Wednesday, 24 June 2009

குறும்பன் அத்தியாயம் 5: முல்லாவும் பிணமும்

மூன்று மணி நேரம் நடந்தபின் தேப்-குஜார் என்ற இடத்தை அடைந்தோம். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. மளிகைக்காரக் கிழவன் அப்போதுதான் கடையைத் திறந்தான் . வழிச் செலவுக்கு வேண்டிய சாமான்களை அவனிடம் வாங்கிக் கொண்டோம், உப்பு ஒரு ராத்தல், உலர்ந்த ஆப்ரீக்காட் பழங்கள் இரண்டு ராத்தல்கள், மக்காச்சோள மாவு ரொட்டிகள் ஆறு, நூல், ஊசி, கொளகொளத்த இரண்டு முலாம்பழங்கள் ஆகியன. இவை எல்லாம் பதினான்கு கோப்பெக்குகளுக்குள் அடங்கிவிட்டன. எட்டு கோப்பெக்குகள் நாங்கள் கொடுத்தோம், பாக்கியை முல்லா கொடுத்தான். எங்களை ஓரப்பார்வையாகப் பார்த்துவிட்டு மேலங்கியின் ஓரத்தையலைப் பிரித்து உள்ளிருந்து பணத்தை எடுத்தான். கொஞ்சம் பணம் அவனிடம் எஞ்சியிருந்தது எனத் தெரிந்து கொண்டோம்.

மேலே நடந்து விரைவிலேயே பசிய பள்ளத்தக்கை அடைந்தோம். பாதையின் வலப் புறம் , மலையடிவரத்தின் அருகே ஓடியது தெளிந்த நீரோடிடை. முதிர்ந்த பாப்ளார் மரத்தின் அடியில் ஓடை ஓரமாக உட்கார்ந்து முலாம்பழத்தைக் கூறுபோட்டு ரொட்டியுடன் சாப்பிடத் தொடங்கினேம். முல்லா தன் முலாம்பழத்தைத் தின்றபடியே அவ்வப்போது என்னையும் அமனையும் நோட்டமிட்டான். முடிவில் அவனுக்குப் பேச்சு கிளம்பிற்று.

“என் அலங்கோலத் தோற்றத்தைக் காண்கிறீர்கள், குழந்தைகளே. அதிர்ஷ்டம் எப்பேர்ப்பட்ட மனிதனை உங்களிடம் அனுப்பியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது”-- அவன் பெருமூச்செறிந்து தலையை ஆட்டினான்.

“உங்களுக்குத் தெரியாது, அல்லவா?” என்றான்.

அமன் வாய் நிறைய முலாம்பழத்தைத் திணித்துக் கொண்டிருந்தபடியால் பேசாதிருந்தான். நானோ, பட்டும் படாமலும் “ஹ்ம்” என்று சொல்லி வைத்தேன். எங்களுக்குத் தெரியாதுதான், ஆனாலும் ஏதோ கொஞ்சம் உணர்கிறேம் என்று அதற்கு அர்த்தம் செய்து கொள்ளலாம்.

“இல்லை, உங்களுக்குத் தெரியாது” என்று முன்னைவிட அதிகத் துயரத்துடன் பெருமூச்சு விட்டான் முல்லா. அப்புறம் விருப்பம் இல்லாதவன்போல இன்னெரு துண்டு முலாம்பழத்தை ரொட்டியுடன் சவைத்து விழுங்கி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தான். “நான் மிகப் பழைய, மிகப் புகழ் பெற்ற வம்சத்தில் பிறந்தவனக்கும்... ஆம், ஆம் , மிக மிகப் புனிதமான புகாரா நகரத்தைச் சேர்ந்தவன்!... என் முன்னேர்கள் தாஷ்கந்த் நகருக்குக் குடி பெயர்ந்த போது, தாஷ்கந்த் நகரம் முழுவதுமே இன்பப் பெருக்கால் களி துள்ளிற்று. ஆமாம் என் குழந்தைகளே, எங்கள் பாட்டனர்களும் கொள்ளுப்பாட்டனர்களும் மாண்பு மிக்க மௌலானக்கள்! பாட்டனர்கள் வரை போவானேன்? காலஞ்சென்ற என் தகப்பனர் மிகப் பெரிய மனிதராய் இருந்தார். அவர் “குஃப்” என்க வேண்டியது தான், ஆறு எதிர்முகமாகப் பாயத் தொடங்கும். “ஸுஃப்” என்றரோ, குருடன் பார்வை பெற்றுவிடுவான்! ஆமாம்... அவர்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அனேகமாகக் கிடையாது. என்னுடைய துரதிர்ஷ்டம் தான், அவர் அவ்வளவு சிறு வயதில் இறந்துபோனார்.”

இவ்வாறு சொல்லி மீண்டும் சோகப் பெருமூச்சுவிட்டு, இடுப்புக்குட்டை நுனியால் கண் ஓரத்தைத் துடைத்துக் கொண்டு முன்போன்ற அதே விருப்பற்ற தோற்றத்துடன், கணிசமாகப் பெரிய இன்னொரு முலாம்பழத் துண்டைச் சவைத்து விழுங்கினான் முல்லா.

“அப்புறம் தாய் வழியில் – தாய் வழியில் மட்டும் என்ன, நாங்கள் ஆண்ட கூடத் தன் மதபக்திக்குப் பெயர் போனவள் ஆயிற்றே. அவளால் செய்ய முடியாததே எதுவும் இல்லை! மந்திரம் போட்டுக் காதல் வசியம் செய்வாள், தம்பட்டத்தை வைத்துக் கொண்டும், அடுப்பில் ஏற்றிய புது மண்பாத்திரத்தை வைத்துக் கொண்டும் குறி சொல்லுவாள்! அவளுக்குத் தெரியாத சக்தியுள்ள மந்திரங்களே உலகத்தில் கிடையாது!” – இங்கே அவன் பேச்சை நிறுத்திவிட்டு என்னையும் அமனையும் கூர்ந்து நோக்கினான். “குழந்தைகளே, இது உங்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும். சின்ன வயதிலிருந்தே பெரியவர்களிடம் கற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. வெகு காலம் தாழ்த்தே சுதாரித்துக் கொண்டேன். விளைவு என்ன, பாருங்கள். மாபெரும் மௌலானாக்களின் வமிசத்தில் பிறந்த என்னை எவர்களோ அற்பக் கயவர்கள் அடிக்கத் துணிந்து விட்டார்கள் – அவ்வளவு இழிநிலைக்கு வந்துவிட்டேன் நான்!”

அவன் மறுபடியும் இடுப்புக் குட்டையால் கண் ஒரத்தைத் துடைத்தான், கண்ணீர்ப் பெருக்கைத் தேக்கி நிறுத்த முயல்பவன் போலச் சிறிது நேரம் அங்கே ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான். இதில் அவனுக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது. ஏனென்றால் சிறு கண்ணீர்த் துளிகூட மேற்பரப்பில் காணப்படவில்லை. முயற்சி பலித்துவிட்டதால் மகிழ்வடைந்து அவன் மறுபடி எங்களை நோக்கி, கம்பீரமாகச் சொன்னான்.

"துரதிர்ஷ்டம் என்னைக் கடுமையான சேதனைகளுக்கு உட்படுத்திற்று. ஆனால் இப்போது நான் மெய் வழியில் செல்லத் தொடங்கிவிட்டேன். என் முன்னோர்களின் மூதறிவை அல்லா எனக்குத் திரும்ப அருளிவிட்டார். மந்திரங்களாலும் தொழுகைகளாலும் நான் மக்களின் நோய்களைக் குணப்படுத்துகிறேன். பிரார்த்தனைக் காகிதங்களாலும் நோய் தீர்க்கிறேன். இது என்ன, தெரியுமா உங்களுக்கு?”

எனக்குத் தெரியும். ஆனால் அமன் தனக்குத் தெரியாது என்று மரியாதையாக ஒப்புக் கொண்டான். முல்லாவின் சொற்கள் அவன் மனதில் பெருத்த பதிவை ஏற்படுத்திவிட்டன என்று தெரிந்தது.

“ஒரு காகிதத் துண்டில் நான் பிரார்த்தனை எழுதுவேன், அப்புறம் அதைத் தண்ணீரிலோ, தேநீரிலோ அரைத்துக் கலக்கி நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்... ஆயிற்றா. தவிர, வசீகரணம் செய்யவும் வசீகரணத்தைப் போக்கவும் வேண்டிய சாதனங்களை நான் அறிவேன். உண்மையில் மாபெரும் மௌலானாக்களின் வழிவந்தவனை அல்லா தன் கருணைக்கு ஆளாக்காமல் விட்டுவிடுவதில்லை!”

“நீங்கள் மதப் பள்ளியில் படித்தீர்கள், இல்லையா, முல்லா?”

“மௌலானாக்களின் மகனுக்கு மதப்பள்ளி எதற்காக? நான் வீட்டில் தான் கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் எழுதிய கவசங்களும் ரட்சைகளும் தயரிக்க மதப் பள்ளியில் கற்றுத் தருகிறார்களா என்ன? நானோ, பிரார்த்தனைகள் மட்டுமே அல்ல, மாபெரும் பெயர்கள் கூட எழுத அறிவேன்! நீங்களே பார்ப்பீர்கள். பல கிராமவாசிகள் என்னைப் பின்பற்றுறுபவர்கள். சிலர் என்னை “மௌலனா-பாதுஷா” என்றும் வேறு சிலர் “ஒதுவார்-தலைவர்” என்றும் இன்னும் சிலர் “முல்லா-அகா” என்றும் அழைப்பார்கள். அடே, என் முழுப் பெயர் என்ன என்பதே உங்களுக்கு இன்னும் தெரியாதே...”- அவன் நெடு மூச்சு இழுத்தான், விழிகளை உருட்டினான், “முல்லாமுஹம்மது ஷரீஃப் பின்னி முல்லாமுஹம்மது லத்தீஃப் இப்னி கவ்ஸில் ஆஜம்!” என்று ஒரே மூச்சில் கடகடவென்று ஒப்புவித்துவிட்டு மறுபடி அப்பாடா என்று மூச்சிழுத்தான். அமன் ஆவென்று வாயைத் திறந்தவாறு அதிசியத்துடன் அவனைப் பார்ப்பதைக் கண்டேன். உள்ளதைச் சொன்னால், முல்லாவின் முழுப் பெயர் எனக்கும் வியப்பு ஊட்டாமல் இல்லை. இவ்வளவு நீளப் பெயரை இதற்கு முன் நான் கேட்டதே கிடையாது. ஆனாலும் தலைக்குநாள் திண்ணைமேல் நடந்த நாடகத்தை என்னல் மறக்கவே முடியவில்லை. ஜேபடித் திருடன் ஸுல்தானுக்கு இந்த முல்லா. ரொம்பத்தானே இச்சகம்பேசி அடி வருடினான்.

“நல்லது. அல்லாவே என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறர் என்பதை இப்போது நீங்களே காண்கிறீர்கள்” என்று பேச்சைத் தொடர்ந்தான் முல்லா.

“நீங்கள் என்னோடு கூட்டு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு முன்னே என்னை “ஹஜரத்” (அருளாளர்) என்று அழைக்க வேண்டும். நான் உங்களை என் சீடர்கள் என்று அழைப்பேன்-- இஸ்லாம் மதக் கோட்பாடுகளையும் உங்களுக்குக் கற்பிப்பேன்! இதற்கு நீங்கள் ஒப்பினால் இலையுதிர் காலத்துக்குள் நம்மிடம் பணம் ஒன்றுக்கும்ப் பத்தாகப் பெருகும், நல்ல துணி மணிகளும் செருப்பு ஜோடுகளும் கிடைக்கும், எல்லாம் வேண்டிய அளவு பெறலாம், திகட்டத் திகட்டச் சாப்பிடலாம், தவிர கௌரவத்துடன் ஊர் திரும்பலாம். என்ன சொல்கிறீர்கள், சம்மதமா? அப்படியானல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்: ஒருவரும் பக்கத்தில் இல்லாதபோது என்னை ‘முல்லா-அகா’ என்றோ ‘ஷரீஃப்ஜான்-அகா’ என்றோ நீங்கள் அழைக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எதிரே ‘ஹஜ்ரத்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்! கிடைக்கிற பணம், சாமான்கள், இவற்றை நான்காகப் பங்கிடுவோம். எனக்கு இரண்டு பங்குகள், உங்களுக்கு ஆளுக்கு ஒரு பங்கு. கொடுத்த வாக்கை மீறுபவன் புனித மெக்கா பக்கம் திரும்பவே முடியாதவன் ஆவானாக! ஆமென்!”

நாங்கள் முழந்தாள் படியிட்டுக் குனிந்து நிமிரத் தொடங்குவதற்குள் பாதையில் புழுதிப் படலாம் கிளம்பக் கண்டோம். புழுதிப் படலம் வர வர எங்களை நெருங்கிற்று. முடிவில் குதிரைச் சவாரி செய்பவனின் நிழலுரு படலத்தினுடாகத் தெரிந்து . அவன் குடியானவன் போலக் குதிரைச் சவாரி செய்வதைத் தொலைவிலேயே கண்டு கொண்டோம். அவனுடைய மேலங்கி விளிம்புகள் காற்றில் பறந்தன. குல்லா பின் மண்டைப் பக்கம் சரிந்தது. குதிரையின் உடம்பெல்லாம் நுரைத்திருந்தது. எங்கள் அருகே வந்ததும் சவாரிக்காரன் அதைச் சிரமத்துடன் நிறுத்தினான்.

“ஸலம் அலேய்க்கும், முல்லா –அகா, எங்கே போகிறீர்கள்?”

நாங்கள் மரியாதையாக அவனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தோம். எங்கள் பயணத் திட்டங்களை அவனிடம் விவரிக்கவில்லை. ஆனால் அவனது அக்கறை முற்றிலும் வேறு விஷயத்தில் இருத்தது.

“இஸ்லாம் மத விதிகளின்படி பிரேதத்தைக் குளிப்பாட்டி இறுதிச் சடங்கு செய்துவைக்கக் கூடிய யாராவது பக்திமான் உங்களில் இருக்கிறரா?” என்று கேட்டான் அவன்.

முல்லா எங்களைப் பார்த்தான். நாங்கள் அவனுக்குத் தலை வணங்கினோம். பிறகு அவன் பெருமிதத்துடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமான தோரணையில் பதில் அளித்தான்:

“இருக்கிறர். நாம் எவ்வகையில் உதவ முடியும்? நாம் தாஷ்கந்த் நகரவாசி. மௌலான வம்சத்தினர். மதப்பள்ளியில் கல்வி பயின்றேம். இப்போது விடுமுறை. எனவே, தூய காற்றைச் சுவாசிப்பதற்காக, கிராமம் கிராமமாகச் சுற்றி வருகிறேம். இவர்கள் எமது மாணவர்களில் இருவர்...”

