க இங்கு செல்க)

முன்னொரு காலத்தில் ஷேன்யா என்றொரு சிறுமி வாழ்ந்து வந்தாள்.


ஒருநாள் ஷேன்யாவை அவளுடைய அம்மா, வளைய பிஸ்கோத்துகள் வாங்கிவருவதற்காக ரொட்டிக்கடைக்கு அனுப்பினாள். ஷேன்யா ஏழு வளைய பிஸ்கோத்துகளை வாங்கினாள்: அப்பாவுக்காக ஓமம் போட்டவை இரண்டு, அம்மாவுக்காக கசகசா போட்டவை இரண்டு, அவளுக்காக சர்க்கரை தடவியவை இரண்டு, தம்பி பாவ்லிக்குக்காக சிறிய இளஞ்சிவப்பு நிறமுடைய ஒன்று. வளைய பிஸ்கோத்துகள் பாசிமணிகளைப் போன்று நூலில் கோர்க்கப்பட்டிருந்தன. வளைய பிஸ்கோத்து மாலையை எடுத்துக்கொண்டு ஷேன்யா வீட்டை நோக்கித் திரும்பினாள். அவள் அங்குமிங்கும் பராக்குப் பார்த்தபடி, பெயர்ப் பலகைகளை வாசித்துக்கொண்டு சாவகாசமாக நடைபோட்டாள். அப்பொழுது தெரு நாய் ஒன்று அவள் பின்னாள் வந்து வளைய பிஸ்கோத்துகளைத் தின்னத் தொடங்கியது. முதலில் அப்பாவுக்கான ஓமம் போட்டவைகளையும், பின் அம்மாவுக்குறிய கசகசா போட்டவைகளையும், பின்பு சர்க்கரை தடவிய அவளுடய பிஸ்கோத்துகளையும் தின்றுவிட்டது.ஷேன்யா அப்பொழுதுதான் வளைய பிஸ்கோத்துகள் கோர்த்த நூல் ரொம்ப இலேசாக இருப்பதை உணர்ந்தாள். அவள் திரும்பிப் பார்த்தபோது நேரம் கடந்துவிட்டது. நூல் கயிற்றில் ஒன்றும் இல்லை; நாய் அப்போதுதான் தம்பி பாவ்லக்கின் சிறிய பிங்க் நிற வளைய பிஸ்கோத்தைத் தின்றுவிட்டு, தாடையை நக்கிக்கொண்டிருந்தது.


'அட பாழாய்ப்போன நாயே!' ஷேன்யா கத்திக்கொண்டு அதன் பின்னால் ஓடினாள். ஓடோடிச்சென்றும் அவளால் நாயைப் பிடிக்க முடியவில்லை.
அப்படியே சென்றவள் வழி தவறிவிட்டாள். ஓடியவள் நின்ற போது தான் ஒரு புது இடத்தில் இருப்பதைக் கண்டாள்.


அங்கு பெரிய வீடுகள் எதுவும் இல்லை, சிறுசிறு வீடுகளே இருந்தன. ஷேன்யா அழத்தொடங்கினாள். அப்பொழுது ஒரு வயதான பாட்டி அங்கு தோன்றினாள்.

'எதற்காக அழுகிறாய், சின்னப் பெண்ணே?' என்று அவள் கேட்டாள். ஷேன்யாவும் அந்தப் பாட்டியிடம் நடந்ததைக் கூறினாள்.பாட்டிக்கு ஷேன்யாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளைத் தன் சிறிய தோட்டத்துக்கு அழைத்துச்சென்று சொன்னாள்: 'அழாதே. நான் உனக்கு உதவுகிறேன். என்னிடம் வளைய பிஸ்கோத்துகள் இல்லை, காசும் இல்லை, ஆனால் ஒரு அதிசயமான பூ என் தோட்டத்தில் வளர்கிறது. அது ஒரு ஏழு நிறப்பூ; அது நீ என்ன கேட்டாலும் கொடுக்கும்.கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் நீ ஒரு நல்ல பெண் என்று தெரிகிறது. ஏழு நிறப்பூவை உனக்குத் தருகிறேன். அது உனக்கு உதவி செய்யும்.'
இப்படிச் சொல்லிவிட்டு, பாட்டி மலர்ப் படுகையிலிருந்து வெகு அழகான மலர் ஒன்றைக் கொய்தாள். அது பார்ப்பதற்கு டெய்சியைப் போல இருந்தது. அதற்கு ஏழு மெல்லிய இதழ்கள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம். ஒன்று மஞ்சள் நிறம், ஒன்று சிவப்பு, ஒன்று நீலம், ஒன்று பச்சை, ஒன்று ஆரஞ்சு, ஒன்று வயலட், மற்றொன்று வெளிர் நீலம்.'இதுவொரு சாதாரணமான பூ அல்ல', பாட்டி சொன்னாள். 'அது கேட்ட வரத்தைக் கொடுக்கும். நீ செய்யவேண்டியது ஒரு இதழைக் கிள்ளி எறிந்து இப்படிச் சொல்லவேண்டியதுதான்:பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்பிறகு உனக்கு என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். உடனே அது நடக்கும்.'ஷேன்யா பாட்டிக்கு நன்றி சொன்னாள். தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள். அப்பொழுதுதான் அவள் தொலைந்துபோய் விட்டதும், வீட்டுக்கு வழி தெரியாததும் நினைவுக்கு வந்தது.திரும்பவும் பாட்டியைப் பார்த்து, பக்கத்திலுள்ள மிலீஷியாக்காரரிடம் தன்னை விட்டு விடும்படிக் கேட்க விரும்பினாள். ஆனால் பாட்டி, தோட்டம் இரண்டும் மறைந்துவிட்டிருந்தன. அவள் என்ன செய்வாள், பாவம். வழக்கம் போல அழ ஆரம்பிக்கப் போனாள்; மூக்கைக்கூட கோணிவிட்டாள்; அப்பொழுது சட்டென்று அவளுக்கு மந்திரப் பூவின் நினைவு வந்தது. அது நிஜமாகவே ஒரு அதிசய மலரா என்று இதோ இப்பொழுது தெரிந்துவிடும்! ஷேன்யா மஞ்சள் இதழைக் கிள்ளி எறிந்து விட்டுச் சொன்னாள்:
பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்நான் இப்பொழுதே வளைய பிஸ்கோத்துகளுடன் வீட்டில் இருக்க வேண்டும்!

அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே, தன் வீட்டில் வளைய பிஸ்கோத்துகளுடன் இருந்தாள்!


ஷேன்யா அவற்றை அம்மாவிடம் தந்துவிட்டு, 'உண்மையிலேயே இது அதிசயப் பூ தான். இதை நம்மிடம் இருப்பதிலேயே மிக அழகான பூ ஜாடியில் வைக்க வேண்டும்!'
ஷேன்யா சிறுமிதானே, ஆகவே அவள் ஒரு நாற்காலி மேல் ஏறி நின்று, மேல் தட்டில் இருந்த அம்மாவுக்குப் பிரியமான ஜாடியை நோக்கிக் கைகளை நீட்டினாள். சரியாக அதே சமயத்தில் சில காகங்கள் ஜன்னலை ஒட்டிப் பறந்தன. ஷேன்யாவுக்கு அவை எத்தனை என எண்ணியே ஆக வேண்டும்--ஏழா, எட்டா? விரல்விட்டு எண்ண ஆரம்பித்தாள். அப்பொழுது--டமார்--அந்த ஜாடி தவறி விழுந்து சுக்குநூறாகச் சிதறியது.'கடவுளே, என்ன ஒரு குழந்தை!' அடுக்களையிலிருந்து அம்மா கோபமாகக் கேட்டாள். 'இம்முறை எதை உடைத்தாய்? என் பிரியமான ஜாடியை அல்லவே!'
'அட, இல்லவே இல்லை அம்மா! நான் எதையும் உடைக்கவில்லை!' ஷேன்யா கத்தினாள். வேகமாக சிவப்பு நிற இதழைக் கிள்ளி, விட்டெரிந்து,முணுமுணுத்தாள்:


பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
அம்மாவின் அழகான ஜாடியை மீண்டும் முழுதாக்கு!அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே உடைந்து கிடந்த துண்டுகள் எல்லாம் நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன.அம்மா அடுக்களையிலிருந்து வந்தாள்--அவளது ஜாடி வழக்கம் போலவே அதனிடத்தில் ஒழுங்காக அமர்ந்திருந்தது. இருந்தாலும், சும்மாவேனும் ஷேன்யாவை நோக்கி விரல்களை ஆட்டி, அவளை வெளியே போய் விளையாடும்படி அனுப்பினாள்.
ஷேன்யா வெளியே சென்றபோது, அங்கு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்--அவர்கள் வட துருவப் பயணிகள். அவர்கள் பழைய மரப் பலகைகளின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்தில் மணலில் ஒரு குச்சி நட்டுவைக்கப்பட்டிருந்தது.
'நானும் விளையாட வரலாமா?' அவள் கேட்டாள்.


'ஊஹூம். அதெல்லாம் முடியாது. உனக்குத் தெரியவில்லை, இது வட துருவம்! எங்களால் வட துருவத்துக்குப் பெண்பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல முடியாது!''இது ஒன்றும் வட துருவம் அல்ல. வெறும் பலகைக் குவியல்தான்!'


'இதெல்லாம் பலகைகள் அல்ல, பனிப் பாளங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாமல் போய்ச்சேர் இங்கிருந்து! பனி உடைய ஆரம்பிப்பது உனக்குத் தெரியவில்லையா?'


