Friday, 14 August 2009

குறும்பன்: எழுபத்தொரு சொர்க்கங்கள்

நான் நல்ல ஆரோக்கியசாலி, என் கைகள் முற்றிலும் என் வசத்தில் இருக்கின்றன. கால்கள் நான் சொன்னபடிக் கேட்கின்றன. கண்கள் என் சித்தத்துக்குக் கீழ்ப்படிகின்றன. விருப்பம் இல்லாவிட்டால் அவலட்சணங்களை நான் பார்ப்பதில்லை. என் தாடைகளும் பற்களும் அரைவை இயந்திம் போன்றவை. எதையும் மென்று துவையலாக்கிவிடும. ஆனாலும் என் உடம்பில் எனக்கு வசப்படாத ஓர் அங்கம் இருக்கிறது. அதைப் பணிய வைக்க என்னால் எவ்வகையிலும் முடியவில்லை. என் அதிகாரம் அதன் மேல் செல்லுவதில்லை. சில வேளைகளில் அது என் ஆட்சியிடத்துக்குள் கொள்ளைக்காரர் கூட்டம் போல அட்டூழியம் செய்கிறது. நான் இயன்ற வரையில் அதைச் சமாதானப்படுத்துகிறேன். நல்ல எண்ணங்களின் பட்டாளங்களை அனுப்புகிறேன். ஆனால் அவை இலக்கை அடைவதற்கு முன்பே சிதறி ஓடிவிடுகின்றன. பாழாய்ப் போன அந்தக் கலகக்கார உறுப்போ, திறை செலுத்துமபடித் துடுக்காகக் கோருகிறது. என்னிடம் இருக்கிறதோ இல்லையே, அதற்குக் கொட்டி அளக்க வேண்டியிருக்கிறது!

இந்தக் கலகக்கார உறுப்பு தான் வயிறு.

உங்களுக்கு இது தெரியாதா? அப்படியானால் நினைவில் இருத்திக் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் வயிறு விஷயத்தில் வேடிக்கை கெடுதல். அது முரண்டத் தொடங்கி, கோருவதைப் பெறாவிட்டால், உங்கள் மேலதிகாரத்தைக் கவிழ்த்துவிடும். அப்புறம் அரசு முழுவதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும். ஒழுங்கு, நிம்மதி, மரியாதைவிதிகள் எல்லாம் அத்துடன் தொலைந்தன என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்புறம் அதிகாரம் செலுத்துவது நீங்கள் அல்ல, அதுதான். எல்லா அங்கங்களும் அதன் உத்தரவுகளுக்கே கீழ்ப்படியும், உங்கள் உத்தரவுகளுக்கு அல்ல. இஸ்லாம் மத விதிகளால் அனுமதிக்கப்படாத பொருள்களைக் கண்கள் நோக்கத் தொடங்கும். நேர்மையற்ற வழியில் பெற்ற வஸ்துக்களை எடுக்கக் கைகள் பேராசையுடன் நீளும். கால்கள் முற்றிலும் எதிர்பாரா இடங்களுக்கு இட்டுச் செல்லும். தலை, கயவர்களுக்கு முன் வணங்கும்...

நான் வசந்தகால மேகம் போலக் கண்ணீர் மாரி பொழிந்தவாறு, எதோ ஒரு பாட்டை, அர்த்தமற்ற ஏதோ கஜலைப் பாடுகிறேன். இந்தப் பாட்டை எவன்தான் புனைந்தானோ, எவன்தான் முதல் முறை பாடினானோ, ஆண்டவனே அறிவான்...

“பொங்குது அந்தோ, இக் கரிய விழிகளில்
புகலற்ற சோக நீர் ஊற்று..
மங்கலாய்க் காணும் உலகை அவை, கண்ணீர்
மல்கும் இமைகளின் ஊடாய்,

ஆயுள் முழுதும் அலைந்து களைத்திட்டேன்
ஆனந்தத்தை எதிர்பார்த்து,
பாய் தரை, ஒடு தலையணையாகப்
படுத்திருப்பேன் காலைவரையில்

ஏங்கியது போதும் என் உளமே, உன்றன்
இருள் நீங்கும், பாடு விடியும்.
ஈங்கொளி சேர் மணி மண்ணில் புதைந்தே
என்றும் மறைந்திருக்காது.

ஆனால் இப்போதென்றன் தலைமேல் கூழலுது
அழுத்திடும் அரைவைத்திரிகை.
நானும் உணவுக்காய் அரைவைத் திரிகைபோல்
நாளும் சழன்றிட வேண்டும். ”


“போதும், இந்தத் துயர எண்ணங்களைக் கட்டி வை. ஆற்றுக்குப் போய்க்குளி. கோலத்தை ஓரளவு சீர்படுத்திக்கொள்” என்று சொல்லிக் கொண்டேன். இந்த நட்பார்ந்த யோசனையை நிறைவேற்றினேன். ஆற்றுக்குப் போய், தனியான இடத்தைத் தேடிக் கண்டு உடைகளைக் களைந்தேன்... சராய், சட்டை, இடுப்புக் குட்டை, எல்லாவற்றையும் காரப் பூண்டால் சத்தப்படுத்தி நன்றாகத் துவைக்க வேண்டும்—ஒரு தரம் துவைத்து அலசினால் போதாது! பின்னர் மரக்கிளைகளில் காயப்போட வேண்டும். அப்புறம் நீரில் இறங்கி நீந்தி எல்லா அழுக்கையும் தேய்த்துக் கழுவிப்போக்க வேண்டும். அதோடு கூடவே எல்லாக் கெட்ட நினைவுகளையும், சென்ற சில நாட்களில் எனக்கு நேர்ந்த எல்லாத் துன்பங்களையும் (அவற்றின் எண்ணிக்கை நாட்களின் தொகையைக் காட்டிலும் எவ்வளவோ அதிகம். பெருக்கிய கண்ணீரைக் காட்டிலும் அதிகம். ஒரு துளி கண்ணீருக்கு ஒரு துன்பம் வீதம் என்று சொல்லலாம்) ஆற்றோடு போக்கிவிட வேண்டும்.

இவை எல்லாம் செய்து முடிப்பதற்குப் புலவு தயாரிப்பதற்கு ஆகும் அவ்வளவு நேரம் பிடித்து. அதற்குள் பசி கடுமையாக மூண்டது. துவைத்துக் காயப் போட்ட உடைகளை அணிந்துகொண்டு கையால் தேய்த்துச் சுருக்கங்களைப் பிரித்து, ஓரளவு பாங்காகத் தோற்றம் அளிக்க முயன்றேன். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும் ஒரு சிறு நன்மை அடைந்திருப்பதை நினைவு படுத்திக்கொண்டேன். வேற்றார் சமையல் அறையிலிருந்த காதலன் அவ்வளவு விருப்பத்துடன் எனக்குத் தந்த பணம் நினைவுக்கு வந்தது. இல்லை, அது கெட்டுப்போகவில்லை, நல்ல வேளையாக. சில வெள்ளி நாணயங்கள், சில செப்புக்காசுகள், எல்லாமாகக் கொஞ்சம் குறைய இரண்டு தன்காக்கள் இருந்தன. அப்புறம் என்ன, தொடங்குவதற்கு இது சொற்ப முதல் அல்லவே. எத்தனையோ பெயர் இதைவிடக் குறைவான முதலை வைத்துக்கொண்டு தொடங்கியிருக்கிறார்களே. அவர்கள் அத்துடனேயே இருந்துவிட்டார்கள் என்பது உண்மைதான், அது அவர்கள் பாடு. சந்தைக்குப்போய் ஆசைதீரச் சாப்பிடலாம், ஏதேனும் வாங்குவதென்றால் பிசுகு பேரம் பண்ணலாம். குறைந்த விலைக்கு வாங்கலாம். ஏய்க்காவிட்டால் பிழைக்க முடியாது.

அன்று சந்தை நாள் அல்ல என்றாலும் சந்தைத் திடலில் விற்பதும் வாங்குவதும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஆடுகள் கத்தின, குதிரைகள் கனைத்தன. ஒட்டங்கள் முழங்கின. வியாபாரிகள் திட்டினார்கள், தரகர்களின் கைகள் தோன்றித் தோன்றி மறைந்தன. “என்ன, கையடித்துப பேரத்தை முடிப்போமா!” என்ற தங்கள் பல்லவியை அவர்கள் விடாது பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த இரைச்சலுக்கும் நெரிசலுக்கும் இடையே, மழை நீரில் அடித்துச் செல்லப்படும எறும்புபோலத் தன் வசமின்றித் திரிந்து அலைந்தேன் நான். வலப்புறம், இடப்புறம், பின்புறம், எங்கிருந்தாவது யாரேனும் உதைப்பார்களோ என்று சமீப அனுபவத்தின் காரணமாக ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று சந்தையில் விந்தையான பரபரப்பு ஏற்பட்டது. ஆட்கள் கும்பல் கும்பலாக ஒரு புறம் விரைந்தார்கள். நகரத்திலிருந்து சந்தைக்கு வந்துகொண்டிருந்து ஓர் ஊர்வலம். வெவ்வேறு நிறத் துணித் துண்டுகளை இணைத்துத் தைத்த “முகம்மதீ” சட்டைகள் அணிந்த ஏழு பக்கிரிகள் ஒருவர் பின் ஒருவராகப் பவனி வந்தார்கள். “அகமதீ” எனப்படும் தொப்பிகள் அவர்கள் தலைகளை மூடியிருந்தன. கரிய அல்லது நரைத்த சடைக்கற்றைகள் அவர்களுடைய இடுப்புகள் வரை தொங்கின. தோட்களின்மேல் அவர்கள் “முஸ்தஃபா” சால்வைகள் போர்த்திருந்தார்கள். கொளுத்தும் வெயிலில் ஆவேசம் கொண்டவர்கள் போலப் பாடிக் கொண்டே வந்தார்கள். வெறி கொண்ட ஒட்டகங்கள் போல அவர்கள் உதடுகள் நுரை கக்கின. அவர்கள் பாடினார்கள்.

“ஓ-ஓ-ஓ!
ஆட்கள் இரையும் சந்தையிலே
கேட்குது அகதிகளின் அழுகை,
அல்லாவே, ஓ அல்லாவே,
எல்லாமே மண் அல்லாவே,
பெற்றோர் இல்லா மதலைகளுக்கு
உற்றிடு துயரைக் கேட்டறிவாய்,
அல்லாவே, ஓ அல்லாவே,
எல்லாமே மண் அல்லாவே.
ஓ-ஓ-ஓ!"


மண்வெட்டி அலகு போன்ற அகன்ற தாடியும் நேர்த்தியான தோற்றப்பொலிவும் உள்ள ஒரு பக்கிரி முன்னே வந்தார். அவர் தாம் தலைமைப் பக்கிரி அவர் தோளில் தொங்கியது செப்புப் பாத்திரம். தூரப் பார்வைக்கு அது பளபளக்கும் பிரமாண்டமான கருவண்டு போல் காணப்பட்டது. வலிய மரத்தடி ஒன்று அவர் கையில் இலங்கியது. அதன் மேல் பல நிறத் துணித் துண்டுகள் தொங்கின. கொஞ்சம் நெருங்கி விசாரித்ததில் வியப்பூட்டும் ஒரு சேதி தெரியவந்தது. இந்தத் தடி நபிகள் நாயகம் முகம்மது அவர்களுடைய கைத்தடிக்கு ஒன்றுவிட்ட சகோதரி உறவாம்! சுற்றிலும் இருந்த மதபக்தர்களுக்கு இந்தச் சேதி வெகு காலமாகவே தெரியும் போலிக்கிறது. கண்களில் நீர் மல்க அவர்கள் அந்தத் தடி அருகே போய் அதை முத்தமிட்டார்கள். அதில் புதிய வண்ணத் துணிகளை நம்பிக்கையுடன் கடடினார்கள். தடியை ஏந்தி வந்த தலைமைப் பக்கிரிக்குக் காணிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவர் தோளில் தொங்கிய கருஞ் செப்புப் பாத்திரம் இந்தக் காணிக்கைகளை ஏற்பதற்காகவே இருந்தது. ஜனங்கள் அதில் பணம் போட்டார்கள். ரொட்டிகள் போன்ற பிற பொருள்களைப் பின்னால் வந்த பக்கிரிகள் வாங்கிக்கொண்டார்கள். அப்பப்பா, காணிக்கை இருக்கிறதே, இது நுட்பமான விஷயம், இதிலே அசதி மறதியாக இருந்தோமோ, வந்தது ஆபத்து. தலைமைப் பக்கிரி புனித பஹாவுத்தீனின் பிரதிநிதியாக விளங்கும் போது அவருக்க ஏழு ரொட்டிகள் காணிக்கை வழங்க வேண்டும். அவரே புனித ஹாவ்ஸுல்ஹஸனின் பிரதிநிதியாக வந்தால் ஏழு அல்ல. பதினோரு ரொட்டிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஹாவ்ஸுல்ஹஸனைத் தவறாக பஹாவுத்தீன் என்று நினைத்துவிட்டோமோ – ஆண்டவனே காப்பாற்று—அந்தப் புனிதர் கோபங் கொண்டுவிடுவார். செலவெல்லாம் வீணாகிவிடும். விண்ணுலகில் விலைகள் எல்லாம் சந்தையைவிடக் கறாரானவை.

புனிதர்களின் உதவியோ மன்னிப்போ ஒருவனுக்குத் தேவைப்பட்டால் அவன் அதற்கு ஏற்றபடித் தாராளமாக விலை செலுத்த வேண்டும். கோழி, வெள்ளாடு, செம்மறிக் கடா அல்லது ஒட்டகங்கூடக் காணிக்கையாகச் செலுத்தப்படும். இதை எதிர்பார்த்தே பக்கிரிகளின் பின்னே வருவார்கள் யாலாவ்கஷ் எனப்படும் பணியாட்கள். அவர்கள் காணிக்கைகளைச் சேகரித்து, பிரம்புக்கூடு அமைந்த வண்டியில் வைப்பார்கள். அல்லது பின்னால் கட்டுவார்கள். சில வேளைகளில் பல் வகைப் பிராணிகளின் மந்தையே பக்கிரிகளின் பின்னே சேர்ந்துவிடும்—இயங்கும் மிருகக் காட்சி சாலை பேல...

இன்று சந்தையில் இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது காரணம் இல்லாமல் அல்ல. இந்தப் பக்கிரிகள், இறைச்சி உண்ணாத மிகமிகப் புனிதரான ஒரு மௌல்லியின் மடத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மடத்துக்கு ஜிப்ரீல் என்னும் தேவதூதர் அல்லாவிடமிருந்து கட்டளைகளை எடுத்துக்கொண்டு இரவில் வருவது உண்டாம். ஆகவே மௌல்வி ஆண்டவனுக்கு இணையாக வேலை செய்தார். அவருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் பாதி ஆண்டவனுக்குச் சேர்ந்தன! இவ்வளவ வசதியாக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி இருப்பது? கொடுக்கப்படும காணிக்கை பிற்பாடு பத்து மடங்காக, ஒருவேளை இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு போது சிறு காணிக்கையை அல்லாவுக்குச் செலுத்தாமல் எப்படி இருப்பது? முதல்தரமான பேரம் ஆயிற்றே இது! எனவே தருணத்தை நழுவ விடாதிருக்க எல்லோரும் விரைந்தார்கள். பலத்தை எல்லாம் கொண்டு மற்றவர்களை இடித்துப் புகுந்து கொண்டு முன்னேறினர்கள். சவுக்கை வீசி ஆட்களை விலக்கி வழி செய்து கொண்டு பக்கிரிகளுக்கு முன்னே சென்ற போலீஸ்காரன் கொழுத்தவன். தன் குதிரையை விடப் பருமனாய் இருந்தான். நாய் பற்களால் கல்விக் கொண்டிருக்கும் கயிறு போன்ற துருத்திய மீசை வைத்திருந்தான். இடையில் தொங்கியது பிரமாண்டமான உடைவாள். அது அனேகமாகத் தரையைத் தொட்டுக்கொண்டு தொங்கி ஆடியது. அது குதிரையின் விலாவில் கட்டப்பட்டிருக்கிறதா அல்லது போலீஸ்காரனின் இடையிலா என்று சட்டென விளங்கக்கூட இல்லை.

இவை எல்லாவற்றையும், இவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைக் கண்ட பின்பும் பேரத்தில் பங்கு கொள்ள மிகமிக அற்பமான பரிசுப் பொருள் கூட, புனிதத் தடியில் தொங்கவிடுவதற்குப் பாங்கான துணித் துண்டு கூட இல்லாமையால் எனக்கு உண்டான மன வருத்தத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!... ஏமாற்றக் கண்ணீர் என் ஆன்மாவில் திடீரென ஒளி வீசியது போல் இருந்தது. வெப்ப மூட்டப் பெற்ற மெழுகு போல் துவண்ட என் மேனி முழுவதிலும் நடுக்க அலை பரவிற்று. நான் கூட்டத்தில் பாய்ந்து ஆவேசத்துடன் இடித்துப் புகுந்து தலைமைப் பக்கிரியை நோக்கிச் சென்றேன். பெரியவர்களின் ஊடாக நழுவி எவருடைய கைக்கு அடியிலோ நுழைந்து எப்படியோ ஒரு விதமாகப் புனிதத் தடியை நெருங்கிவிட்டேன். அதைப் பிடித்திருந்த கையைப் பற்றிக் கொண்டு முழந்தாள் படியிட்டு உரக்க அழத் தொடங்கினேன். தலைமைப் பக்கிரி நின்று, என்னைத் தூக்கி நிறுத்தி, தலையை வருடினார்.

‘’என்ன வேண்டும், என் குழந்தாய்? சொல்லு, நான் அல்லாவிடம் கேட்கிறேன்’’ என்று கனிவுடன் மொழிந்தார்.

அப்போது நான் நாக்குழற என் தாழ்மையான விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். இந்தத் தெய்விகச் சங்கிலியில் என்னையும் ஒரு வளையமாக்கும் படி—புனிதத் துறவிகளின் சீடனக என்னை ஏற்றுக்கொள்ளும் படி—வேண்டிக் கொண்டேன். அவ்வளவு தான். சுற்றியிருந்த கூட்டத்தில் கிளம்பிய ஆரவாரத்தையும் கூப்பாடுகளையும் அழுகையையும் வருணித்து மாளாது. தலைமைப் பக்கிரி நின்றதுமே சுற்றிலும் அமைதி குடி கொண்டது. எனவே என் வேண்டுகோள் பலருக்குக் கேட்டது. அவர்கள்தாம் இப்படி ஆரவாரித்தார்கள். தலைமைப் பக்கிரி இரண்டு கைகளையும் உயர்த்தி என்னை ஆசீர்வதித்த போது உழவர்களும் மாதர்களும் எப்படிப் புலம்புனர்கள்! அதை எழுத்தில் விவரிக்க முடியாது. அப்புறம் நானே! அந்த நிமிஷம் முதல் நான் சாதாரண மானிடன் அல்ல, பழக்கமான உலகத் துன்பங்களை உழலும் அற்ப மனிதன் அல்ல, அல்லாவின் உயர்பெரும் நீதிமன்றத்தில் ஒரு பதவியில் அமர்த்தப்பட்டவன்! பொறுப்பு கழிக்க இந்தப் பதவியில் நான் இன்னும் வேலை தொடங்கவில்லைதான். ஆனாலும் இந்த வேலை என் மனதுக்குப் பிடித்தது என்பதை அதற்குள்ளாகவே உணர்ந்தேன். சாப்பிடவும் பருகவும் இனி வேண்டிய அளவு கிடைக்கும் என்பதைக் கண்டேன். நான் செய்ய வேண்டியது எல்லாம் ‘’அல்லாவே, ஒ அல்லாவே’’ பாட்டை நன்றக மனப்பாடம் செய்துகொள்வதும் வாயில் நுரை ததும்பப் பாடப் பழகிக்கொள்வதும் தான். பாட்டு உணவூட்டும் என்று ஜனங்கள் சொல்வது சரிதான். களி மிகுதியால் நான் அறிவு இழப்பதை உணர்ந்தேன். பக்கிரிகளுக்கு ஒரு பத்து அடி முன்னால் வெறுந்தலையுடன் நடந்தவாறு, என்அற்பச் சக்கிக்கு இயன்ற அளவு உரக்க மூக்கால் பாடினேன்;

‘’ஒ-ஒ-ஒ!
குளம்புகள் ஒலிக்க வரும் குதிரை,
அல்லாவே, ஒ அல்லாவே.
கிளம்புவீர் மக்காள், காண்பீரே,
அல்லாவே, ஒ அல்லாவே.
யார் என் காதலி எனக் கேட்டால்,
அல்லாவே, ஒ அல்லாவே.
பேரழகி ஜெபிஹோன் என்பேன்,
அல்லாவே, ஒ அல்லாவே,
எல்லாமே மண், அல்லாவே.’’


உலக வாழ்க்கைய—துயரும் களியும் நிறைந்த, பலவிதச் சூழ்ச்சிகளும் துன்பங்களும் விபத்துக்களும் உள்ள வாழ்க்கையை—எல்லார் முன்னிலையிலும் துறந்துவிட்ட, கடவுள் பித்துக்கொண்ட சிறுவனான என்னைக் கண்டு சந்தை மக்களின் உள்ளங்களில் அல்லாவின் மீதும் அவரது தொண்டர்கள் மீதும் பத்தி பரவசம் மீண்டும் அலையடித்துப் பொங்கியது. காணிக்கைகள் ஆலங்கட்டி மழைபோலப் பொழியலாயின...

சந்தைக்கு வைக்கோல் ஏற்றிவந்து விற்றுவிட்டுத் திரும்பிய ஒட்டகக்காரர்களின் ஒட்டகங்கள்மேல் இரண்டு இரண்டு பேராக உட்கார்ந்துகொண்டு மாலையில் இஷான்பஜார் என்னும் இடத்துக்கு, மகாபுனிதரான மௌல்வியின் மடத்துக்குப் புறப்பட்டோம். அதை நெருங்க நெருங்கச் சூழ்நிலையின் புனிதத் தன்மை அதிகரித்தது. தேவதூதர்களின் கேளாத கானம் காற்றில் நிறைந்தது போன்று உணர்ந்தேன். இது இயல்பே. ஏனென்றல் தாஷ்கந்த், சீம்கந்த், ஸைராம் பிரதேசங்களுக்கு இந்த மடம் அனேகமாக மெக்காவிலுள்ள காபா என்னும் திருக்கோயில் போன்றது. இந்த நகரங்கள் எல்லாம் விண்ணிலிருந்து வரும் கிரணங்களால் ஒளியுறுத்தப்படுகின்றன என்றல் இஷான்பஜார் தனது ஒளிர்வால் விண்ணகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மடத்தை அடைந்ததும் நாங்கள் ஒட்டகங்களிலிருந்து இறங்கி, சாமான்களை இறக்கினேம். தலைமைப் பக்கிரி ஒட்டகக்காரர்களுக்குக் கூலி கொடுப்பதற்குப் பதிலாக அவர்களை ஆசீர்வதித்துப் பிரார்த்தனை படித்தார். இம்மாதிரி ஆசி ஒவ்வொன்றுக்கும் சில இடங்களில் ஒட்டகம் காணிக்கை தருவார்களாம். ஆகவே ஒட்டகக்காரர்கள் அடைந்த லாபத்தைக் கணக்கிடுவதே கஷ்டமாய் இருந்தது.

மௌல்வியின் வீடு தொழுகைக் கூடத்தை அடுத்திருந்தது. இந்தக் கூடத்தில்தான் அவர் ஸுஃபிகளுடன் தொழுகை படிப்பது வழக்கம். பக்கிரிகளின் மடமும் அதை ஒட்டியே இருந்தது. முதலில் நாங்கள் தொழுகைக்கூடம் போனேம். எங்கள் வருகையைப் புனிதர் மௌல்வி தெரிந்துகொள்ளும் பொருட்டுத் தலைமைப் பக்கிரி கூடத்தின் வாயிலில் சிறு ஜெபம் படித்தார். பிறகு பக்கிரிகள் தாழ்வாரத்தில் வட்டமாக உட்கார்ந்தார்கள். அவர்களுடைய பணிவுள்ள சீடனான நானோ, காலணிகள் கழற்றிவைக்கப்படும் முன் நடையில், கைகளை மார்பில் தாழ்மையுடன் சேர்த்துக்கொண்டு தலை வணங்கி, தொண்டுக்குத் தயாராக நின்றேன். இறற்கிடையே பாட்டு தொடர்ந்தது. நாங்கள் கொண்டுவந்த காணிக்கைகளை ஸுஃபிகள் சிற்றறையில் வைத்தார்கள். இந்த அறைக்கு இரு வாயில்கள் இருந்தன—ஒன்று தொழுகைக் கூடத்தின் புறத்திலும் மற்றது மௌல்வியின் அந்தப்புரத்தின் புறத்திலும்.