சவாரிக்கரான் சந்தோஷம் காரணமாகச் சேணத்தில் இருப்பு கொள்ளாமல் தவித்தான். முல்லா தன் ஆடம்பரப் பேச்சை முடிக்கும் வரை காத்திருக்கவே அவனுக்குப் பொறுமை இல்லை. சொர்க்கப் பூங்காவின் சுற்றுச் சுவரில் இரகசிய வழியைக் கண்டுவிட்டவன் போலக் களி துள்ளினான் அவன்.

“ஆகாகா, பெரியோர்களே, ரொம்ப சந்தோஷம். ஆண்டவனே உங்களை அனுப்பி யிருக்கிறன்! சீக்கிரம் போவோம்!“– அவன் குதிரையைத் திருப்பினான். அப்புறந்தான் விஷயம் என்ன என்று விவரித்தான்.

“பெரியவரே, நாங்கள் கால்நடை மேய்ப்பர்கள். எங்கள் தங்கிடம் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. எங்கள் ஆட்களில் ஒருவன் நோய்ப்பட்டு இறந்துபோனான். அவனை முழுக்காட்டி, அவன் ஆன்ம சாந்திக்காகத் தொழுகை படிக்க யாரும் இல்லை. என்ன செய்வது என்று எங்களுக்கத் தெரியவில்லை... ஆகாகா, பெரியவரே, ஆண்டவனேதான் உங்களை அனுப்பியிருக்கிறன்... நல்லது, வாருங்கள் போவோம்.”

அமன் விரிப்பை மடித்து எடுத்துக்கொண்டன். சவாரிக்காரன் குதிரையிலிருந்து இறங்கி, முல்லாவைச் சேணத்தின்மேல் உட்கார வைத்தான். நாங்கள் மூவரும் நடந்தோம். வழி மிக நீண்டது. இரண்டொரு முறை நாங்கள் இளைப்பாறினேம். மலை ஒன்றின் உச்சியிலிருந்த தொலைவில் மேய்ப்பர்களின் தங்கிடத்தைக் கடைசியில் கண்ணுற்றேம் மண்சுவர் சூழ்ந்த பழைய கோட்டை. அதன் அருகே சில கூடாரங்கள்.

“அதுதான் எங்கள் தங்கிடம். கூடாரங்கள் தெரிகின்றனவா? விரைவில் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவோம்.” என்றான் எங்கள் வழிகாட்டி.

நடுப்பகல் தறுவாயில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இந்த மேய்ப்பர் அவர்களுடைய குடும்பங்களும் கால்நடைகளும் இப்போது அங்கேயே இருந்தன. ஒரு மேய்ப்பன் நோய்ப்பட்டு விட்டான். அவன் நிலைமை மிகவும் மோசமானதும் ஒரு இருபது இளைஞர்களும் சில முதியவர்களும் அவனை இங்கே கொண்டுவந்தார்கள். அவனுக்கு அந்திமச் சடங்கு செய்துவைக்கக் கூடியவன் எவனும் ஸ்தெப்பியில் இல்லை. வழியிலேயே அவன் இறந்து போனான்.

நாங்கள் அருகே நெருங்கியதும் எல்லோரும் கூச்சலுடன் எழுந்து, மரியாதையைக் காட்டும் முறையில் கைகளை மார்புறச் சேர்த்து வணக்கம் கூறி வரவேற்றார்கள். “காலமானவன் எங்கே?” என்று மிடுக்குடன் கேட்டான் முல்லா. பிணம் கோட்டைக்குள் இருந்தது. கோட்டையின் உட்புறம் ஜமீன்தாரின் கால்நடைப் பட்டி போல இருந்தது. வெகு சில திறப்புக்கள் கொண்ட திண்ணிய சுவர்களும் இரட்டைக் கதவுகளும். முகப்பு வெளியின் நடுவே சிறு குளம் காணப்பட்டது. தரைக்கீழ் ஊற்றுக்களிலிருந்து தண்ணீர் அதில் நிறைந்ததுபோல் தோன்றியது. குளக்கரை பாசி படர்ந்திருந்தது. தண்ணீரில் கூடச் சில இடங்களில் பாசி தெரிந்தது. சில இளம் பாப்ளார் மரங்கள் குளத்தைச் சூழ்ந்திருந்தன. பழைய பாப்ளார் மரங்கள் வெகு கலத்துக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டன. அவற்றின் அடிமரத் துண்டுகளிலிருந்து வளர்ந்திருந்தன இள மரங்கள். கோட்டை பழங்காலத்தது, அச்சந்தருவது. பிணத்துக்கு ஏற்ற இடம்.

நானோ அமனோ வாழ் நாளில் ஒரு தரங்கூடப் பிணத்தை முழுக்காட்டியதில்லை என்று நீங்களே ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். நான் கோழை அல்ல. ஆனால் பிணங்கள்மேல் எனக்கு ஒரே பயம். செத்த பூனைகளைக்கூடப் பார்க்காதிருக்க முயல்வேன். எங்கள் வட்டாரப் பையன்கள் செத்த பூனைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வால்களைப் பிடித்துத் தூக்கிப் போகத் தயாராயிருந்தார்கள். நானோ, கிட்டத்திலேயே போக மாட்டேன். ஆனால் முல்லா, பிறந்தது முதல் பிணங்களை முழுக்காட்டுவது தவிர வேறு எந்த வேலையும் செய்யாதவன் போன்ற தோற்றத்துடன் துணிச்சலாக முன்னே நடந்தான். ஒவ்வோர் அடியிலும் ஏதோ முணுமுணுத்தான். அடிக்கடி முகத்தைக் கைகளால் தடவிக் கொண்டான். ஏதோ சுருக்கமான பிரார்த்தனையை ஜெபிப்பவன் போன்ற பாவனையுடன் “குஃப்-ஸுஃப்!” என்ற தனக்குப் பிடித்த சொற்களை உச்சரித்தவாறு பல்வேறு திசைகளில் திரும்பினான். நான் அவனைத் தொடர்ந்து சென்றேன். மந்திரங்களுக்குப் பதில் சர்வ சாதாரணமான சொற்களை அவன் முணுமுணுப்பது என் காதில் விழுந்தது. “அப்பா, என்ன வெக்கை!... இறைச்சி வதக்கலும் புலவும் மட்டும் இப்போது கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் குழந்தைகளே... குஃப்-ஸுஃப்! ஐயோ, நிறையப் பணம் அருள்... குஃப்-ஸுஃப்!.” ஆனால் அவன் ஒரு கை வீச்சல் நூறு போய்களை விரட்ட உண்மையிலேயே வல்லவன் போலத் தோன்றியது.

பிறகு முல்லா அமனை அழைத்துச் சவச்சீலை கோட்டு வாங்கும்படிக் கட்டளையிட்டான். அமன் மேய்ப்பர்களைக் கேட்டான் அவர்கள் ஒரு நான்கு கெஜம் கைத்தறித் துணியைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். முல்லா மறுபடி அமனை அழைத்து ஏதோ உத்தரவிட்டான். அமன் அந்த உத்தரவைக் கூடியிருந்தவர்களுக்கு அறிவி்த்தான். எல்லோரும் கோட்டைக்கு வெளியே போய்விடும்படியும், அதன் பக்கத்திலேயே வராதிருக்கும்படியும் சொன்னான் அவன். முழுக்காட்டு முடியும் வரை உள்ளே பார்க்கக்கூடாது என்றும் பார்ப்பவர்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தான். எவனாவது உள்ளே பார்த்தால் அவனுக்குப் பயங்கரமான பாவம் சேரும் என்றும் விளைவாக அவன் மடிந்தபின் அடக்கம் செய்யப்படாமல் போவான் என்றும் ஹஜரத் கூறுகிறார் என்றான். இன்னும் பெரிய துன்பங்களும் நேரலாம் என்று அச்சுறுத்தினான்.

எல்லோரும் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே ஒடிவிட்டார்கள். நாங்கள் வாயில் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டோம். முகப்பில் கிடந்த பெரிய கற்பாளத்தைத் தூக்கிவந்து ஆட்டங்கண்ட கதவுக்கு அண்டை கொடுத்தோம். முல்லா எங்களைப் பார்த்தான், நாங்கள் அவனைப் பார்த்தோம்.

“இப்போது என்ன செய்யப்போகிறோம்? நீங்கள் எப்போதாவது பிணத்தை முழுக்காட்டியது உண்டா?” என்று கேட்டான் முல்லா.

“கிடையாது” என்று ஒரே குரலில் சொன்னோம் நாங்கள்.

“நல்ல சங்கடந்தான்! நானும் முழுக்காட்டியதில்லை. ஆனால் பத்து ரூபிள்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பேசி வைத்துவிட்டேனே! முழுக் காட்டாவிட்டால், தொலைந்தது பணம்...” – அவன் ஒரு கணம் போசாதிருந்து விட்டு, “இதிலே ஐந்து ரூபிள்கள் நான் எடுத்துக் கொள்வேன், ஆளுக்கு இரண்டரை ரூபிள்கள் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்.” என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நினைவுபடுத்தினான்.

“சரி. ஆனால் முழுக்காட்டை நீங்களேதான் நடத்த வேண்டும்” என்றேன் நான்.

முல்லா தலையை ஆட்டிவிட்டு, பிணம் கிடந்த அறைக்குப் போனான். நாங்கள் தயக்கத்துடன் அவன் பின்னே சென்றோம். பிணம் மல்லாக்கக் கிடந்தது. அதன் முகமும் வயிறும் பழைய மேலங்கியால் முடப்பட்டிருந்தன. கால்கள் திறந்திருந்தன. முல்லா முன்னே அடி வைத்தவன் அக்கணமே பின் வாங்கினான். எனவே நானும் அமனும் அவன்மேல் மோதிக் கொண்டோம். உதடுவரை வந்த வசவைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் முல்லா. நான் இதைக் கவனித்தேன். என் திகில் இன்னும் அதிகம் ஆயிற்று. இறந்தவனின் புலப்படாத ஆவி அறைக்குள் நின்று எங்களைக் கவனிப்பதுபோல எனக்குத் தோன்றியது. மார்புக்குள் என் இருதயம் இரவுக் காவல்காரனின் அடிகட்டைபோல விரைவாக உரக்க அடித்துக் கொண்டது.

அமன் நுனிக்கால்களால் நடந்து முன்னே போய், பிணம் என் பார்வையில் படாமல் மறைத்தான். திடீரென அவன் பின்னே நகர்ந்து வீரிடத் தொடங்கியவன் யாரோ கழுத்தை நெரித்துவிட்டது போல மௌனமாகித் தரையில் சாய்ந்தான். முல்லா துள்ளி விலகி வாயிலோடு ஒண்டிக் கொண்டான். நானோ, கிலியால் இடத்தை விட்டு அசையவே இயலாதவனக, இறந்தவனை உற்று நோக்கி, ஒவென்று அலறினேன். இறந்தவன் உயிர் பெற்றுவிட்டான்! ஆம், ஆம், கால்கள் அசைவற்றுக் கிடந்தன, ஆனால் முகத்தை மூடியிருந்த மேலங்கியை அசைத்தவறு தலையைத் தூக்க அவன் முயன்றான்! இது தன் அமனுக்குத் திகல் ஊட்டியது. கிலியால் அவன் உணர்வு இழந்துவிட்டான்...

என் இருதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. நான் ஓடுவதற்காகத் திரும்பியவன் சிற்றறையின் தரையில் நீண்டு கிடந்த அமனின் கை தடுக்கிக் குப்புற விழுந்தேன். விழும்போது நான் முல்லாமேல் இடித்து விட்டேன். அவனும் உறுதியின்றி நின்று கொண்டிருந்தான் ஆகையால் சந்து விழுந்தான். நாங்கள் எழுந்திருப்பதற்காகத் தட்டித் தடுமாறினேம். முடிவில் நான் எப்படியோ எழுந்து நெருக்கிப் புகுந்து வாயிலுக்கு வெளியே போய் முகப்பு வேலியில் தாவிக் குதித்தேன். முல்லா என் பின்னே தவழ்ந்து வந்தான். நான் அறையைத் திரும்பிப் பார்த்தேன். பெருந் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. கரகரத்த குரலில் “ஆட்களே! ,ஆட்களே!” என்று வீரிட்டுக் கத்தினேன்.

என் கூச்சலைக் கேட்டு இறந்தவனின் இனத்தவர்கள் கலவரம் அடைந்து வாயில் கதவுகளை இடித்துத் திறக்கவில்லை. பக்கத்தில் போய்க் கற்பாளத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் அச்சம் காரணமாக எனக்குத் தோன்றவில்லை. தோன்றியிருந்தாலும் என்னால் அகற்ற முடிந்திருக்காது. முல்லாவோ, குளத்துக்குத் தவழ்ந்து போய் நாற்ற நீரால் முடிவின்றி முகங்கை கழுவிக் கொள்ளலானான். வெண்பனி போல வெளிறி இருந்தான் அவன். எவையோ பிரார்த்தனைகளைப் படித்தவாறு முழு மூச்சாகத் தன்மேல் ஊதினான்.

முடிவில் சில ஆட்கள் கோட்டை மதிற்சுவர் ஏறி உள்ளே குதித்து, மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். நடந்தது என்ன என்பதை நான் அவர்களுக்கு முச்சு திணற விவரித்தேன். பயத்தால் அவர்களுடைய விழிகள் தெறித்துவிடும் போல் ஆகிவிட்டன. ஆனால் இறந்தவன்மேல் அவர்கள் எங்களைக் காட்டிலும் உளமார்ந்த பரிவு கொண்டிந்தார்கள். .எனவே அச்சத்தை அடக்கிக் கொண்டு அறையை நோக்கி நடத்தார்கள். நான்கள் கூட்டமாகச் செறிந்தோம். அதற்குள் ஏதோ ஒன்று மேலங்கியை இழுத்துக் கொண்டு எங்களை நோக்கிப் பாய்ந்தது. எல்லோரும் கூச்சலிட்டார்கள். அதுவோ, காட்டுப்பூனை! அது அறைக்குள் போய்ப் பிணத்தின் தலையருகே உட்கார்ந்திருக்கிறது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் கலவரம் அடைந்து மேலங்கிக்கு உள்ளிருந்து வெளியே வர முயன்றிருக்கிறது. அதைக் கண்டு தான் பிணம் தலையைத் தூக்குகிறது என்று நாங்கள் நினைத்துவிட்டோம்...