'அப்படியானால் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்?''இல்லை. போ, போ!''எனக்கென்ன கவலை? நீங்கள் யாரும் இல்லாமலேயே என்னால் வட துருவத்துக்குப் போக முடியும். அதுவும் இப்படிப் பாடாவதியான பலகைக் குவியல் இல்லை. நிஜமான வடதுருவம். போய் வருகிறேன்' ஷேன்யா வெளி முற்றத்தின் ஒரு மூலைக்குச் சென்று, உடையின் பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து, நீல இதழைக் கிள்ளியெறிந்துவிட்டுச் சொன்னாள்:பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்


இந்த நிமிடமே என்னை வட துருவத்தில் இருக்கச் செய்!அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே நாலாப்புறமும் பனிக்காற்று வீசிற்று; சூரியன் மறைந்தது; எல்லாம் ஒரே இருட்டாகியது; அவள் காலடியில், பூமி ஒரு பம்பரம் போலச் சுற்றியது.ஷேன்யா தான் வட துருவத்தில் தன்னந்தனியாக இருக்கக் கண்டாள். அவள் அணிந்திருந்தது ஒரு சிறிய, வேனில் காலத்துக்கான உடை; காலில் சாதாரண ரப்பர் செருப்புகள்; குளிரோவெனில் மிகக் கடுமையானதாக இருந்தது!'ஐயோ, அம்மா, நான் உறைகிறேன்!' அவள் அலறினாள். ஆனால், அவள் கண்ணீர் பனித்துளிகளாக மாறி அவளுடைய மூக்கிலிருந்து தொங்கியது. இதற்கிடையே ஏழு துருவக்கரடிகள் ஒரு பனிக்குன்றுக்குப் பின்னாலிருந்து தோன்றி, அவளை நோக்கி வந்தன. அவை ஒன்றுக்கொன்று பயங்கரத்தில் கூடுதலாக இருந்தன: முதலாவது துள்ளுவது, இரண்டாவது தீயது, மூன்றாவது கடுகடுப்பானது, நான்காவது ஒல்லி, ஐந்தாவது தொப்பிவைத்தது, ஆறாவது பிராண்ட விரும்புவது, ஏழாவது எல்லாவற்றிலும் பெரியது.


ஷேன்யா பயந்து நடுங்கிவிட்டாள். உறைந்த விரல்களால் பச்சை நிற இதழைக் கிள்ளியெறிந்து முடிந்தவரை சத்தமாகக் கத்தினாள்:பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்நான் இப்பொழுதே வீட்டு முற்றத்தில் இருக்கும்படி செய்!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே மீண்டும் முற்றத்தில் இருந்தாள். பையன்கள் அவளைக் கேலி செய்தார்கள்.

'உன் வட துருவம் எங்கே, புத்திசாலியே?'


'இப்பொழுதுதான் அங்கிருந்து வருகிறேன்.'

'நாங்கள் உன்னை அங்கு பார்க்கவில்லையே. அதை நிரூபி!'


'பார்த்தீர்களா, இங்கே இன்னும் ஒரு பனித்துளி இருக்கிறது'

'அது ஒன்றும் பனித்துளி அல்ல. அது வெறும் பஞ்சுத் துகள், உளறாதே'ஷேன்யா அந்தப் பையன்கள் ரொம்ப மோசம், அவர்களுடன் இனி விளையாடவே கூடாது என்று நினைத்துக்கொண்டாள். ஆகவே அடுத்த வாசலுக்கு அங்கிருந்த சிறுமிகளுடன் விளையாடச் சென்றாள்.
அந்தச் சிறுமிகள் ஏராளமான விளையாட்டுச் சாமன்கள் வைத்திருந்தார்கள். ஒரு சிறுமியிடம் பொம்மை வண்டி இருந்தது, ஒரு சிறுமியிடம் பந்து, ஒரு சிறுமியிடம் தாண்டும் கயிறு, ஒரு சிறுமியிடம் மூன்று சக்கர சைக்கிள், ஒரு சிறுமியிடம் பொம்மை-ஜோடுகள் அணிந்த பொம்மைத்தொப்பி வைத்த பேசும் பொம்மை இருந்தது. ஷேன்யா ரொம்ப வருத்தப்பட்டாள். பொறாமையால் அவள் கண்கள் பூனைக்கண்களைப் போல் பச்சையாகிவிட்டன.


'ஹூம். யாரிடம் மிகச்சிறந்த விளையாட்டுச் சாமன்கள் உள்ளன என்று காட்டுகிறேன்', என நினைத்துக்கொண்டாள். பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து ஆரஞ்சு நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து கூறினாள்:பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!
அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின.


முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி 'மா-மா', 'மா-மா' என்று விடாமல் கூறின.முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் 'மா-மா, மா-மா!' என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.

ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.
ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.
'நிறுத்து, நிறுத்து!' ஷேன்யா ஓலமிட்டாள். 'இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது...' அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்--விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:
பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்
எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!

அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது.

'அடக் கடவுளே!' அவள் சொன்னாள். 'ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்த தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.'ஷேன்யா யோசித்தபடியே சாலையில் நடந்தாள்.