முடிவில் பாட்டு நடுவே நின்றுவிட்டது. தொழுகைக் கூடத்தின் உள்ளிருந்து ஒயிலாக அடியெடுத்து வைத்து வந்தார் மகாபுனிதரான மௌல்வி. ‘’நான் உன்மேல் அடி வைத்து நடக்கத்தான் செய்கிறேன், என்றலும் நீ எனக்கு என்றும் நன்றி பாராட்ட வேண்டும்’’ என்று தரையிடம் சொல்லுபவர் போன்ற பாவனையுடன் அதை நோக்கியவாறு நடந்தார் அவர். தாம் நபிகள் நாயகம் முகம்மது அவர்களின் ஒன்பதாவது மனைவியான ஆயஷா—குபாரோவின் வம்சத்தவர் என்று அவரே சொல்லிக் கொண்டார்—இந்த விஷயம் அவருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும்? நீண்ட வெளிர் மஞ்சள் மேலங்கியும் தூய வெள்ளைத் தலைப்பாகையும் கனத்த ஆட்டுத் தோலால் அழகுறச் செய்த காலணிகளும் அணிந்திருந்தார் அவர். ஆயிரத்துக்குக் குறையாத மணிகள் கொண்ட ஜெபமாலை அவர் கைகளில் திகழ்ந்தது. கண்களுக்கு மை தீட்டப்பட்டிருந்தது. நரையோடிய நீண்ட தாடி இழைய இழைய வாரி விடப்பட்டிருந்தது—ஒவ்வொரு மயிரையும் தனி உறையில் புகுத்த முடியும் போல. மங்கிய வெள்ளி நிறமான அழகிய மீசையிலிருந்தும், அளவு மீறி உளுந்து இரையாக ஊட்டப்பட்ட சேவலினுடையவை போலச் சிவந்த கன்னங்களிலிருந்தும் உண்மையாகவே திவ்விய ஒளி பளிச்சிட்டது.

அனுபவமற்ற மற்றவர்கள் இதைக் கண்டார்களோ இல்லையோ அறியேன், ஆனால், அவருடைய இரு மருங்கிலும் ஆயிரத்து ஐநூறு தேவதூதர்கள் உடன் வந்த அருங்காட்சியை நான் கண்ணாரக் கண்டேன். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினோம். மகாபுனிதர், நற்செயல்கள் செய்ய வேண்டும் என்னும் இறைவர் கட்டளையை எல்லோருக்கும் நினைவுறுத்திவிட்டு, முன்கார், நாக்கிர் இருவரும் (இறந்தவர்களைக் கல்லறைகளில் பூர்வாங்கமாக விசாரிக்கும் தேவதூதர்கள் இவர்கள்) வந்தார்களா என்று கேட்டார். இதற்கு விடையாகத் தலைமைப் பக்கிரி தமது செப்புப் பாத்திரத்தில் சேர்ந்திருந்த காணிக்கைப் பணத்தை எல்லாம் மௌல்வியின் முன்றானையில் கவிழ்த்துக் கொட்டினார். செப்பு, வெள்ளி நாணயங்களும் காகிதப் பணமும் அதில் இருந்தன. நோட்டுக்களையும் ரூபிள்களையும் மகாபுனிதர் லேசான கையசைப்பால் மேலங்கிக் கைகளுக்குள் செலுத்திவிட்டு, ‘‘ஓ-ஓ, என் கைகள் செல்வ அழுக்கால் கறைபடாதிருக்குமாக! என் குழந்தைகளே; இது அழுக்கு. நாய்கள் தாம் இவற்றைத் தேடித் திரியும்!’’ என்று கூறி, செப்பு, வெள்ளி நாணயங்களைப் பக்கிரிகள் பக்கம் நகர்த்திவிட்டார்.

அப்புறம் அவர்கள் பார்வை என்மேல் நிலைத்தது. ‘‘இந்தக் குழந்தை யார்?’’ என்று மிகவும் கனிவுடன் வினவினார்.

தலைமைப் பக்கிரி என்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கி, என்னை வானளாவப் புகழ்ந்தார். அப்போது மட்டும் நாங்கள் சொர்க்க வாசலில் இருந்தால், நுழைவுச் சீட்டு இல்லாமலே நான் உள்ளே புக அனுமதிக்கப்பஙடிருப்பேன்—அவ்வளவு பிரமாதமாக என்னைப் பாராட்டினார் தலைமைப் பக்கிரி. முதல் தடவை பசுந்தேநீர் பருகும்போது அவர் என்னைப் பற்றிய புகழ்ச்சியைத் தொடர்ந்தார். இந்தப் பையன், நிலையான வாழ்வுக்காகப் புவி வாழ்க்கையைத் துறந்தவரும் போரனந்தத்தில் திளைப்பவருமான உண்மைப் பக்கிரி மஷ்ராப்தான் என்றார் அவர். என்னுடைய ஆனந்த பரவசத்தை அவர் வெகுவாக வருணித்தார். அது எல்லாப் புகழ்ச்சிக்கும் மேற்பட்டது என்றும் அதுபோன்ற ஆனந்தக் களிப்பு அனுபவமுள்ள துறவிகளுக்கும் கூட வாய்க்கக் கூடியது அல்ல என்றும் சொன்னார். இதைக் கேட்டதும் மகாபுனிதரான மௌல்வி பெருங் கருனை கூர்ந்து, சுட்டு விரலால் ஜாடை காட்டி என்னைத் தம் அருகே அழைத்தார். நான் மீண்டும் சிரம் தாழ்த்து வணங்கி அருகே போனேன். தம் ஆசிக் கரத்தால் அவர் என் நெற்றியை வருடினார்.

‘‘அப்படியா சேதி! நீ இவ்வளவு பாக்கியசாலியா! அல்லாவின் கவனத்துக்கே ஆளாகிட்டாய் நீ. வானத்தைப் பார், என் மகனே!’’ என்றார்.

அப்போது அவர் விரல்களின் ஊடாக எழுபத்ததொரு சொர்க்கங்களை நான் கண்டேன்...

சடங்கு முடிய வெகு நேரம் ஆயிற்று. தொழுகைக் கூடத்தின் மூலையில் துணித் துண்டுக் குவியல்களின் நடுவே தன்னந் தனியாகப் படுத்துக் கொண்டேன். நீண்ட நேரம் எனக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. நான் பெற்ற அளவு நன்மை என் வயிறு அடைந்தது என்று சொல்ல முடியாது. என்றாலும் அதன் நிலைமையும் பொறுக்கக் கூடியதாகவே இருந்தது. வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் அது போசதிருந்தது. சொர்க்க போகத்துக்கு நிகரான பல்வேறு விஷயங்கள் பற்றி எண்ணங்கள் என் மூளையில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. சிற்றறையில் காணிக்கைகளுக்காக மூன்றாவது வாயில் இருக்கிறதா, மௌல்வி இன்று என்ன சாப்பிட்டார், கொழுக்கட்டைகளா புலவா, எந்த மனைவியுடன் இன்று தங்கியிருக்கிறார், பச்சைத் தேநீர் நிறைத்த கெண்டி அவர் தலைமாட்டில் இருக்கிறதா இல்லையா—இரவில் தாகம் எடுக்கும் போது பச்சைத் தேநீர் மிகவும் பயனுள்ளதாயிற்றே— இவ்வாறெல்லாம் சிந்தித்தபடியே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

உறங்கியதும் நான் சொர்க்கத்திலோ நரகத்திலோ அல்ல, அதே தொழுகைக் கூடத்தில் தான் இருக்கிறேன் என்பதைக் கண்டேன். அங்கே குளிராய் இருந்தது, முழு நிசப்தம் நிலவியது. அவ்வப்போது வீசிய காற்றால் நான் புரண்டு புரண்டு படுத்தேன். அப்போது குளிரால் நடுங்கிய ஒரு நாய் திடீரென்று தொழுகைக்கூடத்துக்குள் வந்து முறையிடுவதுபோலச் சிணுங்கியது. அதைத் தேற்ற எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிற்று. ஆனால் எழுந்திருந்து அதன் பக்கத்தில் நெருங்க என்னால் முடியவே இல்லை. ஏனென்றால் நானே தான் இந்தச் சிணுங்கும் நாயாக இருந்தேன். என்மீதே உண்டான இரக்கத்தால் நான் நெடு நேரம் துன்பப்பட்டேன். காலையில் ஸூஃபிகள் என்னை எழுப்பும் வரை மெல்லிய குரலில் சிணுங்கியவாறு இருந்தேன்.

தொழுகைக் கூடத்தில் பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஆட்கள் சிலர் சிலராக வந்து பெரிய வட்டமாக நின்று கொண்டார்கள். நான் மளமளவென்று முகங்கை கழுவிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். ஜெபமாலைகள் வைத்திருந்தவர்கள் பரபரவென்று மணிகளை உருட்டத் தொடங்கினார்கள். மற்றவர்கள் கிளர்ச்சியால் சிறிது நடுங்கியவாறு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஒரு சிலர் எங்கோ வெறித்தே நோக்கியவாறு நின்றார்கள். மாதர்களும் குழந்தைகளும் கிழவர்களும் கவலை தேய்ந்த ஆடவர்களும், அரைக் குருடர்களும் பக்கவாதம் வந்தவர்களும் மலடர்களும் வறியவர்களும் கடன்பட்டவர்களும் ஜாமீனில் விடுபட்ட குற்றஞ்சாட்டப் பட்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். மௌல்வி கூடத்தில் தோன்றியதுமே அவர்கள் எல்லோரும் உதவி கோரியும் விபத்திலிருந்து விடுதலை வேண்டியும் உரத்த குரல்களில் அபஸ்வரமாக ஒலமிட்டார்கள். மௌல்வி ஏதோ முணுமுணுத்து அவர்களுடைய தண்ணீர்ச் செம்புகளிலும் தேநீர்க் கெண்டிகளிலும் வேறு பலவித நீர்ப் பாத்திரங்களிலும் ஊதினார்.

தொழுகை முடிந்ததும் நான் பக்கிரிகளுடன் ஒரு விதமாகக் காலை உணவு சாப்பிட்டேன். நஜர்பேக் சந்தைக்குப் போகும் படி மௌல்வி அவர்களுக்குக் கட்டலை இட்டார். நானும் அவர்களுடன் போக ஆயத்தம் ஆனேன். ஆனால் மகாபுனிதர் என்னைத் தடுத்துவிட்டார்.

‘‘நீ இரு, மகனே. நீ மிகவும் துடியான பையன். இங்கேயே முன்கட்டிலும் பின்கட்டிலும் உனக்கு வேலை இருக்கும்’’ என்றார்.

மறுத்துப் பேச நான் துணியவில்லை, ஆனால் உளம் சோர்ந்து போனேன். இவ்வளவு அருமையான, லாபகரமான பயணத்தை நழுவ விட வேண்டுமே! பக்கிரிகளின் ஊர்வலத்தில் கலந்துகொண்டு, சந்தையில் எத்தனையோ பொருள்களைக் கையாடலாமே! நெசவாளியின் கைகளுக்கு அடியில் நூல் நாழி போல வீட்டின் முன்கட்டுக்கும் பின்கட்டுக்குமாகப் பலிந்தாடுவதை விட வெளியே சுற்றி வருவது எவ்வளவோ இன்பமாய் இருக்குமே. பாடிப் பாடிப் பணம் சம்பாதிப்பதற்குப் பதில் களைத்துச் சலித்துப் போக வேண்டிவரும்...

பக்கிரிகள் போன பிறகு மௌல்வி என்னைத் தம் சிற்றறைக்குப் பரிவுடன் அழைத்தார்.

உள்ளே போனதுமே, தொண்டு செய்ய ஆயத்தமாய் இருக்கும் தோற்றத்துடன், “அறிவில் சிறந்த என் ஆசானே, என்ன உத்தரவு இடுகிறீர்கள்?” என்று மெல்லிய குரலில் கேட்டேன். அவர் என் கையைப் பிடித்து வெள்ளைக்கோரைப் பாயில் அமர்த்தினார். நான் முழந்தாள் படியிட்டு அமர்ந்தேன். மௌல்வி பிறையிலிருந்து திருக் குரானை எடுத்து என் கையில் கொடுத்தார். தோல் அட்டை உறைபோட்ட புத்தகம் அது. நான் அதை மூன்று முறை முத்தமிட்டு, நெற்றியில் ஒற்றிக்கொண்டேன். மௌல்வி விழிகளைப் பாதி மூடியவாறு தொழுகை படித்துவிட்டு, பின்வரும் சொற்களைத் திருப்பிச் சொல்லும் படிக் கட்டளை இட்டார். “இன்னாருடைய மகனும் மகாபுனிதரான மௌல்வியின் விசுவாசம் உள்ள சீடனும் ஆன நான், எனத ஆன்மிக ஆசானின் எல்லாக் கட்டளைகளையும் மறுபேச்சின்றி நிறைவேற்றுவேன். என் தலைமேல் வாள் ஒச்சப்படினும் சரியே, அவருடைய கட்டளைகளிலிருந்து வழுவ மாட்டேன். எதையும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன். என் ஆன்மிக ஆசானின் நான்கு மனைவியரில் ஒவ்வொருவரையும் என் சொந்தத் தாய் போலக் கருதி மரியாதை செய்வேன். அவர்களை ஏறிட்டுப் பார்க்க மாட்டேன். இந்த வீட்டில் நான் கேட்கும் எந்த இரகசியத்தையும் எவருக்கும் தெரிவிக்க மாட்டேன். இந்த இரகசியத்துக்குப் பங்கம் வரும்படி நடந்து கொள்ள நான் நினைத்தால் நான் குருடன் ஆவேனாக, எனக்குப் பக்கவாதம் வருமாக, மேலெல்லாம் கொப்புளங்கள் வெடித்து நான் சாவேனாக! ஆமென்!

மௌல்வியுடன் இதை முடிவுவரை சொன்னதுந்தான் பயங்கரமான பிரதிக்கனை செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எனக்கு அச்சம் உண்டாயிற்று. ஆனால் எதுவும் செய்வதற்கு இல்லை. சொற்களைத் திருப்ப முடியாததே! அந்தக் கணம் முதல், ஒரு தையலிலிருந்து மற்ற தையலுக்குப் போகும் ஊசி போல முன்கட்டுக்கும் பின்கட்டுக்குமாக ஓடிச் சாடிய வண்ணமாய் இருந்தேன். சரியானபடி ஓய்வு கொள்ளக்கூட எனக்குத் துணிவு வரவில்லை. மனிதனுடைய நம்பிக்கைகள்தாம் எவ்வளவு ஏமாற்றம் நிறைந்தவை!

எல்லாவிதக் கட்டளைகளையும் எல்லா வித வேலைகளையும் நிறைவேற்றியவாறு நான் உழைத்தேன். ஒரு விஷயத்தில் மட்டும் பாழாய்ப் போகிற சைத்தான் என்னை நேர் வழியிலிருந்து பிறழவைத்தான். மகாபுனிதரின் இளைய மனைவி பதினேழு வயது இள நங்கை. சித்திரந் தீட்டிய மர ஸ்பூன் போல ஒரே அழகு அவள், மெய்யாகவே! அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னைப் பிடர் பிடித்து உந்தும். நான் சற்றைக்கு ஒரு தரம் கடைக் கண்ணால் பார்ப்பேன். மறு கணமே வெள்ளைக் கோரைப்பாயும் நான் திருக் குரானை முத்தம் இட்டதும் எனக்கு நினைவு வரும். மனிதகுல வைரியான சைத்தான் பேராசை பிடித்த மீனைப் போல என்னைத் தூண்டிலில் மாட்டிவிட்டான் என்று தோன்றும். நிம்மதி இழந்து தவிப்பேன். மறுபடியும் முன்னும் பின்னும் ஓடியவாறு வாய்க்குள் பாடுவேன்.

ஒயிலார் அழகி ஜெபிஹோன்,
அல்லாவே, ஓ அல்லாவே...


நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருண்டோடின. ஒரு முறை மேளல்வி என்னை மறுபடி சிற்றறைக்கு அழைத்தார்.

“என் மகனே” என்று பரிவாக விளித்துக் கூறலானார், “எங்களுக்காக நீ வெகுவாக உழைத்திருக்கிறாய். எங்கள் வீட்டு விவகாரங்கள் எல்லாவற்றையும் இப்போது நீ அறிவாய்... எத்தனை பெயரை நான் பராமரிக்க வேண்டி இருக்கிறது என்பதை நீயே காண்கிறாய், மனைவிகள், குழந்தைகள், ஸூஃபிகள், வேலையாட்கள், உழவு வேலைக்காரர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டும், உடைகள் தர வேண்டும்... காணிக்கைகளை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் நாம் எல்லோரும் பட்டினிகிடந்து மடிவோம், இல்லையா? நீ துடியான பையன், திறமை உள்ளவன். நான் உன்னைச் சோதித்துப் பார்த்தேன். எங்கள் இரகசியத்துக்கு நீ அர்ப்பிக்கப்பட்டிருக்கிறாய். பராக்குப் பார்த்துக் கொண்டு இராதே, மகனே. நீயும் பணம் சம்பாதிக்க வேளை வந்துவிட்டது... ஏதேனும் வேறு வழியில்... காணிக்கைகள் திரட்டுவது தவிர...”

மௌல்வி இப்படிப் புதிர் போட்டார்! “வேறு வழியில்” என்பதற்கு என்ன அர்த்தம்? நான் எண்ணி எண்ணி மூளையைக் குழப்பிக்கொண்டேன். எனது விளங்காமையை முகம் பிரதிபலித்தது போலும். ஏனெனில் மௌல்வி எனக்கு விளக்கத் தொடங்கினார்—ஜாடை மாடையாக, சுற்றி வளைத்து. முடிவில் அவருடைய சொற்களின் பொருள் என் அறிவுக்கு எட்டிவிட்டது. “அப்படியா விஷயம்?” என்று எண்ணி அவரிடம் சொன்னேன்.

“நல்லது. குருவே! நான் கீழ்ப்படிகிறேன். என் ஆசானின் பொருட்டு என்னையே பலி கொடுக்கச் சித்தமாய் இருக்கிறேன்...”

மௌல்வி மனநிறைவுடன் முறுவலித்து என் தோளில் தட்டிக்கொடுத்து ஆசி கூறினார். அப்போது அவர் விழிகளில் தந்திரம் பளிச்சிட்டது. நானும் தேவையான துணிவு எனக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்.

மௌல்வி சட்டென எழுந்தார். “கொஞ்சம் இரு” என்று என்னிடம் சொல்லிவிட்டுப் பின்கட்டுக்குப் போனவர், சிறிது நேரத்தில் குட்டையில் முடிந்த துணி முடிச்சு ஒன்றுடன் திரும்பிவந்தார். அதில் பழைய சராயும் சட்டையும் குல்லாயும் அச்சிட்ட சீட்டித் துணி இடுப்புக் குட்டையும் இருந்தன.

“இந்தா, குழந்தாய். இவற்றை அணிந்துகொள். இந்த உடை என் காலஞ்சென்ற மகன் மின்யாகுத்ரத்துடையவை. போன கோடையில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனான். அவன் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தனை செய்” என்றார்.

“ஆமென், சொர்க்க சாம்ராஜ்யம் அவனுக்குக் கிட்டுமாக....”
“ஆண்டவன் அருள்க...”

மௌல்வியின் புதிய உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்று நான் சிந்திக்கலானேன். ஆனால் வேட்டைக்காரனை நோக்கியே விலங்கு வரும் என்பது சரிதான் போலும். மறுநாள் நான் ஏதோ காரியமாகப் பக்கத்துக் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவரும்போது இரண்டு வயதுக் கிடாரிக் கன்று திடலில் விட்டாற்றியாக நிற்கக் கண்டேன். அது மந்தையிலிருந்து பின் தங்கி விட்டதா, வழி தவறிவிட்டதா என்றெல்லாம் அதை விசாரிக்க நான் முற்படவில்லை. இடுப்புக் குட்டையை அவிழ்த்து அதன் கொம்பில் மாட்டி மெதுவாக அதை மடத்துக்கு இழுத்துச் சென்றேன். மௌல்வி பெரு மகிழ்வு அடைந்தார்.

“நீ மிக அருமையான பையன்!” நீ முன்னுக்கு வருவாய்... அல்லாவே தாம் இந்த நல்ல மிருகத்தை உன்னிடம் அனுப்பினார். ஆனால் ஒன்று சொல்லு, வழியில் யாரும் உன்னைப் பார்க்கவில்லையே? பார்க்கவில்லையா? ஒருவருமே? அல்லா காப்பாற்றினார்... சபாஷ், என் மகனே, சபாஷ். உனக்குக் கற்றுக் கொடுப்பதை நன்கு புரிந்துகொள், ஒருபோதும் சங்கடத்துக்குள்ளாக மாட்டாய் இவ்வுலகிலும் சரி, மறு உலகிலும் சரி... ” என்று கூறினார்.

மாலையில் கிடாரி வெட்டப்பட்டது. இறைச்சியும் கொழுப்பும் குதிரில் வைக்கப்பட்டன. தோலைப் பதனிடும்படியும் தமக்கு ஜோடுகள் தைக்கவும் மௌல்வி கட்டைளையிட்டார்.

மறுநாள் நான் மீண்டும் பக்கத்துக் கிராமத்துக்கு அனுப்பப்பட்டேன். அப்பாவிக் கிடாரியின் சொந்தக்காரன் யார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். அவன் கிராமவாசி, நாடோடி வியாபாரி. அதற்குள் அவன் சுற்று வட்டாரம் முழுவதிலும் பெருங்கூச்சல் கிளப்பிவிட்டான். தன் உடைமையை எங்கும் தேடினான். கடைசியில் கிடாரியின் குளம்புத் தடங்களைக் கண்டு அவற்றைத் தொடர்ந்து சென்றான். கிடாரியையும் அதை ஏமாற்றியவனையும் வாய்க்கு வந்தபடி திட்டினான். அவனுக்கு இந்த உலகில் உள்ள எல்லா வியாதிகளும் துன்பங்களும் நேர வேண்டும் என்றும் நரகத்தில் எல்லாச் சித்திரவதைகளையும் அவன் அனுபவிக்க வேண்டும் என்றும் சபித்தான். நான் புதர்களின் மறைவில் அவனைத் தொடர்ந்தேன். அவன் ஒரேயடியாக வைது திட்டினான்—அதிலும் குளம்புத் தடங்கள் மறைந்ததும், தீடிரென்று அவன் தலையை நிமிர்த்தி அக்கம் பக்கம் பார்த்தான். தடங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன என்று அவன் புரிந்து கொண்டான் போலும். அதைப் பின்பற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்றான். ஆனால் அவனுடைய வசவுகளின் தொனி கணிசமாக மாறிவிட்டது. தன் கோபத்தை எல்லாம் அவன் இப்போது கிடாரியின்மேல் காட்டத் தொடங்கினான். மடத்துக்கு எதிரே வந்ததுமோ அவன் பேசுவதையே நிறுத்திவிட்டான். வாயிலையே குத்திட்டு நோக்கினான். என்னைத் தவிர வேறு யாருமே அவனைப் பார்க்கவில்லை (என்னையோ, அவன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை), என்றாலும் அவன் தலை வணங்கினான். பிரார்த்தனை செய்யும் பாவனையில் முகத்தைத் தடவினான், பின்பு திரும்பி நடக்கலானான். சில தாவடிகள் சென்றதும் அவன் ஒரே பாய்ச்சலாக ஓட்டம் எடுத்தான்.

என் முதல் வெற்றி மௌல்விக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அவர் என்னைத் தம் சிற்றறைக்கு மறுபடி அழைத்துப் புது உபதேசம் செய்யலானார்.

“மகனே, வேறு வேலைகளையும் நீ மேற்கொள்ள வேளை வந்துவிட்டது. சந்தைக்குப் போ... பைகள், மணி பர்ஸுகள் என்ற அருமையாக வஸ்துக்களும் உலகில் இருக்கின்றனவே ரொக்கப் பணத்தைவிட மேலானது எது? எடுத்துச் செல்வது கஷ்டம் அல்ல, மறைப்பதும் சுலபம். ரொக்கப் பணம், மகனே, ரொக்கப் பணம்” என்றார்.

ஜேபடித்திருடன் ஸுல்தான் கூட என்னை ஈடுபடுத்த முடியாத இந்தத் தொழிலை நான் உண்மையாகவே மேற்கொண்டிருப்பேன். ஆனால் ஒரு நிகழ்ச்சி இதற்குத் தடையாய் நேர்ந்தது. இந்த உரையாடல் நடந்ததற்கு அடுத்த நாள் மௌல்வி என்னை முகப்பு வெளியில் நிறுத்தி, மகனே, ஒரு கழுதை பிடித்துக்கொண்டுவா, சீக்கிரம். எங்கிருந்தாலும் பிடித்துக்கொண்டுவா என்றார்.

நான் அவரை வியப்புடன் நோக்கினேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன பேந்தப் பேந்த விழிக்கிறாய்? ஒரு கழுதையைப் பிடித்துக் கொண்டுவந்து முற்றத்து முசக்கட்டை மரத்தில் கட்டு என்கிறேனே”

இவருக்குக் கழுதை எதற்காக? எவேளேனும் மனைவிக்குச் சொறி சிரங்கு வந்துவிட்டதா? இவ்வாறு எண்ணமிட்டவனாக நான் கிராமத்துக்குப் போனேன். இரண்டு பூசனிக்காய்கள் கொடுப்பதாகப் பேசி அதே ஏழை வியாபாரியின் கழுதையை ஒரு மணி நேரத்துக்கு வாடகைக்குப் பிடித்தேன். இந்தக் கழுதைமேல் ஏறித்தான் புருவச்சாயம் வேண்டுமா, சராய் நாடா வேண்டுமா? என்று கூலிக்கொண்டே அவன் கிராமம் கிராமமாகச் செல்வது வழக்கம்.

