Friday, 27 February 2009

விரியன் பாம்பு


ஏகாந்தமாய் நின்ற விளக்குத் தூண் இரயில் பெட்டியின் ஜன்னலைக் கடந்து சென்றது. வண்டியும் நிலையத்தில் போய் நின்றது. பிளாட்பாரத்தில் ஒரே பரபரப்பு.

" சௌக்கியமாய்ப் போய் வா! ஜன்னல் வழியாகத் தலையை நீட்டாதே"

"நீட்டமாட்டேன், பாட்டி."

"ஊர் போய்ச் சேர்ந்த உடனே தந்தி கொடுப்பதற்கு மறந்துவிடாதே!...போர்யா, நான் சொல்வது காதில் விழுகிறதா? அந்த மாதிரிப் பொருளை எப்படித்தான் எடுத்துச் செல்வாயோ?"

இரயில் புறப்பட்டது.

"போய் வருகிறேன், பாட்டி!"

"என் பெயரைச் சொல்லி அம்மாவுக்கு ஒரு முத்தங்கொடு. கைக்குட்டை பையில் இருக்கிறது..."

"ஒரு நிமிடத்தில் போர்யா நம்மோடு இருப்பான் என்த் தோன்றுகிறது" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் மெதுவாகச் சொன்னார்.

கதவு திறந்தது. போர்யா உள்ளே நுழைந்தான். அவனுக்குச் சுமார் பன்னிரண்டு வயதிருக்கும். பையன் கொழுகொழுவென்றிருந்தான்; ரோஜாக் கன்னங்கள். அவன் தலையில் சாம்பல் நிறத்தொப்பி சாய்வாக இருந்தது. தன்னுடைய கறுப்பு நிறச் சட்டையின் பொத்தான்களைக் கழற்றி விட்டிருந்தான். அவனது ஒரு கையில் பிரம்புப் பெட்டியும், மறு கையில் கயிற்றுப் பையும் இருந்தன. பைக்குள் பெரிய பச்சைக் கண்ணாடி ஜாடி வைத்திருந்தது. பையைச் சற்றுத் தள்ளிப் பிடித்து, அதையே உற்று நோக்கியவாறு, பெட்டிக்குள் மெல்ல நடந்தான்.

பெட்டியில் ஒரே கூட்டம். மேல் பலகைகளிலுங்கூடப் பிரயாணிகள் ஏறியிருந்தனர். பெட்டியின் நடுவில் போர்யா நின்றுகொண்டான்.

"நாம் சிறிது நகர்ந்துகொள்வோம்; பையன் ஓரத்தில் உட்கார்ந்துகொள்ளட்டும்" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் சொன்னார்.

"நன்றி" என்று தெளிவில்லாமல் சொல்லிவிட்டு, பலகைக்கு அடியில் சாமானை வைத்த பிறகு போர்யா உட்கார்ந்துகொண்டான்.

பிரயாணிகள் அவனை ஓரக் கண்ணால் நோக்கினர். கொஞ்ச நேரம், முட்டிகளின்மேல் கைகளை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்து நன்றாக மூச்சிழுத்தான். பிறகு தானிருந்த இடத்திலிருந்து கீழே இறங்கி, கயிற்றுப் பையை வெளியே எடுத்து, கண்ணாடி ஜாடியின் உள்ளேயிருந்ததை நீண்ட நேரம் கூர்ந்து பார்த்தான். கடைசியாக, தணிந்த குரலில் "இருக்கிறது" என்று சொல்லி, பையை வைத்துவிட்டு, தன் இடத்தில் உட்கார்ந்துகொண்டான்.

பிரயாணிகளிற் பலர் தூங்கிவிட்டனர். போர்யா வருவதற்கு முன்னர், இரயில் சக்கரங்களின் கடகட ஒலியும், யாரோ சிலருடைய சீரான குறட்டையும் அங்குள்ள அமைதியைக் கெடுத்தன. ஆனால் இப்பொழுதோ, உட்காரும் பலகைக்கு அடியிலிருந்து விசித்திரமாக இடைவிடாது வந்த சரசரவென்ற சத்தமும் அந்த ஒலிகளுடன் சேர்ந்துகொண்டது.

வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர், முட்டிகளின் மேல் தம்முடைய பெரிய கைப்பெட்டியை வைத்துக்கொண்டு, போர்யாவைப் பார்த்து, "தம்பி, நீ மாஸ்கோவுக்குப் போகிறாயா?" என்று கேட்டார்.

போர்யா தலையசைத்தான்.

"கோடையைக் கழிக்க நாட்டுப்புறம் போயிருந்தாயோ?"

"கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன்."

"அப்படியா சங்கதி! நல்லது, கிராமத்திற்குப் போயிருந்தாயா?" கிழவர் சிறிது நேரம் பேசாமலிருந்தார். "ஆமாம், இவ்வளவு பெரிய சுமையைச் சமாளிப்பது உனக்குக் கக்ஷ்டமாயில்லையா?"

"இந்தப் பிரம்புப் பெட்டியைச் சொல்லுகிறீர்களா? ஊஹூம், அது இலேசானது." போர்யா குனிந்து பெட்டியைத்தொட்டுக்கொண்டு, "இதில் சில நில உயிர்களைத் தவிர, வேறொன்றும் இல்லை" என்று அலட்சியமாகச் சொன்னான்.

"என்ன உயிர்கள்?"

"நீர்நிலவுயிர்களும், ஊர்வன சிலவுமே அதில் இருக்கின்றன என்று சொன்னேன்; ஆகவே கூடை ரொம்ப இலேசானது."

ஒரு நிமிடம் அமைதி நிலவியது. பிறகு, பரந்த தோளும், கரிய மீசையும் கொண்ட தொழிலாளி, "நீர்நிலவுயிர், ஊர்வன என்றெல்லாம் சொல்கிறாயே, தம்பீ! அவைதான் என்ன என்று சொல்லேன்" என ஆழ்ந்த குரலில் உரக்கக் கேட்டான்.

"தவளைகள், தேரைகள், பல்லிகள், பச்சைப் பாம்புகள்..."

"அப்பப்பா, இது என்ன கோரம்!" என்று மூலையிலிருந்து ஒருத்தி சொன்னாள்.

கிழவர் தம்முடைய கைப்பெட்டியின்மீது விரல்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தார். "ரொம்ப வேடிக்கையாயிருக்கிறதே!.... இவை எல்லாம் உனக்கு எதற்கப்பா?"

"எங்கள் பள்ளிக்கூடத்தில் சிறு உயிர்காட்சிசாலை ஒன்று கட்டுகிறோம். இரண்டு பேர் கட்டிட வேலையைக் கவனிக்கிறார்கள். நான் தான் அதற்கு வேண்டிய பிராணிகளைப் பிடித்துக்கொடுக்கிறேன்."

"என்ன கட்டுகிறார்களாம்?" என்று மேல் பலகையில் படுத்துக் கொண்டிருந்த, வயது சென்ற கூட்டுப்பண்ணைக்காரி ஒருத்தி கேட்டாள்.

"சிறு உயிர்காட்சிசாலை" என்று விளக்கினார் கிழவர். "அதாவது ஒரு கண்ணாடிப் பெட்டி, ஏறக்குறைய மீன் காட்சிசாலை போலவே இருக்கும். அதில்தான் இவற்றை எல்லாம் அவர்கள் வைப்பார்கள்..."

"என்ன, பாம்புகளையா?"

"ஆமாம். ஆனால் அவைகளைப் பாம்புகள் என்று சொல்ல முடியாது. விஞ்ஞான முறைப்படி நீர்நிலவுயிர்கள், ஊர்வன என்று தான் குறிக்க வேண்டும்." போர்யாவின் பக்கமாகக் கிழவர் திரும்பினார். "என்ன, தம்பீ, நீர்நிலவுயிர்கள் ஏராளமாகக் கொண்டுவந்திருக்கிறாயா?"

போர்யா கண்களை உயர்த்தி விரல்விட்டு எண்ணத் தொடங்கினான்.

"நான்கு பச்சைப் பாம்புகள், இரண்டு தேரைகள், எட்டுப் பல்லிகள், பதினொரு தவளைகள்"

"என்ன பயங்கரம்!" என்று இருட்டு மூலையிலிருந்து யாரோ ஒருவன் சொன்னான்.

கூட்டுப்பண்ணைக்காரி முழங்கைகளை ஊன்றிக்கொண்டு, போர்யாவை நோக்கினாள்.

"இவை எல்லாவற்றையுமா பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்கிறாய்?"

"எல்லாவற்றையும் அல்ல. பாதிப் பச்சைப் பாம்புகளையும் தவளைகளையும் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள மற்றொரு பள்ளிக்குக் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து ட்ரிடான்களை* வாங்கிக்கொள்வேன்."

"ஆமாம், வாத்தியார் இதற்காக உங்களை வெளுத்து வாங்கமாட்டாரா?"

போர்யா தோள்களைக் குலுக்கிக்கொண்டு பெருமித்துடன் புன்முறுவல் செய்தான்.

"வெளுத்து வாங்குவாரா? எதற்காக? இதற்காக எங்களுக்கு நன்றியல்லவா செலுத்துவார்?"

"படிப்புக்கு இதெல்லாம் தேவையாக இருந்தால், இவர்களை எதற்காகக் கண்டிக்கப் போகிறார்கள்?" என்று மீசைக்காரத் தொழிலாளி ஆமோதித்தான்.

இந்தப் பேச்சு பிற பிரயாணிகளையும் ஈர்த்தது. வெயிலால் பழுப்பேறிய ஓர் இளம் லெப்டினன்ட் மறு புறமிருந்து வந்து, மேல் பலகைமீது முழங்கையை வைத்துச் சாய்ந்து கொண்டான். கூட்டுப்பண்ணைப் பெண்கள் இருவர், கொட்டைகளைக் கடுக்கு முடுக்கென்று கடித்துத் தோல் போக்கிய வண்ணம், வந்தார்கள். விற்கண்ணாடி அணிந்த உயரமான வழுக்கைத் தலையர் ஒருவரும் தொழிற்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறு எல்லோரும் சிரத்தை கொள்ளவே, போர்யாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அவர்கள் கேள்வி கேட்பதற்குக் கூடக் காத்திராமல் உற்சாகத்தோடு பேசினான்.