பூனை கண்மூடிக் கண் திறப்பதற்குள் சுவற்றின்மேல் பாய்ந்து ஏறி மறைந்துவிட்டது. அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்த மேலங்கி சுவற்றின் மேல் தொங்கிற்று. பாவம், இறந்தவனின் இனத்தவர்கள் ஒருவரை ஒருவரும் எங்களையும் பார்த்தார்கள், பின்பு ஹோ-ஹோ-ஹோ வென்று உரக்கச் சிரித்தார்கள். முல்லாவை வைத்துக் கொண்டு பார்த்தால், எங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு அந்த இழவு வேளையில்கூடச் சிரிப்பை அடைக்குவதே முடியாது என்று எனக்கு நிச்சயமாகப் பட்டது. எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மேலும் மேலும் சிரித்தபடியே அவர்கள் மறுபடி வெளியே போய்விட்டார்கள். முல்லாவும் நானும் வாயில்கதவுகளை மறுபடி இழுத்துப் பூட்டிக் கற்பாளத்தை அவற்றின் மேல் சார்த்தினேம். அமனுக்கு என்ன நேர்ந்தது என்று கவனிப்பது அவசியமாயிருந்தது. அவன் இன்னும் சுய உணர்வுக்கு வரவில்லை. நாங்கள் அவனை அறையிருந்து தூக்கி வந்து குளத்தின் கரையில் உட்கார்த்தி, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினேம். அப்போதுதான் அவன் உணர்வு அடைந்தான். முல்லா அவன் மேல் ஊதி, “இதோ... இதோ சொஸ்தம் ஆகிவிடும்... பொறு, பொறு... இதோ...” என்று ஏதோ மந்திரம் போடலானான். அமன் தானே செத்துப் பிழைத்தவன் போலத் தோற்றம் அளித்தான். நீலம்பாரித்து வெளிறிய முகத்தில் வெறித்து உருட்டி விழித்தன கண்கள். கைகள் முறிந்த கிளைகள் போலத் தொங்கின.

“எழுந்திரு, எழுந்திரு! விழித்துக் கொள்! என்ன இது, அழுக்கு அப்பிய குழந்தைபோல உட்கார்ந்திருக்கிறாய்? வெறும் பூனை அப்பா நீ பார்த்தது! இறந்தவன் கட்டைபோல விறைத்துக் கிடக்கிறான்!” என்றேன்.

அப்போது தான் அமனுக்குப் பேச்சு வந்தது.

“இல்லை, எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நீங்களே எல்லாம் செய்து கொள்ளுங்கள்” என்று ஈனக் குரலில் சொன்னான். நான் முல்லாவைப் பார்த்தேன்.

இஸ்லாம் மத விதிகளின்படிப் “பிண முழுக்காட்டை மூன்றுபேர் சேர்ந்தே செய்ய வேண்டும். இது உனக்குத் தெரியாதா என்ன?” என்றேன்.

எப்படியோ அவனை இணைங்கச் செய்து கைகொடுத்துத் தூக்கி நிற்கவைத்தோம். பிறகு ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தியவாறு மறுபடி அறை வாசல் வரை போய் ஒருவர் மாற்றி ஒருவராக உள்ளே எட்டிப்பார்த்தோம். அப்புறம் நான் முல்லாவையும் அமனையும் நோக்கிக் கூறினேன்.

“வாருங்கள் வேலை தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆட்கள் பொறுமை இழந்து தாங்களே இங்கே வந்துவிடுவார்கள்...” –அவர்கள் இருவரும் பேசாதிருக்கவே, நான் மேலே சொன்னேன். “முழுக்காட்டும் தலைமைப் பொறுப்பை ஹஜரத் ஏற்பார். நாம் இருவரும் தண்ணீரை ஊற்றுவோம். ஹஜரத் பிணத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் ஆண்டவனின் பயங்கர நீதி மன்றத்தில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நமக்குப் பணம் வேண்டாம். அடக்கச் சடங்கில் கொடுக்கப்படும் துணித்துண்டு மட்டுமே போதும். சரிதானா?”

அமன் இசைவு தெரிவிக்கும் பானையில் தலை ஆட்டினான். ஆனால் முல்லா மறுத்தான்.

“ஆ, அதுதான் இல்லை. சின்னவர்கள் உழைக்க வேண்டும், பெரியவர்கள் மரியாதை பெற வேண்டும். உடலை நீங்கள் தேய்த்துக் கழுவுங்கள், நான் நீர் ஊற்றுகிறேன். அதோடு உங்களுக்காகப் பிரார்த்தனையும் செய்கிறேன்.” என்றான்.

“பிராத்தனை செய்ய எங்களுக்கும் முடியும். உங்கள் பிரார்த்தனையை உங்களுக்கே வைத்துக் கொள்ளுங்கள். ஒப்புக்கொண்டுவிடுங்கள் முல்லா. மரியாதையாக இசையுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்தவனின் இனத்தாரை அழைத்து ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லுவேன்... “

“சரியான வார்த்தை” என்றான் அமன்.

முல்லா வகையற்ற எரிச்சலுடன் எங்களைப் பார்த்தான்.

“இப்படிச் சூழ்ச்சி செய்யத் திட்டம் இட்டிருக்கிறீர்களா? கூட்டாளிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ? நல்லது, போவோம். நான் பிணத்தின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன், நீங்கள் தலையைப் பிடித்துக் கொள்ளுங்கள், தூக்கிப் போவோம்.”

“அதுதான் இல்லை, முல்லா. கால்பக்கம் நாங்கள் பிடித்துக் கொள்வோம், தலைப்பக்கம் நீங்கள்!”

வெளியே உள்ளவர்களுக்குக் கேட்காதபடி இரகசியக் குரலில்தான் நாங்கள் வாதம் செய்தோம். வாயில் கதவுகளுக்கு வெளியே இருந்த எவனுக்காவது எங்கள் பேச்சு காதில் விழுந்திருந்தால், நாங்கள் கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காகத் தீவிரமாக மந்திரம் போடுகிறோமாக்கும் என்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் ஒருவரும் உற்றுக் கேட்கவில்லை. இறந்தவனை எடுத்துச்சொல்லப் பாடை கட்டுவதில் ஆட்கள் முனைந்திருந்தார்கள்.

நாங்கள் இன்னும் வெகு நேரம் சச்சரவிரட்டிருப்போம். ஆனால் திடீரென்று அமனுக்கு ஒரு யோசனை உதித்தது. “இருங்கள். ஒரு நாலைந்து கஜ நீளக் கயிறு கிடைத்தால் நன்றாய் இருக்கும்” என்றான்.

“உனக்கு எதற்குக் கயிறு?”

“எனக்கு ஒரு யுக்தி தேன்றியிருக்கிறது! அதற்குத்தான்.....போ, தேடு.”

நாங்கள் சவுக்கைகளில் துருவித் தேடினோம். எங்கள் அதிஷ்டம், ஒரு சவுக்கையில் பழைய கவணையில் கட்டியிருந்தது கம்பளிக் கயிறு, சுமார் ஏழு அல்லது எட்டு கஜ நீளம் உள்ளது. அதை அறுத்து எடுத்துக் கெண்டு சவ அறைக்குத் திரும்பினோம். முல்லா கைகளைத் தேய்த்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு பக்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். தன் சொந்த யோசனையால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அமனுக்குத் துணிச்சல் கூட வந்துவிட்டது. உறுதியாக அடி வைத்து அறைக்குள் போய் முல்லாவை அழைத்து, சவத்தின் கால்களை உயர்த்தும்படி கூறினான். முல்லா சற்று சண்டித்தனம் செய்தான். அப்புறம் பிணத்துக்கு முதுகைக் காட்டியவாறு நின்று வலிப்பு வந்தவன் போல உடலை நெளித்து, எருக்குழி வண்டுகள் ஒரு பத்தை விழுங்கிவிட்டவன் போல முகத்தைச் சுளித்துக் கொண்டு, இறந்தவனுடைய பதங்களைப் பற்றித் தூக்கினான். அமன் சட்டென அவற்றின் அடியில் கயிற்றை நுழைத்து, சுருக்கிட்டு, சவத்தின் கணுக்கால்களுக்கு மேலே இழுத்து இறுக்கினான். அமன் கட்டளையிட்டதும் நாங்கள் மூவரும் கயிற்றின் மறு நுனியைப் பிடித்துக் கொண்டு பிணத்தைக் குளத்துக்கு இழுத்துப் போனோம்.

“எப்படி என் யோசனை? அருமையானது, அல்லவா? இப்போது இதைத் தலைகீழாகக் குளத்தில் விட்டு ஒரு மூன்று தடவை அலசுவோம், அவ்வளவு தான்! இது சுத்தம் ஆகிவிடும்!” என்று குளத்தை நெருங்கியதும் சொன்னான் அமன்.

“ஆண்டவன் அருள்க. உண்மையிலேயே இவன் சுத்தம் ஆகிவிடுவான்!” என்றான் முல்லா.

நாங்கள் மேற்கொண்டு எதுவும் போசாமல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு பிணத்தைத் தண்ணீரில் இறக்கிக் குளத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு இழுத்து அதை அலசத் தொடங்கினோம். இந்த வேலை எங்களுக்குச் சுவையாய் இருந்ததால் மூன்று தடவைகள் அல்ல, பத்து தடவைகளுக்குக் குறையாமல் அலசினோம். தேர்ந்த பிணமுழுக்காட்டி எவனும் தன் வேலையை இதைவிட நேர்த்தியாகச் செய்திருக்க மாட்டான் என்ற முழு நம்பிக்கையுடன் கடைசியில் அலசுவதை நிறுத்தினோம். இப்போது பிணத்தை வெளியே எடுக்க வேண்டியிருந்தது. கயிற்றை மெள்ள மெள்ள இழுக்கத் தெடங்கினோம். ஆனால் அது எதிர்பாரா விதமாக விறைப்பாயிற்று. பிணம் மேற்கொண்டு அசையவில்லை. அடித்தளத்துடன் ஒன்றிவிட்டது போல ஆகிவிட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அமன் மறுபடி வெளிறிப் போனான். முல்லாவோ, “உதவி செய், ஆண்டவனே!, காப்பாற்று, ஆண்டவனே” என்று ஜெபித்தவாறு கயிற்றை மேலும் மேலும் இழுத்தான். நான் என் வசமின்றியே வெளி வாயில் பக்கம் நோக்கினேன்.

“உதவிக்கு ஆட்களை அழைப்போமா?” என்று கேட்டவன், அது என்ன அசட்டுத்தனமான கேள்வி என்பதை அக்கணமே உணர்ந்தேன்.

“மூடா, உனக்கு என்ன மதி மயங்கிவிட்டதா? உனக்கு ஆட்கள் எப்படி உதவுவார்கள், தெரியுமா?... கத்துவதில் செலவிட நினைத்த சக்தியைக் கயிற்றை இழுப்பதில் ஈடுபடுத்து.” என்றான் அமன். நாங்கள் பாப்ளார் அடிமரத்தில் கால்களை ஊன்றியவாறு மறுபடி இழுக்கலானோம். அதற்குள் வாயிற்கதவு தட்டப்பட்டது. முல்லா கயிற்றை விட்டுவிட்டான்.

“சற்று பொறுங்கள். நாங்கள் இன்னும் இடுப்புவரை கூடக் கழுவி ஆகவில்லை. கழுவியதும் நாங்களே கூப்பிடுகிறோம்!” என்று கத்தினான்.

அவன் மறுபடி கயிற்றைப் பிடித்துக் கொண்டான். நாங்கள் இழுத்தோம். ஆனால் அந்துப் பூச்சி அரித்து நைந்து போயிருந்த கயிறு சடக் கென்று அறுந்துவிடவே நாங்கள் மூவரும் பின்னே சரிந்தோம். தாமதிக்க நேரமோ இல்லை. பொழுது சாயும் தறுவாய் ஆகிவிட்டது.

“முல்லா! உடைகளைக் களையுங்கள். குளத்தில் இறங்க வேண்டியிருக்கும். ஐந்து ரூபிள்கள் சும்மா கிடைத்துவிடுமா உங்களுக்கு?” என்றேன்.

முல்லாவின் உடம்பெல்லாம் பச்சை பாரித்துப் போயிற்று.

“அட நாய்க்குட்டி! உனக்கும் இதே போன்ற முழுக்காட்டு கிடைக்குமாக, அதுவும் சீக்கிரத்தில்! உடைகளையும் எண்ணமே எனக்கு இல்லை. என்ன சொல்கிறாய், ஊம்?” என்றான்.

“சொல்கிறேன், ஆனால் உங்களிடம் அல்ல. இதோ வாயிலுக்குப் போகிறேன், அங்கே...”

நான் வாக்கியத்தை முடிப்பதற்குள் முல்லா வசவும் திட்டுமாக உடைகளையத் தொடங்கினான். துணிச்சல் அடைந்துவிட்ட அமனும் அவன் பின்னே நீரில் இறங்கினான். இருவரும் அடித்தளத்தைத் துழாவலானார்கள். முடிவில் பிணத்தின் கால்கள் நீருக்கு மேல் தெரிந்தன. அதன் தலை பாப்ளார் வேர் வளைவில் மாட்டிக் கொண்டிருந்தது. எங்கள் கறிற்று நுனியை கால்களில் இருந்த அறுந்த பகுதியுடன் முடிந்தான் அமன். முல்லாவும் அவனும் கரையேறினார்கள். நாங்கள் மறுபடி இழுக்கத் தலைப்பட்டோம். முடிவில் பிணம் அசைந்து கொடுப்பதாக உணர்ந்தோம். நெறுநெறுவென்ற ஒசையும் வேறு ஏதோ விந்தையான பயங்கர ஒலியும் கேட்டன. பிணம் மேற்பரப்புக்குத் துள்ளிவந்தது. நாங்கள் மறுபடி தரையில் விழுந்தோம். பரபரப்புடன் எழுந்து பார்க்கிறோமோ, அப்பாவிப் பிணம் தலை இல்லாமல் மிதக்கக் கண்டோம்!