கழுதையை இட்டு வந்து முசுக்கட்டை மரத்தில் நான் கட்டியதும், மௌல்வியின் கர்ப்பிணியான மூன்றாம் மனைவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். முற்றத்தைத் தெளித்துப் பெருக்கித் துப்புரவாக்கி, மரத்தடியில் கம்பளம் விரிக்கும்படி அவள் உத்தரவிட்டாள். இந்தக் காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கையில், இந்தக் கழுதைமேல் மௌல்வியின் மனைவி காட்டிய மரியாதையும் கனிவும் எனக்குப் பெரு வியப்பூட்டின. ஏனெனில், நபிகள் நாயகத்தின் நெருங்கிய உறவினளான ஃபாத்திமாவின் வம்சத்தினள் அவள் என்று சொல்லிக் கொண்டார்கள். நான் விரிப்பு விரித்ததுமே அவள் என்னை வெளியே போகச் சொல்லிவிட்டு வாயிலை உட்புறம் தாளிட்டுக் கொண்டாள். இதனால் என் ஆவல் நெருப்பாய் மூண்டெரிந்தது. நான் தொழுகைக்கூடத்துக்குப் போய் முற்றத்தின் புறம் இருந்த சுவரில் உள்ள திறப்பு வழியாக இடுக்கை அடைத்திருந்த சித்திரவேலைப்பாடு உள்ள ஒரு குச்சியை அகற்றினேன். எல்லாம் நன்றாய்த் தெரிந்தது. மௌல்வியின் மனைவி கழுதையின் காது நுனிகளைக் கத்தரிக்கோலால் நறுக்கினாள். அவற்றிலிருந்து குருதி கசியத் தொடங்கிற்று. தான் கம்பளத்தின்மேல் பட்டு விரிப்பு விரித்து, தலையணையைப் போட்டுக்கொண்டு படுத்து, கழுதையைப் பார்த்து மகிழலானாள். இரத்தம் வடிந்த காதுகளில் ஈக்கள் மொய்த்தன. பாவம் கழுதை தலையை ஆட்டி, விடாது தொல்லை கொடுத்த ஈக்களை விரட்டிற்று. அது காதுகளை அடித்து முடிந்தவரை பலமாக உதறிற்று, ஒன்றோடொன்று அடித்துக் கொண்டது. மௌல்வின் மனைவியோ இதைக் கண்டு களிபேருவகை அடைந்தாள்.

‘‘அட என் கண்ணே!’’ என்று அவள் கனிந்தாள்—அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டுவிடுவாள் போல. ‘‘அட என் அழகு ராஜா! உன் காதுகள் தாம் எவ்வளவு ஒயிலாக அசைகின்றன. உனக்காக என் உயிரையே கொடுப்பேன்!’’ என்றாள். மௌல்வியின் மற்ற மனைவிகளும் முற்றத்துக்கு வந்து இந்தக் காட்சியைக் கண்டு விஷச் சிரிப்பு சிரித்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து மூன்றாம் மனைவி சொன்னாள்: ‘‘பாருங்கள், அயிம்சாஹோன். இதன் காதுகள் எவ்வளவு அருமையாக அசைகின்றன, பாருங்களேன்! அட என் கண்ணே, என் செல்வமே, என் கழுதை ராஜாவே!’’

சுவர் திறப்பு அருகே நின்றவாறு நானும் சத்தம் காட்டாமல் பொங்கிப் பொங்கிச் சிரித்தேன். கழுதையின் இடத்தில் எங்கள் மௌல்வி இருப்பதாக எண்ணிக் கொண்டேன். கருவுற்ற மனைவி மௌல்வியைக் காதல் மொழிகளால் கொஞ்சுகிறாள். அவரது கடிவாளம் கிணுகிணுக்கிறது. நுனிகள் கத்தரிக்கப் பட்ட பெரிய வெண் காதுகள் எல்லாத் திசைகளிலும் திரும்பி அசைகின்றன. அவற்றின் மேல் ஈக்கள் திரள் திரளாக மொடய்க்கின்றன... கற்பனைக் கண்களால் இவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கரிய விழிகளும் ஒயில் நடையுங்கூட மௌல்விக்கும் கழுதைக்கும் ஒரே மாதிரியானவை என்று நினைத்ததும் தாங்க முடியாமல் களுக்கென்று சிரித்து விட்டேன். இது தான் எனக்கும் வினையாக முடிந்தது. ஒரு வேளை அல்லா திடீரென்று நினைவுபடுத்திக் கொண்டு என் எண்ணங்களை அறிந்துவிட்டார் போலும். தம் விசுவாசமுள்ள ஊழியர்களை—எங்கள் மௌல்வியைக் காட்டிலும் விசுவாசம் மிக்கவரோ, இருக்கவே முடியாது!—சிந்தனையில் கூட இந்த மாதிரி எள்ளி நகையாடுவதை அனுமதிக்கக் கூடாது என்று அல்லா முடிவு செய்தார் போலும்! உண்மை எதுவோ, அறியேன். ஆனால், வாய்க்குள் சிரிக்க முயன்றவாறு சுவற்றுத் திறப்பின் அருகே நான் குலுங்கி நெளிந்து கொண்டிருக்கையில் பின்னிருந்து வந்த முக்கிய ஆபத்தை நான் புறக்கணித்துவிட்டேன். முதுகில் பலத்த குத்து விழுந்ததுந்தான் இதை உணர்ந்தேன்.

‘‘அட சைத்தான் மகனே, இங்கே என்ன செய்கிறாய்?’’

இவ்வாறு கேட்டவர் மகாபுனிதரான மௌல்வியேதாம். என்னுடைய குபீர்ச் சிரிப்பு அவர் காதில் பட்டிருக்கும். விஷயம் என்ன என்று பார்க்க வந்திருப்பார். தம்முடைய காதல் மனைவிகளை—எவர்களை நான் சொந்தத் தாயார்களாக மதிக்க வேண்டுமோ அவர்களை—நான் உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டார். இது கொடும் பாவம், எவ்வகையிலும் மன்னிக்கத் தகாதது. இம்முறை நான் சில உதைகளோடு தப்பவில்லை. மௌல்வி என்னைச் சபித்தார். மடத்திலிருந்து விரட்டிவிட்டார்...

நான் வாயிலுக்கு வெளியே, பாதைக்கு வந்தேன். தனது கிடாரியை (இப்போது கழுதையைங்கூட) இழந்து விட்ட அப்பாவி வியபாரி சமீபத்தில் இந்தப் பாதையில்தான் நின்று கொண்டிருந்தான். நானோ, புதர்களின் மறைவிலிருந்து கேலிச் சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டம் எப்படி மாறி மாறி வருகிறது என்று எண்ணமிட்டேன். சில நிமிடங்கள் முன்பு வரை இந்தக் கோழிக் குடிலில் நான் மதிப்புள்ள சேவலாக வளைய வந்து கொண்டிருந்தேன். இப்போதோ அதற்குள் தலை காட்டவே என்னால் முடியாது! தவிரவும், நான் சொர்க்கத்தை இழுத்துவிட்டேன்! அதுவோ என் கைக்குள் இருந்தது. வாஸ்தவம், மடத்தில் என் வாழ்வு சொர்க்கத்துக்கு அவ்வளவாக ஈடாயில்லை தான். என்றாலும் வருங்காலத்தில் சொர்க்கபோகம் எனக்கும் நிச்சியமாகக் கிட்ட இருந்தது! இப்போது என்ன ஆகும்? கால் போன போக்கில் அலைந்து திரிய வேண்டுமா? வானம் உயரமானது, பூமி கடினமானது. எங்கே போவதோ தெரியவில்லை. எனக்குப் பச்சாதாபம் உண்டாயிற்று. அறிவற்ற கயவன், வீடுவாசலற்ற நாடோடி, பாதரசத் துளி மழமப்பான சாய் தளத்தில் உருண்டு ஒடுவது போல ஒரு நோக்கமும் இன்றி வெட்டியாக அலைந்து திரிபவன் என்று என்னையே நொந்துகொண்டேன். நான் மட்டும் சற்று அறிவும் அடக்கமும் உள்ளவனாக இருந்தால், வீண் சேட்டைகள் செய்யாமல் இருந்தால், ஒரு துன்பமும் அறியாமல் வீட்டோடு வாழ்ந்திருப்பேன். இப்போதோ? ஆனால், சென்றதோ மீளாது, போனதற்கு வருந்திப் பயன் என்ன?...

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Monday, 10 August 2009

குறும்பன் அத்தியாயம் 6: ஓடிப்போனவனுக்கு நேர்ந்த விந்தை நிகழ்ச்சிகள்

அமன் எந்தப் பக்கம் ஓடினானோ எனக்குத் தெரியவில்லை. நான் தூரத்தில் தெரிந்த நாணல் புதர்களை நோக்கி ஓடினேன். என் உள்ளுணர்வு என்னை ஏமாற்றிவிடவில்லை. புதர்களின் ஊடே சென்றது குறுகிய ஒற்றையடிப்பாதை. அது விரைவில் வடிகால் ஒன்றில் போய் முடிந்தது. நான் வடிகாலில் குதித்து ஒரு புறம் ஊர்ந்து போய் ஒடுங்கிக் கிடந்தேன். துரத்திவந்தவர்களின் கனத்த அடியோசைகளும் ஓட்டத்தினால் மூச்சுத் திணறும் குரல்களும் என் காதுக்கு எட்டின. அவர்கள் நாணல்களுக்கு இடையே சற்று தூரம் ஒடியபின் இது வீண் வேலை என்று தீர்மானித்துத் திரும்பிப் போய்விட்டார்கள். காலடியோசைகளும் குரல்களும் தூரத்தில் சென்று அடங்கின. ஆனாலும் எச்சரிக்கைக்காக நான் இன்னும் சிறிது நேரம் அசையாமல் கிடந்தேன். இதற்குள் இருட்டத் தொடங்கிற்று. பரிச்சயம் அற்ற அந்த இடத்தில், இருட்டில் யார்மீது மோதிக் கொள்வோம் என்று தெரியாத நிலையில் இரவைக் கழிப்பது எனக்குக் கொஞ்சமும் உவப்பாய் இல்லை. நான் மறுபடி மேலேறி ஒற்றையடிப்பாதையை அடைந்தேன். அது நாணல்களின் ஊடாக வளைந்து வளைந்து சென்றது. ஓர் இடத்தில் என் கால்களுக்கு அடியே நளுக்கிட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போலப் புதைசேற்றில் வேறு மாட்டிக் கொண்டு விடுவேனோ என்று விலவிலத்துப் போனேன். ஆனால் ஒற்றையடிப்பாதையில் மறுபடி உலர்ந்த தரை வந்தது. அது படிப்படியாக மேலே ஏறுவதை உணர்ந்தேன். திடீரென்று நாணல்கள் முடிந்துவிட்டன.

சற்று தூரத்தில் சில மரங்கள் வளர்ந்திருந்தன. நான் அவற்றை நோக்கிப் போனவன் சாலையை அடைந்தேன். இது என்ன சாலை, எங்கே இட்டுச் சென்றது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த வழியாக நாங்கள் முன்பு நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக நினைவு இருந்தது. நடந்திருந்தால் இருட்டில் கூட இடத்தை அடையாளம் கண்டுகொண்டிருப்பேன். சுற்று முற்றும் பார்வை செலுத்தியபின் நாணல்களுக்கு முதுகைக் காட்டியவாறு நின்று எதிர்த்திசையில் நடக்கலானேன். தொடக்கத்தில் குதிரைக் குளம்பொலிகள் கேட்பதுபோல எனக்கு ஓயாமல் பிரமை உண்டாயிற்று. நான் அச்சத்துடன் இங்குமங்கும் பார்த்தேன். இந்தப் பாதை மேய்ப்பர்கள் தங்கிடங்கள் வழியாகப் போகவே இல்லை என்று எனக்கு நம்பிக்கை உண்டாயிற்று. இந்த எண்ணம் எனக்கு ஆறுதல் அளித்தது. இருட்டில் மேலும் மேலும் நடந்தேன். கால்களுக்கு அடியில் புழுதி மெதுவாக மூச்சுவிட்டது. வானில் சடர்ந்தன விண்மீன்கள். அமன் எங்கே ஓடியிருப்பான், மேய்ப்பார்கள் அவனைப் பிடித்து விட்டார்களோ ஒருவேளை என்று எண்ணமிட்டேன். முல்லாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று நினைக்கவே எனக்குப் பயமாய் இருந்தது. இப்படி எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியாது. எனக்கு முன் சில விளக்குகள் தெரிந்தன. அவை தொடுவானை ஒட்டியிருந்த விண்மீன்கள் என்று முதலில் எண்ணினேன். ஆனால் இது தவறு என்பதை விரைவில் புரிந்து கொண்டேன். அது ஒரு குடியிருப்பு, கணிசமாகப் பெரியதுகூட.

வீதி வழியே சிறிது தூரம் நடந்தபின் விளக்கொளி நிறைந்த கட்டிடம் ஒன்றைக் கண்டேன். ஒரு சீரான குரல்களின் ரீங்காரம் அதிலிருந்து வந்தது. அது மசூதி. கடைசி மாலைத் தொழுகை அங்கே நடந்து கொண்டிருந்தது. நான் அதற்குள் மெதுவாக நுழைந்து தொழுகை படிப்பவர்களுக்கு நடுவே ஒசைப்படாமல் மண்டியிட்டு அமர்ந்தேன். அதற்குள் தொழுகை முடிந்துவிட்டது. எல்லோரும் வெளியே போகத் தொடங்கினார்கள். நான் மட்டும் சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தேன். இமாமும் ஸூஃபியும் என்னைச் சந்தேகத்துடன் பார்த்தார்கள் (இம் மசூதியில் நமுதாத் துணியையும் தொழுகை விரிப்புக்களையும் தலைக்கு நாள்தான் யாரோ திருடிப் போய்விட்டார்கள் என்று அப்புறம் தெரிந்து கொண்டேன்).

“என்ன மகனே, வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறாயே? தொழுகை முடிந்துவிட்டதே” என்றார் ஸூஃபி.

“அத்தாஜான். நான் வெளியூர்க்காரன். கொஞ்சம் வழி தவறிவிட்டேன். நீங்கள் அனமதித்தால் காலைவரை மசூதியில் இருந்துவிட்டுப் போகிறேன்” என்று முறையிடும் குரலில் சொன்னேன்.

இமாம் பேச்சில் குறுக்கிட்டார்.

“எங்கிருந் வருகிறாய், மகனே?”

“பெரியவரே, நான் தாஷ்கந்த் வாசி.”

“ஓ, அப்படியா? இந்த வட்டாரத்தில் என்ன செய்கிறாய்? இங்கே எப்படி வந்தாய்?”

முல்லாவின் சொற்களை நான் நினைவுபடுத்திக் கொண்டேன்.

“நான் மதப் பள்ளி மாணவன். இப்போது விடுமுறை. ஆகவே வேலை செய்து சம்பாதிப்பதற்காகக் கிராமங்களில் சுற்றி வருகிறேன்” என்றேன். இங்கேயும் பிணத்தை முழுக்காட்டும் வேலை செய்ய நேர்ந்துவிடுமோ என்று பெருமூச்சடன் எண்ணினேன்.

“எந்த மதப்பள்ளி மாணவன் நீ? உன் ஆசான் யார்? ”
சங்கடத்தில் மாட்டிக் கொண்டோம் என்று புரிந்து கொண்டேன். தாஷ்கந்தில் எதற்காவது பஞ்சமில்லை என்றால் மதப்பள்ளிகளுக்குத்தான். இடறி விழுந்த இடமெல்லாம் மதப்பள்ளி, எதிர்ப்படுபவர்கள் எல்லாம் ஆசான்கள். ஆனாலும் எனக்கு எந்த ஆசானையும் தெரியாதே. கதை கட்டுவதற்கோ, நேரம் கடந்துவிட்டது.

“அந்தப் பெரிய மதப்பள்ளி இருக்கிறது அல்லவா, அதுதான் அந்த முல்லா ஆசானாய் இருக்கிறாரே, அவர்தான், பெயர் பெற்ற முல்லா... ”

இமாம் வாய் விட்டுச் சிரித்தார்.

“அப்படிச் சொல்லு, மதப்பள்ளி மாணவா. நீ எங்கே கல்வி பயின்றாய் என்பதைத் தெரிந்து கொண்டேன். மதப்பள்ளியில் அல்ல, புளுகுச் சாலையில், கிடக்கட்டும், என்னோடு வா. ஆமாம், உன் வயிறு எப்படி இருக்கிறது? ஓலமிடவில்லையா அது? ”

நான் கூச்சத்துடன் தலை கவிழ்ந்து தொழுகை விரிப்பை நோக்கினேன்.

“புரிகிறது... அதற்கென்ன, போவோம் வா. எங்களுக்கு ஒரு சிறு உதவி செய், சாப்பாட்டுக்கு வகை கிடைத்துவிடும். ”

நான் என்ன வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று ஊகிக்க முயன்றவாறு இமாமின் பின்னே சென்றேன். அவர் முதலில் சாப்பிட ஏதாவது கொடுப்பாரா என்பது பற்றியே முதன்மையாக எண்ணமிட்டேன். தணலில் சுட்ட இரண்டு மக்காச்சோளக் கொண்டைகளும் மண் கிண்ணத்தில் கொஞ்சம் ஊளுத்தங் கஞ்சியும் கொண்டுவந்து கொடுத்தார் இமாம். நான் அவக்கையுடன் அவற்றைத் தின்பதில் முனைந்தேன். அவர் பின்கட்டுக்குப் போனார். சற்று நேரம் பொறுத்து அவர் வெளியே வந்தார். கோடரியும் பெரிய கத்தியும் முறுக்குக் கயிறும் அவர் கைகளில் இருந்தன. இதைக் கண்டதும் நான் விதிர் விதிர்த்துப் போய் வேட்டை நாய்களைக் கண்ட மான்போல ஓடிவிட எத்தனித்தேன். இமாம் கேலியாகச் சிரித்தார்.

“நீ என்ன தம்பீ? பயப்படாதே. கழுத்தைச் சீவிவிட மாட்டேன். விஷயம் என்ன தெரியுமா? என் காளைமாடு மட்டுமீறித் தின்று நோய்ப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் அது மண்டையைப் போட்டுவிடலாம். இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு தொழுவத்தின் பக்கத்தில் படுத்துக் கொள். இந்தா பருத்தித் துணிப் போர்வை. கோடரி, கத்தி, கயிறு, இவற்றைத் தலை மாட்டில் வைத்துக் கொள். தூங்காமல் விழிப்புடன் இரு. காளைமாடு மூச்சு திணறுவது காதில் பட்டதும் அதன் குரல்வளையில் கத்தியைச் செருகிவிட்டு வந்து என்னை எழுப்பு. புரிந்து கொண்டாயா? தூங்கி மட்டும் போய்விட்தே. இல்லாவிட்டால் காளை பாவியாக மரிக்கும். அந்தக் குற்றம் உன்னைச் சாரும்!” என்றார்.

“புரிந்து கொண்டேன், பெரியவரே! கொஞ்சம் தேநீர் கிடைக்குமா? ”

“அரைக்கால் ராத்தல் தேயிலை விலை ஐந்து கோப்பெக்குகள். உனக்குத் தேநீர் எதற்கு, ஓடையில் நீர் ஏராளமாயிருக்கும் போது? ஓடை வரை போகச் சோம்பலாய் இருந்தால், இதோ கை கழுவுவதற்காகக் குடத்தில் தண்ணீர் வைத்திருக்கிறது. அதிலிருந்து எடுத்துக் குடிக்கலாம்... ”

நான் மனத்தாங்கல் கொள்ளவில்லை. கொடுத்த வேலை அளவுமீறிக் கடினமாய் இல்லை என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருந்தது. இமாம் மறுபடி பின்கட்டுக்குப் போய்விட்டார். நான் பருத்திப்போர்வையை விரித்துப் படுத்து வானத்தைப் பார்வையிடலானேன். இளங்காற்று வீசிற்று. வீட்டின் அருகேயும் சுற்றுச் சுவரை ஒட்டியும் இருந்த மரங்கள் அசைந்தாடின, சலசலத்தன. தொழுவத்தில் இருந்த கால்நடைகள் எப்போதாவது அசைந்தவாறு செருமின. எனக்கு நேர் மேலே இருந்த மூன்று பெரிய விண்மீன்கள் மீது நான் பார்வையை நாட்டினேன். விழிகளை அப்புறம் இப்புறம் திருப்ப எனக்கு அச்சமாய் இருந்தது. தலையற்ற முண்டத்தின் நிழல் மெதுவாக என்னை நெருங்குவதையோ, அல்லது பக்கத்துக் கிளைகள் எதிலேனுமிருந்து அறுபட்ட கருத்தலை என்னை நோக்குவதையோ காண நேரிடலாம் என்று எனக்குத் தோன்றியது... ஏற்கனவே நடு நிசி ஆகிவிட்டது. காலமானவன் தன் பிணத்துக்கு இழைக்கப்பட்ட தீங்குகளுக்குப் பழி வாங்க இதை விடத் தகுந்த சமயத்தைத் தெரிந்தெடுக்க முடியாது. உடம்பை ஒரேயடியாகக் குறுக்கிக் கொண்டு முடிந்தவரை குறைவான இடத்தை வியாபித்தவாறு படுத்திருந்தேன். ஆனால் காலமானவன் அன்று நான் பட்டதைவிடக் குறைவாகத் தொல்லைப்படவில்லை. எனவே மிகவும் களைத்துப் போயிருந்தான் போலும். என்னிடம் அவன் வரவேயில்லை. நான் உறங்கிவழிவதை உணர்ந்தேன். ஏதோ திடீரென்று ஏற்பட்ட சத்தத்தால் விழித்துக் கொண்டேன். பொழுது புலரும் தறுவாய். தொழுவத்தில் எதுவோ தரையில் பொத்தென்று விழுந்து ஈழை இழுக்கத் தொடங்கிற்று.

“அட சனியனே, தூங்கிப் போய்விட்டேன் போலிக்கிறதே” என்று நினைத்து சிடுக்கு விழுந்த கயிற்றைத் தூக்கிக் கொண்டு காளையை “நீ செத்துத் தொலை!” என்று திட்டினேன்.

ஆனால் நான் திட்டியது வீண் என்று ஓடும் போதே எண்ணினேன். தொழுவத்தின் இருட்டில் ஏதோ ஒரு மிருகம் தரைமேல் கால்களை உதைத்துக் கொண்டிருந்தது. அப்படியானால் இன்னும் உயிரோடிருக்கிறது என்று தெரிகிறத என்று மகிழ்வுடன் நினைத்து, கைதேர்ந்த கசாப்புக்கடைக்காரன் போல் (கசாப்புக் கிடங்கிற்குப் பையன்களான நாங்கள் அடிக்கடி போய்ப் பார்ப்பது வழக்கம்), மாட்டின் கொம்புகள் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய இடத்தில் இடது கையை நீட்டி, வலது கையால் கத்தியை வீசினேன். காளையோ ஏற்கனவே சாகும் நிலையில் இருந்தது. எனவே நான் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. என் வெறுங்கை இலக்குத் தப்பிவிட்டது. நான் விலங்கின் நெற்றியில் கையை ஊன்றிக் கொண்டேன். ஆனால் கத்தி வேகத்துடன் நேரே அதன் குரல்வளையில் பாய்ந்தது. குருதி தாரையாகப் பீச்சி அடித்து என் தலைமுதல் கால்வரை நனைத்துவிட்டது. பாவம் அந்தப் பிராணி கடைசி முறையாக பெரிய கொதிகலத்தின் குழாய்போல உரக்க மூச்சுவிட்டது. பின்பு திணறியவாறு கால்களை இழுத்து உதைத்தது. அப்புறம் எல்லாம் அடங்கிப் போயிற்று.

காளை சாகும் தறுவாயில் தம்மை அழைக்கும்படி இமாம் சொல்லியிருந்தார். ஆனால் நானே காரியத்தைச் செவ்வனே நிறைவேற்றி விட்டேன். காலை ஆவதற்கு இன்னும் நேரம் இருந்தது. எனவே நானும் இமாமும் தூங்குவதே சரி என்று முடிவு செய்தேன். ஒரு பெரிய கவலை எனக்கு விட்டுவிட்டது. நான் விரிப்பில் படுத்து அக்கணமே அயர்ந்த இனிய, நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். அந்தோ, விழிப்பு எனக்கு எத்தகைய அதிர்ச்சியைக் கொடுத்தது! விலாவில் பயங்கரமான உதை படவே என் தூக்கம் கலைந்தது. எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கலவரம் காரணமாக இன்னும் உணராமலே கண்களைத் திறந்தேன். சாக்குப்பை போலத்தொங்கிய மேலங்கி அணிந்து கைக்கு ஒன்றாக இரண்டு பிரமாண்டமான மண்கட்டிகளை வைத்துக் கொண்டு அருகே நின்றார் இமாம். அவர் முகம் ஒரேயடியாகக் கோணியிருந்தது. கண்கள் தெறித்து விழுந்துவிடும்போல உக்கிரமாக உருட்டி விழித்தன. நான் எழுந்திருப்பதற்குள் அவர் பெரு வலிமையுடன் மண்கட்டியால் என் மண்டையில் அடித்தார். எனக்குக் கொடிய வலியும் மனத்தாங்கலும் உண்டாயின.

“இது என்ன பெரியவரே! ஏழை அகதிப் பையனை எதற்காக அடிக்கிறீர்கள்? உபகாரம் செய்ததற்கா? ஐயோ அம்மா, ஐயோ, ஐயோ, ஐயோ!...” என்று வீரிட்டேன். கண்ணீர் என் விழிகளிலிருந்து பொங்கிப் பெருகியது.