"எங்கள் பள்ளிக்கூடத்திற்கு எவ்வளவு தூரம் நன்மை செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடையில் ஒரு பச்சைப் பாம்பின் விலை ஐந்து ரூபிள்; வாங்கப் போனால் தெரியும் அதன் அருமை! வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம்! தவளைகளோ... ஒவ்வொன்றும் குறைந்தது ஐம்பது கொபேக் இருக்கும். ஆகவே அவைகளுக்கு வேறு ஐந்து ரூபிள் ஐம்பது கொபேக் ஆகும்... இவற்றை வைக்கும் கண்ணாடிப் பெட்டியோ!...அதை வாங்குவதற்கு ஐம்பது ரூபிள் வேண்டும். அப்படியிருக்க, நீங்கள் என்னடா என்றால் `வெளுத்து வாங்கமாட்டாரா?` என்கிறீர்கள்!"

பிரயாணிகள் சிரித்துத் தலையசைத்தார்கள்.

"தம்பியைச் சொன்னதற்கு உனக்கு நன்றாய் வேண்டும்!"

"அதிலும் ஏதாவது நண்மை இருக்கலாம், யார் கண்டது?"

"இவைகளைப் பிடிப்பதற்கு உனக்கு அதிக நாள் ஆயிற்றா?" என்று கேட்டான் லெப்டினன்ட்.

"இரண்டு வாரங்கள் ஆயின. காலை உண்டிக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் வேட்டையாட வெளியே செல்வேன். பகல் உணவுக்கு மட்டுமே வீட்டுக்கு வருவேன்; மறுபடியும் மாலை வரையில் வெளியே சுற்றுவேன்." போர்யா தொப்பியை எடுத்து, அதனால் விசிறிக்கொண்டான். "தவளைகளையும் தேரைகளையும், பொறுத்த வரையில் அவ்வளவு கஷ்டமில்லை... பல்லிகள் தான் எங்கும் இருக்கின்றனவே; ஆனால் பச்சைப்பாம்புகளோ... ஒரு சமயம் ஒன்றைப் பார்த்த்தும் அதைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அது சரசரவென்று குட்டைக்குள் பாய்ந்துவிட்டது. ஓட்டவேகத்தில் சட்டென்று நிற்க முடியாமல் நானும் தொபுக்கென்று குளத்தில் விழுந்துவிட்டேன். இது மிகவும் ஆபத்தான வேலை, தெரியுமா?"

"ஆமாம், ஆமாம், அது ஆபத்தானது தான்" என ஆமோதித்தான் லெப்டினன்ட்.

இப்பொழுது கிட்டத்தட்ட அப்பெட்டியில் இருந்தவர் அனைவரும் போர்யாவின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் புன்முறுவல் பூத்த முகங்கள் எட்டிப் பார்த்தன. போர்யா பேசும்போது எல்லோரும் அமைதியாக்க் கேட்டார்கள். அவன் நிறுத்தியதும், இலேசான சிரிப்பொலியும், மென்மையான பேச்சொலியும் கேட்டன.

"பையன் படுசுட்டியாக இருக்கிறான்."

"இத்துனூன்டுப் பயல், ஆனால் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறான்!"

"ஆமாம், ஆமாம்!" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் சொன்னார். "இதெல்லாம் சமுதாயத்திற்குப் பயன்படும் வேலை. என் காலத்தில் இப்படிப்பட்ட குழந்தைகளே இல்லை. கிடையவே கிடையாது!"

"பாட்டி மட்டும் தடுத்திராவிட்டால், இன்னும் நிறையப் பிடித்திருப்பேன்" என்றான் போர்யா. "இவைகளைக் கண்டு அவள் பயந்து சாகிறாள்."

"பாவம், பாட்டி!"

"அதனால் தான் நான் விரியன் பாம்பைப்பற்றி அவளுக்கு ஒன்றும் சொல்லவில்லை."

"எதைப்பற்றி?"

"விரியன் பாம்பைப்பற்றி. நான்கு மணி நேரம் அதை விரட்டிக்கொண்டு போனேன். அது ஒரு கல்லுக்கு அடியில் புகுந்துவிட்டது; அதற்காகப் பதிபோட்டுக் காத்திருந்தேன். அது வெளியில் வந்ததும் லபக்கென்று பிடித்துவிட்டேன்."

"அப்படியென்றால் உன்னிடம் ஒரு விரியன் பாம்பு வேறு இருக்கிறது என்றா சொல்கிறாய்?" என்று இடைமறித்தான் தொழிலாளி.

"ஆமாம். ஜாடிக்குள் இருக்கிறது" என்று பெஞ்சிக்குக்கீழ் சுட்டிக்காட்டினான் போர்யா.

"இது வேறு வம்பா!" என்று இருண்ட மூலையிலிருந்த பெண் அங்கலாய்த்தாள்.

அங்கு இருந்தவர்களிடையே மௌனம் குடிகொண்டது. கேலிப் பேச்சுகளெல்லாம் நின்றுவிட்டன. லெப்டினன்ட் மட்டும் சிரித்துக்கொண்டே, "ஒருவேளை அது விரியன் பாம்பு இல்லையோ என்னவோ?" என்றான்.

"விரியன் பாம்பு இல்லையா? அப்படியானால் வேறு என்னவாம்?" என்று போர்யா ஆத்திரத்தோடு கேட்டான்.

"இன்னொரு பச்சைப் பாம்பு." "அந்த வேறுபாடு கூட எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?"

"எங்கே, காட்டு பார்க்கலாம்!"

"ஐயோ, சனியனை ஏனையா விலைக்கு வாங்குகிறீர்கள்? அது இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும், ஐயா!" என்ற குரல் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்தது.

"அட, காட்டட்டுமே. கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம்."

"அதில் அப்படி என்ன வேடிக்கை இருக்கின்றது? நினைத்தாலே குமட்டுகிறது!"

"உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதைப் பார்க்க வேண்டாம்."

போர்யா பெஞ்சிக்கு அடியிலிருந்த பையை வெளியே இழுத்து, அதன் அருகில் உடகார்ந்து கொண்டான். வழியிலிருந்தவர்கள் இடம்விட்டு நகர்ந்தனர். பெஞ்சிகளின் மீதிருந்தவர்கள் எழுந்திருந்து, கழுத்தை நீட்டிப் பார்த்தார்கள்.

"எனக்கு வயது நாற்பதுக்குமேல் ஆகின்றது; ஆனாலும் பச்சைப் பாம்புக்கும் விரியன் பாம்புக்கும் உள்ள வித்தியாசத்தை என்னதான் மண்டையை உடைத்துக்கொண்டாலும் என்னால் சொல்ல முடியாது" என்றார் கண்ணாடிக்காரர்.

"பார்த்தீர்களா! உங்கள் பள்ளிக்கூடத்திலும் நிலவுயிர்க் காட்சிசாலை ஒன்று இருந்திருந்தால், நீங்களும் அறிந்திருக்க முடியும்" என்று கிழவனார் குறிப்பிட்டார்.

"பச்சைப் பாம்பின் தலையில் மஞ்சள் புள்ளிகள் இருக்கும்" போர்யா ஒரு பக்கத்தில் ஜாடியுள் பார்த்துக்கொண்டு சொன்னான். "ஆனால் விரியன் பாம்புக்கு எந்த..." அவன் திடீரென்று பேசுவதை நிறுத்தினான்; முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் சாயை படர்ந்தது. "விரியன் பாம்பு...விரியன் பாம்புக்குப் புள்ளிகள்..." மறுபடியும் நிறுத்திவிட்டு ஜாடியின் மறு பக்கத்தைப் பார்த்தான். பெஞ்சிக்கு அடியில் உற்று நோக்கினான். பிறகு மெதுவாக அவன் பார்வை தரையை நோக்கித்தன் காலடி பக்கத்தில் சென்றது.

"அது அங்கு இல்லையா?" என்று யாரோ கேட்டார்.

போர்யா எழுந்திருந்து, முட்டிகளில் கைவைத்தபடி நின்றுகொண்டு, ஜாடியை உற்று நோக்கினான்.

"அது... இதிலே தான். அது சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்த்து... இதிலே தான்."

யாரும் பேசவில்லை. மறுபடியும் பெஞ்சிக்கு அடியில் பார்த்தான் போர்யா.

"துணி அவிழ்ந்து கிடக்கிறது. நான் பலமாகத் தான் கட்டினேன்; அப்படியிருக்க அது..."

யாரும் துணியைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தரையின்மேல் விழிப்பாக நோக்கி, தங்கள் கால்களை மாற்றி மாற்றி வைத்தனர்.

"நல்ல தொந்தரவப்பா!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார் கண்ணாடிக்காரர். "இங்கு தான் அது ஊர்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாயா?"

"நல்ல சங்கடமப்பா!..."

"இருட்டில் யாரையாவது கடித்துவிடப் போகிறது!"

வயதான கூட்டுப் பண்ணைக்காரி எழுந்து உட்கார்ந்து கொண்டு, போர்யாவை உற்று நோக்கினாள்.

"தம்பி, நீ என்ன செய்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொண்டாயா? அடுத்த மூன்றாவது ஸ்டேஷனில் நான் இறங்க வேண்டும்; என்னுடைய சாமான்கள் எல்லாம் பெஞ்சிக்குக் கீழே இருக்கின்றன. அவற்றை எப்படி எடுப்பேன்?"

போர்யா பதிலே சொல்லவில்லை. அவனுடைய காதுகள் நெருப்பெனச் சிவந்தன; அவன் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள் நிறைந்திருந்தன. கைகளைப் பக்கங்களில் வைத்து, விரல்களால் தொடைகளில் தட்டிக்கொண்டே, பெஞ்சிக்கு அடியில் குனிந்து பார்ப்பதும் நிமிர்ந்து நிற்பதுமாயிருந்தான்.

"அதனால் ஒரு நன்மையும் ஏற்படாதென்று நான் அப்போதே சொன்னேனே!" என்று இருண்ட மூலையிலிருந்த பெண் கத்தினாள்.

"மாஷா அத்தை! ஏ, மாஷா அத்தை!" என்று ஒருத்தி கூப்பாடு போட்டாள்.

"என்ன அது?" பெட்டியின் ஓரத்திலிருந்து பதில் வந்தது.

"ஜாக்கிரதையாக இருங்கள். பெஞ்சிகளுக்கீழே ஒரு விரியன் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது."

"என்ன அது? விரியன் பாம்பா?"

பெட்டியில் ஒரே இறைச்சல். ஒரு பெண் கண்டக்டர், கண்டக்டர்களின் அறையிலிருந்து தூக்கக் கண்களோடு வெளியே வந்தாள். திடீரென்று அவளுடைய கண்கள் அகலத் திறந்தன.

தொழிற்பள்ளி மாணவர்கள் இருவரும் ஒரு கிழவியை மேல் பலகைக்குத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தனர்.

"நீ மேலே போ, பாட்டி. எவாக்குவேஷனுக்கு வேளை வந்துவிட்டது!"