இந்த கோரத்தைப் பார்த்து நாங்கள் அயர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டோம். இனி என்ன செய்வது? அப்போது முல்லா எதிர்பாரா வகையில் உண்மை வீரத்தைக் காட்டினான். அவன் மறுபடி குளத்தில் இறங்கி, கையால் நீருக்குள் வேர்களுக்கிடையே துழாவி, முகத்தை ஒரேயடியாகச் சுளித்துக் கொண்டு அறுந்த தலையை வெளியே எடுத்தான். நானும் அமனும் மறுபக்கம் திரும்பிக் கொண்டோம். எங்களுக்குக் குமட்டல் எடுத்தது. முல்லாவோ, எங்கள் சாமான்களில் தேடி, நாங்கள் வாங்கியிருந்த ஊசியையும் நூலையும் எடுத்துக் கொண்டான். உடலைக் குளத்திலிருந்து வெளியேற்றும்படி எங்களுக்குக் கட்டளையிட்டான். பின்பு தலையை உடலுடன் பொருத்தித் தைக்கத் தொடங்கினான்! இந்த வேலையில் தான் கைதேர்ந்தவன் என்று அவன் மெய்ப்பித்தான். நூலை ஆறாக முறுக்கி மளமளவென்று லாகவமாகத் தையல் போட்டான். சற்று நேரத்தில் தலை அதன் இடத்தில் பொருந்திவிட்டது... இப்போது அவன் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்க நான் தயாராய் இருந்தேன். துணியைப் பிரிக்கச் சொல்லி ஒரு நொடியில் சவச்சீலை தைத்துவிட்டான். பிண்த்தின் உடல் மூடப்பட்டது. ஆனால் துணித்துண்டு நீளம் போதவில்லை. கால்கள் திறந்திருந்தன. எங்கள் கயிறு இறுக்கிய பதிவுகள் அவற்றில் தெரிந்தன. அப்போது நாங்கள் எங்கள் பயணப் பையைச் சட்டெனக் காலி செய்து அதிலிருந்த சாமான்களை இடுப்புக் குட்டைகளில் கட்டிக் கொண்டோம், பையால் பிணத்தின் கால்களை மூடி, சவச்சீலையுடன் அதைச் சேர்த்துத் தைத்துவிட்டோம்.

அமன் உடைகளை அணிந்து கொண்டான். முல்லாவும் அவ்வாறே செய்து, தலைப்பாகையை மறுபடி கட்டிக் கொண்டு, மேலங்கியைச் சரிப்படுத்திக் கொண்டான். பின்பு வெள்ளிக்கிழமைத் தொழுகை படிப்பவன் போன்ற தோற்றத்துடன் பிணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு எனக்குச் சைகை காட்டினான். நான் கற்பாளத்தை அப்புறப்படுத்தினேன். பாவம், சித்திரவதை செய்யப்பட்ட இறந்தவனின் இனத்தவர்கள் அழுது அரற்றுவதற்கு ஏற்கனவே தயாராயிருந்தார்கள். வாயிலுக்கு வெளியே அப்போதுதான் மிலாறுகளால் பின்னி நீண்ட கட்டைகளுடன் இணைக்கப்பட்டிருந்த பாடை வைத்திருந்தது. கட்டைகள் வண்டி நுகத்தடிகள் போலிருந்தன. அவற்றில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருந்தவர்கள் கோட்டைக்குள் பாய்ந்து வந்தார்கள். அவர்கள் பிணத்தைச் சூழ்ந்து கொண்டு முறைப்படி ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒலமிட்டாக்ள். சிலர் துக்கத்துடன் சவச்சீலையை வருடினார்கள். எவனோ ஒருவன், தலை இருந்த இடத்தைத் தடவினாடன்- உடனேயே ஆச்சரியக் கூக்குரலிட்டான். பிணம் மல்லாக்கக் கிடந்தது. ஆனால் முகம் இருக்க வேண்டிய இடத்தில் பின்மண்டை இருந்தது!

நான் கல்லாய்ச் சமைந்து போனேன். முல்லா அறுந்த தலையை அவசரத்தில் முகம் கீழாக வைத்துத் தைத்துவிட்டான்!

இனத்தாரின் கும்பல் அனைத்தும் அக்கணமே ஒலமிடுவதை நிறுத்திவிட்டு முல்லாவின் அருகே குழுமி அவனையும் எங்களையும் நெட்டித் தள்ளத் தொடங்கிற்று.

“ஏய், அவன் முகம் ஏன் கீழ் நோக்கி இருக்கிறது?” என்று ஒருவன் கேட்டான்.
முல்லா வெளிறிப்போய் நின்று கொண்டிருந்தான், ஆனால் அப்போதும் மனங்கலங்கவில்லை.

“அல்லாவின் சித்தம் அப்படி. வாழ்நாளில் இவன் நிறையப் பாவங்கள் செய்திருப்பான். அதனால் தான் அல்லா இவன் தலையைத் திருப்பிவிட்டார்!” என்று விதிக்குத் துயரத்துடன் முடிவணங்குபவன் போன்ற பாவனையில் கைகளை விரித்தான்.

நான் அச்சத்தால் நடுங்கினேன் என்றாலும் முல்லாவின் கலங்கா மனவுறுதியையும் அவனுடைய சமயோசித புத்தியையும் வியந்து பாராட்டினேன். பலர் முகங்களில் ஆத்திரத்துக்குப் பதில் குழப்பம் தென்பட்டதைக் கண்டதும் விபத்து விலகிவிட்டது என்று கூட நினைத்தேன். அதுதான் பிசகு! வெயிலில் கறுத்த இந்த மேய்ப்பர்கள் எளிதில் எதையும் நம்பிவிடும் வெகுளிகள் அல்ல என்பது விரைவில் தெளிவாயிற்று.

“எங்கே, சவச்சீலையைத் தையல் பிரிப்போம்!” என்று ஒருவன் கத்தினான். அவ்வளவுதான். முல்லாவின் சட்டைகையை விடாது பிடித்துக் கொள்ள மறக்காமல் கூட்டத்தினர் எல்லோரும் மறுபடி பிணத்தின் பக்கம் திரளாகச் சென்றார்கள். துணித் தையலைப் பிரித்ததுமே கழுத்தில் போட்டிருந்த தையல் வெளியே தெரிந்தது. அப்போது அவர்கள் எல்லாரும் ஒரு மொத்தமாகப் போட்ட கூப்பாட்டில் பழைய கோட்டைச் சுவர் அக்கணமே தகர்ந்து விழுந்து விடும்போல் இருந்தது. கூட்டம் முழுவதும் முல்லாமேல் பாய்ந்தது. எங்களை அவர்கள் கணப்போது கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். நாங்கள் திகிலால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அவர்கள் கைகளுக்கும் கால்களுக்கும் இடையே புகுந்து நழுவி, நீர்ப்பாசியிலிருந்து தவளை துள்ளுவதுபோல முகப்பிலிருந்து துள்ளி வெளியே ஒடினோம். சில ஆட்கள் எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த மேய்ப்பர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் குதிரைச் சவாரியிலேயே கழித்தவர்கள். சொந்தக் கால்களால் ஒடுவதில் இவர்களுக்கு லாகவம் பற்றாது. எங்களுடன் இவர்கள் போட்டி போடுவது எங்கே? விரைவிலேயே எங்களுக்கும் அவக்ளுக்கும் இடையே தூரம் கணிசமாக அதிகரித்தது. ஆனால் அவர்களுக்குக் குதிரைகளின் நினைவு வந்து விடலாம். வந்தால் நாங்கள் தெலைந்தோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆளுக்கு ஒரு பக்கமாக ஒடுவதே மேல். வட்டாரப் பையன்களின் இந்த மூதறிவை நான் வெகு காலமாகவே பெற்றிருந்தேன். இடப் புறம் ஒடு. என்று அமனிடம் சொல்லிவிட்டு நான் வலப்புறம் ஒடினேன். துரத்திவந்தவர்களின் ஒட்ட வேகம் மட்டுப்பட்து, அவர்கள் வரவரப் பின்தங்கினார்கள். ஒடும் போதே நான் முல்லாவைப்பற்றி நினைத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? உயிர் பிழைத்தால் எப்போதாவது சந்திப்போம். இல்லாவிட்டால்--ஆண்டவனே, அவன் ஆன்மா சாந்தி அடைவதாக...

(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Tuesday, 23 June 2009

குறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு

“தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள்கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத்திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக்காட்டிலும் மறைய முடியாது”--இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்—சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திருமங்களுக்குப் பிறகு அவன் தலைதெரிக்க ஓடித் தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான்! இந்தக்குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெக்கிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிகக் கடினமானதாக இருந்த காலம் அது.

“குறும்பன்” என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெக்கிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903 – 1966) உரைநடைப்படைப்புகள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும். கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத்தொகுப்புகள் இயற்றியவர்.
குறும்பன்: அத்தியாயம் 8: ஜமீந்தார் பட்ட பாடு

நாடோடி வியாபாரி கண்ணில் படாமல் தப்பவேண்டுமே கடவுளே என்று எண்ணியவாறு கிராமத்தைச் சுற்றிக் கடந்து போக முயன்றேன். தலைக்கு நாள் போலவே சாலை வழியே மெல்ல நடந்து, பொழுது சாயும் தறுவாயில் பேராற்றின் கரையை அடைந்தேன். பாறைகளில் தத்தி முழங்கியவாறு அது விரைந்து பெருகிக் கொண்டிருந்தது. நுரையால் அதன் பெருக்கு
வெளேரென்று காட்சி தந்தது. அது என்ன ஆறோ, எனக்குத் தெரியவில்லை. எங்கே ஆபத்தின்றி இறங்கிக் கடக்கலாம் என்பதைப் பற்றியோ, கேட்கவே வேண்டாம். கரையோரமாக ஆற்றுப் பெருக்குக்கு எதிர்த்திக்கில் சிறிது தூரம் நடந்தேன். அப்புறம் பெருக்கையொட்டித் திரும்பினேன். அப்போது ஆற்றின் இரைச்சலின் ஊடே மனிதக் குரல்களும் குதிரைக் கனைப்பும் கேட்பது போல எனக்குப் பிரமை உண்டாயிற்று. சுற்றிலுமோ, ஒரு பூதரைக் காணோம். எதை எதிர்பார்க்கிறோமோ அல்லது அஞ்சுகிறோமோ, அதை எல்லாம் கொந்தளிக்கும் ஆற்றின் இரைச்சலில் கேட்கலாம்...

தனியே ஆற்றைக் கடக்க என்னால் முடியவில்லை, திரும்பவும் வகையில்லை. யாரேனும் சாலையில் வர மாட்டார்களா என்று காத்திருந்தேன். எங்கள் வட்டாரத்தில் நான் கேட்டிருந்த ஒரு பாட்டு அப்போது என் நினைவுக்கு வந்தது. ஏழை நாடோடிகளின் அந்தப் பாட்டு, இந்தச் சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருந்தியது. விரைந்து சென்ற வெள்ளலைகளையும் நுரையினூடே துருத்திக் கொண்டிருந்த மழமழப்பான பருத்த பாறைகளையும் நோக்கி, அந்தப் பாட்டைப் பாடினேன்:

"கொந்தளிக்கும் ஆறு,
குமிழ்த்துப் பொங்கும் பெருக்கு,
எந்த வகையில் கடப்பேன்,
நான் அறியேன் அம்மா!

நொய்ந்த நோஞ்சல் குதிரை,
நீண்ட வழிப் பயணம்!
என்றும் இலக்கைச் சேரேன்,
இதை அறிவேன் அம்மா!

தொத்தல் குதிரை பருக்கைக்
கல்லில் நடந்து துடிக்கும்,
முற்றும் புழுதி என்றன்
மூச்சில் நிறையும் அம்மா!

ஆட்கள் பறிக்க மறந்து,
பழுத்திட்ட வெள்ளரியைக்
காட்டிலுமே மஞ்சள்
பாரித்திட்டேன் அம்மா!

ஏடி, பிறை நுதலி,
நிமிர்த்து புருவ வில்லை,
நாடும் என் உளத்தின்
மதுவை முற்றும் பருகு!

அந்தக் கரையில் ஒளிரும்
அழகி, உன்றன் வீடு.
எந்தன் உயிரும் வழங்க
வருந்தேன், உறுதி சொல்வேன்!

என்னை உங்கள் இடத்துக்கு
ஈர்த்த்துதான் எதுவோ?
இன்னும் அறியேன், வெறுமே
இரங்கி அழுவேன், அம்மா!

உன்றன் நுண்ணிடைதான்
ஒளிரும் வெண்மையாக--
துன்றும் ஆடை பட்டோ,
அன்றேல் சீட்டி தானோ?

விரையும் ஆற்றுக்கில்லை
இரவோ அன்றிப் பகலோ,
நுரைகள் சுழித்துப் பொங்க
இரையும் வெள்ளம், அம்மா!

என்னை விடவும் மேலோ,
உண்மையாகச் சொல்லு--
உன் உளம் கவர்ந்த
அந்த ஆண்மகன்தான்?

அக்கரையில் காண்பேன்
அருமையான கலசம்.
பொற்கலம் கண்டு
பூரிப்பேன், அம்மா!

கையை நீட்ட மட்டும்
எனக்கு முடிந்திடாது--
பைய எடுத்து நீரால்
நிறைக்க இயலேன், அம்மா!

பொங்கி நுரைக்கும் பெருக்கை
நீந்திக் கடத்தல் கடினம்.
தங்கு தடை இல்லாத
வழியே எளிது, அம்மா!

வேண்டும் இதற்குத் துணிவு,
அற்ப விரைவு அல்ல.
வேண்டும் தயக்கம் அற்ற
துணிவு ஒன்றே, கண்டாய்!

வீரம் வேண்டும் அன்பா,
நாடோடிக்கு, மதுவை
ஆரப் பருக விரும்பின்,
அடியொட்டக் குடிப்பாய்!"

பாடி முடித்த்தும் எனக்கு உண்மையாகவே தாகம் எடுத்தது. முழங்காலளவு நீரில் நின்று இரண்டு கைகளாலும் சில மடக்குகள் இனிய ஆற்றுநீரை அள்ளிக்குடித்தேன். சில்லென்றிருந்தது, பற்கள் உதிர்ந்துவிடும்போல. தலை நிமிர்ந்தவன், முதிய உழவன் ஒருவன் நோஞ்சல் குதிரை ஏறி ஆற்றுக்கு வரக் கண்டேன். நான் அவனை எதிர்கொண்டு ஓடி, அவன் மேலங்கித் தலைப்பைப் பிடித்துக்கொண்டு, என்னையும் மறு கரை சேர்க்கும்படி கெஞ்சினேன்.
"நல்ல ஆள்தான்" என்று சிடுசிடுப்புடன் கூறி, குதிரையைக் காட்டி, "பார்த்தாயா, எப்படி எலும்புந்தோலுமாய் இருக்கிறது என்று? இப்போதுதான் குட்டி போட்டிருக்கிறது. தவிர சுமையும் கனம். இரண்டு ஆண்கள் இதன்மேல் சவாரி செய்வது வெட்கக்கேடு" என்றான்.

ஆனால் நான் விடாமல் மன்றாடவே அவன் சிடுசிடுப்புடன் இசைந்தான்.