'வேறு எதைக் கேட்பது? தெரியும், ஒரு பவுண்டு சாக்கலேட் மிட்டாய் கேட்கிறேன். இல்லை, ஒரு பவுண்டு பெப்பர்மின்ட் பரவாயில்லை. இல்லை, எனக்கு அரை பவுண்டு சாக்கலேட் மிட்டாய், அரை பவுண்டு பெப்பர்மின்ட், ஒரு பொட்டலம் அல்வா, ஒரு பை கொட்டைகள், அப்புறம் பாவ்லிக்குக்காக ஒரு இளஞ்சிவப்பு வளைய பிஸ்கோத்தும் கேட்கிறேன். ஆனால் என்ன பயன்? எல்லா மிட்டாய்களும் கிடைத்தால் மட்டும் என்ன? எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுவேன், பிறகு ஒன்றும் இருக்காது. வேண்டாம், ஒரு மூன்று சக்கர சைக்கிள் கேட்கிறேன். இல்லை, அதுவும் பயன்படாது. நான் ஓரிரண்டு தடவை ஓட்டிய பிறகு பையன்கள் அனேகமாக எடுத்துக்கொண்டு விடுவார்கள். அவர்களை ஓட்ட விடாவிட்டால் அடிப்பார்கள்! பேசாமல் சினிமாவுக்கோ, சர்க்கஸுக்கோ டிக்கெட் வாங்கிக் கொள்கிறேன். அது எவ்வளவோ கேளிக்கையாக இருக்கும். ஆனால், ஒரு ஜோடி புது செருப்புகள் கேட்டால் தேவலையோ? அது நன்றாயிருக்கும். இருந்தாலும் ஒரு ஜோடி புது செருப்பில் என்ன பிரயோசனம்? அதைவிட நன்றாக ஏதாவது கேட்க முடியும். அவசரப்படக் கூடாது என்பதுதான் முக்கியம்.' இப்படித்தான் ஷேன்யா சிந்தித்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது திடீரென்று ஒரு ரொம்ப நல்ல பையன் அங்கு ஒரு பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனுடைய பெரிய நீலக் கண்கள் மகிழ்ச்சியாகக் காணப்பட்டன. அவன் ரொம்ப நல்லவன், முரடன் அல்ல என்பது பார்க்கும்போதே தெரிந்தது. ஷேன்யா அவனோடு நட்புக்கொள்ள விரும்பினாள். அவள் நெருங்கி வந்தாள். அவளது முகம் அவன் கண்களில் பிரதிபலித்தது: அவளுடைய ஜடைகள் அவனுடைய தோள்களைத் தொட்டன.'வணக்கம். உன் பெயர் என்ன?' அவள் கேட்டாள்.


'வீத்யா. உன் பெயர்?'


'ஷேன்யா. நாம் ஓடிப்பிடித்து விளையாடலாமா?'


'என்னால் முடியாது. நான் நடக்க முடியாதவன்'


அப்பொழுதுதான் ஷேன்யா கவனித்தாள். அவன் பெரிய அடிப்பாகம் கொண்ட, பார்க்கச் சகிக்காத ஜோடு ஒன்றை அனிந்திருந்தான்.


'அடப் பாவமே!' அவள் சொன்னாள். 'எனக்கு உன்னைப் ப்டித்திருக்கிறது. நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாண்டிருந்தால் மிகவும் மகிழ்சியாக இருந்திருக்கும்'


'எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னோடு ஓடிப்பிடித்து விளையாடினால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அனால் முடியாதே. என்னால் ஒருபோதும் இயலாது. என் கால்கள் வாழ்க்கை முழுவதுமாக முடங்கிப்போய்விட்டன.'
'உளறாதே, வீத்யா!' ஷேன்யா சொல்லிவிட்டு பொக்கிஷமான ஏழு நிறப்பூவைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்தாள். 'இதோ!'


அவள் கவனமாக வெளிர் நீல நிறம் கொண்ட கடைசி இதழைக் கிள்ளி எடுத்தாள். தன் கண்களுக்கு நேராக ஒரு நொடி பிடித்தாள். பிறகு விரல்களைத் திறந்து, அதைப் பறக்க விட்டுவிட்டு, உரத்த, மகிழ்ச்சியான குரலில் பாடினாள்:பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்வீத்யாவை மீண்டும் நலமடைய வை!


அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே வீத்யா பெஞ்சிலிருந்து தாவிக்குதித்து அவளோடு ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தான். அவன் படு வேகமாக ஓடினான்; ஷேன்யா எவ்வளவு முயன்றாலும் அவனைப் பிடிக்க முடியவில்லை.
[முடிந்தவரை பூ. சோமசுந்தரம் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்த முயன்றுள்ளேன். கதை பற்றி மற்றும் என் மொழிபெயர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.]