“அட, பாழாய்ப் போகிறவனே!” என்று சுத்தி இரண்டாவது மண்கட்டியையும் என் தலையில் போட்டு உடைக்க முற்பட்டார் அவர். ஆனால் இம்முறை நான் எச்சரிக்கையாக விலகிவிட்டேன். எனவே அடி முதுகுக்குக் கீழே தான் பட்டது. “அட நாசமாய்ப் போகிறவனே!” என்று எச்சிலைத் தெறித்தவாறு. தம் சொற்களாலேயே மூச்சு திணற இசைந்தார் இமாம். “நீயும் உன் உபகாரமும் மண்ணாய்ப் போக! அட பாவி. கயவாளிப் பயலே, உன் அப்பனுக்குச் செய் இநத் மாதிரி உபகாரம்! சைத்தான் மகனே, உன் கழுத்தையே அறுத்துக் கொண்டிருந்தால் மேலாயிருக்குமே! என் கழுதையின் குரல்வளையை அறுத்து விட்டாயே, படுபாவி! கொன்றுவிட்டாயே என் கழுதையை! கழுதையை! கழுதையை! – ஒவ்வொரு தரம் “கழுதை” என்று சொல்லும் போதும் அவர் மொத்திய மொத்தில் நான் வலி பொறுக்க முடியாமல் கலியாண எக்காளம் போல ஊளையிட்டேன். “எங்கிருந்துதான் வந்து சேர்ந்தாய் நீ எனக்கு வினையாக?” – பரிதாபம் பொங்கிய இந்தக் கேள்வியைத் தொடர்ந்து விழுந்தது இன்னொரு மடாரடி. “இந்தக் கழுதையைப் புனித புஹாரா நகரத்தில் அல்லவா வாங்கினேன்! ஆ-ஆ-ஆ!” - இந்த நினைவு வந்ததும் இன்னொரு தரம் மட்டென்று என் பிடரியில் ஒரு போடு போட்டார் இமாம். “மூன்று தங்க ரூபிள்கள் விலையாகக் கொடுத்தேனே! ” – இதற்கும் நான் அடி வாங்கி ஈடுகட்ட நேர்ந்தது. “ஐயோ, எப்பேர்ப்பட்ட கழுதை அது, எப்பேர்ப்பட்ட கழுதை! ஐயையோ! – தமது சோகத்தின் அடையாளமாக அவர் என்னைப் பலங்கொண்டமட்டும் புடைத்து நொறுக்கலானார். பலமோ அவரிடம் நிறைய இருந்தது.

நடந்தது என்ன என்பதைப் புரிந்து கொள்வது கஷ்டமாயில்லை. தரையில் புரண்டு கொண்டிருந்த கழுதையை நோயுற்று காளை என்று இருட்டில் தப்பாக எண்ணி, அதன் கழுத்தை அறுத்துவிட்டேன் நான். காளையோ இதற்குள் இயல்பான மரணம் அடைந்துவிட்டது. மழமழப்பான பக்கங்களும் குறுகிய கழுத்தும் உள்ள குடத்துக்குள் விழுந்துவிட்ட சுண்டெலி போல நான் ஒரே கிலியுடன் நாற் புறமும் மிரண்டு மிரண்டு பார்த்தேன். அடியும் உதையும் முடீயுமென்றே தோன்றவில்லை. ஓடித் தப்புவது அவசியமாய் இருந்தது. தொழுவத்தின் முகட்டில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஏணி அப்போது என் கண்ணில் பட்டது. இறந்த கழுதையின் சேணமும் பின் வார்ப்பட்டையும் முகட்டின் மேல் உலர்வதற்காக நிமிர்த்துப் போடப்பட்டிருந்தன. இமாமின் கைகளுக்கு அடியில் சட்க்கெனக் குனிந்து நழுவி ஏணியை நோக்கிப் பாய்ந்து, படியேறும் நாய்போலப் பரபரவென்று அதன்மேல் ஏறினேன். இமாம் என்னை விரட்டிக் கொண்டு வந்தார். ஆனால் அதற்குள் நான் முகட்டின் மேல் ஏறிவிட்டேன். ஏணியைக் காலால் உதைத்துத் தள்ளிவிடப் போனேன். அதற்குள் பழிவாங்கும் வெறி என்னை ஆட்கொண்டுவிட்டது. என்னை வதைத்த இமாமுக்கு ஒர் அடியாவது திரும்பிக் கொடுக்கத் தீர்மானித்தேன். சேணத்தைச் செந்தூக்காகத் தூக்கி இமாமைக் குறிவைத்து எறிந்தேன். ஆனால் சேணங்கூட, தன் எஜமானனைக் கொன்றதற்கு என்னை மன்னிக்க விரும்பவில்லை போலும். இந்த வாய்ப்பையே அது எதிர்பார்த்திருந்தது போலும். விழும்போது அதன் பின்வார்ப்பட்டை என் கழுத்தில் மாட்டிக் கொண்டு என்னையும் கீழே இழுத்தது. முகட்டிலிருந்து நான் சேணத்தின் மேல் விழுந்தேன் ஆகையால் பிரமாதத் தீங்கு எதுவும் எனக்கு ஏற்படவில்லை. தவிர, நான் பட்டிருந்த அடியில் என் உடம்பில் புடைபடாத இடம் எதுவுமே பாக்கி இல்லை. பயப்பட எனக்கு நேரமும் இல்லை. தரையில் விழுந்ததுமே இமாமின் கைகளில் மாட்டி கொண்டேன்.

முன்னிலும் அதிக வெறி கொள்ளும் நிலையில் அவர் இருந்தார் என்றால், இந்த வாய்ப்பை அவர் நழுவ விடவில்லை என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். காளையின் கால்களைக் கட்டுவதற்காக முந்திய இரவு எனக்குக் கொடுத்திருந்த கயிற்றை எடுத்து எட்டாக மடித்து என்னைக் கண்தலை தெரியாமல் விளாறத் தொடங்கினார் அவர். கடைசியில் அவருக்கும் மூச்சு முட்டிவிட்டது போலும். எய்த்து இரைத்தவாறு அடிப்பதை நிறுத்தினார்.

நான் அழைப்புக்காகக் காத்திருக்கவில்லை. தாவிக் குதித்து மறுபடி ஏணியை நோக்கிப் பாய்ந்தேன். எப்படியோ தத்தித் தாவி ஏறி முகட்டை அடைந்து ஒட்டமெடுத்தேன். என் நற்காலம், பெரும்பாலான அக்கம்பக்க வீடுகளின் முகடுகள் ஒன்றையொன்று நெருங்கியிருந்தன. திரும்பிப் பார்த்தேன். இமாமும் மேலே ஏறி என்னை விரட்டிக் கொண்டு வரக் கண்டேன். குடல் தெறிக்க ஒடினேன். சில இடங்களில் குறுகிய இடை வெளிகள் குறுக்கிட்டன. நானோ துரத்தப்படும் கோழிபோல அவற்றைத் தாண்டி, மேலே ஒடினேன். இமாமுக்கும் எனக்கும் நடுவே சில முகடுகளே இருந்தன. என் நற்காலம், தளரக் கட்டியிருந்த அவருடைய சராய் ஒட்டத்தில் நெகிழ்ந்து நழுவத் தொடங்கிற்று, இது அவர் கால்களுக்குத் தளை பூட்டியது. நான் மறுபடி திரும்பிப் பார்த்தபோது அவர் மட்டுமீறி இரையெடுத்த தாரா போலத் தத்தக்க பித்தக்க என்று ஒடி வந்து கொண்டிருந்தார். முடிவில் அவர் நின்று விட்டார். ஆயினும் என் விமோசனம் இன்னமும் தொலைவிலேயே இருந்தது, ஏனெனில் எங்கள் ஒட்டத்தின் சத்தத்தால் ஈர்க்கப்பட குடியிருப்புவாசிகள் பலர் இங்கும் அங்கும் தென்படலாயினர். என் தேற்றம் மிகவும் சந்தேகிக்கத் தக்கதாக இருந்தது. அறுபட்ட கழுதையின் இரத்தம் என் மேல் காலெல்லாம் தெளித்திருந்தது என்பதை மறந்து விடாதீர்கள். அடிப்பட்டதும் விழுந்ததும் என் அழகை அதிகப்படுத்விடவில்லை. மேலெல்லாம் புழுதி; அழுக்கு, இரத்தக் கறைகள், கிழிந்து தொங்கிய உடை... நான் சுற்று முற்றும் பார்வை செலுத்தி, அபாயமற்ற திக்கைத் தெரிந்தெடுத்து ஒர் அடி முன்னே வைத்தவன்... எங்கோ பாதாளத்தில் விழுந்துவிட்டேன்!

நிதானத்துக்கும் வந்ததும், இது ஒரு சமையறைக் காளவாய் அடுப்பின் புகைபோக்கி என்று கண்டுகொண்டேன். புகைபோக்கி செங்குத்தாக மேலே சென்றது. நான் நேரே அதற்குள் இறங்கி அடுப்பருகே விழுந்துவிட்டேன். கால்களை மடக்கி மார்போடு சேர்த்தவாறு உருண்டையாக அங்கே சிக்கிக் கொண்டேன். அடுப்பில் உட்புறம் பந்துபோல உருண்டையானது. அங்கே, முகட்டின் மேல் என்னை விரட்டியவர்கள் போன சுவடு தெரியமல் மறைந்துவிட்டதைக் கண்டதும் ஒரேயடியாகப் பேயறைந்தவர்கள் போல நின்று விட்டார்கள். ஏதோ கெட்ட ஆவிதான் தங்களுக்குத் தோற்றம் அளித்திருக்கிறது என்று அவர்களுக்கு உறுதிப்பட்டுவிட்டது. உயிர்த்து எழுந்த மரித்தவன் என்றா, புனித யேசு என்றா, காஃப் மலையிலிருந்து குறுகிய விடுமுறையில் வந்த அப்துரஹ்மான்-பரீயின் படைவீரர்களில் ஒருவன் என்றா, என்னை யார் என்று அவர்கள் நினைத்தார்களோ அறியேன். ‘‘ஆண்டவனே, காப்பாற்று!’’ ‘‘கடவளே, இந்தப் பேயை விரட்டு!’’ என்று ஒலமிட்டு முகடுகள்மேலிருந்து வீட்டு முகப்புகளில் அவர்கள் திரும்பக் குதித்தது மட்டுமே எனக்குக் கேட்டது.

எனது எதிர்பாராச் சிறையிலிருந்து விடுபட முயன்றேன். என் இடது கை விலாவுடன் நசுங்கிச் செயலற்றுக் கிடந்தது. வலது கையை மட்டுமே நான் ஒரளவு அசைக்க முடிந்தது. ஆனால் அதனால் பயன் எதுவும் இல்லை—நீண்ட நேர முயற்சிக்குப் பின் நான் வலது கையை முழுவதும் விடுவித்துக் கொண்ட பிறகுங்கூட. உடம்பைக் கொஞ்சங்கூட நிமிர்த்த என்னால் முடியவில்லை. இவ்வாறு செய்வதற்குத் தலையைத் துண்டாக அப்பால் எடுத்து வைப்பது அவசிமாயிருந்தது. தலை இன்னும் எனக்குப் பயன் படலாம் என்று நினைத்தேன். உடம்பை நேராக்காமல் ஒரு காலையாவது உடலின் அடியிலிருந்து விடுவிப்பது நடவாது. காலை விடுவித்துக் கொள்ளாமலோ, வெளியேற முயலவே முடியாது. யாரிடமிருந்தாவது உதவி கிடைக்கும் என்றும் எண்ணுவது வீண். மாறாக, என் நல்ல காலம் தான் சமையலறை வெறுமையாய் இருந்தது. நான் செய்யக்கூடியது எல்லாம் இருட்டும்வரை காத்திருப்பதுதான். அப்போது அக்கம் பக்கத்தில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அடுப்பின் விளிம்பை உடைக்க அப்பொழுது முயல வேண்டும். நான் வெளியேறுவதற்கான ஒரே வழி இதுவே.

சமையலறையில் இருள் சூழ்ந்தது. வெளியே அப்போதுதான் மாலை மங்கும் நேரமாயிருக்கும். புகை போக்கி அடியில் உடலை அசைக்க முடியாமல் பட்ட சித்திரவதையால் முடிவில் நான் பொறுமை இழந்தேன். போதாக் குறைக்குப் பசியும் தாகமும் வேறு என்னை வாட்டி எடுத்தன. அடுப்பு விளிம்புச் சுவரை உடைப்பது என்று தீர்மானித்தேன். அந்த வேளையில் சமையறைக் கதவு அன்று முதல் தடவையாகத் திறந்தது. எவளோ ஒரு மாது உள்ளே வந்தாள். எனக்கு அருகில் சிறு அடுப்பை அவள் மூட்டினாள். அவள் வேலையில் முனைந்திருந்த போது நான் அருகிலிருந்த காளவாய் அடுப்பின் மூடியை—அதை நான் முன்பே கவனித்து வைத்திருந்தேன்—வலது கையால் எடுத்து என் சிறையின் திறப்பை மூடினேன். பெண்பிள்ளை எதையும் கவனிக்கவில்லை. நானோ, உடம்பெல்லாம் நடுங்க, நெஞ்சு பதற்றத்தால் படபடக்க, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த துணி வியாபாரி கரீம்கரா வீட்டுச் சுவர்க்கடிகாரத்தை விட உரக்க அடித்துக் கொண்டது என் இதயம். அந்த மாதுக்கு அது எப்படிக் காதில் படாமல் போயிற்றோ ஆச்சரியந்தான். ஆனால் அவள் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள், அதோடு மெல்லிய குரலில் பாடிக் கொண்டும் இருந்தாள்.

வாசனையிலிருந்தும் சமயறையில் கேட்ட ஒலிகளி லிருந்தும் அவள் உளுத்தம் பொங்கலோ அல்லது அது போன்ற ஏதோனுமோ சமைக்கிறாள் என்று ஊகித்தேன். முதலில் என்னை அம்புபோல் துளைத்தது பொரித்த வெங்காயத்தின் மணம். பிறகு மசாலைத் தாளிதத்துடன் வதங்கிய இறைச்சி பாத்திரத்தில் சீறியது. மொட்டு போலக் கூம்பியிருந்த என் பசி இப்போது செழித்து வளர்ந்த ரோஜாப்பூ போல மலர்ந்துவிட்டது. எனக்கோ இந்த ரோஜாவினால் கிடைத்தது எல்லாம் முட்கள் தாம். அப்புறம் அவள் பாத்திரத்தில் உளுந்தைக் கொட்டிய ஒசை கேட்டது... அட பாழும் உளுந்து! எங்கே தான் அது விளைந்ததோ, எந்தப் பாறைகளில் பயிராயிற்றோ, எவ்வளவு நேரந்தான் வேகும்! இதைச் சைத்தான் வாரிக் கொண்டு போக, அது மலர வேகவே மாட்டேன் என்றது. விட்டுக்காரி செட்டு பண்ணாமல் விறகுகளை மேலும் மேலும் செருகிக் கொண்டே போனாள். பக்கத்து அடுப்பின் சூடு கொஞ்சங் கொஞ்சமாக என் காளவாய் அடுப்புக்குப் பரவிற்று. விரைவில் என் வலது விலா நெருப்பாய்க் கொதிக்கலாயிற்று. கம்பியில் கோத்த இறைச்சித் துண்டு தணலில் வாட்டப்படும் போது என்ன பாடு படும் என்பதை நான் புரிந்து கொண்டேன் அப்பொழுது. என் உடம்பெல்லாம் மரத்துப் போயிருந்த படியால் என் கால்கள் வாட்டல் இறைச்சி கோத்த கம்பிகள் போலவும் அவற்றில் கோக்கப்பட்டு நான் வாட்டப்படுவது போலவும் எனக்குத் தோன்றியது. ஆனால் என் நிலைமையை விட இறைச்சியின் பாடு சுளுவானது, ஏனென்றால் அதன் ஒரு விலா வதங்கியதும் அது மறு பிறம் பிரட்டப்டும். என்னாலோ எது செய்தாலும் திரும்ப மட்டும் அறவே முடியவில்லை. சூடு என் கல்லீரல் வரை புகுந்துவிட்டது. நான் கத்த வாயெடுத்தேன். அதற்குள் பெண்பிள்ளை நாவைச் சப்புக் கொட்டியவாறு பொங்கலை ருசி பார்த்துவிட்டு, ‘‘தயாராகிவிட்டது’’ என்று சொல்லிக் கொண்டாள். நான் விழிகளில் நீர் மல்க அல்லாவுக்கு நன்றி செலுத்தினேன். வீட்டுக்காரி தணலை அடுப்பிலிருந்து அகற்றினாள். பொங்கலை இரண்டு பெரிய தாம்பாளங்களில் எடுத்துப் போட்டு, ஒரு தாம்பாளத்தைப் பாத்திரத்துக்குள் வைத்து மூடினாள், மற்றத் தாம்பாளத்துடன் வெளியேறினாள். அடுப்பு நெருப்பு அவிந்து. காளவாய் அடுப்புச் சுவர் சூடு தணியலாற்று. ஆனால் என் வயிற்றிலோ நெருப்பு ஸ்தெப்பிவெளி நெகிடிபோல மூண்டெரிந்தது. பெண்பிள்ளை வெளியே போனதும் நான் மூடியைத் திறந்து தாராளமாக மூச்சு விட்டேன். அப்புறம் பாத்திரத்தைக் கைநீட்டி எடுக்க முயன்றேன். என் முயற்சி பலிக்கவில்லை. கலவரமுடனும் வதைப்பட்டவாறும் மேற்கொண்டு நடப்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

கடைசியில் சமையலறைக் கதவு மறுபடி கிரீச்சிட்டது. யாரோ நுனிக் கால்களால் நடந்து அடுப்பை நோக்கி வந்தார்கள். நான் அப்படியே உறைந்து போனேன். ஆனால் வந்தவன்—அவன் ஆடவன்—காளவாய் அடுப்பின் மேல் அமைதியாக உட்கார்ந்து கொண்டு ஏதோ மெட்டைச் சீழ்க்கை அடிக்கலானான்.

சங்கீதம் அருமையானது தான், இல்லை என்று நான் சொல்லவில்லை. எனக்கும் சங்கீதம் மிகவும் பிடிக்கும், அதிலும் வயிறாரக் சாப்பிட்டபின். தெருவில் யாரேனும் பையன் முதுகில் சவாரி செய்யும் போது சில வேளைகளில் எனக்கே பாட விருப்பம் உண்டாகும். சீழ்க்கை அடிப்பதும் சில சமயங்களில் பயனுள்ளது. உதாரணமாக, தாயாரால் இளைய குதுந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டுக்குள் அடைப்பட்டிருக்கும் தோழனை அழைப்பதற்கு அது உதவும். வெற்றாய் இருப்பதன் காரணமாகவே வயிறு இராணுவ அணிவகுப்பில் வாத்தியக் கோஷ்டிபோல இசைத்துக் கொண்டிருக்கும் போது எவனோ அயலானின் துடுக்கான சீழ்க்கையைக் கேட்பதில் என்ன இன்பம் ஏற்பட முடியும்? அதிலும் அந்தப் பாழாய்ப்போகிற துடுக்கன் நம் தலைமேல் போல ஏறி உட்கார்ந்து, நம் மூக்குக்கு முன்னே கால்களை ஆட்டுகையில் அவனுடைய சீழ்க்கையைக் கேட்க வேண்டும். போலத்தான் இருக்குமோ?... வேறு வழி இல்லாமையால் நான் இதை எல்லாம் விருப்பின்றியே சகித்துக் கொண்டு ஒசை காட்டாமல் குந்தியிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து முந்திய மாது வந்தாள்—காலடி ஒசையிலிருந்து அவளை நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். அவளும் அடுப்பை நோக்கி வந்தாள். என் தலைக்குச் சுமார் இரண்டு அடி மேலே உதடுகளை சப்புக்கொட்டும் ஒலி கேட்டது. அவர்கள் முத்தம் இட்டுக் கொண்டார்கள் போலிருக்கிறது.

‘‘ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேனோ?’’ என்று இனிமை சொட்டவினவினாள் பெண்பிள்ளை. அவள் குரலில் இருந்த இனிப்பை முட்டை ஹல்வாவில் கலந்தால் சர்க்கரையே தேவைப்படாது, அப்படித் தேன் கசிந்தது அதில். ‘‘ஆனால் என் கணவன்’’ என்று பேச்சைத் தொடர்கையில் இனிய ஷர்பத்தில் இறைச்சிக் குழம்பு சிந்திவிட்டது போல அவள் குரல் சட்டென மாறியது. ‘‘என் கணவன்—அவன் நாசமாய்ப் போக—பேரேடுகளை வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்துவிட்டான்—ஏதோ வேறு நேரமே கிடையாது போல கணக்குச் சீட்டுகளை மறுபடி மறுபடி கூட்டிச் சரிபார்த்தான். இதற்கு முடிவே வராது என்று நினைத்தேன்! அரும்பாடு பட்டு அவனை உறங்கப் பண்ணினேன், அப்புறம்...’’

‘‘அட பரவாயில்லை, என் கண்ணே’’ என்று அவள் பேச்சை இடைமறித்தான் ஆடவன். ‘‘ஒன்றை மட்டும் நீ கவனி. அவன் நம்மைச் சந்தேகிக்கிறானா என்று பார், ஊம்? ஒரு வேளை நீ வாய் தவறி ஏதோனும் சொல்லிவிட்டாயோ? இன்றைக்கு நான் மூன்று கோப்பெக்குப் பொடி வாங்க அவன் கடைக்கு வந்தேன். என்ன செய்தான் தெரியுமோ? ஒநாய் போல என்னை வெறித்துப் பார்த்தான், என் பொடிச் சிமிழில் பாதிகூட நிரம்பாதபடி அவ்வளவு கொஞ்சமாகப் போட்டான்! மற்றக் கடைகளிலோ, மூன்று கோப்பெக்குக்குச் சிமிழ் நிறையப் பொடி தருகிறார்கள்.’’

‘‘இல்லை, பொதுவாகவே அவன் பேராசைக்காரன், நீங்கள் நம்பவே மாட்டீர்கள், அவ்வளவு கருமி. பணந்தான் அவனுக்கு எல்லாம். என்னை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தனக்கு மனைவி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவனுக்கு ஒன்றுதான்...’’

‘‘அட தொலைகிறான், அவனைச் சைத்தான் பிடித்து ஆட்ட. சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?’’

காரியக்காரன் இந்த ஆள், ஆடவனுக்கு எது முக்கியம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று பொறாமையுடன் எண்ணினேன். வீட்டுக்காரி பரபரத்தாள், பாத்திரத்தைத் திறந்து வெள்ளைத் தட்டில் மீன் போல உளுத்தம் பொங்கல் தாம்பாளத்தை வெளியே எடுத்தாள். ஆடவன் ஆவலுடன் அதன் மேல் பாய்ந்தான். காளவாய் அடுப்பு மேலிருந்து இறங்கி, சிற்றடுப்புக்கு முன்னே மண்டியிட்டு உட்கார்ந்தான். தாம்பாளம் இப்போது நேரே என் எதிரே இருந்தது. ஆடவன் அவுக்கு அவுக்கென்று பொங்கலை விழுங்கலானான். பெண்பிள்ளையோ கோழிபோல லேசாகக் கொத்த மட்டுமே செய்தாள். இறைச்சித் துண்டுகளை ஆடவன் முன்னே நகர்த்துவதும் பலவிதக் காதல் மொழிகள் பகர்வதுமாக இருந்தாள். ஆடவன் சுருக்கமாகப் பதிலளித்தான்—அவன் வாய்தான் பொங்கலால் நிறைந்திருந்ததே.

இனி இதைத் தாங்க முடியாது என்று உணர்ந்தேன். காளவாய் அடுப்பிலிருந்து கையை வெளியே எடுத்துத் தாம்பாளத்தில் நீட்டினேன். அப்போது ஆடவன் பெண் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவளும் அவனை நோக்கிக் கொண்டிருந்தாள் என்று சொல்லவே வேண்டாம். தாம்பாளத்திலிருந்து அள்ளிய பொங்கலை நான் ஒசையின்றி, அவக்கையால் மூச்சுத் திணற விழுங்கிவிட்டு மறுபடி கையை வெளியே நீட்டினேன். இம்முறையும் ஒருவரும் இதைக் கவனிக்கவில்லை. ஆனால் தாம்பாளம் காலியாகத் தொடங்கிற்று. ஆடவன் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் சமாளித்துக் கொண்டிருந்தான் ஆயினும், கடைக்கண்ணால் எதையோ நோட்டமிட்டுவிட்டான் போலிருக்கிறது.

‘‘இந்தா, உன் கை எங்கே?’’ என்று கலவரத்துடன் காதலியிடம் கோட்டான்.

‘‘இதோ’’ என்று உடனே நீட்டினாள் காதலி.

காதலன் உற்றுப் பார்த்தான். ஆனால் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை போலிருக்கிறது. நான் அசையாதிருந்தேன். ஆடவன் முன்னிலும் விரைவாகச் சாப்பிடுவதில் முனைந்தான். இதோ தாம்பாளம் அறவே காலியாகிவிடும் என்று நான் புரிந்து கொண்டேன். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நொடி நேர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மறுபடி தாம்பாளத்தில் கையை விட்டேன். ஆனால் ஆடவன் விழிப்பாய் இருந்தான். அவன் என் கையை லபக்கென்று பிடித்துக் கொண்டு, ‘‘இந்தா, பொறு! இது யாருடைய கை? எங்கே? இது என் கை, இது உன் கை. அப்படியானால் இந்தக் கை யாருடையது?’’ என்று சீறினான்.