அக்கரை சேர்ந்தபின், கலைந்த சுமையை அவன் சரிப்படுத்துதற்குள் அந்த ஆற்றின் பெயரையும் அவனைப்பற்றிய விவரங்களையும் கேட்டு அறிந்தேன்.
அந்தக் கரைக்கு அருகே இருந்த கிராமத்தைச் சேர்ந்த முந்திரித் தோட்டக்காரன் அவன். என்னைப்பற்றிய அவசியத் தகவல்களை அவனும் விசாரித்து அறிந்துகொண்டான். நான் வீடின்றித் திரியும் அனாதை, சுற்றமோ இனமோ அற்றவன், தலை சாய்த்துப் படுக்கவும் வறட்டு ரொட்டித்துண்டு பெறவுங்கூடப் புகல் அற்றவன் என்று கேள்விப்பட்டதும் கிழவன் எனக்குச் சில யோசனைகள் கூறினான். கிராமத்தில் பிரதேச நிர்வாக அதிகாரி ஸரீபாய் என்பவன் இருப்பதாகவும் அவன் பிரபல ஜமீந்தார் என்றும் சொன்னான் கிழவன். ஜமீந்தாரின் ஆப்பிள் தோட்டம் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விசாலமானது. எப்போதுமே அங்கே உழைக்கும் கரங்களுக்குத் தேவை உண்டு. இப்போதோ, ஆப்பிள் முதிரும் பருவம். எனவே இந்தத் தேவை இன்னும் அதிகமாய் இருக்கும். ஜமீந்தார் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள மறுக்க மாட்டான்--நான் மலிவான கூலிக்கு இசைவேனே, அதனால். இன்றே இரவைப் பண்ணைக் கூலியாட்களுடன் கழிக்கலாம். தானே எனக்கு வழி காட்டுவான்-- இதுவே அவன் தெரிவித்த தகவல்...

முதிய முந்திரித் தோட்டக்காரன் என்னை ஒரு சிறு மட்ட வீட்டுக்கு அழைத்துப் போனான். அதில் சுமார் இருபது பண்ணைக் கூலியாட்கள் இருந்தார்கள். எல்லோருமே கிழவர்கள், அல்லது மிகவும் வயதானவர்கள். நான் முறைப்படி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தேன். அவர்கள் மகிழ்வுடன் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஸரீபாயிடம் கூலி வேலை செய்ய விரும்புவதாக நான் சொன்னதும் அவர்களில் ஒருவன் கூறினான்:


"அடே மகனே. இங்கே நீ என்ன செய்யப் போகிறாய்? நீ இன்னும் இளையவன். வாழ்க்கை மதிப்புள்ளது. இங்கே உன் வாழ்க்கை வீணே பாழாகிவிடும். நேரம் இருக்கும் போதே ஏதேனும் நல்ல ஊதியம் தரும் தொழிலைக் கற்றுக்கொள்." --இப்படிச் சொல்லிவரும் போதே என் முகத்தில் தென்பட்ட சோர்வைக் கண்டு, "அட ஒரு பத்து, பன்னிரண்டு நாட்கள் வேலை செய்யலாம், பரவாயில்லை. உன் நிலைமையைச் சீர்படுத்திக்கொள். அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம்" என்று நல்லியல்புடன் கூறினான்.

மண் குவளையில் ஒரு கரண்டி சோளக் கஞ்சி ஊற்றி இரண்டு ரொட்டித்துண்டுகளுடன் எனக்குக் கொடுத்தான். நான் அவற்றை நல்ல பசியுடன் சாப்பிட்டேன்.


அப்புறம் படுத்துக்கொள்வதற்கான இடத்தை எனக்கு அவர்கள் காட்டினார்கள். ஆப்பிள் வைப்பதற்கான இரண்டு காலிப் பெட்டிகளைக் கட்டிலாகவும் மரச்சீவல் குவியலைத் தலையனையாகவும் வைத்துக்கொண்டு படுத்தேன். படுக்கை அருமையாக அமைந்துவிட்டது. உறக்கமோ கரும்பாய் வந்தது. மௌல்வியின் தொழுகைக்கூடத்தைவிட இங்கே வெதுவெதுப்பாய் இருந்தது. தவிர பலபலவென்று விடிவதற்குள் தங்கள் பிரார்த்தனைகளால் எழுப்பிவிட ஸூஃபிகளும் இங்கே இல்லை.


காலையில் ஜமீந்தாரிடம் போனேன். ஆரம்பத்தில் அவன் மேலுக்குக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான். ஆப்பிள்கள் செங்கல்கள் அல்ல, அவற்றைக் கையாளத் திறமை வேண்டும் என்றான். பின்பு கூலி விஷயத்தில் நன்றாகப் பேரம் பண்ணினான். மாதத்துக்குச் சுமார் இரண்டேகால் மணங்கு ஆப்பிள்கள் கூலி என்று முடிவில் ஒத்துக்கொண்டான். இந்த ஆப்பிள்கள் முதிர்ந்தவையும் பிஞ்சுகளுமாகப் பலதரப்பட்டவையாக இருக்கும் என்று வேறு நிபந்தனை சேர்த்தான்! அறியாச்சிறுவன் என்று ஏமாற்றப் பார்க்கிறான் என்பது குருடனுக்குக் கூடத்தெரியக்கூடியதாக இருந்தது. எனக்குக் கடுங்கோபம் வந்தது. ஆனால் நான் அதை வெளிக்காட்டவில்லை. என்னிடமோ இழப்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே ஒரு நிபந்தனை
போடத் தீர்மானித்தேன். சற்று யோசித்துவிட்டுச் சொன்னேன்:


"ஜமீந்தார் ஐயா, நாம் கூலியெல்லாம் பேசி முடிவு பண்ணிவிட்டோம். ஆனால் என்னிடம் உள்ள ஒரு குறையை உங்களிடமிருந்து மறைக்க மனச்சாட்சி இடந்தர மாட்டேன் என்கிறது. இதை நான் சொல்லிவிடாவிட்டால் ஒப்பந்தம் இஸ்லாம் மத விதிகளின் பிரகாரம் செல்லுபடி ஆகாது... என்னிடம் ஒரே ஒரு குறைதான் உண்டு, என்றாலும்..."

"சரி, சரி சொல்லித்தொலை. என்ன குறை உன்னிடம்? தூங்கும்போது துணிகளை நனைத்துக்கொள்கிறாயோ? வலிப்பு வருவது உண்டோ?"

"இல்லை ஜமீந்தார் ஐயா, இதெல்லாம் கிடையாது. ஆனால் குழந்தையிலிருந்தே எனக்கு உள்ள கெட்ட பழக்கம் என்ன என்றால் சமயாசமயங்களில் என் விருப்பம் இல்லாமலே பொய் சொல்லுவேன். என்னால் இதைத் தவிர்க்க முடியாது. அப்புறம் நீங்கள் என்னைக் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஜமீந்தார் ஐயா, சொல்லிவிட்டேன். கூலி நீங்கள் சொன்னபடியே கொடுக்க வேண்டும்!"

"அட, குட்டிப் பிசாசே! தந்திரக்காரன் நீ, பையா, நல்லது, வேலை செய்யப் போ. அடிக்கடி மட்டும் பொய் சொல்லாதே!..."


இந்த மாதிரி நான் ஜமீந்தாரின் பண்ணைக்கூலியாள் ஆகிவிட்டேன்! என் வேலை ரொம்பக் கடினம் அல்ல. ஆப்பிள் மரங்களுக்கு முட்டுக்கால் கொடுப்பது, விழுந்த ஆப்பிள்களைச் சேகரித்து உலர்த்துவது, ஜமீந்தாருக்குப் பணம் தேவைப்படும் போது, நன்கு முதிராத ஆப்பிள்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு தர்பாஜா அல்லது ஸரீ-அகாச்சுக்கு விற்கப் போவது, தோட்டத்தைப் பேணிப் பாதுகாப்பது--இவையே என் வேலை. .. இவை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஜமீந்தாரின் பாழாய்ப்போன சுபாவந்தான் தலை வேதனையாய் இருந்தது. இவ்வளவு நச்சுப்பிடுங்கியை நான் அவனுக்கு முன்னும் அப்புறமும் கண்டதே இல்லை. இங்கே வேலைக்கு அமர வேண்டாம் என்று யோசனை சொன்ன முதிய பண்ணைக்கூலியாள் சரியாகவே கூறினான். ஏதேனும் காரியமாக ஸரீபாயிடம் போனால் அவனிமிருந்து லேசில் விடுபட முடியாது என்பதை முன்கூட்டியே சொல்லிவிடலாம். ஒவ்வோர் அற்ப விஷயத்துக்குப் பிறகும் "அப்புறம் என்ன?" என்ற ஒரே கேள்வியைப் பன்னிப் பன்னிக் கேட்கும் படுமோசமான வழக்கம் அவனிடம் இருந்தது. உதாரணமாக நீங்கள் அவனிடம் வந்து, "கந்தீல் ஆப்பிள் பழுத்துவிட்டது" என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். இது புரியும் விஷயந்தானே என்கிறீர்களோ? ஆனால் ஆவனோ, "அப்புறம் என்ன?" என்பான். "ஆப்பிள்களைப் பறிக்க வேண்டும்" என்பீர்கள் நீங்கள். அவனோ, சாபத்தீடான அதே வெட்டிக் கேள்வியை மறுபடி கேட்பான், "அப்புறம் என்ன?" என்று. "விற்க வேண்டும்" என்று சொல்வீர்களாக்கும். அவ்வளவுதானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. அவனால் நிறுத்த முடியாது. "சரி, அப்புறம் என்ன?" என்பான். இதற்கு மட்டும் பதில் உங்களிடம் தயாராக இல்லையோ, சரியான ஆபாசத்திட்டு வாங்கிக்கட்டிக் கொள்வீர்கள். சில வேளைகளில் முதுகில் பளீரென்று சவுக்கடி கூடக் கிடைப்பது உண்டு.


வியப்பு அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா? இந்த மாதிரி ஆட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டந்தான்! அல்லாவிடம் பாவ புண்ணியப் பேரேடுகளில் சரியானபடி கணக்கு எழுதப்படுவதில்லை என நினைக்கிறேன். அதுதான் உலகத்தில் ஏற்படும் எல்லாக்குழப்பங்களுக்கும் மூல காரணம். நல்லதிர்ஷ்டமும் துரதிர்ஷ்மும் உரியபடி கிடைக்க வேண்டியவர்களுக்கு அன்றி யார் யாருக்கோ வாய்க்கின்றன. ஏற்கனவே அப்பத்தின்மீது நெய்
மிதந்து கொண்டிருந்தது ஸரீபாய்க்கு. செல்வம் கணக்கில்லாமல் கொட்டிக் கிடந்தது. இது போதாது என்று சுவாலாச்சியைச் சேர்ந்த யூஸூஃப்--கந்தோரிடம் அவனுடைய பழத்தோட்டம், வீடு, அதிலுள்ள தட்டுமுட்டு சாமான்கள் எல்லாவற்றையும் வேறு ஏதோ சூதாட்டத்தில் ஜெயித்துவிட்டான்... இந்தப் பழத்தோட்டம், சிறப்பாக குளுகுளுவவென்று காற்று வீசும் கொடி வீடு, ஸரீபாயின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. ஆகவே அவன் நெடு நேரம் சிந்திக்காமல் ஓர் இளம் கிர்கீஸியப் பெண்ணை அங்கே இன்னொரு தரமாக மணந்து கொண்டான். இப்போது அடிக்கடி அங்கே போய், பத்து, பதினைந்து நாட்கள் இருந்துவிட்டு வருவான்...


இம்முறையும் ஸரீபாய் தன் கிர்கீஸிய மனைவியிடம் போயிருந்தான். இங்கேயோ ஆப்பிள்கள் பழுத்துவிட்டன, உதிரவும் தொடங்கின. ஆனாலும் எஜமானின் உத்தரவு இல்லாமல் பறிப்பை ஆரம்பிக்க எவனும் துணியவில்லை. இதற்கிடையே குதிரைகளின் தீனியும் தீர்ந்து போய்விட்டது. பண்ணையாட்கள் அரைப்பட்டினி கிடந்தார்கள். அப்படியும் ஜமீந்தாரிடம் போக ஒருவருக்கும் விருப்பம் இல்லை. அவனுடைய "அப்புறம் என்ன?" என்ற
கேள்வி எல்லோருக்கும் அவ்வளவு கசப்பாயிருந்தது. ஆனால் போகாமல் வேறு வழியும் இல்லை. எனவே மாலையில் எங்கள் பொதுவீட்டில் நாங்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டோம்--ஜமீந்தாரிடம் யார் போவது என்று தீர்மானிப்பதற்காக. என் தலைவிதி, சீட்டு எனக்கு விழுந்து தொலைந்தது.


இது எனக்கு களிப்பு ஊட்டியது. என்று நான் சொன்னால் பெரும் பாவம் செய்தவன் ஆவேன். பாவங்களோ, ஏற்கனவே என்மேல் ஏராளமாய்ச் சுமந்திருக்கின்றன. ஸரீபாயுடன் நடக்கப்போகும் உரையாடலை எண்ணிப் பார்த்த போதே எனக்குக் குப்பென்று வியர்த்துவிட்டது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கில்லை. மறுநாள் காலை எனக்கு ஒரு குதிரை தரப்பட்டது. அதில் ஏறிக்கொண்டு சுவாலாட்சிக்குப் புறப்பட்டேன். நடக்கப் போகும் உரையாடலை வழி நெடுகப் பல விதமாகக் கற்பனை செய்து பார்த்தேன். ஜமீந்தாரின் அப்புறம் என்ன?" என்ற முடிவற்ற கேள்விக்கு எப்படி எப்படிப் பதில் அளிப்பது என்று சிந்தித்தேன். திடீரென்று என் கற்பிதக் `குறை` எனக்கு நினைவு வந்தது. வந்ததுமே எனக்கு உண்டான மகிழ்ச்சியில் கைகள்கூட அரிக்கத் தொடங்கிவிட்டன.


நான் போனபோது ஜமீந்தார் வெந்த ஆட்டுத்தலை இறைச்சியைத் தன் உளங்கவர்ந்த கொடிவீட்டில் உட்கார்ந்து தின்று கொண்டிருந்தான். நான் அவனிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். சந்தடி செய்யாமல் வாயில் அருகே உட்கார்ந்தேன்.

“ஊம்? என்ன காரியமாக வந்தாய்?” என்று கேட்டான்.

“சும்மாதான், ஜமீன்தார் ஐயா. உங்களுக்காக நாங்கள் எல்லோரும் ஏங்கிப் போனோம். உங்களைப் பார்த்து வரும்படி மற்றவர்கள் என்னை அனுப்பினர்கள்...”

“நல்லது, நல்லது, அருமையான ஆட்கள். ஆனால் வெட்டியாக உன்னை
அனுப்பியிருக்க மாட்டார்களே. ஏதேனும் காரியம் இருக்கும். சொல்லு, அப்புறம் என்ன?”