Thursday, 6 March 2008

பொய் பிரட்டுச் சின்னாடு

முன்னொரு காலத்தில் வயதான கிழவனார் ஒருவர் தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு ஆடு வளர்க்க ஆரம்பித்தார். தன் பிள்ளைகளில் மூத்தவனை அழைத்து, ஆட்டை மேய்த்துவரும்படி சொன்னார்.
அவனும் அந்த ஆட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான். காடு மேடல்லாம் சுற்றி, ஆடு நன்றாக புல்லும், இழைதளைகளும் சாப்பிடும்படி செய்தான். மாலைவரை ஆட்டை மேய்த்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டி வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் கிழவர் அந்த ஆட்டைப் பார்த்து, 'என்ன, திருப்தியாக மேய்ந்தாயா?' என்று கேட்டார். அந்த ஆடோ, 'இல்லை தாத்தா. ஒரே ஒரு இலைதான் தின்றேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்.' என்றது. உடனே கிழவனாருக்குத் தன் மூத்த மகன் மேல் கடும் கோபம் வந்துவிட்டது. 'போடா வெளியே' என்று அவனை அடித்து விரட்டிவிட்டார்.
மறுநாள் தன் இளைய மகனை அழைத்து ஆட்டை மேய்த்து வரச் சொன்னார். அவனும் மாலை வரை ஆட்டை நிறையத்தீனி உள்ள இடங்களுக்கு ஓட்டிச்சென்று நன்றாக மேய்த்தான். மாலையானதும், வீடு திரும்பினான்.
கிழவர் அன்றும் ஆட்டைப் பார்த்து 'திருப்தியாக மேய்ந்தாயா?' என்று கேட்டார். ஆடு திரும்பவும் முதல்நாள் சொன்னது மாதிரி 'இல்லை தாத்தா. ஒரே ஒரு இலைதான் உண்டேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்' என்று பொய் சொன்னது.சினமடந்த கிழவனார், தன் இளைய மகனையும் அடித்து விரட்டிவிட்டார். அடுத்தநாள் தானே ஆட்டை ஓட்டிச் சென்றார். ரொம்பக்கவனமாக அந்த ஆட்டை, நல்ல மேய்ச்சல் நிலங்களாகப் பார்த்துப் பார்த்து மேய்த்தார். நல்ல சுனைக்கு அழைத்துச் சென்று வேண்டிய அளவு தண்ணீர் அருந்தும்படி செய்தார். வீடுவந்து சேர்ந்ததும், 'இன்றைக்காவது நன்றாகச் சாப்பிட்டாயா?' என்று ஆட்டிடம் கேட்டார். அந்தப் பொல்லாத ஆடோ அன்றும் வழக்கம் போல, 'இல்லவே இல்லை. ஓரே ஒரு இலைதான் தின்றேன், ஒரு சொட்டுத் தண்ணீர்தான் குடித்தேன்' என்றது.
அவ்வளவுதான். கிழவருக்கு வந்ததே கோபம்! 'என்னிடமே பொய் சொல்கிறாயா? ஓடிப்போ இங்கிருந்து, பொய் பிரட்டுச் சின்னாடே' என்று விரட்டி விட்டார்.
**கதை இன்னும் நிறைய மீதி இருக்கிறது. அந்த ஆடு தான் செல்லும் வழியில் ஒரு நரியோடு (?) சேர்ந்து கொள்ள, இரண்டும் சேர்ந்து தந்திரமாக ஒரு ஓநாயிடமிருந்து தப்பிப்பதாகச் செல்லும். உறுதி செய்துகொண்டு தொடர்கிறேன். உங்களுக்கு ஞாபகம் இருந்தால், நினைவுபடுத்துங்கள்--மறுமொழி மூலமாக.**