"கூட்டம் நிறைந்திருந்த பெஞ்சிகள் மளமளவென்று காலியாகிவிட்டன. மேல் பலகைகளிலிருந்து பல பெண்களின் கால்கள் தொங்கிக் கொண்டிருந்தன. கீழேயிருந்த பிரயாணிகள் எதிர்ப் பெஞ்சிகளின்மீது தங்கள் பாதங்களை வைத்துக் கொண்டனர். தீக்குச்சிகளைக் கொழுத்திக்கொண்டும் பாட்டரி விளக்குகளைப் பிடித்துக்கொண்டும் இடைவழியில் பாம்பைத் தேடினர் சிலர்.

அந்தப் பெண் கண்டக்டர் இடைவழியில் நடந்துகொண்டு, ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வந்தாள்.

"என்ன விஷயம்? இங்கு என்ன நடந்தது?"

யாரும் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. ஏக்காலத்தில் பல குரல்கள் கேட்டன. சிலர் கோபத்தோடும், சிலர் களிப்போடும் பேசினர்.

"ஒரு சிறுவனின் காரணமாகத்தான் இந்தத் தொல்லை எல்லாம்!"

"மீஷா! மீஷா! எழுந்திரு, இங்கு ஒரு விரியன் பாம்பு இருக்கிறது!"

"ஹா... ம்... எந்த ஊர் அது?"

திடீரென்று ஒரு பெண் கீச்சிட்டாள். அது தொடர்ந்து நிலவிய அமைதியைக் கலைத்தது. "பயப்பட வேண்டாம், அது என் கச்சைதான்" என்று உக்ரேனிய பாணியில் கூறியது ஒரு மென்மையான குரல்.

வெளிறிய முகத்துடன் திருட்டு விழி விழித்த போர்யாவைக் கண்ட கண்டக்டர், அவனைப் பார்த்து, "ஆமாம்?...நீ என்ன செய்தாய்? என்று கேட்டாள்.

"கட்டியிருந்த துணி அவிழ்ந்துகொண்டது...நான் அதை நன்றாகத்தான் கட்டிவைத்தேன், தவிர அது..."

"இப்படி விஷப் பாம்புகளை எல்லாம் கொண்டுவரும்படி சிறுவர்களிடம் சொல்கிற வாத்தியார் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமே!" என்று கண்ணாடிக்காரர் சொன்னார்.

"என்னை யாரும் கொண்டுவரச் சொல்லவில்லை... என்று முணுமுணுத்தான் போர்யா. "என்... என்னுடைய யோசனைதான் அது."

"பையன் கொஞ்சம் சுய யோசனையைக் காட்டியிருக்கிறான்" என்று சிரித்தான் லெப்டினன்ட்.

நிலைமையை நன்கு புரிந்துகொண்டாள் கண்டக்டர்.

"உன்னுடைய யோசனைதானா அது!" என்று சிணுங்குவது போலக் கூறினாள். "சரி சரி, பெஞ்சிக்கு அடியில் தவழ்ந்து போய், அதைப் பிடி. போடா, போய்ப் பிடித்துவா! என்னைப் பிடிக்கச் சொல்கிறாயா என்ன? போ, போ!"

போர்யா பெஞ்சிக்கு அடியில் தவழத் தொடங்கினான். கண்டக்டர் அவனுடைய ஜோடுகளைப் பற்றிக் கொண்டு, முன்னைவிடப் பலமான குரலில், "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஊனக்கென்ன கிறுக்கா? வெளியே வா, வெளியே வாவென்று சொல்லுகிறேனே, கேட்கிறதா!" என்றாள்.

போர்யா தேம்பி அழுதுகொண்டு பெஞ்சிக்கு அடியில் பாதத்தை மெள்ள அசைத்தான்.

"நான்... அதை... போக... விட்டேன்... அதனால்... நானே... எப்படியும்... பிடிக்க வேண்டும்."

"போதுமடா ராஜா, நிறுத்து" என்று கூறி பெஞ்சிக்கு அடியில் பாம்பைத் தேடிக் கொண்டிருந்த போர்யாவை வெளியே இழுத்தான் லெப்டினன்ட்.

ஒரு சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றாள் கண்டக்டர். பிறகு வாசலை நோக்கிப் புறப்பட்டாள்.

"நான் போய் ஸீனியர் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்" என்று சொன்னாள். நீண்ட நேரமாக அவள் திரும்பவேயில்லை. பிரயாணிகள் கவலைப்பட்டுச் சலித்துப் போய்விட்டனர். பேச்சுகள் குறைந்தன; அமைதி நிலவியது. லெப்டினன்டுடன் தொழிற்பள்ளி மாணவர்கள் இருவரும் வேறு சிலரும் சேர்ந்து பெஞ்சிகளின் அடியிலிருந்து கைப்பெட்டிகளையும் பைகளையும் ஜாக்கிரதையாக வெளியே இழுத்துவிட்டு, விரியன் பாம்பைத்தேடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்டுபிடித்து விட்டார்களா, என்ன என்பதைப்பற்றி இடையிடையே விசாரித்துக் கொண்டு, பொதுவாக நச்சுப்பாம்புகளைப் பற்றிய பேச்சில் மற்றவர்கள் ஈடுபட்டனர்.

"எந்த நல்ல பாம்புகளைப்பற்றிச் சொல்கிறீர்கள்? தெற்கில் தானே நல்ல பாம்புகள் உண்டு!"

"...கையை மிகவும் அழுத்தமாகக் கட்டி, இரத்தத்தை உறிஞ்சி, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் அந்த இடத்தைச் சுட்டுவிட வேண்டும்."

"ஐயா, ரொம்ப நன்றி! பழுக்கக் காய்ச்சிய இரும்பா, சரிதான், சரிதான்!"

வயதான கூட்டுப் பண்ணைக்காரி குறிப்பாக யாரையும் பார்க்காமலே, "சாமான்களை எடுப்பதற்குக் கூட நான் பெஞ்சின் பக்கம் செல்லப் போவதில்லை! ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி நான்காம் வருஷத்தில் என்னுடைய மைத்துனியை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவள் மருத்துவ விடுதியில் இரண்டு வாரங்கள் இருக்க நேர்ந்தது." என்று முறையிட்டாள்.

வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் இப்போது மூன்றாவது மேல் பலகையில் உட்கார்ந்திருந்தார்.

"உங்களுடைய மைத்துனி அதிர்ஷ்டசாலிதான். விரியன் பாம்பு கடித்தால் உயிருக்கே ஆபத்து" என்று கவலையில்லாமல் அவர் சொன்னார்.

"இதோ இருக்கிறது!" தொழிற்பள்ளி மாணவர்களுள் ஒருவன் திடீரென்று கூச்சலிட்டான்.

அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாரும் "அப்பாடா!" என்று கவலை நீங்கிப் பெருமூச்சு விடுவதுபோலத் தோன்றியது; சக்கரங்கள் மிகுந்த உற்சாகத்தோடு உருளத் தொடங்கின.

"அதைக்கண்டுபிடித்துவிட்டாயா, இல்லையா?"

"எங்கே இருக்கிறது?"

"சீக்கிரமாகக் கொன்றுவிடுங்கள்!"

மண்டியிட்டு அமர்ந்திருந்த தொழிற்பள்ளி மாணவனைச் சூழ்ந்து பலர் கூடிவிட்டனர். இடித்துத்தள்ளி ஒருவர் வழியில் மற்றவர் புகுந்துகொண்டு, லெப்டினன்ட் பாட்டரி விளக்கைக் காட்ட பெஞ்சிக்கு அடியில் எல்லோரும் கூர்ந்து நோக்கினர்.

"பெஞ்சிக்கு அடியில் இருக்கிறது என்றா சொல்கிறாய்?"

"ஆம்! அதோ, அந்த முலையில் தான்."

"நீ அதை எப்படிப் பிடிக்கப் போகிறாய்?"

"தெரியவில்லை. அது சிரமந்தான்."

"சரி சரி, சும்மா நிற்காதீர்கள்! அது வேறு ஓடிப்போய்விடப் போகிறது!"

ஸீனியர் கண்டக்டரை அழைத்துக்கொண்டு பெண் கண்டக்டர் வந்து சேர்ந்தாள். ஸீனியர் கண்டக்டர் குனிந்து, பெஞ்சிக்கு அடியில் இருண்ட மூலையில் வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டே, பெண் கண்டக்டரைக் கையினால் சைகை காட்டி அழைத்து, "உலைக் கம்பியை எடுத்து வா!" என்று சொன்னான்.

பெண் கண்டக்டர் அங்கிருந்து போய்விட்டாள். வேடிக்கை பார்க்க எல்லோரும் காத்திருந்தனர். வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர், மூன்றாவது பலகையில் உட்கார்ந்து, கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே, "இன்னும் நாற்பது நிமிடங்களில் நாம் மாஸ்கோவில் இருப்போம். நேரம் எப்படிப் பறந்துவிட்டது. எல்லாம் ...ம்... எல்லாம் இந்தப் பையனால் தான்" என்று சொன்னார்.

பலர் சிரித்தனர். தொழிற்பள்ளி மாணவனைச்சுற்றி நின்றிருந்தவர்களெல்லாம் போர்யா இருப்பதை அப்போதுதான் தினைத்துக்கொண்டவர்களைப் போல அவனையே நோக்கினர். போர்யாவோ கவலையோடும் களைப்போடும், தனது அழுக்கான கைகளை மெள்ளத் துடைத்துக்கொண்டு ஒரு பக்கமாக நின்றான்.

"என்னடா ராஜா, ஊன்னுடைய வேலையெல்லாம் வீணாகிடும் போலிருக்கிறதே" என்று சொன்னான் லெப்டினன்ட். நீ படாத பாடுபட்டு வேட்டையாடிக்கொண்டு வந்துள்ள பள்ளிக்கூடக் காட்சிப் பொருளை உலைக் கம்பியால் இவர் தீர்த்துவிடப் போகிறாரே."

போர்யா, முகத்திற்கு எதிரே கையை வைத்துக்கொண்டு, விரல் நகத்தால் அழுக்கைச் சுரண்டினான்.

"வேட்டைக்காரா, என்ன வருத்தமா?" என்று தொழிற்பள்ளி மாணவன் வினவினான்.

"எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்று மெதுவாய்ச் சொன்னான் போர்யா.

பிரயாணிகள் யாருமே பேசவில்லை.