பெண்பிள்ளை விலவிலத்துப் போனாள். என்றாலும் வாய்க்குள் தேம்பினாள். அவர்களுக்குள் சொந்த விவாரங்கள் மட்டும் இல்லாதிருந்தால் நான் இறுதித் தொழுகை படிக்க நேர்ந்திருக்கும். இப்போதோ, எனக்கு அச்சமே உண்டாகவில்லை. ஆடவன் என் கையை இழுத்து என்னைக் காளவாய் அடுப்புக்கு உள்ளிருந்து வெளியேற்ற முயன்றான். எனக்குக் கொடிய வலி உண்டாயிற்று. ஆனாலும் பேசாதிருந்தேன். நான் விரும்பிய விடுதலை முடிவில் கிடைத்தது! என் முதுகந்தண்டு இரண்டு தரம் உரக்கச் சடசடத்தது. காளவாய் அடுப்புச் சுவர் விளிம்பு பெயர்ந்து விழுந்தது. அப்புறம் நான் வெளி வந்துவிட்டேன். கால்கள் மரத்துப் போயிருந்ததால் நிற்பதே எனக்கு அரும்பாடாய் இருந்தது. இந்த ஆள் என் உடம்பைக் கொஞ்சம் பிடித்து விடவும் செய்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

‘‘நெருப்புப் பெட்டி இருக்கிறதா?’’ என்று என் கையை விடாமலே பெண்பிள்ளையிடம் கேட்டான் அவன்.

அவள் நடுங்கும் கைகளால் உள் சட்டையைத் தொட்டுத் தடவி, நெருப்புப் பெட்டியை எடுத்து ஒரு குச்சியைக் கிழித்தாள். அக்கணமே வீரிட்டு, குச்சியை நழுவவிட்டுவிட்டாள். அவர்கள் என்னை நல்ல பகலில் பார்த்திருந்தாலே அரண்டு போயிருப்பார்கள். இருட்டிலோ, அவர்களுக்குச் சரியான கிலி பிடித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்: என் கந்தல் உடைகள் உலர்ந்த இரத்தக் கறையும் அழுக்கும் படிந்திருந்தன. போதாக்குறைக்குப் புகைக் கரி அப்பி நான் நீக்ரோ போலக் கறுத்திருந்தேன். கெட்ட ஆவிகள் வேறு விதமாகத் தோற்றம் அளிக்க முடியும் என்றால் ஆடவன் துணிவுள்ளவன். தீப் பெட்டியைக் காதலியிடமிருந்து வாங்கி ஒரு குச்சியைக் கிழித்தான்.

‘‘யார் நீ?’’ என்று கேட்டான்.

வந்தது வரட்டும் என்று நான் துணிந்துவிட்டேன்.

‘‘நீ யாராம்?’’ என்று பதிலுக்குக் கேட்டேன்.

‘‘கேட்டதற்குப் பதில் சொல்!’’

‘‘நீ சொல்லு கேட்டதற்குப் பதில்!’’

‘‘இந்தா, அப்பனே, உயிர் தப்பும் நம்பிக்கை இன்னும் இருக்கிறதா உனக்கு?’’

‘‘உனக்கு இருக்கிறதா உயிர் தப்பும் நம்பிக்கை?’’

‘‘அட கடவுளே!’’

‘‘அட கடவுளே!’’

பெண்பிள்ளை எங்கள் பேச்சில் குறுக்கிட்டாள்.

‘‘கேள், அன்பே. யார் நீ? காளவாய் அடுப்பில் என்ன செய்து கொண்டிருந்தாய்? ஒருவேளை நீ... கெட்ட ஆவியோ? அல்லது... கிறுக்கனோ? கோபித்துக் கொள்ளாதே. இருண்ட இரவில் பிறத்தியார் அடுப்பில் ஏன் புகுந்தாய்?’’ என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.

‘‘இவன் மட்டும் எதற்காக இரவில் பிறத்தியார் அடுப்பில் புகுந்தானாம்? ஊம்?’’

ஆடவன் நெருப்புப் பெட்டியை எறிந்து விட்டுச் சட்டைக் கைகளை உறுதியுடன் மடக்கிவிட்டுக் கொள்வதை நான் கண்டேன். வெட்டுவதற்காக ஆடு மாடுகள் கொண்டுவரப்பட்டதும் கசாப்புக்காரான் இப்படித்தான் செய்வது வழக்கம். நான் பழைய தந்திரத்தைக் கையாண்டேன்.

‘‘காப்பாற்றுங்கள்!’’

‘‘நீ என்ன செய்ய நினைக்கிறாய்?’’ என்று சட்டென என் வாயைப் பொத்தினாள் பெண்பிள்ளை.

‘‘நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? உதவிக்கு ஆட்களை அழைக்கிறேன்.’’

இதைக் கேட்டதும் இளைஞன் சமாதானத்துக்கு வர முடிவு செய்தான்.

‘‘சரி, கிடக்கிறது. நல்லபடியாயப் போய்விடு. நட வெளியே!’’ என்றான்.

‘‘நான் எங்கே போவதாம்? எனக்குப் பசிக்கிறது.’’

‘‘காலைச் சுற்றிக்கொண்டுவிட்டான், பாம்புப் பயல்’’ என்று சிடுசிடுத் தான் ஆடவன். பெண்பிள்ளை ஒரு வார்த்தை பேசாமல் சமையல் அறைக்கு வெளியே போய், பொரித்த கொழுப்புத் துண்டுகள் வைத்த இரண்டு மெல்லிய ரொட்டிகளுடன் அரை நொடியில் திரும்பினாள். நான் ரொட்டிகளைக் கைக்கடியில் இடுக்கிக் கொண்டேன்.

‘’இப்போது ஒழி இங்கிருந்து’’ என்றன் ஆடவன்.

‘’ஆ, அது தான் மாட்டேன். முதலில் கழற்று கொஞ்சம் பணம்!’’

அவன் இருட்டில் மூச்சுத் திணறச் செருமியதைக் கேட்டதும் வன்மத்தால் இவன் இதோ வெடித்துவிடுவான் என்று நினைத்தேன். பிறகு அவன் தணிந்த குரலில் நீண்ட வசை மாரி பொழிந்தான். இந்த வசைப் பொழிவில் அவன் தன் உளம் முழுவதையும் ஈடுபடுத்தியது தெரிந்தது. முடிவில் அவன் சட்டைப் பையில் கை விட்டு அதில் இருந்த பணத்தை வெளியே எடுத்தான். நான் அதை எண்ணமல் வாங்கி முடிந்து கொண்டேன். இதற்கு அப்புறந்தான் நான் வெளியேறத் திருவுளங் கொண்டேன். பெண்பிள்ளை என்னை வெளிவரை கொண்டு விட்டு, எல்லாவற்றையும் இரகசியமாக வைத்திருப்பேன் என்று மூன்று தரம் சத்தியம் செய்யச் சொன்னபின் விடை கொடுத்தாள். நான் உளமாரச் சத்தியம் செய்து கொடுத்தேன். வீதியில் சற்று தூரம் போனதும் முதலில் ரொட்டிகளைத்தின்றேன். பின்பு இருண்ட தெரு வழியே நடந்தேன். எங்கே இருக்கிறேம் என்றுதான் எனக்குத் தெரியவே தெரியாதே. ஒரு தெரு என்னை இன்னொரு தெருவில் கொண்டுவிட்டது. அது விசாலமான மைதானத்தில் கொண்டு சேர்த்தது. அது சந்தைத் திடல் போல் காணப்பட்டது, ஆனால் இப்போது அது வெறுமையாய் இருந்தது. நான் ஒரு மூலையில் படுத்து இரண்டு செங்கல்களைத் தலைக்குயரம் வைத்துக் கொண்டு அக்கணமே அகாதத்தில் விழுந்துவிட்டவன் போல உறக்கத்தில் ஆழ்ந்தேன்...

அந்தோ, இந்தப் பாழும் நகரத்தில் நான் எப்போதுமே துர்ப்பாக்கியத்தின் முகத்தில் தான் விழிக்க வேண்டும் என்பது விதி போலும். இரண்டே நாட்களுக்கள் அங்கே நான் பட நேர்ந்த துன்பங்கள்தாம் எத்தனை! இப்போது நினைத்துப் பார்க்கும் போது நம்பக்கூட முடியவில்லை! சுருங்கச் சொன்னால், விலாவில் யாரோ உதைக்கவே விழித்துக் கொண்டேன்...

விடிந்துவிட்டிருந்தது. கம்புகளும் கைகளுமாகச் சில ஆட்கள் என்னைச் சூழு நின்றார்கள்.

‘‘இது அவன் தான்!’’ என்று கத்தினான் ஒருவன்.

‘‘அவனே தான்!’’

‘‘ஆனால் ரொம்பச் சின்னவனாய் இருக்கிறானே!’’ என்று சந்தேகத்தைக் கிளப்பியது ஒரு குரல்.

‘‘அட நீ இவனை உற்றுப் பார்! அவனே தான்!’’

‘‘யார் இந்த அவன்?’’ என்று அழாக்குறையாகக் கேட்டேன் நான்.

ஆட்கள் என்னை மறுபடி உதைத்து எழுதிருக்கும்படிக் கட்டளையிட்டார்கள். நான் வெகு சிரமத்துடன் எழுந்தேன். என் உடம்பெல்லாம் ஒய்ந்து வந்தது. இதோ உடம்பு துண்டு துண்டாகச் சிதறி விழுந்துவிடும் என்று தோன்றியது. ஆட்கள் என் கைகளைப் பின்கட்டாகக் கட்டிச் சந்தை வழியே இழுத்துச் சென்றார்கள். கழிகளையும் சாட்டைகளையும் என் தலைக்கு மேலே ஒங்கி ஆட்டிக் கொண்டு நடந்தார்கள்.

‘‘எனக்கு அவமானம், நான் ஒர் ஆளைக் கொன்றுவிட்டேன்’ என்று கத்து!’’ எனப் பின்னாலிருந்து எவனோ உத்தரவிட்டான்.

நான் வாய் விட்டு அழுது புலம்பினேன்:

‘‘ஒருவனையும் நான் கொல்லவில்லை!’’

இதற்குள் ஜனங்கள் ஒடி வந்தார்கள். இரண்டு சிறுவர்கள் சிறு டமாரத்தில் கம்புகளால் அடித்துக் கூட்டம் சேர்த்தார்கள். இதோ உணர்வு இழந்து விடுவேன் என்று நினைத்தேன். பல நிற மேலங்கியும் மழித்த தலையில் குல்லாயும் அணிந்திருந்த ஒருவர் திடீரென்று கூட்டத்தின் நடுவிலிருந்து வெளியே வந்தார்.

“முஸல்மான்களே! இவ்வளவு சின்னப் பையனால் கொலையுண்ட வெளியூர்க்காரர் போன்ற அவ்வளவு பெருத்த மனிதரைக் கொலை செய்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறார்களா? அதிலும் எங்கே, சாயாக் கடையில்! இவன் இன்னும் பச்சைப் பாலகன்! இவன் கொலைகாரர்களின் கூட்டாளியாய் இருந்தால், இநத்க் கோலத்தில் இவனை அவர்கள் இங்கே விட்டிருக்க மாட்டார்கள்... ” என்று சொல்லிக் கொண்டுபோனார் அந்த மனிதர்.

கூட்டம் ஆமோதிக்கும் பாவனையில் சளசளத்தது. என்னைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மௌமாய் இருந்தார்கள்.

அந்த நல்லவர் பேச்சைத் தொடர்ந்தார், “இந்தப் பையன் இத்தகைய கோலத்தில் இருப்பதற்கும் காரணம் தெளிவாய் இருக்கிறது. இவன் நோயாளி, வலிப்பு வியாதிக்காரன். வலிப்பில் இந்த மாதிரி உடம்பெல்லாம் காயப்படுத்தக் கொண்டிருக்கிறான்... இந்த மாதிரிப் பயலைக் கூட்டாளியாக எந்தத் திருடன் தான் வைத்துக்கொள்வான்? திருடர்களுக்கு இரகசியங்கள் உண்டு. அரைப் பைத்தியமான இந்தப் பையனை நம்பி இரகசியங்களை ஒப்படைக்க எவன்தான் விரும்புவான்? நான் சொல்வது சரிதானே, முஸல்மான்களே? ”

“சரிதான்! சரிதான்! பையனை விட்டு விடுங்கள்! ” என்று கத்தினார்கள் கூட்டத்தினர்.

இதற்குள் இன்னும் ஒருவன் கூட்டத்தை இடித்து விலக்கிக் கொண்டு நடுவுக்கு வந்தான். அவன் முகம் எனக்குத் தெளிவாய்த் தெரியவில்லை, கண்ணீர் என் விழிகளை மறைத்தது. நான் உண்மையில் அழவில்லை, கண்ணீர் தானாகவே ஊற்றெடுத்துப் பெருகியது.

“அட இந்தப் பையன் யார் என்று நான் அறிவேன்! கசாப்புக்காரன் அஷூரின் மகன் இவன்! தன் மகன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகப் போன சந்தைநாளன்று அஷூர் சொன்னார்!”

“சரிதான்! பதினான்கு வயதுப் பையன் காணாமல் போய்விட்டதாக விளம்பரக்காரன் சந்தையில் அறிவித்ததை நானும் கேட்டேன்!”

“இவனை விடுங்கள்!”

என் தோளைப் பற்றியிருந்த கைகள் நெகிழ்ந்தன, சாக்கு மூட்டை போலத் தரையில் விழுந்தேன்...

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Thursday, 30 July 2009

குறும்பன் அத்தியாயம் 3: சந்தை

நான் கால் போன திக்கில் நடந்தேன். கால்கள் அடிக்கடி இங்கும் அங்கும் போயின ஆதலால் மண் வீடுகளின் வழிகளில் நான் நெடு நேரம் சுற்றிச் சுற்றி வந்தேன். முடிவில் நகரிலிருந்து நேரே வெளிச் செல்லும் சாலையை அடைந்தேன். அதற்குள் இருட்டலாயிற்று. சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த மரங்களின் நிழல்கள் ஒன்று கலந்தன. பகலில் அவை குளுமை தந்தன. இப்போதோ வெட்ட வெளியைக் காட்டிலும் மரங்களின் அடியில் அதிகப் புழுக்கமாய் இருந்தது. சாலை வெறுமை ஆயிற்று. நேரங்கடந்து எதிரெதிரே வந்த இரண்டு வண்டிகள் வசவுகளுடன் ஒன்றையொன்று விலகிச் சென்றன. யாரோ உழவன் நொண்டிக் கொண்டே அருகாகப் போனான். அவன் என்னை முந்திவிட்டான்—வீடு திரும்பும் அவசரம் போலும். நானும் இராத் தங்குவது பற்றி நினைக்க வேளை வந்துவிட்டது. அவ்வப்போது எவையேனும் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் சாலைவரை நீண்டிருக்கக் காணப்படும். அவற்றுக்குள் விருந்தோம்பல் இன்றிக் குலைக்கும் நாய்கள். வெட்ட வெளியிலேயே இரவைக் கழிக்கத் தீர்மானித்தேன். அங்கே உண்மையில் குளுமையாக இருந்தது. எனக்குச் சாப்பாடோ புறாக்களுக்கு இரையோ எடுத்து வரவில்லை என்பதை இப்போதுதான் நினைத்துக்கொண்டேன். காலைவரை பொறுத்திருக்க வேண்டும். அத்தையின் சூடான ரொட்டிகளையும் பாழாய்ப்போகிற பறவைகளுக்கு நான் ஊட்டிய தயிரையும்கூட வருத்தத்துடன் நினைவுகூர்ந்தேன். புறாக்களின் கூண்டை ஒரு புதருக்குள் நுழைத்தேன். பக்கத்திலேயே மேலங்கியை விரித்துப் படுத்தேன். விண்மீன்கள் பதித்த கரு வானம் எனக்கு நேர் மேலே பரந்திருந்தது. முதல் தடவையாக அது எனக்கு அவ்வளவு பெரிதாகத் தென்பட்டது. விண்மீன்களோ, எண்ணத் தொலையாதபடி அத்தனை நிறைய இருந்தன .அவற்றை எண்ண முயன்றவாறே உறங்கிப்போனேன்.

சூரியன் என்னை எழுப்பிற்று. அது அப்போதுதான் தொடுவானிலிருந்து கிளம்பி நேரே என் கண்களில் ஒளியைப் பாய்ச்சியது. படுக்கை கரடுமுரடாய் இருந்தபடியால் உடம்பு லேசாக வலித்தது. ஆனால் மூளை தெளிவாக, சுறு சுறுப்பாக இருந்தது. கசங்கிய மேலங்கியைப் போட்டுக்கொண்டு புறாக்கூண்டை எடுத்துக் கொண்டு மேலே வழி நடக்கலானேன்.

எவ்வளவு நேரம் இப்படி நடந்தேனோ தெரியாது, சாலைக்கு இடப் புறமும் வலப் புறமும் குடியிருப்பு வீடுகள் தென்படலாயின. அச்சாபாத் என்பது அந்தச் சிற்றூரின் பெயர் என அப்புறம் தெரிந்து கொண்டேன். நான் நின்று நிதானிப்பதற்குள் பல்வேறு வயதினரான அழுக்கடைந்த பையன்களின் கும்பல் ஒன்று எதிரே வரக் கண்டேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஏற இறங்க நோட்டமிட்டபடி என்னைப் பற்றிக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்தக் கருத்துக்கள் நட்புறவில் வெவ்வேறு தரமானவை. எனது மேலங்கியைப் பற்றிய பாராட்டுரையிலிருந்து தொடங்கி, அழையா இடத்துக்கு நான் போகாமல் இருக்கும் பொருட்டு என்னை அடித்து நொறுக்க வேண்டும் என்னும் யோசனையில் முடிந்தன அவை. அவர்கள் ஓர் இருபது பெயர். சிலர் என்னைப் போல ஒன்றரை மடங்கு உயரம். மற்றவர்கள் என் இடுப்புவரை வந்தார்கள்—இந்த மாதிரி நான்கு பெயரை ஒரே அறையில் வீழ்த்தி விடலாம். இப்போதோ இதைப்பற்றி எண்ணவே முடியாதிருந்தது.

எதிர்பாரா விதமாக அவர்களிடமிருந்து வந்தது வியாபார யோசனை.

“புறாக்களை விலைக்கு கொடு” என்று கட்டைக் குரலில் சொன்னான் எல்லாரிலும் உயரமான பையன். அவன்தான் அவர்களுடைய தலைவன் போலும் அவன் போட்டிருந்த செம்பழுப்புக் குல்லாய் கிட்டத்தட்ட நடுவரை கிழிந்திருந்தது. எனவே அவன் தலை தூரப்பார்வைக்கு வெடித்த முலாம்பழம் போல் இருந்தது.

“முடியாது. இவை விற்பதற்காக இல்லை” என்று கூடியவரை கண்டிப்பாகச் சொன்னேன்.

“ஆ, அப்படியா, விற்பதற்காக இல்லையோ?” என்று அடித்தொண்டையில் முழங்கினன் செம்பழுப்புக் குல்லாய். என்னைப் பதம் பார்ப்பதற்கு இப்போது வேளை வந்துவிட்டது என்பதுபோல வைரத்துடன் ஒலித்தது அவன் குரல். கும்பல் இன்னும் நெருக்கமாக என்னைச் சூழ்ந்தது. செம்பழுப்புக் குல்லாய் சற்று யோசித்துவிட்டு, “அப்படியானால் மாற்றகக்கொடு!” என்றன்.

“எதற்கு?” என்று கேட்டேன். என் உயிரைக் கூடியவரை உயர்ந்த விலைக்கே கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.

உடனே அவர்கள் உரக்கச் சளசளக்கத் தொடங்கி அவரவர் கைகளில் இருந்தவற்றை என் முன்னே நீட்டினார்கள். விலைமதிப்புள்ள பொருள் எதுவும் என் கண்ணில் படவில்லை. என்றலும் புறாக்களிடமிருந்தோ நான் எப்படியும் பிரிய வேண்டியிருந்தது (அவர்கள் அவற்றை என்னிடமிருந்து வெறுமே பிடுங்கிக் கொள்வார்கள் என்று உறுதியாக எண்ணினேன்), ஆகவே ஒன்றுமில்லாததைவிட இவை மேலாக இருந்தன. நிமிட நேரத்திற்கெல்லாம் அவர்கள் புறாக்களுடன் போய்விட்டார்கள். நானோ கைகள் நிறையப் பொருட் குவியலுடன் நின்றேன். கிராதி விளிம்புகள் மூன்று, மரக் கிலுகிலுப்பை ஒன்று, விளையாட்டுத் தொட்டிகள் இரண்டு, ஓட்டைவிழுந்த தம்பட்டம் ஒன்று,—இதன் தோலும் விளிம்பும் எதனாலோ செந்நிறம் பூசப்பட்டிருந்தன—மர மண்வெட்டி, சவைப்பதற்கேற்ற கந்தகம் இரண்டு துண்டுகள் முதலியவை அவற்றில் இருந்தன. இந்தப் பண்டமாற்றில் ஏமாந்தவன் நானோ, அவர்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் இப்போது என் சுமை அநேக மடங்கு கனமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. எல்லாவற்றையும் எப்படியோ ஒரு மூட்டையாகக் கட்டி முதுகின்மேல் போட்டுக் கொண்டு நான் மேலே நடந்து, வேறு எந்த நிகழ்ச்சிகளும் இன்றி அவ்வூரைக் கடந்து சென்றேன்.

ஊர்ப்புறத்தை ஒட்டியிருந்த மரங்கள் வெகு நேரத்துக்கு முன்பே பின் தங்கிவிட்டன. நாற்புறமும் விரிந்து பரந்திருந்தது நடு நடுவே திட்டுக்கள் கொண்ட வெளி. முட்புதர்கள் அதில் அடர்ந்திருந்தன. இங்கும் அங்கும் உவர் மண் மேடுகள் தென்பட்டன. என் கால்கள் புழுதியில் புதைந்தன. மேலேயோ, மதிய வெயில் பொசுக்கிற்று. பசியும் தாகமும் என்னை வாட்டி வதைத்தன. எது அதிகம் என்று எனக்கே தெரியவில்லை. தூரத்தில் தனி மரம் ஒன்று தென்பட்டது. நிழலைச் சீக்கிரம் அடைவதற்காக நான் முடிந்தவரை நடையை விரைவுபடுத்தினேன். மரத்தின் அருகே நான் நெருங்கிவிட்டபோது எதிர்ப்புறத்திலிருந்து அதே மரத்தை நோக்கி மண்வெட்டியும் தோளுமாக ஒர் உருவம் வரக் கண்டேன். அந்த உருவத்தில் ஏதோ எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. நாங்கள் இன்னும் கிட்டத்தில் வந்ததும்—என்ன ஆச்சரியம்!—அது என் நண்பன் அமன்பாய் என அடையாளம் தெரிந்து கொண்டேன். எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த அதே அமன்பாய். இவனுடைய தகப்பனார் துர்ஸீன்-பிச்சாக்சி தாமே தயாரித்த கத்திகளை விற்று வந்தார். நாங்கள் இருவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். வெக்கையையும் அலுப்பையும் மறந்து ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு ஒடினோம். அந்தப் பழைய ஜித் மரத்தின் அடியில் சந்தித்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமன்பாயை அவன் தகப்பனார் கிராமத்திலுள்ள உறவினர்களிடம் அனுப்பியிருந்தார்— அவனை நாட்கூலிவேலையில் அமர்த்தும்படி. இப்போது நாட்கூலி வேலை முடிந்துவிட்டது. அமன்பாய், சுமார் நான்கு மணங்கு எடையுள்ள மண்வெட்டியைத் தோளில் சுமந்தவாறு கால் நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான். நான் வீட்டை விட்டு ஒடிய சங்கதி எதுவும் அவனுக்குத் தெரியாது. கிராதி விளிம்புகளைக் கண்டதும், நானும் வராட்டி தட்டிக் கூலி வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பதாக நினைத்துவிட்டான். இருவரும் மரத்தடியில் உட்கார்தோம். நான் என் துன்பக் கதையை அவனுக்குக் கூறினேன்.

செய்திகள் பரிமாறிக் கொண்டபின், பட்டினியாய் இருப்பதை இருவரும் நினைவுபடுத்திக் கொண்டோம். சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அண்ணாந்து பார்த்தோம். ஆனால் அந்தோ, மரத்தில் பழங்களே இல்லை.

“இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் வகை போலிருக்கிறது. அடுத்த வருஷம் மறக்காமல் இங்கே வர வேண்டும்.” என்று நஞ்சு தோய்ந்த குரலில் சொன்னேன்.

“நல்ல முட்டாள் அடாநீ! இது ஸரத்தான் என்ற நாலாவது மாதம் ஆயிற்றே, மறந்து விட்டாயா? இந்த மாதத்தில் பழங்கள் மெக்காவுக்குப் போய்விடும், அங்கே அவற்றின் கொட்டைகள் ‘அலீப்’ என்ற முதல் எழுத்து பொறிக்கப்படும்! விரைவில் அவை திரும்பிவரும்” என்றான் அமன்.

அவன் சொன்னது உண்மைதான். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எங்களிடம் தின்பதற்கு எதுவும் இல்லை. என்னிடமோ அமனிடமோ உணவுப் பண்டம் ஒரு பொருக்குகூட இல்லை.

“கோக்-தெராக் இங்கிருந்து அப்படி ஒன்றும் ரொம்ப தூரம் இல்லை. அது பெரிய நகரம்... சந்தையும் அங்கே மிகப் பெரியது.” என்று தயக்கத்துடன் சொன்னான் அமன்.

“போவோமா?”

“நான் தான் வீட்டுக்குப் போகிறேனே...”