வலைஞனும் மீனும்

வெகு காலத்துக்கு முன்னால் ஒரு வயதான வலைஞனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ரொம்ப ஏழைகள். ஒரு குடிசை வீடும், உடைந்த மரத் தொட்டியும் மட்டுமே அவர்களிடம் இருந்தன. ரொம்பக் கஷ்டப்பட்டு நாட்களைக் கடத்தி வந்தார்கள்.
ஒரு நாள் வலைஞன் வழக்கம் போல மீன் பிடிக்கக் கடலுக்குப் போனான். வலையைக் கடலில் விரித்துவிட்டு ஏதாவது மீன் சிக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருந்தான். பசி வலைஞனின் வயிற்றைக் கிள்ளியது. மீன் பிடித்துச்சென்று அதை விற்றுத்தான் சாப்பிட வேண்டும்.
ரொம்ப நேரம் கழிந்தபின் திடீரென்று வலை வேகமாக ஆடத்தொடங்கியது. கிழவன், 'இப்பவாச்சும் ஏதோ மீன் அகப்பட்டிருக்கிறதே' என்று எண்ணிக்கொண்டபடி வலையச் சிரமப்பட்டக் கரைக்கு இழுத்தான். வலையில் சிக்கியிருந்த மீனைப் பார்த்தபோது அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! வலையில் சிக்கியிருந்தது சாதாரண மீன் அல்ல; அது ஒரு தங்க மீன்! அதன் செதில்கள் சூரிய ஒளி பட்டு தகதகவென்று மின்னின. வலைஞனுக்குக் கண் கூசியது. அப்படி ஒரு மீனை இதுவரை அவன் பார்த்ததேயில்லை.
அப்பொழுது அவனது ஆச்சரியத்தை அதிகரிக்கும் படி அந்தப் பொன் மீன் பேச ஆரம்பித்தது. அது கூறியது: 'வலைஞனே, வலைஞனே, தயவு செய்து என்னை விட்டுவிடு. நான் மீன்களின் அரசி. நான் இல்லாவிட்டால் கடல் ராஜ்ஜியத்தில் எல்லா மீன்களும் கஷ்டப்படும். நீ மட்டும் என்னைப் போகவிட்டால், நீ கேட்டதைத் தருவேன்' என்று தத்தளித்த படிக் கெஞ்சியது.
வலைஞனுக்குப் பாவமாக இருந்தது. பொன்மீனை விடுவித்து, கடலில் விட்டான். 'ரொம்ப நன்றி. இதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்' என்று கூறியது. வலைஞனுக்கு எதுவும் கேட்கவேண்டும் போலத்தோன்றவில்லை. அப்படியே மீனிடம் சொன்னான். 'அப்படியானால் சரி. ஏதாவது தேவைப்படும்போது தயங்காமல் என்னிடம் கேட்களாம். கரையில் நின்றுகொண்டு மீனரசி என்று நீ அழைத்தால் போதும். உடனே வருவேன். என்னை விடுவித்ததற்கு மீண்டும் வந்தனம்' என்று சொல்லிவிட்டுக் கடலினுள் மறைந்தது.
அதற்குள் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. இனி மீன் எதுவும் கிடைக்காது. வலையைத் தோளில் சுமந்தபடி வீட்டுக்குத் திரும்பினான் வலைஞன். அவனுக்காகக் காத்திருந்த அவன் மனைவி, வலைஞன் வெறும் கையுடன் வந்ததைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள். 'ஏன், ஒரு மீன் கூடக் கிடைக்கலையா' என்று சிடுசிடுத்தாள்.

நடந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான் வலைஞன். அதைக்கேட்ட கிழவிக்குக் கோபம் பொங்கியது. 'உன்னைப் போல ஒரு முட்டாள் உலகத்தில் இருப்பார்களா? அந்தப் பொன்மீனிடம் ஒன்றும் கேட்காமல் கையை வீசிக்கொண்டு வந்திருக்கிறாயே! போ, இப்போதே திரும்பப் போய், நம் உடைந்த தொட்டிக்குப் பதிலாக நல்ல தொட்டி வேண்டும் என்று கேள்.' என்று விரட்டினாள்.

கிழவனுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. இருந்தாலும் கிழவியின் பேச்சைத் தட்டமுடியாமல் மீண்டும் கடலுக்குச்சென்றான். அமைதியாக இருந்த கடலின் கரையில் நின்றபடி, 'மீனரசி, மீனரசி' என்று தயக்கத்துடன் கூப்பிட்டான்.அவன் கூப்பிட்டு முடித்ததுதான் தாமதம்; பொன்மீன் சடுதியில் அவன் முன் தோன்றியது. 'என்ன வேண்டும், சொல்லுங்கள் வலைஞரே' என்று அன்பாகக் கேட்டது.

வலைஞன் தன் மனைவி கூறியதைச் சொன்னான்: 'எங்கள் வீட்டு மரத்தொட்டி உடைந்துபோய் உள்ளது. அதற்குப்பதில் ஒரு நல்ல தொட்டி இருந்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும்'
'அப்படியே ஆகட்டும்' என்று கூறி, பொன்மீன் மீண்டும் கடலினுள் மறைந்தது. வலைஞன் வீட்டுக்கு வந்தான். அங்கே அவனுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவர்களது உடைந்த தொட்டி இருக்குமிடத்தில் ஒரு புத்தம் புதுத் தொட்டி காணப்பட்டது!
கொஞ்ச காலம் சென்றது. வலைஞனின் மனைவிக்கு, தான் பெரியதாக ஏதையாவது கேட்காமல், போயும் போயும் ஒரு மரத்தொட்டியைக் கேட்டோமே என்று வருத்தம் ஏற்படலாயிற்று. மீண்டும் பொன்மீனிடம் சென்று, தங்களுக்கு நல்ல உடைகள், புதிய பாத்திரபண்டங்கள், இன்னும் பல சாமான்கள் கேட்கும்படி வலைஞனை நச்சரிக்கத்தொடங்கினாள். வலைஞன் முடியவே முடியாது என்று மறுத்தான். கிழவி விடவில்லை. 'நீ மீனுக்கு உயிர்ப்பிச்சை அளித்துள்ளாய். அதற்கு இந்தத் தொட்டி எப்படி ஈடாகும்? போ இப்போதே!' என்று விரட்டினாள்.