"இது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை, இல்லையா?" என்று மீசைக்காரத் தொழிலாளி திடீரென்று உரத்த குரலில் சொன்னான். அவன் கால்மேல் கால் போட்டு அமைதியாக உட்கார்ந்துகொண்டு, களிமண் படிந்த தன் செருப்பின் முனையைப் பார்த்த வண்ணம் இருந்தான்.

"எது சரி இல்லை?" என்று அவன் பக்கம் திரும்பிக் கேட்டான் ஸீனியர் கண்டக்டர்.

"பையன் அதை வேடிக்கைக்காகக் கொண்டுவரவில்லை. அதைக் கொல்லுவதென்றால் ஏதோ போலிருக்கிறது. என்ன நான் சொல்கிறது?"

"அப்படியானால் அதை என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கண்ணாடிக்காரர் கேட்டார்.

"அதைப் பிடிக்க வேண்டும்! அவ்வளவு தான்!" என்று தொழிற்பள்ளி மாணவன் பதில் சொன்னான். "அதைப்பிடித்து, வேட்டைக்காரனிடம் கொடுத்துவிட வேண்டும்."

உலைக் கம்பியை எடுத்துக்கொண்டு பெண் கண்டக்டர் வந்தாள். அவள் போர்க்கோலம் பூண்டிருப்பது போலத் தோன்றியது.

"இன்னும் இங்கே தான் இருக்கிறதா? இல்லாவிட்டால் எங்கேயாவது போய்விட்டதா? யாராவது விளக்கைக் கொளுத்துங்களேன்" என்றாள் அவள்.

அவள் கையிலிருந்த உலைக் கம்பியை லெப்டினன்ட் மெதுவாக வாங்கிக்கொண்டான்.

"தோழர்களே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? விரியன் பாம்புக்கு உயிர்ப்பிச்சை கொடுத்துவிடலாமா?... அந்தப் பையனைப் பாருங்கள்--பாவம், அவன் அரும்பாடு பட்டிருக்கிறானே!" என்றான்.

குழப்பமடைந்த பிரயாணிகள் எதுவும் பேசவில்லை. ஸீனியர் கண்டக்டர், கடுங்கோபங் கொண்டு, முகமெல்லாம் சிவக்க லெப்டினன்டை உருட்டி விழித்தான்.

"உங்களுக்கென்னவோ வேடிக்கையாக இருக்கிறது. அது யாரையாவது கடித்துவிட்டால் நாங்கள் அல்லவா பதில் சொல்ல வேண்டும்?" என்றான்.

"ஆமாம், நண்பரே, பாம்பைக் கொன்றாலுங்கூட வேறொன்றுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டுமே?" என்று தொழிற்பள்ளி மாணவன் கூறினான்.

"பதில் சொல்ல வேண்டுமா?" என்று பெண் கண்டக்டர் திருப்பிச் சொன்னாள். "எதற்காக நாங்கள் பதில் சொல்ல வேண்டுமாம்?"

"பள்ளிக்கூடச் சொத்தை அழித்ததற்காக. ஆமாம், அதற்காகத்தான்."
ஒவ்வொருவரும் மனமாரச் சிரித்து, பிறகு விவாதத்தில் இறங்கினர். எப்படியும் பள்ளிக்கூடத்தில் விரியன் பாம்பை வைக்கமாட்டார்கள் என்று சிலர் சொன்னார்கள். பள்ளியில் வைத்திருப்பார்கள்; உயிர்நூல் ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்கும் என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். விரியன் பாம்பை மறுபடியும் போர்யாவிடம் கொடுப்பது ஆபத்து எனச் சிலர் கருதினர். "டிராமில் அல்லது சுரங்கரயிலில் அவன் மீண்டும் தவற விட்டுவிடுவான்" என்றனர்.

"நான் இனிமேல் அதைத் தவற மாட்டேன்! ஆணையாகச் சொல்லுகிறேன், நான் தவற விடமாட்டேன்!" என்று பெரியவர்கள் எல்லாம் இரக்கப்படும் அளவிற்குப் பரிதாபத்தோடு போர்யா சொன்னான். வயதான கூட்டுப் பண்ணைக்காரி கூட மனமிரங்கிவிட்டாள்.

"இனிமேல் அதை விட்டுவிடமாட்டான்" என்று அவள் கெஞ்சும் குரலில் சொன்னாள். "அவன் இப்போது புத்திசாலியாகிவிட்டான்! கொஞ்சம் இரக்கம் காட்ட வேண்டியதுதான். மற்ற பிள்ளைகள் எல்லாம் விளையாடி, விடுமுறைக்காலத்தை இன்பமாகக் கழிக்கின்றனர்; அப்படியிருக்க இவனோ இந்தச் சனியன்களைப் பிடிக்க இரண்டு வாரங்கள் செலவிட்டிருக்கிறான்."

"ஊம், ஆமாம்! நியாயந்தானே! மற்றவருடைய உழைப்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதுதான்" என்று வைக்கோல் தொப்பி அணிந்திருந்த கிழவர் கூறினார்.

"தத்துவம் பேசுவதில் உமக்கு அதிகப் பிரியமென்று கெரிகிறது." என்று கண்ணாடிக்காரர் தலையை நிமிர்த்திக்கொண்டு சொன்னார் "சரி, பையனையும் அவனுடைய பாம்பையும் அவனுடைய வீட்டில் கொண்டுபோய் விடுவீரா" என்று வினவினான்.

"ம்... வந்து... ஆமாம்... அவனை... நான்..."

"சரி சரி, நான் கொண்டுபோய் விடுகிறேன். நீ எங்கு குடியிருக்கிறாய்?" என்றான் லெப்டினன்ட்.

"செர்னிஷேவ்ஸ்கிய் தெருவில்."

"அது என் வழியில் இல்லாவிட்டாலுங்கூட, நான் உன் வீடுவரை வருகிறேன்."

"வேட்டைக்காரர்களே, பாம்பைக் கொன்றாயிற்றா இல்லையா? என்று பெட்டியின் மறு கோடியிலிருந்து யாரோ கேட்டார்கள்.

"இல்லை. அதற்கு உயிர்ப்பிச்சை அளித்துவிட்டோம்" என்று தொழிற்பள்ளி மாணவன் பதில் சொன்னான்.

"வேட்டைக்காரர்களை"க் கடுகடுப்புடன் நோக்கினான் ஸீனியர் கண்டக்டர்.

"நீங்களெல்லாம் இன்னும் குழந்தைகளாகத் தானிருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டுப் பெண் கண்டக்டரின் பக்கம் திரும்பி, "நலக்கரி இடுக்கியைக் கொண்டு வா" என்றான்.

"குழந்தைகள்!" என்று அவளும் திருப்பிச் சொல்லிக் கொண்டு இடுக்கியைக் கொண்டுவரச் சென்றாள்.

பத்து நிமிடங்கள் கழித்து, விரியன் பாம்பு ஜாடிக்குள் சென்றது. லெப்டினன்ட் ஜாடியைப் பலமாகக் கட்டி, தன் முட்டியின்மேல் வைத்துக்கொண்டான். போர்யா, லெப்டினன்டின் பக்கத்தில் மகிழ்ச்சியோடு மௌனமாக அமர்ந்திருந்தான்.

மாஸ்கோ போகும் வரையில், பிரயாணிகள் தங்கள் பள்ளி வாழ்வை எண்ணிப் பார்த்துக்கொண்டு மிகவும் உற்சாகத்தோடிருந்தனர்.


*ட்ரிடான்- ஒருவகை நீர்நிலவுயிர்

எழுதியவர்- யூ. ஸோட்னிக்

இடம்பெற்ற நூல்- நீச்சல் பயிற்சி
மொழிபெயர்ப்பாளர்- சு. ந. சொக்கலிங்கம்
பதிப்பாசிரியர்- பூ. சோமசுந்தரம்
ஓவியர்கள்- ஆ. ஏலிசேயிவா, எம். ஸ்கோபிலிவா
தமிழில் முதல் பதிப்பு- 1960
*முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ*

(சொற்களைப் பிரித்து- சேர்த்து எழுதும் முறை தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பினும் அப்படியே விடப்பட்டுள்ளது.)

**விரைவில் - ராயாவின் "கைதிகள்" **

Friday, 14 March 2008

மீஷ்கா சமைத்த பொங்கல்



சென்ற கோடையில் நான் அம்மாவோடு கிராமத்தில் இருந்தபோது, மீஷ்கா எங்களுடன் தங்குவதற்கு வந்தான். அவன் இல்லாமல் தனிமையில் வாடிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கும் பெருமகிழ்ச்சி.


'நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாக இருக்கலாம். நான் நாளை அதிகாலையில் கிளம்பி நகரத்துக்குச் செல்ல வேண்டும்; எப்போது திரும்பி வருவேன் என்று தெரியவில்லை. நீங்களாக சமாளித்துக் கொள்வீர்கள்தானே?'


'நிச்சயமாக', என்றறேன். 'நாங்கள் ஒன்றும் பாப்பாக்கள் அல்ல.'


'காலை உணவை நீங்களாகவேதான் சமைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பொங்கல் செய்யத் தெரியுமா?'


'எனக்குத் தெரியும்', மீஷ்கா சொன்னான். 'அது ரொம்ப சுலபம்.'


'மீஷ்கா', நான் கேட்டேன். 'நிஜமாகத்தான் சொல்கிறாயா? நீ எந்தக்காலத்தில் பொங்கல் செய்திருக்கிறாய்?'


'கவலைப்படாதே. அம்மா பொங்கல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதை என்னிடம் விடு. நான் உன்னைப் பட்டினி போட்டுவிட மாட்டேன். நீ சாப்பிட்டதிலேயே ஆகச் சிறந்த பொங்கலைச் சமைத்துத் தருகிறேன் பார்.'


காலையில் அம்மா எங்களுக்குத் தேநீருடன் சாப்பிடுவதற்காக் கொஞ்சம் ரொட்டியும் ஜாமும் கொடுத்துவிட்டு நொய்யரிசி இருக்குமிடத்தைக் காட்டினாள். அதை எப்படி சமைப்பது என்றும் சொன்னாள், ஆனால் நான் அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. அதுதான் மீஷ்காவுக்கு நன்றாகத் தெரியுமே, அப்புறம் எனக்கென்ன கவலை என்று எண்ணிக்கொண்டேன்.


அம்மா போன பிறகு மீஷ்காவும் நானும் மீன் பிடிக்க ஆற்றுக்குப் போக நினைத்தோம். எங்கள் தூண்டிலையும் எடுத்துக்கொண்டு கொஞ்சம் புழுக்களை சேகரித்துக்கொண்டோம்.


'ஒரு நிமிஷம்', 'நான் சொன்னேன். 'நாம் ஆற்றுக்குப் போய்விட்டால் பொங்கல் சமைப்பது யார்?'