நான் தலையைக் குனிந்து கொண்டு தரையைப் பாத்தபடியே சொன்னேன்:

“அதுதான் வந்து... உங்கள் கத்தி இருக்கிறதே, தந்தப் பிடி வைத்தது, அது முறிந்து போயிற்று. அதைத்தான் உங்களிடம் சொல்ல வந்தேன்... “

“அப்படியா, அப்புறம் என்ன? எப்படி முறிந்தது அது? நாசமாய்ப்போகிற பயல்களா, என்னத்தை நறுக்கினீர்கள் அதைக் கொண்டு? வீட்டிலுள்ள மற்றக் கத்திகள் எல்லம் தொலைந்து போய்விட்டனவா என்ன?”

“உங்கள் வேட்டை நாயின் தோலை உரித்தோம். அப்போது கத்தி எலும்பில் புகுந்து மாட்டி முறிந்து போயிற்று.”

“என்ன? வேட்டை நாயின் தோலையாவது, உரிக்கவாவது? அதிலும் தந்தப் பிடி வைத்த கத்தியால்? த்தூ! எதற்காக உரித்தீர்கள் தோலை?”

“எங்களுக்கு நேரமில்லை, ஜமீன்தார் ஐயா! நாய் செத்ததுமே அதன் தோலை உரிக்க வேண்டியிருந்ததே. இல்லாவிட்டல் தோல் கெட்டுப் போகுமே. அதனால் தான் வேறெரு கத்தியைத் தேடநேரம் இல்லை.”

“நீங்கள் எல்லோரும் அடியோடு பாழாய்ப்போக! வேட்டை நாய் எதனால் செத்தது?”

“செத்த குதிரையின் மாமிசத்தை அளவுமீறித் தின்றுவிட்து.”

“அதற்குச் செத்த குதிரையின் இறைச்சியைக் கொடுத்தது யார்? அது கிடக்க, குதிரை சாக வேண்டிய காரணம் என்ன?”

“ஒருவரும் கொடுக்கவில்லை, ஜமீன்தார் ஐயா, அதுவேதான் தின்றது. குதிரையும் வேற்றருடையது அல்ல, உங்களுடையதேதான். நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை...”

ஜமீன்தார் கணப்போது திக்கு முக்காடிப் போனான்.

“டேய், பையா, முதலில் யோசி, அப்புறம் பேசு... நீ என்ன சொன்னாய், நெற்றியில் வெள்ளைச் சுட்டி போட்ட செம்பழுப்புக் குதிரை செத்துப் போய் விட்டதா? அல்லாவே, காப்பாற்றும்! அது எப்படியடா சாக முடிந்தது?”

“அது வேலைக்கு லாயக்கற்றது, அதனால்தான்.”

“வேலைக்கு லாயக்கற்றதா? எந்த வேலைக்கு? என்னடா உளறுகிறய்?”

“நான் ஒன்றும் உளறவில்லை. அது தண்ணீர் வண்டியை இழுக்க உதவாது என்று தெரிந்தது. அதை வண்டியில் பூட்டியதே இல்லை போலிருக்கிறது. இப்போது பூட்டினேம், அது தண்ணீர் வண்டியை இழுத்து வரும் போது சுமை தாங்க மாட்டாமல் செத்துப்போயிற்று.”

ஜமீன்தார் இருக்கை விட்டுத் துள்ளி எழுந்து, “அட கயவாளிப் பயலே, என்னடா கன்னா பின்னா என்று பிதற்றுகிறாய்? சுமை வண்டிக் குதிரைகள் அத்தனை இருக்கும்போது, பந்தய ஓட்டத்திற்காக நான் ஊட்டி வளர்த்த ஒரே குதிரையைத் தண்ணீர் வண்டியில் பூட்டும் யோசனை எவனுக்குத் தோன்றிற்று சொல்லடா, கடைத்தேறா ஜென்மமே!” என்று தொண்டையைப் பிய்த்துக் கொண்டு கத்தினான். குப்பென்று இரத்தம் ஏறி அவன் முகம் சிவுசிவுத்தது. உதடுகள் துடித்தன.

“ஜமீன்தார் ஐயா, தீப்பிடித்த பிறகு, பந்தயக் குதிரையா வண்டிக் குதிரையா என்று நிதானித்துப் பார்க்க நேரம் ஏது? கைக்கு அகப்பட்ட குதிரையை வண்டியில் பூட்டினேம், ஒரு வாளித் தண்ணீராவது கொண்டு வாட்டுமே என்று!”

நான் பேசிக் கொண்டிருக்கையில் ஜமீன்தார் தன் உணர்வு இன்றியே கையிலிருந்த ஆட்டு நாக்கை ஒரு துண்டு கடித்தான். ஆனால் தீ விபத்து பற்றிய என் சொற்கள் அறிவுக்கு எட்டியதுமே கபக்கென்று அதை விழுங்கவே அது தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது. அரும்பாடு பட்டு அதை உள்ளே செலுத்தி விட்டு, எருதுபோலத் துருத்திய விழிகளை என்மேல் நாட்டியவாறு ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்திருந்தான். ஆட்டின் நாக்குக்குப்பதில் சொந்த நாக்கையே விழுங்கிவிட்டானோ என்று நான் பயந்துகூடப் பேனேன். ஆனால் அவன் சற்று நேரத்துக்குப் பேச்சு இழந்துவிட்டான், அவ்வளவு தான். முடிவில் அவனுக்கு மறுபடி பேச்சு வெடித்துக் கிளம்பிற்று.

“நீ... உனக்கு என்ன, கிறுக்கு பிடித்துவிட்டதா? தீப்பிடித்துக் கொண்டது என்றாயே, என்ன அர்த்தம் அதற்கு? எங்கே பிடித்துக் கொண்டது தீ? எதனால் பிடித்துக் கெண்டது?...”

“நான் நல்ல மூளையோடு தான் இருக்கிறேன், எஜமானே. நெருப்பு முதலில் குதிரை லாயத்தில் பிடித்தது. பாவம், எல்லாக் குதிரைகளும் தீக்கிரை ஆகிவிட்டன.”

“என்ன... என்ன... என்ன காரணத்தால் குதிரை லாயத்தில் நெருப்பு பற்றியது?”

“அறியேன். மற்றவர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். அதாவது களஞ்சியத்தில் பிடித்த நெருப்புதான் குதிரை லாயத்துக்குப் பரவி இருக்க வேண்டும்.”

“அட என் அல்லாவே! எத்தகைய பேரிடி என்மேல் விழுந்துவிட்டது. களஞ்சியத்தில் நெருப்பு மூளும்படி எதுவும் இல்லையே. கோதுமையும் அரிசியும் கொழுப்பும் துணிகளும் தாமே இருந்தன. அவை தாமே பற்றி எரியக் கூடியவை அல்லவே!”

“பொறுங்கள் எஜமான், பூராவும் சொல்ல விடுங்கள். பண்ணை வீட்டிலிருந்து நெருப்பு களஞ்சியத்துக்குத் தாவிற்று. அங்கிருந்து குதிரை லாயத்துப் பரவிற்று. இப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் போயிற்று.”

“அப்படியானால் வீடும் எரிந்து போயிற்றா?”

“வீடு சாம்பலாகிவிட்டது, களஞ்சியமும் குதிரை லாயமும் வெந்து போய்விட்டன, குதிரைகள் நெருப்பில் மடிந்தன, செம்பழுப்புக் குதிரை செத்துப் போயிற்று, கத்தி முறிந்து போய்விட்டது... "

“ஒ-ஒ-ஒ! அட துன்பமே! ஐயோ,வீடு எதனால் தீப்பிடித்துக் கொண்டது? ஊம்?”

“மெழுகு வந்தியால், எஜமான், மெழுகு வத்தியால்.”

“மெழுகு வத்தியாவது ஒன்றவது? உனக்கென்ன மூளை அறவே பிசகிவிட்டதா? என் விட்டில் எங்காவது மெழுகு வத்திகள் எரிவது உண்டா? நான் தாஷ்கந்திலிருந்து அத்தனை விளக்குகள் வாங்கிவந்தேனே, அவை எல்லாம் எங்கே போய்விட்டன? ஊம்? எங்கே போய்த் தொலைந்தன? மண்ணெண்ணெய் பீப்பாய்க் கணக்கில் வாங்கி, ஒரு வருஷம் பூராவுக்கும் சேமித்து வைத்திருந்தேனே மெழுகு வத்திகளை ஏன் ஏற்றினீக்ளாம்?”

“எஜமான், ஆளைப் பேசவே விடமாட்டேன் என்கிறீர்களே! ஒருவர் இறந்துபோனபின் அவர் சவத்துக்கு மேலே மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றுவதை எங்காவது கண்டதுண்டா?”

இதைக் கேட்டதும் ஜமீன்தார் ஒரேயடியாக முடங்கிவிட்டான். என் புளுகுகளால் அவன் மூளை அடியோடு குழம்பிப்போய்விட்டது, எந்த உலகில் இருக்கிறேம் என்பதே அவனுக்கு விளங்கவில்லை என்பது தெரிந்தது. இதற்கிடையே நான் குழந்தைக்கு விளக்குவதுபோல அளந்து கொண்டு போனேன். “உங்களுக்குத் தெரியாதா எஜமான், பிணத்துக்கு மேலே ஏற்றுகிற விளக்குக்கு விட்டில் பூச்சி பறந்து வர வேண்டும். இல்லாவிட்டால் இறந்தவரின் ஆவி எதற்குள் புகும்? அதற்காகத்தானே கோப்பையில் தண்ணீர் நிரப்பி ஆப்பிள் கிளையை அதிலே வைப்பார்கள். விட்டில் பறந்துவந்து
முதலில் கிளைமேல் உட்கார்ந்து களைப்பாறும், அப்புறம் சுற்றிப் பறக்கத் தொடங்கும்...”

ஜமீன்தாருக்குப் பேசத் திராணி இல்லை. கையசைப்பால் என்னைப் பேசாதிருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, “யார்... யார் இறந்து போனது?” என்று ஈன சுரத்தில் வினவினான்.

நான் உடனே கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு உரக்க ஒப்பாரி வைத்து, அழுகைக்கு இடையே சொன்னேன்:

“உங்கள் இளைய... மகன், ஜயோ! பூரிபாய்வச்சா... ஒ-ஒ-ய்யோ... மரத்தில் ஏறி... ஐயையோ... பறவைக் குஞ்சைப் பிடிக்கப் போனார்... ஆ- ஆ- ஆ... ம... மரத்திலிருதந்து... வி... விழுந்து... இறந்து போனர்... ஒரே ஒரு தரம்... மட்டும்... “அப்பா!” என்று கத்தினாராம்...”

ஜமீன்தார் நான் சொன்னதை முடிவுவரை கேட்டானோ இல்லையோ, தெரியாது. தேநீர்க் கோப்பையால் மண்டையில் அடித்துக்கொண்டான். கோப்பை உடைந்து போயிற்று. அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் தேயிலைத் துணுக்குகளுடன் கன்னப் பொருத்தில் வழிந்தது. அவன் தாடியைப் பிய்த்துக் கொண்டு கோவெனக் கதறி அழுதான். நான் அவனோடு கூடி அழுதேன்.
முடிவில் இருவரும் அடங்கினோம். ஜமீன்தார் உட்கார்ந்து துயரம் ததும்ப அசைந்தாடினான்.

எல்லைமீறிச் சென்றுவிட்டோம், ஏதாவது ஆறுதல் அளிக்கக்கூடியதாகக் கதைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

லேசான விம்மலுடன், ஆனால் களி பொங்கும் முகத்துடன் சொன்னேன்: “ஐயோ, எஜமானே. உங்கள் மகன் மாண்டுபோனார், வீடு சாம்பலாகி விட்டது, குதிரைகள் வெந்துபோயின, வேட்டை நாய் மண்டையைப் போட்டுவிட்டது, இருந்தாலும்...”

ஜமீன்தார் என்னை வெறுப்புடன் நோக்கினான். எனவே நான் ஆறுதல் அளிக்கும் விஷயத்துக்கு விரைவில் வரும்பொருட்டு இந்த அவலப் பேச்சை நடுவிலேயே விட்டுவிட்டேன்.

“இருந்தாலும் அல்லா உங்களுக்கு அபரிமிதமாகப் பரிசு வழங்குவானாக! ஜமீன்தார் ஐயா, ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன். அது எல்லாத் துயரங்களிலும் உங்களைத் தேற்றும்!” என்றேன்.

“உஹ்” என்ற சீறல் ஒசை அவனிடமிருந்து வெளிப்பட்டது.

“அடியோடு நாசமாய்ப்போக உன் நல்ல சேதி! இன்னும் என்ன சேதி கொண்டுவந்திருக்கிறாய், உருப்படாத பயலே, சொல்லித் தொலை!” என்றான்.

“உங்கள் நடுவுள்ள மகள் அதல்-அபா அழகான ஆண் மகவைப் பெற்றெடுத்திருக்கிறாள். எந்தச் செல்வமும் அந்தக் குழந்தைக்கு ஈடாகாது!” என்றேன்.

“என்ன –அ?” என்று பொங்கினான் ஜமீன்தார். அவன் கண்கள் பிதுங்கி விட்டன. எந்த அதல்-அபா? --கணநேரம் பேசாதிருந்த பின் அவன் எருது போல எக்காள முழக்கம் இட்டான்: “என் மகளுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே!”

நான் தோள்களைக் குலுக்கினேன்:

“நாங்களுந்தாம் ஒரே ஆச்சரியம் அடைந்தோம். ஆனால் அல்லா திருவுளம் கொண்டால் கலியாணம் ஆகாத கன்னிகளுக்குக் கூடப் பிள்ளை வரம் அருள முடியுமே. ஆனால் குழந்தை இருக்கிறதே, ஜமீன்தார் ஐயா, அதுதான் உங்கள் பேரப்பிள்ளை, என்ன அழகு தெரியுமா?” -–நொடிநேர இடைவெளி விட்டு, அடக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தேன்: “பாதல் தெரியும் அல்லவா? அவன்தான், உங்கள் வண்டிக்காரன்? அவனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது...”

இதை ஜமீன்தாரால் தாங்க முடியவில்லை. அவன் உணர்விழந்து தரை விரிப்பில் சாய்ந்தான். நானும் நேரத்தை வீணாக்க விரும்பாமல் உடனே குதிரையேறிக் கம்பி நீட்டினேன். இவ்வளவு நல்ல சேதிகளுக்குப் பரிசு ஒரு சாட்டையடியோடு நிற்காது. இந்தப் பரிசுக்கு மெய்யாகவே நான் ஏற்றவன் தான். தன்னடக்கம் காரணமாக இதை ஏற்காமலே விட்டுவிடத் தீர்மானித்தேன்.