“போவோம்! என்னிடம் பணம் இருக்கிறது. தவிர எத்தனை சாமான்கள், பார். விற்போம்!” என்றேன்.

“என்னிடமுந்தான் பணம் இருக்கிறது. நான்தான் வேலை செய்து சம்பாதித்தேனே.”

“அதுதானே! போவோம் வா. நாளை வீடு திரும்பு! இல்லாவிட்டால்... என்னுடன் வாயேன், ஊம்?”

அமன் பேசாதிருந்தான். அவன் மனதுக்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் யோசனை அவனுக்குக் கவர்ச்சி உள்ளதாகப் பட்டது. வருங்காலப் பயணம் பற்றியும் எங்களுக்கு நேரவிருக்கும் வளமான வாய்ப்புக்கள் பற்றியும் நான் பிரமாதமாக வருணித்தேன். எப்போதாவது என்னை ஒரக் கண்ணால் பார்த்தபடி அவன் காது கொடுத்துக் கேட்டான். பின்பு திடீரொன்று துள்ளிக் குதித்தான்.


“ஆகா, சரி! கொடு கையை! சத்தியம் செய், எல்லாம் ஆளுக்குப் பாதி, ஊம்?” என்றான்.

நான் சந்தோஷமாகச் சத்தியம் செய்தேன்.

இருவரும் சாமான்களை ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொண்டோம். பணத்தையும் கணக்கிட்டுப் பாகம் பிரித்துக் கொண்டோம் (நான் அமனை விடப் பணக்காரனாய் இருந்தேன். நாட்கூலி வேலையில் அவன் சம்பாதித்தது எல்லாம் சற்றுக் குறைய ஒரு தன்கா தான்). பின்பு நடக்கலானோம். பொழுது சாய்வதற்குள் கோக்-தெராக் நகரை அடைந்து சாயாக் கடையில் தங்கினோம். அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை. சந்தை கூடும் நாள். காலையில் சந்தைக்குப் புறப்பட்டோம்.

சந்தை என்றால் அதுதான் சந்தை, மெய்யாகவே சொல்லுகிறேன்! அடே அப்பா! சந்தைகளுக்கெல்லாம் சந்தை இது! ஈரானிலோ தூரானிலோ, மெக்காவிலோ மெதீனாவிலோ, மைமானாவிலோ மைஸாராவிலோ, இஸ்தாம்புலிலோ மஸான்தரானிலோ, கீழேயோ மேலேயோ, வலப் புறமோ இடப்புறமோ, எங்குமே இந்த மாதிரிச் சந்தையைக் காண ஒருவனுக்கு வாய்க்காது. இங்கே கடை வரிசைகள் எத்தனை, சரக்குகள் எவ்வளவு, சந்தைக்கு வந்த மக்கள்தாம் எத்தனை வகைவகையானவர்கள் என்பதை எல்லாம் வருணித்து மாளாது. வியாபாரிகளின் முகங்கள்தாம் எவ்வளவு தந்திரம் நிறைந்தவை— உலகம் முழுவதையும் அவர்கள் ஏற்கனவே ஏய்த்துப் பழகிவிட்டகள் போல! அப்புறம் அவர்களுடைய உடைகள்! வானவில்லின் எல்லா நிறங்களும், ஒவ்வொரு நிறத்துக்கும் இரண்டிரண்டு பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் போல் இருந்த வண்ணச் சாயல்களும் அந்த உடைகளில் காணப்பட்டன. ஒவ்வொரு வண்ணச் சாயலுக்கும் என்ன பெயர் கொடுப்பது என்றே தெரியவில்லை, அத்தனை விதம் விதமானவை! கண்களில் பல நிறங்களும் ஒளியும் பளிச்சிட்டன. காதுகளில் ஹோவென்ற இரைச்சலும் கணகணப்பும் தடதடப்பும்—பயங்கர வழக்கு விசாரணைக்குப் பின் மக்கள் திரள் கலைந்துபோவது போல. தீர்க்கதரிசிகள் வரலாறு என்ற நூலிலோ மந்திர வித்தைக்காரி என்ற கதையிலோ இம்மாதிரிச் சந்தை வருணிக்கப்படவில்லை. இதுபோன்ற சந்தை உலகில் எங்குமே இதற்கு முன் கூடியது கிடையாது.

வாருங்களேன், எல்லாவற்றையும் வரிசையாகப் பார்வையிடுவோம்! இதோ வாசனைச் சாமான்கள், சில்லறைச் சாமான் கடைகளின் வரிசை வியாபாரிகள் தங்கள் சரக்குகளைத் தரைமேலேயே பரப்பி வைத்திருந்தார்கள். பழஞ் சாக்குகள், முரட்டு இரத்தினக் கம்பளங்கள், கைத்தறித்துணித் துண்டுகள், சிவப்பு, நீல, பச்சைத் துண்த்துண்டுகள், எல்லவற்றையும் ஒட்டுச் சேர்த்துத் தைத்துப் பந்தல்கள் அமைத்துக் கொண்டிந்தார்கள் அவர்கள். உங்களுக்கு என்ன என்ன வாங்க ஆசையோ, உலகம் படைக்கப் பட்ட நாள் தொடங்கி இன்றுவரை அழகுச் சாதனங்களும் வாசனைப் பொருள்களும் தயாரிப்பவர்கள் என்னவெல்லாம் தயாரித்தார்களோ அவை எல்லாம் இங்கே வாங்கலாம். பேன்களையும் தேள்ளுப் பூச்சிகளையும் ஒழிப்பதற்கான பாதரசக் களிம்பு வேண்டுமா? கொழுப்பைப் பாதரசத்துடன் கலந்து அரைத்துத் தயாரித்ததாம் இந்தக் களிம்பு. அல்லது சொறியைக் குணப்படுத்தும் இந்தாவு எண்ணெய் வேண்டுமா? இஞ்சி, பேதி இலை, அல்லது அக்கோனீத் என்னும் நச்சுச் செடியின் இலை தேவையா? அல்லது கண்படாமல் காப்பதற்கான வெண் புள்ளிகள் கொண்ட கரு மணி மாலை வேண்டுமா? அல்லது வயிற்று வலி மருந்து உருண்டைகள் வேண்டுமா? பஞ்சு வைத்த போர்வை தைப்பதற்கான பரு ஊசியோ, தாடி சீப்போ, காற்சட்டைகளின் உள்ளே கொடுத்துத் தைப்பதற்கேற்ற நாடாக்களோ வேண்டுமா? அல்லது “ஹலீலான்- ஜங்” என்னும் மருந்துப் பூண்டு வேண்டுமா? (இந்தப் பூண்டு எந்த நோயைக் குணப்படுத்துமோ தெரியாது. ஆனால் உங்களுக்கு என்ன வியாதி என்பது தெரியாவிட்டல் இதுதான் ஏற்ற மருந்து) எல்லா விதக் காயங்களுக்கும் கடடிகளுக்கும் போடத் தக்க மருந்துப் பிளாஸ்திரி, புஹாரச் சவையல் கந்தகம், கிரம்பு, மருந்து பக்வீட்—எது வேண்டுமோ கிடைக்கும் இங்கே. ஆண்டுதோறும் கூடும் புகழ் பெற்ற சைபீரிய இர்பீத் சந்தை கெட்டது போங்கள்!

இந்தப் பொருள்களை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி அழகாகப் பரப்பி வைத்திருப்பவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதுதான் நாம் செய்ய வேண்டியது...

இதோ இன்னெரு கடை வரிசை. ஒரு புறம் குயவர்கள். மறு புறம் சோப்பு விற்பவர்கள். குயவர்கள் கடைகளில் சுட்ட களிமண்ணல் செய்த அழகு அழகான பாத்திரங்கள் பெரும் பெரும் குடும்பங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. குடங்கள், கலயங்கள், கோப்பைகள், தட்டுகள் முதலியவை. ஒவ்வொரு வகைப் பாத்திரங்களும் இரட்டைப் பிள்ளைகள் அல்லது அடுத்தடுத்துப் பிறந்த சகோதாரர்கள் போல் ஒன்றையொறு ஒத்திருக்கின்றன. உங்களுக்குப் பெரிய பேஸின் வேண்டுமா அல்லது சின்னஞ் சிறு பேஸின? அல்லது பிரமாண்டமான சால் வேண்டுமோ? இதோ, இப்போதுதான் சூளையிலிருந்து எடுத்தது.பாலைப் பிரை குத்துவதற்கேற்ற தயிர்க் கலயம் வேண்டுமா? அல்லது நீண்ட குறுங்கழுத்துள்ள கூஜா வேண்டுமா? இவை எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஒரே ஆவலாய்க் காத்திருக்கின்றன. சுண்டிப் பாருங்கள், களி பொங்கக் கணீர் என ஒலிக்கும்.

சோப்புக் கடைகளில் வட்டச் சோப்பும் “யஹ்னக்” ரகச் சோப்புக்களும் மேழுகு வத்திகளும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. கடைக்காரக்ளுக்கு முன் தொங்கு பைகளில் காய்ச்சிக் கட்டியாக்கிய கொழுப்புத் துண்டுகளும் மிருகங்களின் உள்ளுறுப்புக்களும் நிறைத்து வைத்திருக்கின்றன. ஆயிர மாயிரம் பச்சை ஈக்கள் ஙொய்யென்று மொய்க்கின்றன. இங்கே ஒரு ராத்தல் சோப்பு வாங்க வேண்டும் என்றல் முதலில் மூக்கைக் கைக்குட்டையால் கட்டிக் கொள்ள வேண்டும் அல்லது சட்டைக் கைக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். சில சோப்புக் கடைக்கரர்கள் வாங்குபவர்களை உபசரிப்பதற்காகத் தேநீர்க் கோப்பையும் ரொட்டியும் கைகளில் வைத்துக் கொண்டு நிற்கிறர்கள். ஆனால் இங்கே தேநீராவது ரொட்டியாவது! ஏற்கனவே சாப்பிட்டது வாந்தியாக வெளியேறிவிடமல் வயிற்றில் தங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம். என்னைக் கேட்டால், கெட்டுப்போன கறிப்பொங்கல் போலக் கடுமையாக அடிக்கும் இந்தக் கவிச்சை முகர்வதைவிட ஆயுள் முழுவதும் சோப்பே இல்லாமல் இருப்பது மேல் என்பேன்.

ஆனால் இவை சந்தையின் புகழ்பெற்ற கடை வரிசைகள் அல்ல. “பீத் பஜார்”—அதாவது “பேன்பிடித்த சந்தை”—உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றது. நமக்கு வேண்டியது, வேண்டாதது எல்லாமே இங்கே கிடைக்கும். இராணுவக் காற்சட்டைகள், ஒன்றுக்கொன்று பொருந்தாத தடித்தோல் ஜோடுகள், பஞ்சு வைத்துத் தைத்த பருத்த மேலங்கிகள் (ஏழே ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை. ஒரே கஷ்டம் என்ன என்றல் அவை எந்தத் துணியில் தைத்தவை என்று இப்போது கண்டுபிடிக்க முடியாது!) குல்லாய் (ஒரு வகையில் மிகவும் மதிப்புயர்ந்த குல்லாய். ஏனென்றல், வயதைக் கொண்டு பார்த்தால் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே உள்ள பிரதேசம் முழுவதிலும் இருக்கும் எல்லாக் குல்லாய்களுக்கும் முதுகுரவனாக விளங்கத் தக்கது ஆயிற்றே இந்தக் குல்லாய்!), முழங்கைகள்வரை வரும் குட்டைக் கைகள் வைத்த கிழவிச் சட்டை—மல்யாஹான் காலத்தது, பல நிறத் துண்டுத் துணிகள் (கைதேந்த தையல்காரி இவற்றைக் கொண்டு என்னதான் தைக்க மாட்டள்!)—எது வேண்டுமானலும் இங்கே காணலாம். அல்லது, ஒருவேளை உங்களுக்குக் குதிரைக் கவிசனை வேண்டுமோ? செத்த குதிரைமேலிருந்து கழற்றப்பட்டதுதான் என்றலும் இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தாங்கும். அல்லது உயர் ரக ஆட்டுத்தோல் ஸ்லிப்பர்கள் வேண்டுமா? ஆகா கிடைக்குமே. இவற்றைப் போட்டுக் கொள்ளலாம்—அடித்தோலும் குதியும் புதிதாகத் தைத்துக் கொள்ள வேண்டும், மேற்பகுக்குச் சரியானபடி வண்ணம் பூச வேண்டும், அவ்வளவுதான்! பாதங்களில் சுற்றிக் கொள்வற்கான துணிப்பட்டிகள் தாம் எத்தனை வகை! இஷ்டம்போலப் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இவற்றைக் கோவணமாகவும் பயன்படுத்தலாம்...

எல்லாவற்றையும்விட அக்கறைக்கு உரியவை இந்தச் சாமான்களை எல்லாம் விற்பனை செய்யும் வியாபாரிகளின் முகங்கள்தாம். இவர்கள் முகங்கழுவி ஒரு வாரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும். தாடிகள் பிறந்தது முதலே மழிகத்தியைக் கண்டறியாதவை. ஆயினும் முகங்கள் என்னவோ பளபளக்கின்றன. நீங்கள் சரக்கை நோட்டமிட்டு விலை கேட்க வேண்டியதுதான் தாமதம், இவர்கள் முகங்களில் ஒளி படர்கிறது—நேற்றுத்தான் அழுது புதைத்துவிட்டு வந்த தங்கள் அருமை நண்பனின் பிணம் உயிர் பெற்று வந்துவிட்டது போல. முதலில் கட்டாயமாக முகமன் கூறிக் கைகுலுக்கிய பின்பே விலையைச் சொல்வார்கள். அமெரிக்கா என்ற ஓர் இடம் உலகில் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுதான் அந்த அமெரிக்கா போலும்!

வேடிக்கை என்ன தெரியுமா? இங்கே, “பீத் பஜாரில்” தான் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த ஹுஸ்னிபாய் என்பவனை நாங்கள் சந்தித்தோம்! இரைச்சலாலும் பல் வண்ணங்களாலும், பொருள்களின் செழிப்பாலும் மதிமயங்கியவர்களாக, முதலில் விற்பதா வாங்குவதா என்று தீர்மானிக்க முடியாமல் நாங்கள் வெகு நேரம் சுற்றி அலைந்து விட்டபின் அவனைக் கண்டோம். ஹுஸ்னிபாய் துண்டுத் துணிகள் விற்றுக் கொண்டிந்தான். துண்டுத்துணிகள் என்றல் வெறும் சிறு துண்டுகள் அல்ல, ஓர் அல்லது ஒன்றரை அடி நீள முள்ள பகட்டான துணிகள், சீட்டித் துணித் துண்டுகள். ஒரு பெரியதான துணி விற்கப்படும்போது கடைசியில் இம்மாதிரித் துண்டுகள் மிஞ்சுவது வழக்கந்தான். பெரிய வியாபாரிகள் இவற்றைக் கூவி விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு மலிவாக விற்பனை செய்வார்கள். சில்லறை வியாபாரிகள் தொங்கு பைகளில் பல்வேறு நிறங்களும் கோலங்களும் கொண்ட துணிவிளிம்புகள் வெளித் தெரியும்படி வைத்தவாறு சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பார்கள். இந்தத் துணித் துண்டுகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. மிக மலிவான சீட்டித் துணிகூட ஓர் அர்ஷீன்—இரண்டேகால் அடி—பதினேழு கோப் பெக்குகள் விலை! ஏழைகளுக்கு இந்த விலை கட்டுப்படி ஆகாது. முழுதும் ஒரேவகைத் துணியால் உடைகள் தைத்துக் கொள்ள அவர்களுக்கு முடியாது. அதற்காகத் தான் துணித் துணிடுகளை வாங்கி, சட்டைக்கைகளும், மேலங்கிகளுக்கு அடியில் தெரியும் காற்சட்டைப் பகுதிகளும் தைத்துக் கொள்வார்கள். எஞ்சிய பகுதிகளுக்கு முரட்டுக் கைத்தறித் துணியைப் பயன்படுத்துவார்கள்.

இந்த ஹுஸ்னிபாய் எப்போதுமுதல் சில்லறை வியாபாரி ஆனான் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனோ, இரண்டு தொங்கு பைகளில் செம்மச் செம்ம நிறைந்த துணித் துண்டுகளும் கையில் அளவுகோலுமாக அனுபவசாலியான வியாபாரி போல வளைய வந்தான்.

“பாப்ளின் வேண்டுமா, பூப்போட்ட சிவப்பிச் சீட்டித் துணி வேண்டுமா, புள்ளிபோட்ட சீட்டித்துணி வேண்டுமா, ரோஹ்தான்—பதான் வேண்டுமா, அருமையான மல் துணி வேண்டும, காலிக்கோ வேண்டுமா, உறைத்துணி வேண்டுமா, சைத்தான் தோல் துணி வேண்டுமா? தாராளமாக வங்குங்கள், சந்தோஷமாகத் தைத்துப் போட்டுக் கொள்ளுங்கள்!” என்று தொண்டை கிழியக் கத்தியவன், எங்களைப் பார்த்துவிட்டான். இமாம்கள் ஹஸனையும் ஹீஸேனையும் உயிரோடு எதிரே வரக் கண்டவன் போல மலைத்துப் பேனான்.

“அடே, நீங்களா? எங்கிருந்து வந்து சேர்ந்தீர்கள் இங்கே?... அப்பா குதிரைக் கழுத்துப் பட்டைகளைச் சந்தையில் விற்று வரும்படி என்னிடம் சொன்னார். என்னால் இது முடியாது என்று சொல்லிவிட்டேன். என் சித்தப்பா இருக்கிறாரே, சில்லறை வியாபாரி, அவர் மாதிரிச் சுற்றுத் திரிந்து வியாபாரம் செய்ய எனக்கு வெகு காலமாகவே ஆசை. துணித் துண்டுகள் வாங்க அப்பா எனக்குப் பணம் கொடுத்தார். சையது-பயில்வான் சந்தைக்குப் புறப்பட்டான், நானும் அவனோடு வந்து விட்டேன்... பாருங்கள், எப்பேர்ப்பட்ட சரக்குகள் என்று! யூஸீப் தாவீதவின் கடையில் கூட இந்த மாதிரிச் சரக்கு கிடைக்காது! ரூபிகளுக்கு மூன்று உருப்படி!”—இப்படிப் பெருமை அடித்துக் கொண்டவன் சட்டென நினைவுபடுத்திக் கொண்டு, “ஆமாம், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அமன், நீ கிராமத்திலிருந்து வருகிறாயா?” என்றான். பின்பு என் கதை அவனுக்கு நினைவு வந்துவிட்டது. “நீ இருக்கிறாயே, நல்ல ஆள் தான் போ! ஜிப்ஸிகளிடம் பாடம் கேட்டாயா என்ன? ஒரு வாரத்துக்கு மேலே எங்கே காடுவாழ்சாதியாகச் சுற்றித் திரிகிறாய்? பாவம், உன் தாயார் எங்கெல்லாம் உன்னைத் தேடினாள் தெரியுமா? சௌக்கியமாக இருக்கிறேன் என்று தகவல் கொடுத்தால் செத்துப்போய்விட மாட்டாயே! நல்ல வேளையாக உன் அத்திபேர் வந்து உன் அம்மாவைத் தேற்றினார். தம் வீட்டில் நீ ஐந்து நாட்கள் தங்கியிருந்ததாகவும் அப்பிறம் கப்ளான்பேக்கில் மற்றோர் அத்தை வீட்டுக்குப் போயிப்பதாகவும் சொன்னார். இலையுதிர் காலம்வரை வயல் வேலையில் நீ ஒத்தாசை செய்யப் போகிறாய் என்றார்... இங்கே எப்படி வந்து சேர்ந்தாய் நீ? அத்திம்பேரிடமும் புளுகினாயா? தாயாரை ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டது வாயேன், மடையா! அவள் ஆறுதல் அடைந்துவிட்டாள் என்றாலும் உன்னை நினைத்து அழுகிறாளே...”

“கொஞ்சம் பாடுபட்டுச் சம்பாதிக்கிறேன், உடைகளைச் சீர்படுத்திக் கொள்கிறேன், அப்புறம் திரும்புகிறேன்.”

“ஆமாமாம். சீர்தான் படுத்திக் கொள்வாய்! இதையும் பறி கொடுத்து விட்டு நிற்பாய்!”

“அடேடே, ரொம்பத்தானே பேசாதே... என்னிடமும் இருக்கிறது சரக்கு, இதோ!“

“ஒகோ! மெய்யாகவேதானா? இதை எல்லாம் எங்கே சேகரித்தாய்? காக்கைக் கூட்டைச் சூறையாடினாயா?”

இப்போது அமன் குறுக்கிட்டான். “சரி, சரி! சச்சரவிட்டது போதும். ஏற்கனவே வெக்கை சகிக்க முடியிவில்லை. நம் வட்டாரத்தில் புதிய செய்திகள் என்ன, அதைச் சொல்லு” என்றான்.

“அட அங்கே என்ன புதுச் சேதிகள் இருக்க முடியும்?... ஆமாம், உங்களுக்குத்தான் இன்னும் தெரியாதே”—ஹீஸ்பாய்க்கு உற்சாகம் பிறந்து விட்டது. “அங்கே என்ன நடந்தது தெரியுமோ? ரொட்டிக்காரன் ஜலீல் தீனிப் புல்லை மசூதி முகட்டின் மேல் போட்டிருந்தான். அதிலே தீப்பிடித்துவிட்டது. தீயணைக்கும் படையினர் வந்தார்கள். ஆகா, எவ்வளவு அருமையாக இருந்தது என்கிறாய்! இன்னும் புலாத்ஹோஜா இருக்கிறானே, அவன் அண்ணனுடைய ரிவால்வரை எடுத்துக் காவல்காரனுடைய நாயைச் சுட்டு விட்டான். மீர்ஷாப் அவனை ஒரு நாள் சிறையில் வைத்திருந்தார். இரண்டு போலீஸ்காரர்களும் மச்சாலவ் தானேயும் வந்தார்கள்! எல்லோரும் அவரவர் வீடுகளில் பதுங்கிவிட்டார்கள். நானும் ஸலீஹீம் மீர்-அஜீஸ்-அகா வீட்டு முன்மாடத்திலிருந்து பார்த்தோம். மச்சாலவ் சொன்னார் (இங்கே ஹீஸ்னிபாய் மச்சாலவைக் கோரணி செய்தவாறு மாற்றுக்குரலில் பேசினான்). ‘ஸே, ஸே, மோஸம். படு மோஸம். ஸைபீரியா போவாய் நீ...’ புலாத்ஹோஜாவின் அண்ணனோ அரைகுறை ருஷ்ய மொழியில் கெஞ்சிக் கூத்தாடினான், நிறையக் கைக்கூலி கொடுத்தான். அப்புறந்தான் அவர்கள் போனார்கள். புலாத்ஹோஜா விடுதலை செய்யப்பட்டான். அண்ணன் அவனைச் சக்கை சாறாக விளாறினான் என்று சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் புலாத்ஹோஜா இப்போது வீறாப்பு பேசுகிறான். அவன் யாருக்கும் பயப்படுவதில்லையாம், போலீஸாரிடமே, மச்சாலவிடமோ, காவல்காரன் கூர்-ரஹீமிடமோ அவனுக்கு பயம் இல்லையாம். ‘இஷ்டப்பட்டால் எல்லாரையும் ரிவால்வரால் சுட்டுத் தள்ளிவிடுவேன்’ என்கிறான். நாங்கள் அவனை இரண்டு போடு போட்டோம், அவனோ உங்களையும் சுட்டுத் தள்ளிவிடுவேன் என்கிறான்...”

“அப்படியா? உதைக்கிறேன் பயலை, திரும்பியதுமே” என்றேன் நான்.

“கட்டாயம் உதைப்பாய். முதலில் திரும்பு” என்று கேலி செய்தான் அமன்.

“டேய் ஹீஸ்னிபாய், வீடு திரும்பியதும் அம்மாவிடமும் தங்கைகளிடமும் நான் ரொம்பக் கேட்டாதாகச் சொல்லு. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லு. பொறு, இந்தா, இந்த ஐந்து கோப்பெக்கை யூல்தாஷிடம் கொடு. அவனுக்கு நான் தர வேண்டும் நல்லது, நாங்கள் எங்கள் காரியத்தைப் பார்க்கிறோம். விடை கொடு!” என்றேன்.

“போய் வாருங்கள்!” என்றான் ஹீஸ்னிபாய். மறு வினாடியே அவன் உரக்க முழங்கியது எங்களுக்குக் கேட்டது. “பாப்ளின் வேண்டுமோ, பூப் போட்ட சீட்டித் துணி வேண்டுமா...”

புறாக்களுக்காக எனக்குக் கிடைத்த பொருள்களையும் அவற்றோடு அமனின் மண்வெட்டியையும் விற்பனைக்காக அடுக்கி வைக்க நாங்கள் தீர்மானித்தோம். எங்களைச் சுற்றி வாங்குபவர்கள் ஏராளமாகக் கூடிவிட்டார்கள். எங்கள் சாமான்கள் மளமளவென்று விற்றுப் போகும் என நாங்கள் நினைனத்தோம். ஆனால் கூடியவர்கள் எல்லோரும் வெறுமே வேடிக்கை பார்க்க வந்தவர்கள். சாமான்களின் விலைகளில் கூட அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவை எதற்குப் பயன்பட முடியும் என்பதில்தான் அக்கறை அவர்களுக்கு. பற்பல நையாண்டி யோசனைகளை அவர்கள் கூறினார்கள். ஒரு மணி நேரம் போலத் தொல்லைப்பட பின் அமனுடைய மண்வெட்டியையும் என் மர மண்வாரியையும் ஒருவிதமாக விற்றோம். இது கூட, தாமாகவே முன்வந்த தரகர்களின் உதவி இல்லாமல் நடக்கவில்லை.