'யாருக்கு வேண்டுமாம் சமையலும் சங்கடமும்?' என்றான் மீஷ்கா. 'அது ரொம்ப சிரமம். நாம் ரொட்டியும் ஜாமும் சாப்பிட்டுக்கொள்வோம். ரொட்டி நிறையவே இருக்கிறது. நமக்குப் பசிக்கும்போது பொங்கல் செய்துகொண்டால் போயிற்று.'



நிறைய ஜாம் சான்ட்விச்கள் செய்துகொண்டு ஆற்றுக்குப் போனோம். ஆற்றில் நீச்சலடித்துவிட்டு மணலில் காய்ந்தபடி சான்ட்விச்களைச் சாப்பிட்டோம். பிறகு மீன் பிடித்தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தும் மீன் எதுவும் சிக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தவையெல்லாம் சுமார் டஜன் சின்னஞ்சிறு அயிரை மீன்கள் மட்டுமே. அன்று பகல் முழுவதையும் ஆற்றோரமே செலவிட்டோம். மாலை நெருங்கியபோது பயங்கரமாகப் பசிக்க ஆரம்பிக்கவே, ஏதாவது சாப்பிடலாம் என்று வீட்டுக்கு வந்தோம்.



'அப்புறம் என்ன மீஷ்கா', நான் கேட்டேன். 'நீ தானே நிபுணன். சொல் நாம் என்ன சமைக்கலாம்?'



'கொஞ்சம் பொங்கல் செய்யலாம்,' மீஷ்கா சொன்னான். 'அதுதான் சுலபம்.'
'ஆகட்டும்,' என்றேன்.



அடுப்பை மூட்டினோம். மீஷ்கா நொய்யையும் பாத்திரதையும் எடுத்தான்.
'கொஞ்சம் அதிகமாகவே செய். எனக்கு ரொம்பப் பசி.'



அவன் ஏறக்குறைய பாத்திரம் முழுவதும் நொய்யை நிரப்பிவிட்டு விளிம்பு வரை நீரை நிரப்பினான்.



'தண்ணீர் கொஞ்சம் அதிகமில்லை?' நான் கேட்டேன்.



'இல்லை. அம்மா இப்படித்தான் செய்வாள். நீ அடுப்பை மட்டும் பார்த்துக்கொள். பொங்கலை என்னிடம் விட்டுவிடு.'



ஆகவே நான் தீயைக் கவனிக்க, மீஷ்கா பொங்கலைச் சமைத்தான்; அதாவது அவன் பேசாமல் பாத்திரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பொங்கல் தன்னைத்தானே சமைத்துக்கொண்டது.



சற்றைக்கெல்லாம் இருட்டிவிட நாங்கள் விளக்கை ஏற்றினோம். பொங்கல் இன்னும் வெந்துகொண்டிருந்தது. திடீரென்று நான் பாத்திரத்தின் மூடி உயருவதையும், பொங்கல் எல்லாப் பக்கமும் வழிவதையும் கவனித்தேன்.



'ஏ மீஷ்கா,' நான் கூப்பிட்டேன். 'பொங்கலுக்கு என்ன ஆயிற்று?'



'ஏன், பொங்கலுக்கு என்ன?'



'அது பாத்திரத்தைவிட்டு வெளியே எழும்புகிறது!'



மீஷ்கா ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு பொங்கலை திரும்பவும் பாத்திரத்துக்குள் தள்ள ஆரம்பித்தான். அவன் தள்ளத்தள்ள அது எழும்பிவந்து பக்கங்களில் வழிந்துகொண்டே இருந்தது.



'இதற்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. ஒருவேளை தயாராகிவிட்டதோ என்னவோ?'



ஒரு தேக்கரண்டியை எடுத்து கொஞ்சம் சுவைத்துப் பார்த்தேன். நொய் இன்னும் உலர்ந்தும் கெட்டியாகவுமே இருந்தது. 'அவ்வளவு தண்ணீரும் எங்கேதான் போயிற்று?'



'எனக்குத் தெரியாது,' மீஷ்கா சொன்னான். 'நான் ஏகப்பட்ட தண்ணீரை ஊற்றினேன். ஒருவேளை பாத்திரத்தில் ஓட்டை ஏதாவது உள்ளதோ?'



பாத்திரத்தை நாங்கள் நன்கு பரிசீலித்தோம். ஓட்டை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. 'ஆவியாகியிருக்கவேண்டும்,' அவன் சொன்னான். 'நாம் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்ப்போம்.'



அவன் கொஞ்சம் பொங்கலைப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்தான்; தண்ணீருக்கு இடமளிப்பதற்காக, கொஞ்சம் நிறையவே எடுக்கவேண்டியிருந்தது. அப்புறம் நாங்கள் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து மேலும் கொஞ்சம் சமைத்தோம். அது வெந்தது, வெந்தது நீண்ட நேரம். பிறகு திரும்பவும் வெளியில் வழிய ஆரம்பித்தது.



'ஏய், என்னாச்சு இதற்கு!' மீஷ்கா கத்தினான். 'ஏன் பாத்திரத்துக்குள்ளேயே இருக்கமாட்டேனென்கிறது?'



அவன் தன் கரண்டியை எடுத்து இன்னும் கொஞ்சம் பொங்கலை எடுத்துவிட்டு, மேலும் ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றினான்.



'பார்த்தாயா,' அவன் சொன்னான். 'நீ என்னடாவென்றால் தண்ணீர் அதிகம் என்று நினைத்தாய்.'



பொங்கல் தொடர்ந்து வேக ஆரம்பித்தது. அப்புறம், நீங்கள் நம்புவீர்களா, சற்றைக்கெல்லாம் மூடியைத் தூக்கிக்கொண்டு வெளியே ஊர்ந்துவர ஆரம்பித்தது!



நான் சொன்னேன்: 'நீ அதிகப்படியாக நொய்யைப் போட்டிருந்திருக்கவேண்டும். சமைக்கும்போது அது உப்புகிறது; அப்பொழுது பாத்திரதில் இடம் போதவில்லை.'



'ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும்,' என்றான் மீஷ்கா. 'அது உன் தப்புதான். பசிக்கிறது, நிறையப்போடு என்று நீதானே சொன்னாய், நினைவில்லை?'



'எவ்வளவு போட வேண்டும் என்று எனக்கு எப்படித் தெரியும்? சமைக்கத்தெரிந்தவன் நீதான்.'



'ஆமாம், எனக்கு சமைக்கத்தெரியும். நீ மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் இந்நேரம் சமைத்திருப்பேன்.'



'அப்படியென்றால் சரி. நீயே சமைத்துக்கொள், நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.'



நான் வேகமாக வெளியேறிவிட்டேன். மீஷ்கா தொடர்ந்து பொங்கலை சமைத்தான். அதாவது, மென்மேலும் பொங்கலை எடுப்பதும் தண்ணீரை சேர்ப்பதுமாக இருந்தான். சீக்கிரத்திலேயே மேசை பாதி வெந்திருந்த பொங்கல் வைக்கப்பட்ட தட்டுகளால் நிரம்பிவிட்டது. அவன் ஒவ்வொரு தடவையும் தண்ணீரை சேர்த்துக்கொண்டிருந்தான்.



கடைசியில் எனக்கு பொறுமை போய் விட்டது.



'நீ இதைச் சரியாகச் செய்யவில்லை. இப்படியே போனால் பொங்கல் தயாராவற்குள் விடிந்துவிடும்.'



'அது சரி. பெரிய உணவகங்களில் அப்படித்தான் சமைப்பார்கள், தெரியாதா உனக்கு? எப்பொழுதுமே மறுநாள் சாப்பாட்டை முதல்நாள் இரவே சமைத்துவிடுவார்கள். அப்போதுதான் காலையில் தயாராகியிருக்கும்.'



'உணவகங்களுக்கு அது சரிதான். அவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை, அவர்களிடம் வேறு சாப்பாடு மலைபோல இருக்கும்.'



'நாமும் அவசரப்பட வேண்டியதில்லை.'



'வேண்டியதில்லையா! நான் பட்டினி கிடக்கிறேன். அதோடு படுக்கவேண்டிய நேரமும் ஆகிவிட்டது. எவ்வளவு நேரமாகிவிட்டது பார்.'



'உனக்குத் தூங்க எவ்வளவோ நேரம் இருக்கும்,' இன்னொரு தம்ளர் நீரை பாத்திரதில் ஊற்றியபடியே கூறினான். தவறு எங்கே என்று சட்டென்று எனக்குப் புரிந்துவிட்டது.



'நீ பச்சைத் தன்ணீரை ஊற்றிக்கொண்டிருக்கும்வரை அது வேகப்போவதில்லை.'



'தண்ணீர் இல்லாமலே பொங்கல் சமைத்துவிடலாம் என்று நினைக்கிறாயா?'


'இல்லை. இன்னும் பாத்திரத்தில் நொய் அதிகமாக உள்ளது என்கிறேன்.'
நான் பாத்திரத்தை எடுத்து, பாதி நொய்யை வெளியே கொட்டிவிட்டு தண்ணீரை நிரப்பும்படி அவனிடம் சொன்னேன்.



குவளையை எடுத்துக்கொண்டு வாளிக்குச் சென்றான்.



'சே.' அவன் சொன்னான். 'தன்ணீர் முழுவதும் தீர்ந்துவிட்டது.'



'இப்பொழுது என்ன செய்வது? ஒரே கும்மிருட்டு. நம்மால் கிணற்றையே பார்க்க முடியாது.'



'என்ன! சரி நான் போய் ஒரு நொடியில் கொண்டுவருகிறேன்.'



அவன் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு, வாளியில் ஒரு கயிற்றை முடிந்து கிணற்றுக்குச் சென்றான். சில நிமிடங்களில் திரும்பி வந்தான்.



'எங்கே தண்ணீர்?' நான் கேட்டேன்.



'தண்ணீரா? கிணற்றில் இருக்கிறது.'



'உளறாதே. வாளியை என்ன செய்தாய்?'



'வாளியா? அதுவும் கிணற்றில்தான் இருக்கிறது.'



'கிணற்றிலா?'



'ஆமாம்.'



'உள்ளே போட்டுவிடாயா என்ன?'



'ஆமாம்.'



'அட மடக்கழுதையே. அப்படியானால் நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். தண்ணீருக்கு இப்போது என்ன செய்வது?'



'நாம் கெட்டிலை உபயோகிக்கலாமே.'



நான் கெட்டிலை எடுத்தேன். 'கயிற்றைக் கொடு.'



'என்னிடம் இல்லை.'