நான் பண்ணை வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் ஸரீபாயும் தன் வெண் மஞ்சள் குதிரைமேல் ஏறி அங்கே வந்து சேர்ந்தான். இடைக்குட்டை கட்டிக் கொள்ளாமையால் அவனுடைய மேலங்கி நுனிகள் காற்றில் படபடத்தன. ஒரு கண்ணால் வானையும் மறு கண்ணால் தரையையும் நோக்கியவாறு அவன் சவாரி செய்தான். நம் தலையில் என்ன விபத்து விடியுமோ என்று எண்ணி நான் ஒளிந்துகொண்டேன். ஜமீன்தாரின் வீட்டார் அவனுடைய அழுகையையும் புலம்பலையும் கேட்டு ஏதோ துன்பம் நேர்ந்துவிட்டது என்று முடிவு செய்து அழுது அரற்றியவாறு அவனை எதிர்கொண்டார்கள். ஸரீபாய் குதிரை மேலிருந்து இறங்கினான். அலறல்களும் துயரத் தழுவல்களும் தொடங்கின, அந்தச் சமயத்தில் வெளிவாயிலிருந்து எல்லோருடனும் சேர்ந்து அழுவதற்காகப் பாய்ந்துவந்தான் சளிமூக்கன் பூரிபாய்--ஜமீன் தாரின் இளைய மகன். “அப்பா” என்று வீரிட்டுத் தகப்பனிடம் ஒடினான் அவன். ஸரீபாய் தொப்பென்று தரையில் உட்கார்ந்துவிட்டான். இது தோற்ற மயக்கமா அல்லது ஆவி தான் தென்படுகிறதா என்று அவனுக்குப் பிடிபடவில்லை. அப்புறம் எல்லாம் விளங்கிவிட்டது. குதிரைகள் பத்திரமாய் இருக்கின்றன, வேட்டை நாயும் உயிரோடு இருக்கிறது, பண்ணை வீடு தீக்கிரையாகவில்லை, தந்தப் பிடி வைத்த கத்தி கூடவில்லை மதிப்புள்ள மற்றப் பொருள்களோடு சேதமின்றி வைக்கப்பட்டிருக்கிறது என்பவற்றை அவன் தெரிந்துகொண்டான்.

என்னை எல்லோரும் மும்முரமாகத் தேடினார்கள். நான் அவர்களுக்குக் கடுகாய் கொடுத்துவிட்டு அன்று முழுவதும் தலைமறைவாய் இருந்தேன். ஆனால் அடுத்த நாள் நான் அகப்பட்டுக்கொண்டேன். ஆட்கள் என்னைக் கட்டி இழுத்து வந்து ஜமீன்தார் முன்னே நிறுத்தினார்கள். முதல் காரியமாக எனக்கு இருபது சவுக்கடிகள் கிடைத்தன (இவற்றைப் பெறாமல் தப்பவே நான் முயன்றேன்). பிறகு ஜமீன்தார் மூச்சு திணற, முகத்தைக் கோணிக் கொண்டு, “ஏனடா நாய் மகனே, இது என்ன ஏமாற்று வித்தை?” என்று கேட்டான்.

இம்முறை நான் உண்மையாகவே விம்மினேன்--எனக்கு உடம்பெல்லாம் கடுமையாக வலித்தது.

“ஆரம்பத்திலேயே நான் உங்களிடம் சொல்லியிருந்தேனே, ஜமீன்தார் ஐயா (விம்மல்), நான் சில வேளைகளில், (விம்மல்) பொய் பேசுவது உண்டு என்று! இந்த வழக்கம் (விம்மல்) குழந்தைப் பருவம் முதலே எனக்கு உண்டு என்று நான் தான் உங்களை எச்சரித்திருந்தேனே, எஜமான் (விம்மல்)!”

“அப்படியா. இதோடு முடிந்ததா உன் புளுகு?”

“இல்லை, ஜமீன்தார் ஐயா, முடியவில்லை...”

“முடியவில்லை என்றால், நீ எல்லாப் பொய்யும் சொல்லித் தீர்ப்பதற்குள் நான் குடும்பத்தை இழந்து வீடு அற்றவன் ஆகிவிடுவேன். தொலை இங்கிருந்து! நீ பிஞ்சிலேயே கருகிப் போவாயாக! வயிறு நிறைய உணவில்லாமல் வாழ்நாள் முழுவதும் தவிப்பாயாக! விரட்டுங்கள் இந்தப் புளுகனை!”

ஆட்கள் என்னைக் கட்டவிழ்த்து வெளியே துரத்தப் பார்த்தார்கள். ஆனால் நானோ, என் கூலியைக் கணக்குத் தீர்த்துக் கொடுக்கும்படிக் கூக்குரல் இட்டேன். ஒரு மாதமும் ஒன்பது நாட்களும் நான் ஜமீன்தார் வீட்டில் வேலை செய்திருந்தேன். ஜமீன்தார் கையை வீசி ஆட்டி என் கணக்கைத் தீர்க்கும் படி கட்டளையிட்டான். சில்லறைச் செலவுகளுக்காகக் கொடுக்கப்பட்ட இருபத்திரண்டு கோப்பெக்குகளைப் பிடித்துக்கொண்டான். பூச்சி அடித்த ஆப்பிள் பழங்கள் சுமார் ஒரு மணங்கு ஒரு கோணிச் சாக்கில் எனக்குத் தரப்பட்டன. ஆனால் இது கூட எனக்குத் திருப்தி அளித்தது, மூட்டையை எப்படியோ ஒரு விதமாகத் தோள்மேல் தூக்கிக் கொண்டு மறுபடி சாலையில் நடந்தேன்.

(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Friday, 6 March 2009

ராயாவின் "கைதிகள்"


யூ. ஸோட்னிக்

வாயில் மணி யாரோ அவசரக் காரியமாக அடிப்பது போல் ஒலித்தது. ராயா, உடைமேல் ஏப்ரனுக்குப் பதில் கட்டிக் கொண்டிருந்த நாப்கினில் கைகளைத் துடைத்துக்கொண்டு கதவைத்திறந்தாள். ஏழாவது வகுப்பு மாணவன் லோவா கிளச்கோவ் உள்ளே நுழைந்தான்.



"ஹலோ, அவன் வீட்டில் இருக்கிறானா?" என்று மேல் கோட்டைக் கழற்றிய வண்ணம் கேட்டான்.

"குளிக்கும் அறையில் இருக்கிறான்" என்று சொல்லிவிட்டு, ராயா தலையைப் பின்னிக்கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள்.


வீட்டில் சமீபத்தில்தான் குழாய் நீரைக் கொதிக்கவைக்கும் எரிவாயு ஸ்டவ் அடுப்பை அமைத்திருந்தனர். ஸ்டவ் வைத்த புதிதில் போர்யா நாளுக்கு நான்கு முறை குளிப்பான். இப்போதும் குளித்த சுவடு மாறாமல், சிவப்பேறிய ஈர முகமும் தானுமாக முகங்கழுவும் பேஸினுக்கு முன்னர் கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டே, பொன்னிற மயிரை வாரிக் கொண்டிருந்தான்.


லோவா குளிக்கும் அறைக்குள் நுழைந்த்தும் அவன் பக்கம் திரும்பாமலே, "ஹலோ, நீ சீக்கிரமாக வந்தது நல்லது. எனக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது" என்றான்.


"என்னடா அது?" என்று சுருக்கமாகக் கேட்டான் லோவா.


நண்பனின் தோள்களுக்கு மேலாகக் கண்ணாடியில் எட்டிப் பார்த்துக்கொண்டு, தலைமுடியை நன்கு படியத் தடவி, வெண்ணிறக் கழுத்துப்பட்டையையும், சிவப்புப் பயனீர் டையையும் சரிப்படுத்தி, கறுப்புச் சொக்காயின் ஜிப்பை மேலிழுத்தான் லோவா.

இரு நண்பர்களும் பார்ப்பதற்கு ஜோராக இருக்க வேண்டுமெனக் கருதினர்; ஏனென்றால் பூகோளத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் அர்ஜான்ஸுகிய், பள்ளியின் வட்டார வரலாற்றுக் கழகத்தின் கூட்டத்திற்கு அன்று வருவதாகக் கூறியிருந்தார். ஆகவே லோவாவும் போர்யாவும் பேராசிரியரின் வீட்டிற்குப்போய் அவரைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

பேஸினுக்குமேல் சீப்பை வைத்தான் போர்யா.

"எனக்கு இன்று பேச ஆசையாக இருக்கிறது; நீ என்ன சொல்லுகிறாய்?"

லோவா இரண்டு பண்புகளை வளர்க்க முயன்று கொண்டிருந்தான்; ஒன்று எல்லாவிதச் சந்தர்ப்பங்களிலும் அமைதியாய் இருப்பது; மற்றொன்று எப்போதும் சுருக்கமாகப் பேசுவது.

"அப்படியா, நல்லதுதான்" என்றான்.

"சரி, பேராசிரியர் வீட்டுக்குப் போவதற்கு முன்பு வீக்டார் வீட்டுக்குப் போய், கூட்டத்தில் பேசப்போவதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாம்."

"போர்யா, போர்யா!" என்று சமையல் அறையிலிருந்து கூப்பிட்டாள் ராயா.

"என்ன வேண்டும் உனக்கு?"

"போர்யா, எங்கும் போகாதே--முதலில் மாமிசத்தை அரைக்க வேண்டும்."
"முன்பே ஏன் அதைச் சொல்லவில்லை? இப்பொழுது எனக்கு நேரமில்லை."

ராயா ஆவி வந்து கொண்டிருந்த ஒரு பெரிய கரண்டியைக் கையில் பிடித்துக்கொண்டு, குளிக்கும் அறையின் கதவருகே வந்தாள்.






"போர்யா, அப்போதிருந்தே சொல்லிக்கொண்டுதானே இருக்கிறேன்; ஆனால் நீதான் நேரமில்லை!` என்று தட்டிக் கழித்தாய். மாமிசத்தை அரைத்துக் கொடுத்துவிட்டுப் போ. ஆமாம், சொல்லிவிட்டேன். அரவை இயந்திரம் சுற்றுவதற்குக் கஷ்டமாக இருப்பதால் என்னால் அரைக்க முடியாது. அம்மா கறிவடை செய்து வைக்கச் சொல்லியிருக்கிறாள்."

போர்யா அவளை முறைத்துப் பார்த்து, நெற்றியின் நிறத்தோடு ஒன்றியிருந்த பொன்னிறமான புருவங்களைச் சுளித்தான்.

"ராயா! நான் சொல்வதைப் பேசாமல் கேளு, உனக்குப் புரிகிற மாதிரியாகவே சொல்லுகிறேன்-- எனக்கு ஒரே அவசரம். மாமிசம் அரைப்பதைவிட மிகவும் முக்கியமான வேலை எனக்கிருக்கிறது. இதற்குமேல் பேச்சுக்கே இடமில்லை. ஊம், பேசாமல் நடையைக் கட்டு பார்க்கலாம்."

ராயா போகவில்லை. அண்ணனுக்குப் பக்கமாக இன்னும் ஓரடி நெருங்கி வந்தாள்.

"போர்யா, நான் போகமாட்டேன்; மாமிசம் அரைத்துக் கொடுக்காமல் உன்னை எங்கும் போக விட மாட்டேன். உனக்காச்சு, எனக்காச்சு!"

"பெரியவர்களிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது. சொல்வது தெரியுதா? ஊம்... திரும்பு அந்தப் பக்கம். நட!" என்று போர்யா உரக்கச் சொன்னான்.

தங்கையின் தோள்களைப் பிடித்து, மறுபுறம் திருப்பி லேசாகத் தள்ளினான்.

"அப்படியா சேதி! அதுவும் நல்லது தான். அனால் ஒன்று சொல்லிவிடுகிறேன். நீ போகமட்டும் முடியாது" எனக் கூச்சலிட்டாள்.

போர்யா நாற்காலியில் உட்கார்ந்து, காலுறைகளை மாட்டிக்கொண்டான்.

"என்னை யாரெனெறு நினைத்துக் கொண்டிருக்கிறாள்?... மற்ற வேலைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு அரவை இயந்திரத்தைச் சுற்ற வேண்டுமாம்! எப்படியிருக்கிறது கதை! மற்றவர்கள் நேரத்தைப் பாழாக்குவதிலேயே குறி!" என்று சிடுசிடுத்தான்.

பையன்கள் குளிக்கும் அறையிலிருந்து வெளிவந்தார்கள். நடையில் ராயா கையில் பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தார்கள்.

"கொஞ்சம் பொறு, ஒரு நொடிப் பொழுதிற்குள் வந்து விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் போர்யா. நாற்காலியின் மேலிருந்த அழகான கால்சட்டையை எடுத்து வலதுகாலை நுழைத்தான். "சரி, லோவா, இன்றைக்குச் சரியான பேச்சுப் போட்டி நடத்துவோம். யாருக்கோ செம்மையாகக் கிடைக்கப் போகிறது..." என்று சொல்லிக்கொண்டே வந்தவன் சட்டென்று பேச்சை நடுவில் நிறுத்திவிட்டுத் தன்னுடைய கால்சட்டைகளைப் பார்த்துக் கொண்டே, "அட கண்ணறாவியே! இதெப்படி... இதோ பார்!" என்றான்.

கால்சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை! நண்பர்கள் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு நாற்காலியில் பின்பக்கம் தொங்கிக் கொண்டிருந்த சொக்காயைப் பார்த்தனர்--அதிலும் பொத்தான்கள் இல்லை.

போர்யா தலையைச் சொறிந்துகொண்டான்.

"இது என்னடா சனியன்! ஹூம்?"

"யாரோ கத்தரித்திருக்கிறார்கள்" என்று லோவா அமைதியாகச் சொல்லி, மேஜை மேலிருந்த பொத்தான்களையும் கத்தரிக்கோலையும் காட்டினான்.

போர்யாவின் முகம் தலைமயிரைவிடச் சிவந்தது. கால் சட்டையை ஆத்திரத்தோடு எறிந்துவிட்டு, அரைக்கால் சட்டையோடு குளிக்கும் அறைக்குச் சென்றான். லோவாவும் கூடப் போனான்.

"ரா...ர...ராயா!"

"என்ன வேண்டும்?" என மூடிய கதவுக்குப் பின் இருந்து ராயா கேட்டாள்.


போர்யா கதவைத் தள்ளினான்; அது தாழிடப்பட்டிருந்தது.

"கதவைத் திற!"

"மாட்டேன்" என்றாள் ராயா

"என் பொத்தான்களை நீ தானே கத்தரித்துவிட்டாய், சொல்லு."

"நீ மாமிசம் அரைக்கவேண்டும் என்பதற்காக, எனக்குக் கறிவடை செய்ய வேண்டுமே."

கதவை முட்டியால் இடித்தான் போர்யா; அவன் போட்ட கூப்பாட்டில் புதிய எரிவாயு ஸ்டவ் மேல் படுத்திருந்த பூனை அடித்துப் புரண்டுகொண்டு ஓட்டமெடுத்தது.

"ராயா! இந்தக் கணமே வா வெளியே! சொல்வது காதில் விழுகிறதா?"