பாவம், அந்தக் கிழவனுக்கு வேறு வழி இல்லை.
இம்முறை அவன் கடலுக்குச்சென்ற போது அது சற்றே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. கரையில் நின்று கொண்டு 'மீனரசி, மீனரசி' என்று அழைத்தான். உடனே வந்த பொன்மீன், வலைஞனுக்கு என்ன வேண்டும் என்று அன்போடு கேட்டது. தயக்கத்தோடு தன் மனைவியின் விருப்பத்தைச் சொன்னான். 'இவ்வளவு தானே. அப்படியே ஆகட்டும்' என்று கூறிய மீனரசி கடலுக்குள் மறைந்தது.

அடுத்த விநாடி, தான் புத்தம் புது ஆடைகள் அணிந்திருப்பதைக் கண்டான் வலைஞன். அவன் வீடு வந்தபோது வீட்டில் எல்லாமே மாறியிருந்தன. புதுத் துணிமனிகளும் தட்டுமுட்டுச் சாமான்களும் வீடெங்கும் நிறைந்திருந்தன. அவன் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி. 'இப்பொழுது திருப்தியா உனக்கு?' என்று அவளைக் கேட்டான்.

ஊஹும்...அவளது திருப்தி விரைவில் மறைந்துவிட்டது. 'எல்லாம் இருந்து என்ன பயன்? வீடு அதே பழைய குடிசைதானே. நமக்கு மட்டும் வசிக்க ஒரு மாளிகை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைத்தாள். கிழவனை மீண்டும் மீனரசியிடம் செல்லும்படி வற்புறுத்தினாள். கடைசியில் அவளது தொல்லை தாங்கமுடியாமல், வலைஞன் திரும்பவும் பொன்மீனைத் தேடிச் சென்றான்.

கடல் பெரும் ஆர்பாட்டத்துடன் இருந்தது. வலைஞனுக்கு அது அச்சத்தைத் தந்தது. பயந்தவாறே 'மீனரசி, மீனரசி' என்று அவன் அழைக்க, அடுத்த நொடி பொன்மீன் அவன் முன்னே தோன்றியது. 'எங்களுக்கு வசிப்பதற்கு ஒரு மாளிகை வேண்டும் என்று கிழவி கேட்டுவரச் சொன்னாள்' , பயந்தவாறே கூறினான் வலைஞன். 'அப்படியே' என்றபடி கடலுக்குள் பாய்ந்து சென்றது மீன்.

வீட்டுக்கு வந்த வலைஞனால் தன் வீட்டை அடையாளமே காணமுடியவில்லை. அப்படி ஒரு புத்தம்புதிய மாளிகை அங்கே வீற்றிருந்தது. இப்பொழுதாவது அவளுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும்' என்று நினைத்துக் கொண்டான் வலைஞன்.
ஆனால் எங்கே? கிழவியின் பேராசை மேலும் அதிகரித்தது. 'மிகப் பெரிய அரண்மனை. அதில் நான் அரசியாக வீற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி, மீனரசி இங்கு வந்து என்னிடம் பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டும். போய் இதைக்கேட்டுவா. சீக்கிரம் ஆகட்டும்' என்று வலைஞனை ஏவினாள். வலைஞன் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தான். அவள் வலைஞனை ஏசினாள். விரட்டு விரட்டென்று விரட்டினாள். கடைசியில் அவளுக்கே வெற்றி.


மிகுந்த துயரத்துடன் வலைஞன் இம்முறையும் மீனரசியிடம் செல்ல வேண்டியதாயிற்று.
இப்பொழுது கடல் பேரோசையுடன் கொந்தளித்துக்கொண்டிருந்தது. வானம் கருத்து பெரும் சூறைக்காற்று வீசிற்று. வலைஞன் அஞ்சி நடுங்கினான். 'நடப்பது நடக்கட்டும்' என்று எண்ணிக்கொண்டு 'மீனரசி, மீனரசி' என்று நடுங்கிய குரலில் கூப்பிட்டான். வழக்கம் போலப் பொன்மீனும் வந்தது. வலைஞன் அதனிடம், 'கிழவியின் ஆசை அளவு கடந்து போய்விட்டது...அவள் பெரிய அரண்மனையில் அரசியாக வீற்றிருக்க வேண்டுமாம். அது மட்டுமின்றி நீ அவளுக்கு பணிப்பெண்ணாக இருக்க வேண்டுமாம்.' என்றான். அதனைக்கேட்ட மீனரசிக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. வாலைச் சுழற்றித் தண்ணீரில் ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு, பதிலே சொல்லாமல் போய்விட்டது.

உடனே வலைஞன் தான் பழையபடிக் கிழிந்த உடைகள் அணிந்திருக்கக் கண்டான். மிகுந்த துயரத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் வீட்டை அடைந்தபோது, அது அவர்களது பழைய குடிசை வீடாக மாறி இருந்தது. வாசலில் கிழவி தன் நைந்து போன ஆடைகளுடன் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் பழைய உடைந்த மரத்தொட்டி இருந்தது.