வாங்க வந்தவர்களுடன் அரை மணி நேரம் பேரம் பேசிய பிறகு அவர்கள் கேட்ட விலைக்கு, அதாவது மண்வெட்டியை அரை ரூபிகளுக்கும் மர மண்வாரியை (கோடை காலம் ஆதலால்) ஒன்றரைத் தன்காவுக்கும் விற்க நாங்கள் இசைந்தோம். அதற்கு அப்புறமும் இந்தத் தரகர்கள் “கையடித்துக் கொடுப்போமா?” என்றார்களே பார்ப்போம்!

அமன் பணத்தை இடுப்புக் குட்டையில் சுருட்டி முடிந்து கொண்டான். மற்றச் சாமான்களை விற்பது இப்போது அவசியமாயிருந்தது. விளையாட்டுத் தொட்டில்களையும் கிலுகிலுப்பையையும் நான் அமனிடம் கொடுத்தேன். தம்பட்டத்தையும் கிராதிவிளிம்புகளையும் நானே வைத்துக் கொண்டேன். அமன் கிலுகிலுப்பையைக் கிலுக்கினான், நான் தம்பட்டத்தை அடித்தேன்—வாங்குபவர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக. எங்களையே போன்று கந்தல் அணிந்த ஏழைச் சிறுவர்களின் கூட்டம் அக்கணமே எங்களைச் சூழ்ந்து கொண்டது. இலவச வேடிக்கை பார்க்கக் குழுமினார்கள் இவர்கள். ஒர் ஒடிசல் பையனுக்குக் கிலு கிலுப்பை மிகமிகப் பிடித்துப் போயிற்று. அவன் ஒர் உழவனின் மகன். அமன் அவனுடைய கழுத்துப் பட்டையைப் பற்றிக் கொண்டு, அவனுடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் இரண்டு தர்பூஸ் பழங்களும் ஒரு முலாம்பழமும் கிலுகிலுப்பைக்கு மாற்றாக வாங்கிக் கொண்டே விட்டான். நான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தே—சபாஷ், நீ கைராசிக்காரன் என்ற அர்த்தத்தில். இதன் பிறகு நாங்கள் தம்பட்டத்தை விற்றோம். கஞ்ருசிவப்புக் குதிரைமேல் ஏறிச் சந்தையில் சுற்றி வந்த அழகிய மீசையுள்ள ஒர் இளைஞன் அதை வாங்கிக் கொண்டான். ஒரு தன்கா விலை கொடுத்தான் அவன். அப்புறம் கிடைத்தாள் ஒரு “குருட்டு” வாடிக்கைக்காரி. கஸாஃகியக் கிழவி அவள். ஒரு கோழி, முட்டைகள், தயிர்க் கட்டி உருண்டைகள், சாமை ஆகியவற்றை விற்க வந்திருந்தவள்.

“அடாடா, என் கண்களா, இந்தத் தொட்டில்களை எனக்குத் தாருங்கள். சந்தையிலிருந்து குழந்தைகளுக்குப் பரிசாக எடுத்துப் போகிறேன். பேரக் குழந்தைகள் சந்தோஷப்படுவார்கள்!” என்றாள்.

“கிராதி விளிம்புகள் இல்லாமல் தொட்டில்கள் தனியாக விற்கப்படமாட்டா” என்று கண்டிப்பான குரலில் சொன்னான் அமன்.

“அடாடா, என் கண்களா, கிராதிவலை இல்லாமல் விளிம்புகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?...”

தலையை ஆட்டிக் கொண்டே அவள் அப்பால் போக புறப்பட்டவள், திரும்பி வந்தாள்.

“சரி அப்படியே ஆகட்டும். வாங்கிக் கொள்கிறேன். குழந்தைகள் விளையாடுவார்கள். என்ன விலை கேட்கிறீர்கள்?” என்றாள்.
நாங்கள் வெகு நேரம் பேரம் பேசினோம். முடிவில் இருபது முட்டைகளும் ஒரு குல்லாய் நிறையச் சாமையும் ஒட்டகத் தயிர்க்கட்டி உருண்டைகள் பத்தும் பெற்றுக் கொண்டு சாமான்களை அவள் தலையில் கட்டினோம். சாமான்களைக் கொடுத்து விலையும் பெற்றுக் கொண்ட பின் பறவைகள் போல லேசாகி விட்டதாக உணர்ந்தோம்.

“அப்பா, களைத்துப் போய்விட்டேன். ஏதாவது சாப்பிட வேண்டும், இல்லையா?” என்று சோம்பல் முறித்துக் கொண்டே சொன்னான் அமன்.

“போவோம். என்ன சாப்பிடுவது?”

“மலிவாய் இருக்க வேண்டும், வயிறும் நிறைய வேண்டும். அதுதான் முக்கியம்.”

“அப்படியானால் தினைக் கஞ்சி குடிப்போம்!”

இரண்டு கோப்பெக்குகள் கொடுத்து இரண்டு மக்காச்சோள ரொட்டிகள் பறங்கிக்காய்க் கறியுடன் வாங்கிக் கொண்டு சூடான உணவுப் பண்டங்கள் விற்கும் பகுதிக்குப் போனோம். அங்கே பல விதப் பண்டங்கள் விற்பனைக்குத் தயராய் இருந்தன. தணலில் வாட்டிய கல்லீரல் (கல்லீரல் கொஞ்சம் கவிச்சடித்தது என்பது உண்மையே. ஆனால் இம்மாதிரி அற்ப விஷயங்களை யார் பொருட்படுத்துகிறார்கள்?), உருளைக் கிழங்கு ஸமோஸா, சேமியா, அரிசிக் குறுநொய்ப் பொங்கல், கறித் துறுவல், கோதுமைக் கஞ்சி, தினைக் கஞ்சி முதலியன. பெரிய பெரிய அண்டாக்கள் நிறைய உணவுப் பண்டங்கள் சாப்பிட்டுவோரை எதிர்பார்த்துக் காத்திருந்தன. சாப்பிடுவர்கள் வந்து குத்திட்டு உட்கார்ந்தார்கள், சமையல்காரகல் கரண்டிகளால் கஞ்சியைக் கிண்ணங்களில் ஊற்றிச் சற்று வணக்கத்துடன் அவர்களுக்குக் கொடுத்தார்கள். ஒரு கிண்ணத்தில் சேமியாவுடன் ஏதோ கறுப்பான மிதந்தது. “இது என்ன, ஈயா?” என்று கேட்டார் சாப்பிட வந்த நாசூக்குக்காரர். “அட நீங்கள் ஒன்று! ஈயாம்! சேமியாவில் ஈ எங்கிருந்து வரும்? கருகிப்போன வெங்காயம் அல்லவா இது?” என்று பதிலளித்து, சட்டெனக் கிண்ணத்தில் விரலை விட்டுக் கருகிப் போன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் சமையல்காரன் “இப்போது நிம்மதியாகச் சாப்பிடுங்கள்” என்றான்.

இங்கே மலிவு, துப்புரவாயும் இருக்கிறது என்று எண்ணி, நாங்களும் ஆளுக்கு ஒரு கிண்ணம் சேமியா வாங்கிக் கொண்டோம். ஒரு கிண்ணம் சேமியாவின் விலை மூன்று கோப்பெக்குகள். ஆனால் நாங்கள் இரண்டு கிண்ணங்கள் ஐந்து கோப்பெக்குகளுக்குத் தரும்படிப் பேரம் பேசி இரட்டை மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தொடங்கினோம். நன்றாயிருந்தது! சேமியா கொஞ்சம் ஊசிப் போயிருந்தது, ஆனால் முறுமுறுவென்று இருந்த மக்காச் சோள ரொட்டியோடு சேர்த்துத் தின்பதற்குப் பாலாடைபோல ருசியாய் இருந்ததாகவே எங்களுக்குப் பட்டது. அமன் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்தவாறு, பெரிய பாம்புக்கூட்டம் கலவரம் அடைந்துவிட்டது போன்ற உரத்த சீறல் ஒலியுடன் சேமியாவைக் கிண்ணத்திலிருந்து உறிஞ்சி உறிஞ்சித் தின்றான். நானும் மும்முரமாக முயன்றேன். இருவரும் இடது கையால் அடிக்கொரு தரம் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டோம்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஒரு தர்பூஸ் பழத்தையும் தின்றுவிட்டு நாங்கள் இனிமையாகச் சோம்பல் முறித்தோம். முட்டைகள், சாமை, தயிர்க்கட்டி உருண்டைகள், மிஞ்சிய மக்காச்சோள ரொட்டித் துண்டுகள் ஆகியவற்றை என் இடுப்புக் குட்டையில் மூட்டை கட்டினோம். மூட்டையையும் முலாம் பழத்தையும் நான் எடுத்துக் கொண்டேன். தர்பூஸ் பழத்தை அமன் தூக்கிக் கொண்டான். மேலே எங்கு போவது?

அமனுக்குப் புதிய எண்ணம் தோன்றிவிட்டது. எங்கள் பணம் அவன் இடுப்பில் இருந்தது. இப்போது கணிசமான தொகை—சுமார் இரண்டு ரூபிள் சேர்ந்திருந்தது. இந்த ரூபிள்கள் அவனை நிம்மதியாய் இருக்க விடாமல் அடித்தன. கொழுப்பு சேர்வது செம்மறிக் கடாவுக்கு மட்டுமே கெடுதல் அல்ல என்று ஐனங்கள் சொல்வது உண்மைதான். அமன் அதற்குள்ளாகவே ஜமீன்தார் மகன் போல மிடுக்கு பண்ணத் தொடங்கிவிட்டான்.

“கால் நடைச் சந்தையைச் சுற்றிப் பார்க்கலாம் வா” என்று என்னை அழைத்தான்.

“எதற்காக?”

“என் பங்குப் பணத்துக்கு ஆட்டுக்கடா வாங்கி நகரத்துக்கு ஒட்டிப் போகிறேன்.”

“உனக்கென்ன, மூளை புரண்டுவிட்டதா? உன் வயிற்றுப்பாட்டுக்கே வழியைக் காணோம், ஆட்டுக் கடாவுக்கு எப்படித் தீனி போடுவாய்? அல்லது உன்தகப்பனார் நீ ஆட்டுக்கடாவை வீட்டுக்கு ஒட்டிவருவாய் என்று ரொம்பத்தான் காத்துக் கொண்டிருக்கிறாரோ? என்றேன்.”

ஆனால் என் சொற்கள் தம்பட்டத்தில் பட்ட பட்டாணிபோல அவனிட மிருந்து துள்ளி விழுந்துவிட்டன. என்னை இழுத்துக் கொண்டு கால் நடைச் சந்தைக்குப் புறப்பட்டன். முலாம்பழத்தையும் தர்பூஸையும் வாயிலில் கட்டணம் வசூலிப்பவனிடம் வைத்துவிட்டு மூட்டையை உடன் எடுத்துக் கொண்டோம்—அதை யாரிடமும் நம்பி ஒப்படைக்க எங்களுக்கு மனம் இல்லை. சந்தையின் மற்றப் பகுதிகள் பயங்கர நீதி மன்றத்தின் முன்னறை போல் இருந்தன என்றால், கால்நடைச் சந்தையில் இந்த பயங்கர நீதி விசாரணையே நடந்து கொண்டிருந்தது. பாவம் கால்நடைகள் இதைப்பற்றி என்ன நினைத்தனவோ, அறியேன். ஆனால் இறுதி நாள் வந்துவிட்டது என்றே அவையும் எண்ணியிருக்கும். ஒரு புறம், பத்து பத்தாக ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்து ஆட்டுக்கடாக்கள் வாய் ஓயாது கத்திக் கொண்டிருந்தன. மறுபுறம் வெள்ளாடுகளும் குட்டிகளும் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. சற்று தூரத்தில் பசுக்களும் இளங்கன்றுகளும் மூன்று வயதுக் கன்றுகளும், எருதுகளும், உழவு மாடுகளும் மாவென்று அலறிக் கொண்டிருந்தன. இன்னும் அப்பால் இருந்தது குதிரைத்தாவணி. அங்கே குதிரை வியாபாரிகள் அப்பாவி உதவாக்கரைக் குதிரைக்களைச் சவாரிப் புரவிகள் என்று சொல்லி விற்றுக் கொண்டிருந்தார்கள். இதற்காக அவர்கள் முதலில் குதிரைகளை இரக்கமின்றிச் சவுக்கால் விளாறி ஆற்றுக்கு விரட்டினார்கள். ஸகாலிக் என்னும் இந்த ஆறு சற்று தூரத்தில் ஓடுகிறது. மக்கள் கூட்டம் முன்னும் பின்னும் போய்வந்த வண்ணமாய் இருந்தது. பெரும்பாலும் இவர்கள் வாங்கி விற்பவர்கள். கட்டிப்போட்ட குதிரைகளின் அருகே விற்பவர்களும் வாங்குபவர்களும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டோ, பேரம் செய்து கொண்டோ அல்லது வெறுமே உரக்கப் பேசிக் கொண்டோ நின்றார்கள். பெரிய செம்மறி மந்தைகளின் சொந்தக்காரர்கள் ஒரு பக்கத்தில் இருந்தார்கள். அவர்களில் இருவர் பெஷாகாச் பணக்காரகள் தாஷ் கந்தகாரர்கள். மற்றவர்கள் கஸாஃகுகள். நமுதா நீளங்கிகளும் நமுதாத் தொப்பிகளும் அணிந்த இவர்கள் ஒருவர் கையில் ஒருவர் அடித்து, பேரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவிலும் தரகர்கள் நடமாடினார்கள். “வாங்குங்கள், பாய்-அத்தா, வாங்குங்கள்!” என்றோ, “விற்றுவிடுங்கள், பாய்-அத்தா, விற்றுவிடுங்கள், இதுதான் சரியான சமயம்!” என்றோ வியாபாரிகளை அடிக்கொரு தரம் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள் இவர்கள். தரகர்களின் கண்கள் பளிச்சிட்டன, கைகள் நடுங்கின. பின்னே என்ன, இங்கே ஆதாயத்துக்கு வழி இருந்தது, நூற்றுக்கணக்கான ரூபிள்களுக்குப் பேரங்கள் குதிர்ந்தன, பல நூறு கால்நடைகள் கைமாறி...


மாடுகளின் அலறல், குதிரைகளின் கனைப்பு, ஆடுகளின் கத்தல் ஆகியவற்றின் பேரரவத்தில் மனிதக் குரல்கள் அமுங்கிவிட்டன. சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டது. வெக்கை தாங்க முடியவில்லை. காற்றில் புழுதிப் படலம் கலையாமல் மிதந்தது. வியர்வை, சிறுநீர், சாணம், ரோமம் இவற்றின் கள்ளென்ற நெடிகள் அடித்தன. இவை எல்லாவற்றுக்கும் நடுவே, தண்ணீக்காரன் நீர்நிறைந்த தோற்பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு இரண்டு மட்குவளைகளும் கைகளுமாக மெதுவாக நடந்தான்.

“தருமத் தண்ணீர்! தருமத் தண்ணீர்!” என்று முழங்கினான் அவன். பரமாத்தமாக இவ்வாறு உபசரித்து, வேண்டியவர்களுக்கெல்லாம் குடிநீர் பருகக் கொடுத்தான். தண்ணீருக்காகப் பணம் கொடுக்க விரும்பியவர்கள் தண்ணீர்க்காரனின் கையிலிருந்த குவளையில் காசைப் போட்டார்கள். விருப்பம் இல்லாதவன் காசு கொடுக்க வேண்டாம். தண்ணீர்க்காரன் அவனைப் பார்க்கவே இல்லை.

குளிர்ந்த மோர் வேண்டுமா மோர் என்று கத்தி திரிந்தார்கள் இரண்டு வாண்டுகள்—என்னையும் அமனையும்விடச் சின்னவர்கள். அவர்கள் கையிலிருந்த வாளியில் மோருக்கு மேல் மிதந்தன அழுக்கடைந்த பனிக்கட்டித் துண்டுகள். பனிக்கட்டி இவர்களுக்கு எங்கே கிடைத்ததோ?

பீத் பஜாரின் நெரிசலுக்கும் பரபரப்புக்கும் நாங்கள் ஏற்கனவே பழகியிருந்தோம். ஆனால் இந்தக் கூச்சலும் கொந்தளிப்பும் எங்களுக்குத் திகைப்பூட்டின. நாங்கள் நடந்து திரிந்தோம். பேரம் பண்ணுபவர்களின் அருகே நிற்போம், அவர்களுடன் ஏதேனும் ஒட்டகத்தின் பற்களைப் பிடித்துப் பார்ப்போம். ஏதேனும் குதிரையின் நடையையும் நிலையையும் கூர்ந்து நோக்குவோம். பல நிற எருதின் விலையைப் பேசுவோம். அமன் ஆட்டுக்கடா வாங்கும் தன் யோசனையை மறந்துவிட்டான் என்று நினைத்தேன். சந்தையின் கிழக்குப் பகுதியில் சச்சரவு ஏற்பட்டிராவிட்டால் அவன் இப்போதும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பான். சச்சரவின் அரவம் கூதிர்கால மழைப்புயலுக்கு முன் அதிரும் இடி முழக்கம்போல மெதுவாகவே எங்களை எட்டியது. ஆனால் கடைசியில் எட்டியே விட்டது.

“உர் ஷெஷெந்தி!” (அடி இவனை) என்று கஸாஃகிய மொழியில் எவனோ கூச்சலிட்டான்.

“கிஸ்ஸாவூர், கிஸ்ஸாவூர்” (ஜேபடித்திருடன்)!

“சந்தையில் திருடன்!”

ஊதல்கள் கீச்சிட்டன. கஸாஃகும் உஸ்பேக்குமான இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு கையில் வாளை ஓங்கிக் கொண்டும் மறு கையால் நீலநிறமான கம்பளிக் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டும் இடறியவாறு அந்தப் பக்கம் ஓடினார்கள். நாங்கள் அவர்கள் பின்னே ஓடி, உடனேயே அவர்களை முந்திவிட்டோம். கூட்டத்தின் நடுவில் யாரைக் கண்டோம் தெரியுமோ? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அமன் எனக்குச் சாட்சி எங்கள் வட்டாரத்தின் அண்டையில் உள்ள கூகிர்மாச் வட்டாரத்தைச் சேர்ந்த, எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த திருடன் ஸுல்தான் நடுவே நின்று கொண்டிருந்ததான்! ஆனால் இங்கே அவன் திருடனாக அல்ல, திருட்டுக் கொடுத்தவனாக நடித்தான்! ஆம், ஆம் தொழிற்கூட உதவி மேஸ்திரிபோல் காணப்பட்ட எவனோ அப்பாவி இளைஞனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, உயர்குடியினனுக்கு உரிய சீற்றமும் கண்ணீரும் விழிகளில் பொங்க, கூட்டத்தின் நடுவில் நிமிர்ந்து நின்றான் ஸுல்தான்.

“முஸல்மான்களே! என் பணம் திருட்டுப்போனபோது இந்த ஆள் பக்கத்திலேயே வளைய வந்து கொண்டிருந்தான்... நான் இவனைச் சந்தேகிக்கிறேன்.” என்று அழுகைக் குரலில் சொல்லி, மார்பில் ஒரு கையால் அடித்துக் கொண்டான்.

வெள்ளைத் துணிபோல வெளிறிப்போன இளைஞன் உடம்போடு நடுங்கினான்.

“ஆண்டவனே, என்னை அவதூறிலிருந்து காப்பாற்று! ஆண்டவனே, எப்பேர்ப்பட்ட சங்கடத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன்!” என்று முணுமுணுத்தான்.

இதற்குள் அருகே வந்துவிட்ட கஸாஃகியப் போலீஸ்காரன், “உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று ஸுல்தானிடம் கேட்டான்.

“ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் நான்கு தன்காக்களும். வர்ணக் கோடுகள் போட்ட சணல் மணிபர்ஸில் வைத்திருந்தேன். என்வெள்ளி மோதிரமும் அதில் இருந்தது. ‘ஓ, அலி’ என்ற சொற்கள் பொறித்தது அது. நான் ஏழைச் செம்மான் ஒரு நோஞ்சல் ஆடு வாங்கலாம் என்று வந்தேன்!”

இவ்வாறு சொல்கையில் கூட்டத்தைச் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் கண்களில் நானும் அமனும் பட்டுவிட்டோம்.

“இதோ, இந்தப் பையன்களும் நேரே கண்டார்கள்!” என்றான் அவன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமனுக்கு எதிர்பாராமையால் புரைகூட ஏறிவிட்டது. அவன் “ஐயோ” என்று கூவி, பின்னே நகர்ந்து, ஆட்களின் முதுகுகளுக்குப் பின் மறைந்துவிட்டான். என்னாலோ இடத்தைவிட்டு நகரவே முடியவில்லை.

“உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று இளைஞனிடம் கேட்டான் போலீஸ்காரன்.

“என்னிடமும்... வர்ணக் கோடுகள்போட்ட சணல் மணிபர்ஸ்... பணம்... பணம் ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் இரண்டு தன்காக்களும். நானும் ஆடு வாங்கவே வந்தேன். சத்தியமாக.”

“இதிலே எந்த விதச் சாட்சிகளும் தேவையில்லை. எங்கே வாருங்கள் இரண்டு பேரும் பஞ்சாயத்துத் தலைவரிடம். அங்கே விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கூட்டம் கலையட்டும்!” என்றான் உஸ்பேக் போலீஸ்காரன்.

அவர்கள் போய்விட்டார்கள். நான் அவர்களைத் தொடரவில்லை. நான் அமனைத் தேடுவதற்கு விரைந்தேன். அவனோ, கிலி கொண்டு ஆட்டையும் என்னையும் எல்லாவற்றையுமே அடியோடு மறந்துவிட்டு, கண்காணாமல் மறைந்துவிட்டான். பொழுது சாயும் தறுவாயில்தான் நான் அவனைக் கண்டு பிடித்தேன். அவனுடைய பேடித்தனத்தையும் அறிவீனத்தையும் சக்கைசாறாகப் புரட்டி எடுத்தேன். அவனோ திகிலிருந்து இன்னும் விடுபட்ட பாடில்லை.

“விவகாரம் எப்படி முடிந்தது?” என்று கேட்டான்.

“எப்படி முடிந்ததா? நல்ல வேளைதான் நீ கம்பி நீட்டினாய். நீ ஜேபடித்திருடனுக்கு உடந்தையாய் இருந்தாயாம். போலீஸ்காரர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.” என்றேன்.


“மெய்யாகவா? இப்போது நாம் என்ன செய்வது?”

“என்ன செய்வது? என்ன செய்வது?” என்று அவனைக் கோரணி செய்தேன். “ஒரு காரணமும் இல்லாமல் நழுவி ஓடினாயே, அப்போது நினைத்திருக்க வேண்டும். என்ன செய்வது என்று. உன்னால் முலாம்பழமும் தர்பூஸும் கட்டண. வசூல்காரனிடமே தங்கிவிட்டன!” என்றேன்.

அமன் சற்று நிம்மதி அடைந்தான்.

“எங்கே இராத் தங்குவது?” என்று கேட்டன்.

நாங்கள் அனேகச் சாயாக்கடைகளுக்குப் போய்ப் பார்த்தோம். கடைக்காரர்களும் குதிரை வியாபாகிளும் கூலி விற்போரும் எல்லாவிற்றிலும் நிறைந்திருந்தார்கள். குந்துவதற்குக் கூட இடம் இல்லை.

“நாம் எங்கேதேன் போவது?” என்று மறுபடி கேட்டான் அமன்.

“பயப்படாதே ஏதாவது வழி கண்டுபிடிப்போம்... பொறு, வழி கண்டு பிடித்துவிட்டேன் போலிருக்கிறது. போன வருஷம் என் சித்தப்பாவும் இங்கே சந்தை நாளில் வந்திருந்தார். சாயாக்கடையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் எவனோ கிழவியின் வீட்டில் தங்கியதாகவும் சொன்னார்... அவள் கஸாஃகிய மாது என்று நினைக்கிறேன்... வேடிக்கையான பெயர் அவளுக்கு ... ஆ, நினைவு வந்துவிட்டது யக்ஷீ கிஸ் (நல்ல நங்கை)! அவள் வீடு சந்தையிலிருந்து வெகு தூரம் இல்லை, அவள் கூடாரத்தில் வசிக்கிறாளாம், சாராயம் காய்ச்சி விற்கிறாளாம். போவோமா அவளிடம்?”