"ஏன்?"

"இந்த நிமிடமே வெளியில் வந்து என் பொத்தன்களைத் தை!"

"நீ மாமிசம் அரைத்துக் கொடு, அதன்பிறகு நான் பொத்தான்களைத் தைக்கிறேன்."

போர்யா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சமையல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பிறகு லோவாவின் பக்கமாகப்போய், "எப்படி இருக்கிறது விஷயம், பார்த்தாயா?" என்றான்.

லோவா கொஞ்சமும் கலங்கவில்லை.

"கவலைப்படாதே, நீ படித்த உளநூலறிவைப் பயன்படுத்து; அவளை உள்ளே வைத்து வெளிப்பக்கத்தில் தாழ்ப்பாள் போடு."

போர்யா கதவின் வெளிப்பக்கத்தில் இருந்த தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு, "ராயா, தெரியுதா! அப்பா, அம்மா வீட்டிக்கு வருகிறவரையில் நீ அங்கேயே உட்கார்ந்திருக்கலாம்" என்றான்.





"அதைப்பற்றி எனக்குக் கவலை கிடையாது. என்னிடத்தில் `இரண்டு காப்டன்கள்` என்ற புத்தகம் இருக்கிறது."

"இதைக் கேட்டவுடனே போர்யா மனமுடைந்து போனான். ஏக்கத்தோடு லோவாவை நோக்கினான்.


"கவலைப்படாதே. அவைகளை நாமே தைக்கலாம்" என்றான் லோவா.
இரு நண்பர்கள் அறைக்குத் திரும்பி வந்தார்கள். கால் சட்டையின் பொத்தான்களை போர்யா தைப்பது என்றும், சொக்காயின் பொத்தான்களை லோவா தைப்பது என்றும் தீர்மானித்தார்கள்.

ஆனால் தையல் பெட்டியில் ஒரே ஓர் ஊசிதான் இருந்தது. கண்டிலிருந்து நூலை அறுத்துக்கொண்டு, மேஜைக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்த விளக்கடிக்குப் போனான் போர்யா. நாக்கால் நூலை ஈரமாக்கி, விரலால் பதப்படுத்தினான்; இருந்தாலும் ஊசியின் காதுக்குள் நூல் நுழையவில்லை. லோவா அவன் பக்கத்தில் நின்று கொண்டு, "பதற்றப்படாதே. அமைதியாயிரு. நீ அளவுக்கு மேல் ஆத்திரப்படுவதால்தான் எதுவும் நடக்கவில்லை" என்றான்.

போர்யாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"இந்தா! என்னால் முடியாது. நீயே செய்!" என்று கூச்சல் போட்டுக்கொண்டு, ஊசியையும் நூலையும் லோவாவின் கையில் திணித்தான்.

லோவா, நூலைக் கவனமாகப் பார்த்து, அது முரடாயிருப்பதாகக் கூறினான். போர்யா வேறொரு நூலைக் கொண்டு வந்தான். அது இளஞ்சிவப்பாக இருந்தபோதிலும், ஊசியின் காதில் எளிதாக நுழைந்தது. லோவா கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "ஏழு நிமிடங்கள் ஆயின." என்றான்.

பொத்தானைத் தைக்கும்பொழுது, போர்யா தன் விரல்களை ஐந்து தடவை குத்திக்கொண்டதோடு, நான்கு முறை நூலை அறுத்தும் விட்டான்.

"நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன" என்றான் லோவா, போர்யாவின் வேலையைக் கவனித்துக்கொண்டு, "அடாடா, நீ மிகவும் பதற்றப்படுவதால், பொத்தானைத் தவறாகத் தைத்துவிட்டாய்" என்றான்.

"உளறாதேயடா!... பொத்தானை எங்கே தவறாகத்தைத்துவிட்டேனாம்?" என்று போர்யா சீறி விழுந்தான்.

"இதோ, நீ தைத்திருக்கும் அழகைப்பார்; தொளை எங்கிருக்கிறது, பொத்தானை எங்கே தைத்திருக்கிறாய்?"

லோவா பொத்தானை அறுத்தெடுத்துவிட்டு, பிறகு அதைச் சரியாகத் தைத்தான்; இருந்தாலும் அதற்கு எட்டு நிமிடங்கள் பிடித்தன. பிறகு, எழுந்திரிந்து அறையில் இங்கும் அங்கும் நடை போட்டான்.

"இதெல்லாம் வீண் வேலை" என்று சொன்னான்.

"வீண் வேலை ஒன்றுமில்லை! நமக்குத்தான் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே" என்றான் போர்யா.

தோள்களைக் குலுக்கிக்கொண்டான் லோவா.

"கணக்கு என்றால் கணக்கு தானே யப்பா! நமக்கு ஒரு மணி நேரம் இருக்கிறதா! இங்கிருந்து பேராசிரியர் வீட்டுக்குப் போகப் பதினைந்து நிமிடங்கள் ஆகும். பேராசிரியர் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குத் திரும்ப அதே அளவு நேரமாகும். ஒரு பொத்தானை ஏழு நிமிடத்தில் தைத்தோம்... ஏழும் நான்கும் பதினொன்று, பதினொன்றும் எட்டும்... அதாவது பத்தொன்பது நிமிடங்களாகின்றன. உண்மையில், இப்போது சிறிது அனுபவம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் விரைவாகச் செய்யலாம். சுமார் பதினைந்து நிமிடங்கள் ஆவதாகக் கொள்வோம். கால்சட்டையில் ஐந்து பொத்தான்கள், சட்டையில் நான்கு, அவ்வளவுதானே. எளிதான கணக்கு!"

போர்யாவின் தாய் மற்றக் கால்ட்டையை மாற்றித்தைப்பதற்காகத் தையல்களைப் பிரித்து வைத்திருந்தாள். அவனிடம் வேறு ஒன்று இருந்தது; ஆனால் அது எங்கும் ஒட்டுப்போட்டுத் தைக்கப்பட்டிருந்தது. போர்யாவுக்குத் தலைகால் தெரியாத கோபம் உண்டாயிற்று. இன்று ராயாவின் காதுகளைப் பிய்த்துவிடுகிறேன்; அவளிடம் இனி ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன்; மேலும், அப்பாவும் அம்மாவும் வந்த உடனே அவளுக்குப் பாடம் கற்பிக்காவிட்டால் வீட்டைவிட்டே போய்விடுவேன் என்றெல்லாம் கத்தினான்.

"வெட்டிக்கூப்பாடு பயன் தராது, அப்பனே, கோபதாபத்தை யெல்லாம் அடக்கிவைத்துக்கொண்டு அவளோடு மறுபடி பேசிப்பார். அவளுக்கு மனதில் படும்படி பேச முயற்சி செய்" என்றான் லோவா.

நண்பர்கள் இருவரும் குளிக்கும் அறைக்குத் திரும்பி வந்தனர். போர்யா, மிகவும் உரக்கப் பேசாமல், அமைதியோடு, "ராயா, ராயா! உன் காதில் விழுகிறதா?" என்று கேட்டான்.

"ஊம்" என்று கதவுக்குப்பின்புறமிருந்து சொன்னாள் ராயா.

"நான் சொல்வது இதுதான்; இம்முறை உன்னை வெளியில் வர விடுகிறேன். ஆனால் நீ இனிமேல் இந்த மாதிரி ஒருபோதும் செய்யக் கூடாது. புரிகிறதா?"

"புரிகிறது. ஆனால் நான் வெளியில் வரமாட்டேன்."

அரைக்கால்சட்டையை மேலே இழுத்துக்கொண்டு, முடிந்த அளவு கனிவுடன், "கேள், நீ என்ன குழந்தையா? நான் விரைவில் போக வேண்டும், ஆகவே..." என்றான் போர்யா.

"சரி, போயேன். யார் உன்னைப் பிடித்துக் கொண்டுருக்கிறார்கள்?"

லோவா, திறவுகோள் தொளை வழியாக உள்ளே பார்த்து, "ராயா, நீ இதைப் புரிந்துகொள்ள வேண்டும்! போர்யாவுக்கு ஏதோ முக்கியக் காரியம் இருக்கிறது" என வற்புறுத்திச் சொன்னான்.

"கறிவடைகளும் கூட முக்கியமே. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தால் அப்பா என்ன சாப்பிடுவாராம்?

ஏழாவது வகுப்பு மாணவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

"சே, என்ன கேலிக் கூத்து!" என லோவா மெதுவாகக் கூறினான்.

"எது கேலிக் கூத்தோ?" என அவனைப் போலவே தணிந்த குரலில் போர்யா கேட்டான்.

"எதற்காக இத்தனை தடபுடல் செய்திருக்க வேண்டும்? அப்போதே மாமிசம் அரைத்துக் கொடுத்திருந்தால் என்ன குறைந்துவிடும்?"

போர்யா நீண்ட நேரம் கட்டை விரல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான். பின்பு தாழ்ப்பாளைத் திறந்துவிட்டு, "சரி, ராயா! வெளியே வா! மாமிசம் அரைப்போம்" என்றான்.

"இல்லை, முதலில் மாமிசத்தை அரைத்து, எனக்குக் காட்டு. பேஸின்மீது ஏறி அதைப் பார்க்கிறேன். "

குளிக்கும் அறையின் சுவரில் உயரமான இடத்தில் ஜன்னல் இருந்தது. ராயாவை உடனே வெளியில் வரும்படியும் இல்லாவிடில் அவளால் சீக்கித்தில் பொத்தான்களைத் தைக்க முடியாது என்றும் நண்பர்கள் நயமாகக் கெஞ்சினர். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவவில்லை. ராயாவோ ஒரே பிடிவாதமாய் இருந்தாள். வட்டார வரலாற்றுக் கழகத்தின் செல்வாகக்குடைய உறுப்பினர்கள் இருவரும் வேறு வழியின்றி அவள் சொல்லுக்கு உடன்பட்டனர். மாமிசம் அரைக்கும் மெஷின் பழுதுபட்டுருந்தது. அதைச் சுற்ற மிகக் கஷ்டமாக இருந்த போதிலும் போர்யா சுற்றிய வேகத்தில் இரண்டு பவுண்டு மாமிசம் நொடிப்போதில் அரைத்துத் தீர்ந்துவிட்டது. போர்யா வேர்த்து விறுவிறுக்க, முன் போலவே கடுமையான குரலில், "இந்தா மாமிசம். போதும். வீண் புரளி செய்யாமல் வெளியே வா!" என்று சொன்னான்.

குளிக்கும் அறையில் சத்தம் கேட்டது. ராயா பேஸின் மேல் ஏறினாள். ஜன்னல் வழியாகத் தலை தெரிந்தது.

"ஓஹோ, அரைத்தாகிவிட்டதா? இதற்காக இவ்வளவு தகறாறு செய்திருக்க வேண்டுமா? சொல்லு!" என்றாள்.

"அம்மா, தாயே, போதும் சளசளப்பு. வெளியே வா!"

ஆனால் ராயா வெளியில் வருவதாக இல்லை.

"அப்பனே, அவசரப்படாதே. கொஞ்சம் பொறு. நீ பண்ணிய ரகளையில் எனக்கு நிறைய நேரம் வீணாகிவிட்டது. மாடியில் காயப் போட்டிருக்கும் துணிகளை நான் எடுத்து வரவில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு வா."
போர்யாவுக்குத் தட்டு மாமிசத்தையும் கீழே கடாசிவிடலாம் போல எரிச்சல் வந்தது.

"ராயா, வீணாக வம்பு செய்யாதே" என்றான் லோவா.

"ராயா, என்னை உனக்குத் தெரியாதா? என்னிடத்தில் காட்டாதே இந்த எகத்தாளமெல்லாம்."

"நானொன்றும் எகத்தாளம் செய்யவில்லை. நானாகத் துணிகளை எடுத்து வர, மாடிக்கு நான்கு நடை போக வேண்டியிருக்கும்; நீங்கள் இருவரும் ஒரே தடவையில் எடுத்து வர முடியும். எனக்குச் சாப்பாடு வேறு தயார் செய்ய வேண்டியிருக்கிறது."

எது எப்படிப் போனாலும் போகிறதென்று போட்டுவிட்டு அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று போர்யாவுக்குக் கை ஊறியது. ஆனால் அந்த ஆசையை அடக்கிக்கொண்டான். சில பொத்தான்களுக்காகவும் முரண்டுக்காரத் தங்கைக்காகவும் பேராசிரியரைப் பார்க்காமலும் கூட்டத்திற்குப் போகாமலும் இருப்பது அசட்டுத் தனமல்லவா என நினைத்தான்.

ஆகக் கடைசியில், லோவாவும் அவனும் மாடிக்குப் போய், துணிகளைக் கொண்டுவந்து, ஜன்னல் வழியாக ராயாவுக்குக் காட்டினார்கள்.

ராயா பேசினிலிருந்து குதித்த சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.

"பார்த்துக்கொண்டே இரு" என்று போர்யா நண்பர்களிடம் ரகசியமாகச் சொன்னான். பொத்தான்களைத் தைத்தாளோ இல்லையோ அவள் காதுகளைப் பிய்த்துவிடுகிறேன்!"

குளிக்கும் அறைக்கதவை நோக்கியபடி, "சரி, ராயா, வாயேன்" என உரக்கச் சொன்னான்.

"முடிவாக இன்னும் ஒன்று. ராயா குளிக்கும் அறையிலிருந்து வெளியில் வந்தபின், அவளை ஒன்றும் செய்யமாட்டோம் என்று நீங்கள் இருவரும் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்றாள் ராயா அழுத்தமாக.

மற்ற எல்லாவற்றையும்விட இதுதான் அவர்களுக்குக் கடினமாக இருந்தது. மூக்கால் அழுதுகொண்டே சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

தாழ்ப்பாளைத் திறக்கும் சத்தம் கேட்டது; கதவு திறந்தது. வட்டார வரலாற்று மாணவர்களைக் கடந்து ராயா விரைந்து சென்றாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகு, மாணவர்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டனர். பள்ளிக்கூடம் போகும் வரையில் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. வட்டார வரலாற்றுக் கழகக் கூட்டம் ஆரவாரமாக நடந்தது; ஆனால் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.



இடம்பெற்ற நூல்- நீச்சல் பயிற்சி
மொழிபெயர்ப்பாளர்- சு. ந. சொக்கலிங்கம்பதிப்பாசிரியர்- பூ. சோமசுந்தரம்ஓவியர்கள்- ஆ. ஏலிசேயிவா, எம். ஸ்கோபிலிவா
தமிழில் முதல் பதிப்பு- 1960முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ


(சொற்களைப் பிரித்து- சேர்த்து எழுதும் முறை தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பினும் அப்படியே விடப்பட்டுள்ளது.)


விரைவில் - * நீச்சல் பயிற்சி *