'எங்கே இருக்கிறது?'



'அங்கே அடியில்.'



'எங்கே அடியில்?'



'கிணற்றில்.'



'ஆக, நீ வாளியைக் கயிற்றோடு உள்ளே போட்டுவிட்டாய்?'



'ஆமாம்.'



நாங்கள் வேறு கயிறு தேட ஆரம்பித்தோம், ஆனால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.



'நான் போய் பக்கத்து வீட்டாரைக் கேட்டு வருகிறேன்,' மீஷ்கா சொன்னான்.



'உன்னால் அது முடியாது. 'மணியைப்பார். எல்லோரும் எப்போதோ தூங்கியிருப்பார்கள்.'



அந்த நேரம் பார்த்துத்தானா எனக்குத் தாகம் எடுக்க வேண்டும்? எனக்கு தண்ணீர் குடித்தே தீரவேண்டியிருந்தது.



மீஷ்கா சொன்னான்: 'அது அப்படித்தான். தண்ணீர் இல்லாதபோதுதான் தாகம் எடுக்கும். அதனால்தான் பாலைவனத்தில் மக்களுக்குத் தாகம் எடுக்கிறது--ஏனென்றால் பாலைவனத்தில் தண்ணீர் கிடையாது.'



'பாலைவனத்தை விடு,' நான் சொன்னேன். 'போய் ஏதாவது கயிறு தேடிவா.'



'எங்கே தேடுவதாம்? எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். நாம் தூண்டில் கயிறைப் பயன்படுத்துவோம்.'



'அது வலுவாக இருக்குமா?'



'அப்படித்தான் நினைக்கிறேன்.'



'இல்லையென்றாலோ?'



'இல்லையென்றால், அறுந்துவிடும்.'



நாங்கள் தூண்டில் கயிறைக் கழற்றி கெட்டிலில் கட்டிக்கொண்டு கிணற்றுக்குச் சென்றோம். நான் கெட்டிலைக் கிணற்றுக்குள் இறக்கி, நீரை நிரப்பினேன். கயிறு ஒரு வயலின் தந்தியைப் போல விறைப்பாக இருந்தது.



'இது அறுந்துதான் போகப்போகிறது,' என்றேன். 'வேண்டுமானால் பார்.'



'நாம் மிக மிகக் கவனமாக மேலே தூக்கினால் ஒருவேளை தாங்கலாம்.' என்றான் மீஷ்கா. நான் என்னால் ஆனமட்டும் கவனமாக அதை உயர்த்தினேன். தண்ணீர்மட்டத்துக்கு மேலே உயர்த்தினேனோ இல்லையோ, தொபீர் என்ற சப்தம் கேட்டது. கெட்டில் போய்விட்டது.



'அறுந்துவிட்டதா என்ன?' மீஷ்கா கேட்டான்.




'பின்னே இல்லையா? நாம் தண்ணீருக்கு என்ன செய்வது?'



'சமோவாரை வைத்து முயற்சி செய்யலாம்', என்றான் மீஷ்கா.



'வேண்டாம். அதற்குப் பேசாமல் சமோவாரை நாமே நேரடியாகக் கிணற்றுக்குள் எறிந்துவிடலாம். வேலை மிச்சம். அதோடு நம்மிடம் வேறு கயிறும் கிடையாது.'



'அப்படியானால், பானையை உபயோகியேன்.'



'தூக்கிப்போடுவதற்கு அத்தனை பானைகள் எங்களிடம் இல்லை', என்றேன்.
'நல்லது. ஒரு தம்ளரை வைத்து முயற்சிசெய்.'



'தம்ளர் தம்ளராக இரவு முழுவதும் தண்ணீர் இறைக்கலாமென்கிறாயா?'



'வேறு என்னதான் செய்வது? பொங்கலை சமைத்தாகவேண்டுமே? அதோடு எனக்கு ரொம்ப தாகமாகவேறு இருக்கிறது.'



'தகரப் போகணியை பயன்படுத்துவோம்.' என்று சொன்னேன். 'அது தம்ளரை விட கொஞ்சம் பெரியதும் கூட.'



நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச்சென்று தூண்டில் கயிறை போகணியில் அது கவிழ்ந்துவிடாதபடிக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குத்திரும்பினோம். நாங்கள் தாகத்தைத் தணித்துக்கொண்டபின் மீஷ்கா சொன்னான்:



'எப்பொழுதும் இப்படித்தான் நடக்கும்--உனக்கு தாகமாக இருக்கும்போது ஒரு கடலையே குடித்துவிடலாம்போலத் தோன்றும். குடிக்க ஆரம்பித்தால் ஒரு குவளையே போதுமென்று இருக்கும். ஏனென்றால், மக்கள் இயல்பிலேயே பேராசைக்காரர்கள்.'



'உன் பிதற்றலை நிறுத்திவிட்டு பாத்திரத்தை இங்கே கொண்டுவா. அப்போதுதான் நாம் டஜன் தடவைகள் உள்ளேயும் வெளியேயும் ஓடவேண்டியிருக்காது.'



மீஷ்கா பாத்திரத்தைக் கொண்டுவந்து அதை சரியாகக் கிணற்றின் விளிம்பில் வைத்தான். ஏறக்குறைய அதை என் முழங்கையால் தட்டிவிடத்தெரிந்தேன்.
'மடக் கழுதையே,' நான் சென்னேன். 'எதற்காக என் முழங்கைக்கடியிலேயே வைத்தாயாம்? அதைக் கையில் எடுத்து முடிந்த அளவுக்குத் தள்ளிப்பிடி. இல்லை, இதையும் தண்ணீரில் போட்டுவிடுவாய்.'



மீஷ்கா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிணற்றிலிருந்து தள்ளிப்போனான். நாங்கள் அதை நிரப்பிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். இதற்குள்ளாக எங்கள் பொங்கல் ஆறிப்போய், அடுப்பும் அணைந்துவிட்டிருந்தது. மீண்டும் அடுப்பை மூட்டி, பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினோம். வெகுநேரத்துக்குப் பிறகு அது கொதிக்க ஆரம்பித்து, மெதுவே கெட்டியாகி, தளப்புளவென்று சப்தமிட்டது.


'கேட்டாயா?' என்றான் மீஷ்கா. 'சீக்கிரத்தில் அருமையான பொங்கலைச் சாப்பிடப் போகிறோம்.'


நான் கொஞ்சமாகத் தேக்கரண்டியில் எடுத்து சுவைத்துப் பார்த்தேன். சகிக்கவில்லை! தீய்ந்துபோன கசப்புச் சுவையில் இருந்தது; நாங்கள் உப்புப் போடவும் மறந்துவிட்டோம். மீஷ்காவும் வாயில் போட்டுவிட்டு, உடனே துப்பிவிட்டான். 'இல்லை,' அவன் சொன்னான், 'இதைச் சாப்பிடுவதற்குப்பதில் பட்டினி கிடந்தே சாவேன்.'


'வேறு என்ன பண்ணுவது?'




'எனக்குத் தெரியாது.'


'மடத்தனம்!' கத்தினான் மீஷ்கா. 'நாம் மீன்களை மறந்துவிட்டோமே.'


'இப்போதுபோய் மீன்களோடு கஷ்டப்படவேண்டாம். சீக்கிரத்தில் விடியப்போகிறது.'


'நாம் அவற்றை வேகவைக்கப் போவதில்லை. வறுப்போம். ஒரே நிமிடத்தில் தயாராகிவிடும், வேண்டுமனல் பாரேன்.'


'அப்படியானால் சரி,' என்றேன். 'ஆனால் அதுவும் பொங்லைப்போல நேரம் பிடிக்குமென்றால் எனக்கு வேண்டவே வேண்டாம்.'


'ஐந்தே நிமிடத்தில் தயாராகிவிடும், பார்க்கத்தான் போகிறாய்.'


மீஷ்கா ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி அடுப்பில் நேராகத் தணல் மேல் வைத்தான், சீக்கிரம் ஆகவேண்டுமென்று.


என்ணெய் சடப்புடவென்று பொரிய ஆரம்பித்து, சட்டென்று தீப்பற்றிக்கொண்டது. மீஷ்கா வாணலியை வெடுக்கென்று எடுத்தான். நான் அதில் நீரை ஊற்ற விரும்பினேன். அனால் வீட்டில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. எனவே எண்ணெய் முழுவதும் தீரும்வரை எரிந்து முடித்தது. அறையே புகையால் நிரம்பியது. மீனில் ஒரு சில கரித்துண்டுகளே மிச்சமிருந்தன.


'நல்லது,' மீஷ்கா சொன்னான், 'இப்பொழுது எதை வறுப்பது?'


'இனி வறுக்கிற வேலையே வேண்டாம். நல்ல சாப்பாட்டை வீணாக்குவதுடன் வீட்டையே எரித்து சாம்பலாக்கிவிடுவாய். இன்றைக்கு நீ சமைத்தது போதும்.'


'ஆனால் நாம் எதைச் சாப்பிடுவதாம்?'


நாங்கள் பச்சை மாமிசத்தைச் சாப்பிடப்பார்த்தோம், ஆனால் அதுவொன்றும் உவப்பாயில்லை. பச்சை வெங்காயத்தைச் சாப்பிட முயன்றோம், அது கசந்தது. சமையல் எண்ணெயோ குமட்டியது. கடைசியில் ஜாம் பாட்டிலைத்தேடியெடுத்து, சுத்தமாக வழித்துச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப்போனோம். அதற்குள் நிரம்ப நேரம் ஆகிவிட்டது.


காலையில் ஓநாய்களைப் போலப் பசியோடு எழுந்தோம். மீஷ்கா கொஞ்சம் பொங்கல் வைக்க விரும்பினான். அவன் நொய்யை எடுப்பதைப் பார்த்தபோது நான் கல்லாய்ச் சமைந்துவிட்டேன்.


'தொடாதே,' நான் சொன்னேன். 'எங்கள் வீட்டுக்காரர் நடாஷா அத்தையிடம் போய் நமக்காகக் கொஞ்சம் பொங்கல் செய்து தரும்படிக் கேட்கிறேன்.'


நாங்கள் நடாஷா அத்தையிடம் போய் எல்லாவற்றையும் சொல்லி, எங்களுக்காகப் பொங்கல் சமைத்துத் தந்தால், அவளது தோட்டத்தைக் களையெடுத்துத் தருவதாக வாக்குறுதியளித்தோம். அவள் எங்கள் மேல் இரக்கப்பட்டு, கொஞ்சம் பாலும் முட்டைக்கோஸ் அடையும் கொடுத்துவிட்டு, பொங்கல் சமைக்க ஆரம்பித்தாள். நாங்கள் அதை மேலும் மேலும் சாப்பிட்டோம். நடாஷா அத்தையின் பையன் வோவ்கா கண்கள் விரிய எங்களைப் பார்த்தான்.


ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தோம். நடாஷா அத்தை ஒரு கொக்கியும் கொஞ்சம் கயிறும் தந்தாள். அவற்றை எடுத்துக்கொண்டு வாளியையும், கெட்டிலையும் கிணற்றிலிருந்து எடுக்கப்போனோம். அவற்றை எடுப்பதற்கு எங்களுக்கு நீண்ட நேரம் பிடித்தது. நல்லவேளையாக எதுவும் தொலையவில்லை. அதன் பின்னர், மீஷ்காவும், நானும், சிறுவன் வோவ்காவும் நடாஷா அத்தையின் தோட்டத்தில் களையெடுத்தோம்.


மீஷ்கா சொன்னான்: 'களை எடுப்பது ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது சுலபம். எப்படியும் பொங்கல் சமைப்பதைவிட சுலபம்தான்.'



[கதை: நிக்கொலாய் நோசோவ்; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/; ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்க.]

Tuesday, 11 March 2008

ஏழு நிறப்பூ

கதை: வாலண்டின் கட்டயேவ்; சித்திரம்: வி. லோசின்; ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபைனா க்ளாகோலேவா; (c) முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ; நன்றி: http://home.freeuk.com/russica4/books/flower/7.html (இந்தச் சுட்டியை அளித்து உதவியவர்: ராதா ஸ்ரீராம்; ஆங்கில வடிவில் படிக்க இங்கு செல்க)













முன்னொரு காலத்தில் ஷேன்யா என்றொரு சிறுமி வாழ்ந்து வந்தாள்.


ஒருநாள் ஷேன்யாவை அவளுடைய அம்மா, வளைய பிஸ்கோத்துகள் வாங்கிவருவதற்காக ரொட்டிக்கடைக்கு அனுப்பினாள். ஷேன்யா ஏழு வளைய பிஸ்கோத்துகளை வாங்கினாள்: அப்பாவுக்காக ஓமம் போட்டவை இரண்டு, அம்மாவுக்காக கசகசா போட்டவை இரண்டு, அவளுக்காக சர்க்கரை தடவியவை இரண்டு, தம்பி பாவ்லிக்குக்காக சிறிய இளஞ்சிவப்பு நிறமுடைய ஒன்று. வளைய பிஸ்கோத்துகள் பாசிமணிகளைப் போன்று நூலில் கோர்க்கப்பட்டிருந்தன. வளைய பிஸ்கோத்து மாலையை எடுத்துக்கொண்டு ஷேன்யா வீட்டை நோக்கித் திரும்பினாள். அவள் அங்குமிங்கும் பராக்குப் பார்த்தபடி, பெயர்ப் பலகைகளை வாசித்துக்கொண்டு சாவகாசமாக நடைபோட்டாள். அப்பொழுது தெரு நாய் ஒன்று அவள் பின்னாள் வந்து வளைய பிஸ்கோத்துகளைத் தின்னத் தொடங்கியது. முதலில் அப்பாவுக்கான ஓமம் போட்டவைகளையும், பின் அம்மாவுக்குறிய கசகசா போட்டவைகளையும், பின்பு சர்க்கரை தடவிய அவளுடய பிஸ்கோத்துகளையும் தின்றுவிட்டது.



ஷேன்யா அப்பொழுதுதான் வளைய பிஸ்கோத்துகள் கோர்த்த நூல் ரொம்ப இலேசாக இருப்பதை உணர்ந்தாள். அவள் திரும்பிப் பார்த்தபோது நேரம் கடந்துவிட்டது. நூல் கயிற்றில் ஒன்றும் இல்லை; நாய் அப்போதுதான் தம்பி பாவ்லக்கின் சிறிய பிங்க் நிற வளைய பிஸ்கோத்தைத் தின்றுவிட்டு, தாடையை நக்கிக்கொண்டிருந்தது.


'அட பாழாய்ப்போன நாயே!' ஷேன்யா கத்திக்கொண்டு அதன் பின்னால் ஓடினாள். ஓடோடிச்சென்றும் அவளால் நாயைப் பிடிக்க முடியவில்லை.




அப்படியே சென்றவள் வழி தவறிவிட்டாள். ஓடியவள் நின்ற போது தான் ஒரு புது இடத்தில் இருப்பதைக் கண்டாள்.


அங்கு பெரிய வீடுகள் எதுவும் இல்லை, சிறுசிறு வீடுகளே இருந்தன. ஷேன்யா அழத்தொடங்கினாள். அப்பொழுது ஒரு வயதான பாட்டி அங்கு தோன்றினாள்.

'எதற்காக அழுகிறாய், சின்னப் பெண்ணே?' என்று அவள் கேட்டாள். ஷேன்யாவும் அந்தப் பாட்டியிடம் நடந்ததைக் கூறினாள்.



பாட்டிக்கு ஷேன்யாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளைத் தன் சிறிய தோட்டத்துக்கு அழைத்துச்சென்று சொன்னாள்: 'அழாதே. நான் உனக்கு உதவுகிறேன். என்னிடம் வளைய பிஸ்கோத்துகள் இல்லை, காசும் இல்லை, ஆனால் ஒரு அதிசயமான பூ என் தோட்டத்தில் வளர்கிறது. அது ஒரு ஏழு நிறப்பூ; அது நீ என்ன கேட்டாலும் கொடுக்கும்.கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் நீ ஒரு நல்ல பெண் என்று தெரிகிறது. ஏழு நிறப்பூவை உனக்குத் தருகிறேன். அது உனக்கு உதவி செய்யும்.'




இப்படிச் சொல்லிவிட்டு, பாட்டி மலர்ப் படுகையிலிருந்து வெகு அழகான மலர் ஒன்றைக் கொய்தாள். அது பார்ப்பதற்கு டெய்சியைப் போல இருந்தது. அதற்கு ஏழு மெல்லிய இதழ்கள் இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம். ஒன்று மஞ்சள் நிறம், ஒன்று சிவப்பு, ஒன்று நீலம், ஒன்று பச்சை, ஒன்று ஆரஞ்சு, ஒன்று வயலட், மற்றொன்று வெளிர் நீலம்.



'இதுவொரு சாதாரணமான பூ அல்ல', பாட்டி சொன்னாள். 'அது கேட்ட வரத்தைக் கொடுக்கும். நீ செய்யவேண்டியது ஒரு இதழைக் கிள்ளி எறிந்து இப்படிச் சொல்லவேண்டியதுதான்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



பிறகு உனக்கு என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். உடனே அது நடக்கும்.'



ஷேன்யா பாட்டிக்கு நன்றி சொன்னாள். தோட்டத்தை விட்டு வெளியே வந்தாள். அப்பொழுதுதான் அவள் தொலைந்துபோய் விட்டதும், வீட்டுக்கு வழி தெரியாததும் நினைவுக்கு வந்தது.



திரும்பவும் பாட்டியைப் பார்த்து, பக்கத்திலுள்ள மிலீஷியாக்காரரிடம் தன்னை விட்டு விடும்படிக் கேட்க விரும்பினாள். ஆனால் பாட்டி, தோட்டம் இரண்டும் மறைந்துவிட்டிருந்தன. அவள் என்ன செய்வாள், பாவம். வழக்கம் போல அழ ஆரம்பிக்கப் போனாள்; மூக்கைக்கூட கோணிவிட்டாள்; அப்பொழுது சட்டென்று அவளுக்கு மந்திரப் பூவின் நினைவு வந்தது. அது நிஜமாகவே ஒரு அதிசய மலரா என்று இதோ இப்பொழுது தெரிந்துவிடும்! ஷேன்யா மஞ்சள் இதழைக் கிள்ளி எறிந்து விட்டுச் சொன்னாள்:




பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



நான் இப்பொழுதே வளைய பிஸ்கோத்துகளுடன் வீட்டில் இருக்க வேண்டும்!





அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே, தன் வீட்டில் வளைய பிஸ்கோத்துகளுடன் இருந்தாள்!






ஷேன்யா அவற்றை அம்மாவிடம் தந்துவிட்டு, 'உண்மையிலேயே இது அதிசயப் பூ தான். இதை நம்மிடம் இருப்பதிலேயே மிக அழகான பூ ஜாடியில் வைக்க வேண்டும்!'




ஷேன்யா சிறுமிதானே, ஆகவே அவள் ஒரு நாற்காலி மேல் ஏறி நின்று, மேல் தட்டில் இருந்த அம்மாவுக்குப் பிரியமான ஜாடியை நோக்கிக் கைகளை நீட்டினாள். சரியாக அதே சமயத்தில் சில காகங்கள் ஜன்னலை ஒட்டிப் பறந்தன. ஷேன்யாவுக்கு அவை எத்தனை என எண்ணியே ஆக வேண்டும்--ஏழா, எட்டா? விரல்விட்டு எண்ண ஆரம்பித்தாள். அப்பொழுது--டமார்--அந்த ஜாடி தவறி விழுந்து சுக்குநூறாகச் சிதறியது.



'கடவுளே, என்ன ஒரு குழந்தை!' அடுக்களையிலிருந்து அம்மா கோபமாகக் கேட்டாள். 'இம்முறை எதை உடைத்தாய்? என் பிரியமான ஜாடியை அல்லவே!'
'அட, இல்லவே இல்லை அம்மா! நான் எதையும் உடைக்கவில்லை!' ஷேன்யா கத்தினாள். வேகமாக சிவப்பு நிற இதழைக் கிள்ளி, விட்டெரிந்து,முணுமுணுத்தாள்:


பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்




அம்மாவின் அழகான ஜாடியை மீண்டும் முழுதாக்கு!



அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே உடைந்து கிடந்த துண்டுகள் எல்லாம் நெருங்கிவந்து ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தன.



அம்மா அடுக்களையிலிருந்து வந்தாள்--அவளது ஜாடி வழக்கம் போலவே அதனிடத்தில் ஒழுங்காக அமர்ந்திருந்தது. இருந்தாலும், சும்மாவேனும் ஷேன்யாவை நோக்கி விரல்களை ஆட்டி, அவளை வெளியே போய் விளையாடும்படி அனுப்பினாள்.




ஷேன்யா வெளியே சென்றபோது, அங்கு பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்--அவர்கள் வட துருவப் பயணிகள். அவர்கள் பழைய மரப் பலகைகளின் மேல் உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்தில் மணலில் ஒரு குச்சி நட்டுவைக்கப்பட்டிருந்தது.