நாய்களால் துரத்தப்படும் நரிபோல இங்குமங்கும் மிரண்டு மிரண்டு பார்த்துக்கொண்டிருந்த அமன் பேசாமல் என் பின்னே நடந்தான்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

குறும்பன் அத்தியாயம் 4: இரவுக் கூட்டாளிகள்

கிழவி யக்ஷீ கிஸின் கூடாரத்தை நாங்கள் அதிகச் சிரமம் இன்றிக் கண்டுபிடித்துவிட்டோம். ஸகார்லிக் ஆற்றின் இடது கரையில், கிட்டத்திலேயே இருந்தது அது. கூடாரத்தைச் சுற்றிலும் தரை துப்புரவாகப் பெருக்கி மெழுகப்பட்டிருந்தது. பக்கத்தில் விசாலமான மண் திண்ணைமேல் முரட்டுக் கம்பளம் விரித்திருந்தது. கூடாரத்தின் அருகில் தாழ்ந்த அடுப்பு அமைந்திருந்தது. மூடியற்ற கொப்பரை அதன்மேல் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே எண்ணெய் எடுக்கும் பெரிய மரத்தொட்டி இருந்தது. சற்று தூரத்தில், கரடிவேட்டைச் சூலங்கள் இரண்டு தரையில் நாட்டப்பட்டு அவற்றில் ஒரு கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கயிற்றில் பிரம்பு உறிகளில் தொங்கின மூன்று, நான்கு மண் கிண்ணங்களும்—பாலும் பாலாடையும் நிறைந்தவை போலும்—இரண்டு சுரைக் குடுக்கைகளும்—இவற்றில் தயிர் வைத்திருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு கன்றுக்குட்டி, பல நிறக் கிழக் காவல் நாய் பாதி பட்டுப்போன வில்லோ மரத்துடன் கட்டப்பட்டிருந்தது. குத்திருமலை ஒத்த அசட்டையான குலைப்புடன் அது எங்களை வரவேற்றது. இந்தக் குலைப்பைக் கேட்டதும் கிவி கூடாரத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்தாள். அவளுக்கு அறுபது வயது இருக்கும். வாரப்படாத நரையோடிய கேசத்தின்மேல் நெற்றியை மூடியபடி சிறு வண்ணத் திலைக்குட்டை கட்டியிருந்தாள். இடுப்பில் பழைய கம்பளி லேஞ்சியை வார்போலக் கட்டிக்கொண்டிருந்தாள். பின்னல் நுனிகளில் ஐந்தாறு வெள்ளி ரூபிள்களும் அரை ரூபிள்களும் அலங்காரமாகத் தொங்கின.

“ஸலாம் ஷேஷே” என்றேன் நான் (“ஷேஷே” என்றால் கஸாஃகிய மொழியில் “தாய்”).

பதில் முகமன் கூறுவதற்குமுன் அவள் நாயைத் தெளிவான ஒலிப்பற்ற எவையோ சொற்களால் “ஷப்த்ச் அப்த்ரஸ்குர்” என்று அதட்டினாள். நாய் குலைப்பை நிறுத்தியது, கிழவி திண்ணையைக் காட்டினாள்.

“வாருங்கள் இளைஞர்களே, இப்படி உட்காருங்கள்” என்றாள்.

நான் கண் சாடை காட்டவும் அமன் எங்கள் மூட்டையைக் கிழவியிடம் நீட்டினான்.

“சொல்லுங்கள் தம்பிகளா. சாராமம் குடிக்கப் போகிறீர்களா, அல்லுத இறைச்சிக்கறியும் தயாரிக்கவா?” என்று கேட்டள்.

“வேண்டாம் ஷேஷே, தாங்கள் குடிக்கவும் போவதில்லை, இறைச்சிக்கறியும் தயாரிக்க வேண்டாம். முட்டைப் பொரியல் செய்து தாருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் இரவுப் போதை இங்கேயே கழிக்கிறோம்.”

“நல்லது. ஆண்டவன் உலகம் விசாலமானது, வானத்திலும் தரையிலும், இது கோடைகாலம். எங்கே இஷ்டமோ படுத்து உறங்குங்கள். இரண்ட பேருக்குமாக ஒரு தன்கா கொடுங்கள்.” என்றாள் கிழவி.

“ஐயோ ஷேஷே, எங்களிடம் இருப்பது எல்லாம் அரைத் தன்கா தானே!” என்றேன்.

“உஸ்பெக் பையன்கள் படு தந்திரக்காரர்கள்! போனால் போகிறது, இராத் தங்குங்கள், இன்று சந்தை நாள், வாடிக்கைக்காரர்கள் வருவார்கள், பணக்காரப் பிள்ளைகள். ஒரே கொம்மாளமாக இருக்கும்.”

அடுப்பு மூட்டி, வராட்டிகளைப் போட்டாள். நானும் அமனும் மேலே எங்கே போவது என்று ஆலோசனை செய்தவாறு உட்கார்ந்திருந்தோம். விரைவில் கிழவி முட்டைப் பொரியலையும் புதிதாக மாவு பிசைந்து கட்ட இரண்டு ரொட்டிகளையும் மண் தட்டில் வைத்து எடுத்து வந்தாள். நாங்கள் ஆளுக்கு ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொண்டு சாப்பிடலானோம். முட்டைப் பொரியல் அபார ருசியாய் இருந்தது. அமன் ரொட்டித் துண்டுகளால் தட்டைத் துடைத்துத் தின்னத் தொடங்கினான். அதற்குள், தங்கள் இடிச் சிரிப்பாலும் கூச்சல்களாலும் சுற்றுப்புறத்தை அதிரச் செய்தவாறு கூடாரத்திற்கு வந்தார்கள் ஐந்து ஆட்கள். முன்னே நடந்தான் நெடிய இளைஞன். அவனது இடது தோள்மேல் இருந்தது ஆட்டின் பாதி உடல். வலது கையில் சிறு மூட்டை, ரொட்டிகளும் வெங்காயமும் காரட்டும் அதில் இருந்தன போலும். முஸ்லிம் மதப்பள்ளி மாணவன் போலத் தோன்றிய மற்றொருவன் ஆட்டுத்தாடியும் அழுக்குத் தலைப்பாகையுமாக அடுத்தாற்போல் வந்தான். மரியாதையும் நயப்பாங்கும் மெலிந்த முகத்தில் ததும்ப, ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தான் அவன். இரண்டு லேசான மேலங்கிக்ள் அணிந்திருந்தான். ஒன்று குட்டையால் இடுப்பைச்சுற்றி உள்ளே இறுக்கப்பட்டிருந்தது. மற்றது அதற்கு மேல் அணியப்பட்டிருந்தது. இவர்கள் பின்னே... பின்னே வந்தான், ஜேபடித்திருடன் ஸுல்தான்! அவன் காற்சட்டைகள் மடக்கிவிடப்பட்டிருந்தன. இடுப்புக் குட்டை தும்பு போல முறுக்கப்பட்டிருந்தது. கோடுபோட்ட மேலங்கியின் கழுத்துப்பட்டை திறந்திருந்தது. அழுக்குக் குல்லாய் விளிம்பு மட்க்கப்பட்டிருந்தது... அவன் முகத்தில் இருந்த துடுக்கான, வெற்றிச் செருக்கு ததும்பிய தோற்றம் அவனை அறியாதவனுக்குக்கூட வயிற்றைக் கலக்குவதாக இருந்தது. அவனைக் கண்டதுமே எஞ்சிய இருவரை நான் மற்ந்தே போனேன். ஏதோ ஒரு வகையில் ஸுல்தானை ஒத்திருந்தார்கள் அவர்கள். அப்புறம் அவர்களைக் கவனமாகப் பார்த்தபோது ஒருவனுக்குக் கண்ணில் பூ விழுந்திருந்ததையும் மற்றவனுக்கு ஒருகை இரண்டாவதை விட நீளமாயிருந்ததால் வலது தோள் இடது தோளைக்காட்டிலும் உயர்ந்திருந்ததையும் கண்டேன்...

வந்திருப்பவர்கள் யார் என்று கண்டுகொண்டதும் ரொட்டித்துண்டு அமனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது போலும். கண்கள் பிதுங்கி விடும் போல என்னை நோக்கி பரக்க விழித்தான். திண்ணையை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்று நான் சைகையால் உணர்த்தினேன். பரட்டென்று அதிலிருந்து பாய்ந்துவிட்டான் அமன். நாங்கள் ஆற்றின் கரையோரத்துக்கு நகர்ந்து, காவல் நாய் கட்டியிருந்த வில்லோ மரத்தடியில் பதுங்கினோம். அந்த நோஞ்சல் நாயோ கற்றும் நடப்பதைச் சற்றும் கவனிக்காமல் அசட்டையாய் இருந்தது.

“வணக்கம், ஷேஷே! இன்று ராத்திரி நாங்கள் உன் விருந்தாளிகள்! கேட்டாயா?” என்று முழங்கினான் ஸுல்தான்.

பின்பு சுற்றிலும் கண்ணோட்டியவன் எங்களைப் பார்த்துவிட்டான்.

“ஆகா. அட போக்கிரிகளா! நீங்களும் இங்கே இருக்கிறீர்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? எங்கே, இப்படி வாருங்கள்!” என்றான்.

திண்ணைக்குத் திரும்புவது தவிர நாங்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இதற்குள் ஸுல்தான் தன் நண்பர்களுடன் அங்கே வசதியாக உட்கார்ந்துவிட்டான். கிழவி அழுக்கு மேஜைத் துணியில் ரொட்டிகளைச் சுருட்டி எடுத்து வந்து திண்ணை நடுவில் வைத்தாள். பிறகு பெரிய மரக் கோப்பையை எடுத்துக் கொண்டு, “அரிசிச் சாராயம் சாப்பிடுகிறீர்களா, சாமைச் சாராயமா?” என்று ஸுல்தானிடம் கேட்டாள்.

“எது நல்லதோ அதையே கொடுஙகள்!”

கிழவி கூடாரத்துக்குள் போனாள்.

“கால் நடை சந்தையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று ஸுல்தான் எங்களிடம் கேட்டான்.

அமன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சும்மா தான் இப்படி, ஸுல்தான்–அகா.... சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.” என்றேன் நான்.

“அப்படியா! சரியான இடந்தான் சுற்றிப் பார்ப்பதற்கு என்று கண்களைச் சுரித்தான். உங்களை என்னிடம் வேலை பழக வைத்துக் கொள்ளலாமோ, ஊம்? நீங்கள் ஒருவேலை, இதற்கு ஏற்றவர்களாய் இருக்கலாம்! இதோ இவன் இருக்கிறானே” என்று மோவாயால் அமனைச் சுட்டி, “இவன் கூரை வழியே வீட்டுக்குள் ஏறிக்குதிக்கத்தான் லாயக்கு. ரொம்பப் பாங்கற்றவன், ஜேபடி வேலைக்குச் சரிப்பட மாட்டான்!” என்றான்.

வாய்விட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பைப் பயன்படுத்திக் கொண்டு நான் பேச்சை மாற்ற முயன்றேன்.

“ஸுல்தான்-அகா, அந்தச் சச்சரவு எப்படி முடிந்தது? என்று கேட்டேன்.”

“ஹோ-ஹோ, உனக்குத் தெரியாதா என்ன? வேடிக்கையான கதை, இல்லையா?” அவன் தன் நண்பர்களைப் பார்த்தான். அவ்ர்கள் “ஆமாம்” என்று தலையாட்டினார்கள். “இன்று காலை நாங்கள் சாயாக்கடையில் உட்கார்ந்திருந்தோம். என் திருட்டுப் பண்த்தைச் சுத்தப்படுத்த, அதாவது சொந்தக்காரனின் சம்மதத்துடன் எடுத்துக கொள்ள என்னால் முடியும் என்று வீரியம் பேசினேன், புரிந்ததா பையா? அவர்கள் பந்தயம் வைத்தார்கள். தோற்பவன் கூட்டாளிகள் எல்லாருக்கும் தன்செலவில் சாராயம் வாங்கித் தர வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆயிற்றா. நான் கால்நடைச் சந்தைக்குப் போனேன். பார்க்கிறேனோ, ஒரு அசமந்தன் போய்க் கொண்டிருந்தான். அவன் பணப்பையை உருவினேன். பணத்தை எண்ணிப் பார்த்தேன். என்னிடமிருந்து இரண்டு தன்காக்களையும் வெள்ளி மோதிரத்தையும் அதில் போட்டேன். பணப்பையை மறுபடி அவன் சட்டைப்பைக்குள் செருகிவிட்டேன். அப்புறம் நான் ஆடிய நடாகத்தைத்தான் நீ பார்த்தாயே! போலீஸ்காரர்கள் எங்களை பஞ்சாயத்துத் தலைவர் முன் இட்டுவந்து பணத்தை மறுபடி எண்ணினார்கள். நான் சொன்னபடியே இருந்தத. ஆகவே பணப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. சன்மானப் பணமாக ஒன்றரைத் தன்கா என்னிடம் வாங்கிக் கொண்டார்கள். அவ்வளவுதான். சாமர்த்தியமான வேலை, இல்லையா?”

“சாமர்த்தியமான வேலைதான்” என்று சிரமத்துடன் முனகினேன். “அந்த ஆள்.... அசமந்தன் என்ன ஆனான்?” என்று கேட்டேன்.

“ஹ-ஹா, சிறையில் தள்ளிவிட்டார்கள் அவனை, வேறு என்ன? கிடக்கிறது, கவலைப்படாதே. நான் அவன்மேல் இரக்கம் கொண்டு போலீஸ்காரனுக்கு ஒரு ரூபிள் லஞ்சம் கொடுத்து இந்த மடையனை விடுவித்தேன். எனக்கு அவன்மேல் காட்டம் எதுவும் இல்லை என்று சொன்னேன். அவன் எப்படிப் பூரித்துப் போனான் என்று நீ பார்த்தால் சொல்லுவாய், ஹ-ஹ-ஹா... என்னைத் தழுவிக் கொண்டான்... முத்தமிட்டான்... ஹெ-ஹே...”

நண்பர் குழாம் முழுவதும் கடகட வென்று சிரித்து மகிழ்ந்து போயிற்று.

“அப்படிச் சொல்லு” என்று என்னை ஓரக் கண்ணால் பார்த்துப்பல் இளித்தான் ஸுல்தான்.

கிழவி இறைச்சியை நறுக்கி வேகப் போட்டாள். அடுப்பிலிருந்து கிளம்பிய இளநீலப்புகை எடையற்ற போர்வை போல எங்களைப் போர்த்தது. சூரியன் அஸ்தமிக்கலாயிற்று. மேற்கே கடைசி மேகங்கள் நெருப்பாய்த் தகதகத்தன. அருகே மெல்லொலி செய்தது ஆறு, இந்தக் கும்பல் மட்டும் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! அவர்கள் எங்கள மறந்துவிட்டவர்கள் போலத் தங்களுக்குள் ஏதோ அரட்டைய்டித்துக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஸுல்தான் முழங்கையை ஊன்றியவாறு பாதி படுத்தநிலையில் இருந்தான். நெட்டையன் திண்ணை அருகே நின்று கொண்டிருந்தான். முல்லா போல் இருந்தவன் திண்ணைமேல் மண்டியிட்டு அமர்ந்து கைகளை மார்பின்மேல் சேர்த்து வைத்துக் கொண்டு, ஸுல்தான் நெட்டையனிடம் பேசுவதை மிகுந்த சிரத்தையுள்ளவன் போன்ற தோற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். மற்ற இருவரும் எதிரெதிரே சப்பணம் கொட்டி உட்கார்ந்து தீப்பெட்டியை எறிந்து பிடித்துப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதற்குள் கிழவி சாராயம் நிறைந்த இரண்டு கரைக் குடுக்கைகளையும் வர்ணம் பூசிய சில மரக் கோப்பைகளையும் கொண்டுவந்து வைத்தாள். பூஸா என்னும் இவ்வகைச் சாராயம் சூடாக்கிக் குடிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் கிழவி கொண்டுவந்த சாராயம் பகல் முழுவதும் வெயிலில் வைத்திருந்த்தால் தானே சூடேறியிருந்தது. ஆகவே மறுபடி சூடாக்கத் தேவை இருக்கவில்லை. தவிர சாராயத்தைக் குவளையில் ஊற்றுவதாற்கும் தனிப்பட்ட விதிகள் உண்டு: ஊற்றும்போது அது கட்டாயமாக வடிகட்டப்பட வேண்டும். நெட்டையன் தன் இடுப்புக் குட்டையை உடனே அவிழ்த்துப் பிரித்து உதறி, குவளை மேல் பரப்பி இறுக்கிக்கொண்டு சாராயத்தை ஊற்றினான். பின்பு வடிகட்டிய சாராயத்தை ருசி பார்த்துவிட்டுக் குவளையை ஸுல்தானிடம் நீட்டினான்.

எல்லோருக்கும் மற்ற இருவருக்கும் குவளைகளில் ஊற்றிக் கொடுத்துவிட்டு ஸுல்தானைக் கேள்விக் குறியுடன் பார்த்தான்.

“பையன்களை இப்போதைக்கு விட்டுவை. முல்லாவுக்கு ஊற்றிக்கொடு!” என்றான் ஸுல்தான்.

முல்லா கைகை மறித்தவாறு நளினமாக மறுத்தான்,

“என்ன நீங்கள், என்ன நீங்கள்! குடியுங்கள் நீங்களே. நாங்கள் குடிப்பதில்லை, ஆண்டவன் கட்டளை என்ன என்றால்....”

“இந்தா, கட்டிவை உன் ஆண்டவன் கட்டளையை. எப்போது முதல் நீ குடிப்பதில்லை, ஊம்? வேசி வீட்டில் எங்கள் குவளைகளில் மிச்சம் இருந்ததை எல்லாம் குடித்து வெறிகொள்ளவில்லையா நீ?” என்ற அச்சுறுத்தும் குரலில் சொன்னான் ஸுல்தான்.

“இல்லை, குடிப்பது உண்டுதான், ஆனால்.... அதாவது.... விஷயம் என்றால்.... நாங்கள் சபதம் செய்திருக்கிறோம்.”

“ச-பதமா? உன் சபதத்துக்கு ஏதேனும் மதிப்பு உண்டா? நீ யார் என்பதை எண்ணிப் பார்! ஸாலார் பக்கத்தில் நடந்த தானியச் சந்தையில் நான் மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் கூட்டம் அங்கேயே உன்னைத் தீர்த்துக் கட்டியீருக்குமே! இல்லை, நீ யார் என்பதை எண்ணிப் பார்த்தாயா? திருட்டுக்கு உடந்தையாய் இருக்கக்வட லாயக்கில்லாதவன் ஆயிற்றே நீ! திருடன் கிழவன் ஆனால் மசூதித் தொண்டன் ஆகிவிடுவான். வேசி கிழவி ஆனால் பேய்களை மந்திரம் போட்டு விரட்டத் தொடங்கிவிடுவான் என்று சொல்வார்களே. அது மெய்தான். ஆளைப் பாரப்பா, சபதம் செய்தானாம்! ஒருவேளை இந்தக் காரணத்தால் நீ மௌல்வி ஆகிவிட்டாயோ, சீடர்களைத் தேடத் கிளம்பினாயோ? அட சே, குடியடா!”

முல்லா நடுங்கம் கையால் குவளையை எடுத்துக் கொண்டான்.

“குடித்துவிட்டு மதுப்பாட்டு பாடு, ஊம், ஆரம்பி, தீர்க்கதரிசியின் வழித் தோன்றலே!”

முல்லா முகத்தைச் சுளித்துக் கொண்டு சாராயத்தைப் பருகினான்.

எங்களைக் குடிக்கும்படி யாரும் விசேஷமாக் வற்புறுத்தவில்லை.

பூசா நிறைந்த சுரைக் குடுக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டவரப்பட்டன. அரைகுறையாக வெந்த இறைச்சிக் குழம்பையும் கிழவி கொண்டு வந்து வைத்தாள். வெறியாட்டம் சூடுபிடித்துவிட்டது. முலலா தலைப்பாகையைப் பிரித்து இடுப்பில் வரிந்து க்ட்டிக் கொண்டான். சாராயம் வேண்டாம் என்று மறுக்காதது மட்டும அல்ல, தானே கேட்டுக் கேட்டு வாங்கிக் குடிக்கலானான் அவன். மற்றவர்கள் கோரியபடி ஏதோ அர்த்தமற்ற பாட்டைக் குடிமயக்கக் குரலில் பாட வேறு செய்தான்:

“ஓடிற்று மலையடியில் என் குதிரை,
சாடிற்று, பாய்ந்தது சாகும்வரை.
கண்டுவிட்டேன் பல வீரர்கள், களி
கொண்டிசைப்பேன், ஓடு, என் பரியே!
ஆ. மதுப்பாட்டு, இசைப்பேன் மதுப்பாட்டு!...”


கூட்டாளிகளுக்கு வர வர வெறி ஏறிக் கொண்டு போயிற்று. எல்லோரும் ஒரு நேரத்தில் பேசினார்கள். மற்றவர்கள் பேச்சை ஒருவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் மெள்ள எழுந்து திண்ணையிலிருந்து இறங்கி அமனைச் சைகை காட்டி அழைத்தேன். இதை ஒருவரும் கவனிக்கவில்லை. கிழவியிடம் சிறு கம்பள விரிப்பும் தலையணையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு கூடாரத்துக்குப் பின்னே படுத்துக் கொண்டோம். களைத்துச் சோர்ந்து போயிருந்தோம் ஆயினும் எங்களால் வெகு நேரம்வரை உறங்க முடியவில்லை. திண்ணைமேல் குடிகாரர்களின் ஆரவாரம் வர வர அதிகரித்தது. வேறொரு கும்பலும் இந்தக் கும்பலுடன் சேர்ந்து கொண்டது. ஒரு சமயம் அவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள், மறு சமயம் ஒருவரை ஒருவர் கூச்சலிட்டுத் திட்டிக் கொண்டு சிரித்தார்கள். சமீபத்தில் நாங்கள் பார்த்த கால் நடைச் சந்தையை நினைப்பூட்டியது அந்தக் கூச்சல். அப்புறம், பகலில் சந்தையில் நடந்தது போலவே, சச்சரவு தொடங்கிவிட்டது. அவர்கள் எவனையோ பிடித்து அடித்தார்கள். அவன் உதவி உதவி என்று கத்தினான், கெஞ்சினான், அழுதான்:

“ஆண்டவன் சத்தியம், என்னிடம் இருப்பது எல்லாம் இவ்வளவுதான், இன்னும் பணம் என்னிடம் இருந்தால் பெரிய இமாம் என்னைத் தண்டிக்கட்டும்!”

“காற்சட்டை இடுப்பில் தேடிப் பாரடா கீழ்மகனே!”

அவர்கள் முல்லாவைக் கொள்ளையடித்தார்கள். நாங்கள் திகிலால் நடுநடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். நாங்கள் திகிலால் நடு நடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். எல்லாவற்றுக்கும் பழகிவிட்ட கிழவியோ, ஒன்றுமே நடக்காதது போல விருந்தாளிக்ளுக்கு இடையே நடமாடினாள். பாத்திரங்களை அப்புறப்படுத்தினாள், சாராயம் கொண்டு கொடுத்தாள்.

நாங்கள் எப்போது உறங்கினோமோ அறியேன். விலாவில் யாரோ இடிக்கவே திடுக்கிட்டு விழித்தேன். இன்னும் இருட்டாக இருந்தது, ஆனால் வான விளிம்பு லேசாக வெளிறத் தொடங்கியது. என் அருகே நின்று கொண்டிருந்தான் முல்லா. அவன் தலையில் மறுபடியும் தலைப்பாகை இலகியது. அது அவசர அவசரமாகக் கட்டிக் கொள்ளப்பட்டிருந்தது. தலைக்கு நாளைவிட இன்னும் அழுக்காகி இருந்தது. கன்னத்தில் பலத்த அடி தழும்பிட்டிருந்தது. ஒரு கண் தணல்போலச் சிவந்திருந்தது.

“எழுந்திரு மகனே, எழுந்திரு! எழுந்திரு! அவர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் போதே நாம் தப்பி ஓடிவிட வேண்டும். என்னை எப்படி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பார்த்தாயா? தவிர என் பணத்தை எல்லாம் சுரண்டிப் பரித்துக் கொண்டு விட்டார்கள். மூக்குப் பொடி வாங்வதற்கக் கூடக் காசு மிச்சம் வைக்கவில்லை. உங்களுக்கும் இதே விபத்து நேர்த்துவிடக்கூடாது. எழுந்திரு மகனே, சீக்கிரம்...” —இப்படி முணுமுணுத்தவன், முகம் சுளித்தான். “ஐயோ, மண்டையிடி பொறுக்க முடியவில்லை. பழுத்த தர்பூஸ் பழம்போல அதிர்கிறது” என்று அங்கலாய்ந்தான்.

நான் அமனை எழுப்பினேன். நாங்கள் துள்ளி எழுந்து ஆற்று நீரில் முகங்கழுவி மேலங்கித் தலைப்புக்களால் தடைத்துக கொண்டோம்.

“ஐயா எங்கே போக விருமபுகிறீர்கள்?” என்று முல்லாவின் காதோடு கேட்டேன்.

“ஆ, பரம்பொருளின் உறைவிடம் மாட்சி மிக்கது, உலகத்தில் இடம் நிறைய. எங்கே திரும்பினாலும் புனித மெக்காவுக்கே போய்ச் சேர்வோம்... ஆனாலும்... ஆனாலும்... மேலே போவோம், கினகிராக்-தெப்பே மலைக்கு.”

நாங்கள் கூடாரத்திற்கு அப்பால் போய்விட்டோம், அதற்குள் கிழவி யக்ஷீகிஸ் எங்கள் முன் தோன்றினாள்.

“அடே கண்களே, எங்கே நழுவப் பார்க்கிறீர்கள்? காசைக் கொடுங்கள் முன்னே!”

அமன் ஒரு தன்கா எடுத்துக் கொடுத்தான்.

“இந்தா ஷேஷே. அரைத் தன்கா இராத் தங்கியதற்கு, பாக்கி ரொட்டிக்கும் முட்டைப் பொரியலுக்கான எண்ணெய்க்கும். சரிதானா?”

அவள் முல்லாவைப் பார்த்தாள்.

“சரிதான், சரிதான்... இந்த ஊருக்கு வந்தால் இங்கே வாருங்கள், உபசரிக்கக் காத்திருக்கிறேன்” என்றாள்.

நாங்கள் நடையைக் கட்டினோம்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)