[ FOREIGN LANGUAGES PUBLISHING HOUSE, மாஸ்கோ வெளிட்ட நூல் இங்கு நினைவிலிருந்து எழுதப்பட்டுள்ளது. கதை: அலெக்ஸாண்டர் புஷ்கின்; ஆங்கிலத்தில மொழிபெயர்ப்பு: லூயி ஜெலிக்காஃப்; தமிழ் மொழிபெயர்ப்பு: பூ. சோமசுந்தரம்]

பின் குறிப்பு: மூல நூலின் சுவையில் சித்திரங்களுக்கும், சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்புக்கும் முக்கிய இடம் உண்டு. வலைஞன் என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 'மீனவன்' என்றுதான் மற்றவர்கள் மொழிபெயர்த்திருப்பார்கள். மீனரசி, கிழவன், கிழவி என்ற சொற்களும் அவர் உபயோகித்தவை. சடுதி என்ற சொல்லை அவர் அடிக்கடி கையாள்வது உண்டு. மீனரசி, வலைஞனை என்ன சொல்லி அழைத்தது என்பது மறந்துவிட்டது.

இந்நூல் இணையத்தில் http://home.freeuk.com/russica4/books/goldfish/gfish.html என்ற தளத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது தெரியவந்துள்ளது. அதை விரைவில் மொழிபெயர்த்து படங்களுடன் வெளியிட உள்ளேன்.

Sunday, 2 March 2008

ஏழு நிறப்பூ

ஆஹா...அந்த நாட்களின் சோவியத் புத்தகங்கள்! ஏழு நிறப்பூ, தார் பூசிய வைக்கோல் கிடா, முதலை விழுங்கிய சூரியன்...போன்ற அருமையான கதைகளைப் படித்து லயித்திருக்கிறீர்களா? குழந்தைகளுக்குச் சொல்லவும், பெரியவர்கள் படித்து (அல்லது நினைத்து) ரசிக்கவும் இன்றைக்கும் அலுக்காத படைப்புகள் அவை.

துரதிருஷ்டவசமாக, சோவியத் யூனியன் அழிவுடன் அவைகளும் நம் நாட்டிலிருந்து மறைந்துவிட்டன. இருந்தாலும் என்ன, அவற்றைப் படித்த நாம் இணையத்தில் அவற்றுக்கு உயிர் கொடுப்போம் வாருங்கள். நான் எனக்குத் தெரிந்த கதைகளைப் பதிக்கிறேன். உங்களிடம் புத்தகமாகவோ அல்லது ஞாபகமாகவோ இருக்கும் கதைகளை அனுப்பி வையுங்களேன்--இந்தத் தளத்தில் வெளியிடுகிறேன். டெக்ஸ்ட், pdf, மென்புத்தகம் என எந்த வடிவத்திலும் இருக்கலாம். இப்பதிவில் இணைய விரும்புபவர்களையும் வரவேற்கிறேன்.

உங்கள் ஞாபகத்திற்காக சில கதைகளின் பெயர்கள்/key words இங்கே:

1. ஏழு நிறப்பூ
2. தார் பூசிய வைக்கோல் கிடா
3. கசகசா பூரி
4. வலைஞனும் மீனும்
5. 'சடப்புட சடப்புட மரநாயே சொன்ன பேச்சைக் கேளு'
6. மாஷாவும் கரடியும்
7. பொய் பிரட்டுச் சின்னாடு
8. குறும்பன் (நாவல்)

ன்னும் நிறைய... இதில் முதலில் வலைஞனும் மீனும் கதையைப் பதியலாம் என்றிருக்கிறேன்.


வாசகர்கள் சோவியத் புத்தகங்கள் பற்றிய நினைவுகள், அனுபவங்கள், இவை தற்போது புத்தகமாக அல்லது வலையில் கிடைக்கும் விவரங்கள், ஆசிரியர்களைப் பற்றிய தகவல்கள், உங்களுக்கு மறந்துவிட்ட, இப்பொழுது ஞாபகப் படுத்திக்கொள்ள விரும்பும் கதைகள் என எதைப்பற்றி வேண்டுமானாலும் பின்னூட்டமிடுங்கள்...தேவையானவற்றை இடுகையாகவே பதிகிறேன்.

முதலில் நான் கேட்க விரும்புவது இதுதான்: 'ஏழு நிறப்பூ' வில் வரும் சிறுமியின் (மற்றும் சிறுவன்) பெயர் மற்றும் அவள் கேட்கும் ஏழு வரங்கள் என்ன? எனக்கு நான்கு வரங்களே நினைவுள்ளன: வளைய பிஸ்கோத்து, வட துருவம் செல்வது, திரும்புவது மற்றும் நடக்க இயலாத சிறுவனின் கால்களை சரி செய்வது. அப்புறம் அந்த 'பறப்பாய் பறப்பாய் பூ இதழே' பாட்டு முழுமையாகத் தேவை!

ஒரு குறிப்பு: குழந்தைகளுக்கான கதைகளிலேயே கவனம் செலுத்த எண்ணம்...பிரபல இலக்கியவாதிகளான செகாவ், டால்ஸ்டாய், தாஸ்தாயவ்ஸ்கி போன்றவர்களைப் பற்றி விவாதிக்க வேறு இடங்கள் நிறைய உள்ளன.