'நானும் விளையாட வரலாமா?' அவள் கேட்டாள்.


'ஊஹூம். அதெல்லாம் முடியாது. உனக்குத் தெரியவில்லை, இது வட துருவம்! எங்களால் வட துருவத்துக்குப் பெண்பிள்ளைகளைக் கூட்டிச்செல்ல முடியாது!'



'இது ஒன்றும் வட துருவம் அல்ல. வெறும் பலகைக் குவியல்தான்!'


'இதெல்லாம் பலகைகள் அல்ல, பனிப் பாளங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாமல் போய்ச்சேர் இங்கிருந்து! பனி உடைய ஆரம்பிப்பது உனக்குத் தெரியவில்லையா?'






'அப்படியானால் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டீர்கள்?'



'இல்லை. போ, போ!'



'எனக்கென்ன கவலை? நீங்கள் யாரும் இல்லாமலேயே என்னால் வட துருவத்துக்குப் போக முடியும். அதுவும் இப்படிப் பாடாவதியான பலகைக் குவியல் இல்லை. நிஜமான வடதுருவம். போய் வருகிறேன்' ஷேன்யா வெளி முற்றத்தின் ஒரு மூலைக்குச் சென்று, உடையின் பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து, நீல இதழைக் கிள்ளியெறிந்துவிட்டுச் சொன்னாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்


இந்த நிமிடமே என்னை வட துருவத்தில் இருக்கச் செய்!



அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே நாலாப்புறமும் பனிக்காற்று வீசிற்று; சூரியன் மறைந்தது; எல்லாம் ஒரே இருட்டாகியது; அவள் காலடியில், பூமி ஒரு பம்பரம் போலச் சுற்றியது.



ஷேன்யா தான் வட துருவத்தில் தன்னந்தனியாக இருக்கக் கண்டாள். அவள் அணிந்திருந்தது ஒரு சிறிய, வேனில் காலத்துக்கான உடை; காலில் சாதாரண ரப்பர் செருப்புகள்; குளிரோவெனில் மிகக் கடுமையானதாக இருந்தது!



'ஐயோ, அம்மா, நான் உறைகிறேன்!' அவள் அலறினாள். ஆனால், அவள் கண்ணீர் பனித்துளிகளாக மாறி அவளுடைய மூக்கிலிருந்து தொங்கியது. இதற்கிடையே ஏழு துருவக்கரடிகள் ஒரு பனிக்குன்றுக்குப் பின்னாலிருந்து தோன்றி, அவளை நோக்கி வந்தன. அவை ஒன்றுக்கொன்று பயங்கரத்தில் கூடுதலாக இருந்தன: முதலாவது துள்ளுவது, இரண்டாவது தீயது, மூன்றாவது கடுகடுப்பானது, நான்காவது ஒல்லி, ஐந்தாவது தொப்பிவைத்தது, ஆறாவது பிராண்ட விரும்புவது, ஏழாவது எல்லாவற்றிலும் பெரியது.






ஷேன்யா பயந்து நடுங்கிவிட்டாள். உறைந்த விரல்களால் பச்சை நிற இதழைக் கிள்ளியெறிந்து முடிந்தவரை சத்தமாகக் கத்தினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



நான் இப்பொழுதே வீட்டு முற்றத்தில் இருக்கும்படி செய்!




அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே மீண்டும் முற்றத்தில் இருந்தாள். பையன்கள் அவளைக் கேலி செய்தார்கள்.





'உன் வட துருவம் எங்கே, புத்திசாலியே?'


'இப்பொழுதுதான் அங்கிருந்து வருகிறேன்.'





'நாங்கள் உன்னை அங்கு பார்க்கவில்லையே. அதை நிரூபி!'


'பார்த்தீர்களா, இங்கே இன்னும் ஒரு பனித்துளி இருக்கிறது'

'அது ஒன்றும் பனித்துளி அல்ல. அது வெறும் பஞ்சுத் துகள், உளறாதே'



ஷேன்யா அந்தப் பையன்கள் ரொம்ப மோசம், அவர்களுடன் இனி விளையாடவே கூடாது என்று நினைத்துக்கொண்டாள். ஆகவே அடுத்த வாசலுக்கு அங்கிருந்த சிறுமிகளுடன் விளையாடச் சென்றாள்.




அந்தச் சிறுமிகள் ஏராளமான விளையாட்டுச் சாமன்கள் வைத்திருந்தார்கள். ஒரு சிறுமியிடம் பொம்மை வண்டி இருந்தது, ஒரு சிறுமியிடம் பந்து, ஒரு சிறுமியிடம் தாண்டும் கயிறு, ஒரு சிறுமியிடம் மூன்று சக்கர சைக்கிள், ஒரு சிறுமியிடம் பொம்மை-ஜோடுகள் அணிந்த பொம்மைத்தொப்பி வைத்த பேசும் பொம்மை இருந்தது. ஷேன்யா ரொம்ப வருத்தப்பட்டாள். பொறாமையால் அவள் கண்கள் பூனைக்கண்களைப் போல் பச்சையாகிவிட்டன.


'ஹூம். யாரிடம் மிகச்சிறந்த விளையாட்டுச் சாமன்கள் உள்ளன என்று காட்டுகிறேன்', என நினைத்துக்கொண்டாள். பையிலிருந்து ஏழு நிறப்பூவை எடுத்து ஆரஞ்சு நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து கூறினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!




அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின.






முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி 'மா-மா', 'மா-மா' என்று விடாமல் கூறின.



முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் 'மா-மா, மா-மா!' என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.





ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.




ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.



இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.




'நிறுத்து, நிறுத்து!' ஷேன்யா ஓலமிட்டாள். 'இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது...' அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்--விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்--விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:




பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்




எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!





அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது.





'அடக் கடவுளே!' அவள் சொன்னாள். 'ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்த தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.'



ஷேன்யா யோசித்தபடியே சாலையில் நடந்தாள்.


'வேறு எதைக் கேட்பது? தெரியும், ஒரு பவுண்டு சாக்கலேட் மிட்டாய் கேட்கிறேன். இல்லை, ஒரு பவுண்டு பெப்பர்மின்ட் பரவாயில்லை. இல்லை, எனக்கு அரை பவுண்டு சாக்கலேட் மிட்டாய், அரை பவுண்டு பெப்பர்மின்ட், ஒரு பொட்டலம் அல்வா, ஒரு பை கொட்டைகள், அப்புறம் பாவ்லிக்குக்காக ஒரு இளஞ்சிவப்பு வளைய பிஸ்கோத்தும் கேட்கிறேன். ஆனால் என்ன பயன்? எல்லா மிட்டாய்களும் கிடைத்தால் மட்டும் என்ன? எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுவேன், பிறகு ஒன்றும் இருக்காது. வேண்டாம், ஒரு மூன்று சக்கர சைக்கிள் கேட்கிறேன். இல்லை, அதுவும் பயன்படாது. நான் ஓரிரண்டு தடவை ஓட்டிய பிறகு பையன்கள் அனேகமாக எடுத்துக்கொண்டு விடுவார்கள். அவர்களை ஓட்ட விடாவிட்டால் அடிப்பார்கள்! பேசாமல் சினிமாவுக்கோ, சர்க்கஸுக்கோ டிக்கெட் வாங்கிக் கொள்கிறேன். அது எவ்வளவோ கேளிக்கையாக இருக்கும். ஆனால், ஒரு ஜோடி புது செருப்புகள் கேட்டால் தேவலையோ? அது நன்றாயிருக்கும். இருந்தாலும் ஒரு ஜோடி புது செருப்பில் என்ன பிரயோசனம்? அதைவிட நன்றாக ஏதாவது கேட்க முடியும். அவசரப்படக் கூடாது என்பதுதான் முக்கியம்.' இப்படித்தான் ஷேன்யா சிந்தித்துக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது திடீரென்று ஒரு ரொம்ப நல்ல பையன் அங்கு ஒரு பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனுடைய பெரிய நீலக் கண்கள் மகிழ்ச்சியாகக் காணப்பட்டன. அவன் ரொம்ப நல்லவன், முரடன் அல்ல என்பது பார்க்கும்போதே தெரிந்தது. ஷேன்யா அவனோடு நட்புக்கொள்ள விரும்பினாள். அவள் நெருங்கி வந்தாள். அவளது முகம் அவன் கண்களில் பிரதிபலித்தது: அவளுடைய ஜடைகள் அவனுடைய தோள்களைத் தொட்டன.



'வணக்கம். உன் பெயர் என்ன?' அவள் கேட்டாள்.


'வீத்யா. உன் பெயர்?'


'ஷேன்யா. நாம் ஓடிப்பிடித்து விளையாடலாமா?'


'என்னால் முடியாது. நான் நடக்க முடியாதவன்'


அப்பொழுதுதான் ஷேன்யா கவனித்தாள். அவன் பெரிய அடிப்பாகம் கொண்ட, பார்க்கச் சகிக்காத ஜோடு ஒன்றை அனிந்திருந்தான்.


'அடப் பாவமே!' அவள் சொன்னாள். 'எனக்கு உன்னைப் ப்டித்திருக்கிறது. நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாண்டிருந்தால் மிகவும் மகிழ்சியாக இருந்திருக்கும்'


'எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னோடு ஓடிப்பிடித்து விளையாடினால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அனால் முடியாதே. என்னால் ஒருபோதும் இயலாது. என் கால்கள் வாழ்க்கை முழுவதுமாக முடங்கிப்போய்விட்டன.'




'உளறாதே, வீத்யா!' ஷேன்யா சொல்லிவிட்டு பொக்கிஷமான ஏழு நிறப்பூவைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்தாள். 'இதோ!'


அவள் கவனமாக வெளிர் நீல நிறம் கொண்ட கடைசி இதழைக் கிள்ளி எடுத்தாள். தன் கண்களுக்கு நேராக ஒரு நொடி பிடித்தாள். பிறகு விரல்களைத் திறந்து, அதைப் பறக்க விட்டுவிட்டு, உரத்த, மகிழ்ச்சியான குரலில் பாடினாள்:



பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்



வீத்யாவை மீண்டும் நலமடைய வை!


அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே வீத்யா பெஞ்சிலிருந்து தாவிக்குதித்து அவளோடு ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தான். அவன் படு வேகமாக ஓடினான்; ஷேன்யா எவ்வளவு முயன்றாலும் அவனைப் பிடிக்க முடியவில்லை.




[முடிந்தவரை பூ. சோமசுந்தரம் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்த முயன்றுள்ளேன். கதை பற்றி மற்றும் என் மொழிபெயர்ப்பு பற்றிய உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.]