Friday 24 July 2009

குறும்பன் அத்தியாயம் 1: பழைய வட்டாரத்துக் குழந்தைகள்

“தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள்கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத்திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக்காட்டிலும் மறைய முடியாது”--இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்—சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திருமங்களுக்குப் பிறகு அவன் தலைதெரிக்க ஓடித் தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான்! இந்தக்குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெக்கிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிகக் கடினமானதாக இருந்த காலம் அது.

“குறும்பன்” என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெக்கிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903 – 1966) உரைநடைப்படைப்புகள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும். கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத்தொகுப்புகள் இயற்றியவர்.

குறும்பன் அத்தியாயம் 1: பழைய வட்டாரத்துக் குழந்தைகள்

கடை வரிசைகளில் ஜனக் கூட்டம் ஒரேயடியாக நெரியும்.

இல்ஹாமின் பெரிய சாயாக்கடை பாற்கடை வரிசையிலிருந்து மஹக்மா வட்டாரத்துக்குப் போகும் திருப்பத்தில் இருந்தது. அங்கே கிராமபோன் ஓயமால் இசைத்துக் கொண்டிருக்கும். சாஸ்திரீய சங்கீதமும், நடன இசையும், தூய்ச்சி-ஹபீஸ், ஹம்ராக்குல்-கோர், ஹாஜி அப்துல்-அஜீஸ், அல்லது பர்கானாப் பாடகிகள் பாடியுள்ள மெல்லிசைப் பாட்டுக்களும் ஒன்று மாற்றி ஒன்று முழங்கிய வண்ணமாய் இருக்கும். கடை வரிசைகளைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள் ஒழிவு நேரத்தை இங்கே கழிப்பார்கள். விரிப்பின் நடுவில், சர்க்கரை, வாதாம் பருப்பு, பிஸ்தா, முட்டை ஹல்வா, புளிப்புமாவு ரொட்டிகள், உப்பல் ரொட்டிகள் முதலியன பெரிய செப்புத் தாம்பாளத்தில் அழகாக வைக்கப்பட்டிருக்கும். ஒரு கிண்ணத்தில் பழக்கூழ் வைக்கப்பட்டிருக்கும். வைக்கோல் பின்னல் வலை சுற்றித் தகைவிலான் குருவிப் படம் பொறித்த மதுப் புட்டிகளும் அடிக்கடி காட்சி தருவதுண்டு. இளைஞகள் வசதியாக உட்கார்ந்து உரக்கப் பேசுவார்கள், வேடிக்கைக் கதைகள் சொல்லுவார்கள், இடையிடையே இடிக்குரலில் சிரிப்பார்கள். சாயாக்கடையில் எப்போதுமே இடத் தட்டுப்பாடு. தொலைவிடங்களிலிருந்து சந்தைக்கு வரும் குடியானவர்கள், ஏழைக் கம்மியர்கள், கஸாஃகுகள், கிர்கீஸியர்கள் ஆகியோரோ, இங்கே நுழைவதே வீண்.

கடைப் பணியாள், வழுக்கைத்தலை அஸ்ரா என்ற பட்டமும் பெயரும் உள்ள ஒடிசலான வாலிபன். பொத்தான்கள் போடாத லேசான நீளங்கியை எப்போதும் அணிந்து இள நீலப் பட்டுக் குட்டையை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருப்பான் அவன். வட்டப் புள்ளிகள் இட்ட மஸ்லின் குட்டை அவன் தோளில் தொங்கும். காலில் தோல் ஜோடுகள் அணிந்திருப்பான். கடைக்கு வந்தவன் எவனாவது “அஸ்ரா!” என்றோ “வழுக்கைத் தலையா!” என்றோ குரல் கொடுக்க வேண்டியதுதான் தாமதம், “என்ன வேண்டும் முல்லா-அகா, சாயாவா, ஹுக்கவா?” என்று அக்கணமே அருகில் ஓடிப் போய்ப் பணிவாகக் கேட்பான்.

கண் சிமிட்டும் நேரத்துக்குள் அவன் மறுபடி வந்துவிடுவன்—ஒரு கையில் சிறு தேக்கெண்டியும் இன்னொரு கையில் இரண்டு சின்னச் சீனக் கோப்பைகளுமாக. இல்லாவிட்டால் பளிச்சிடும் செப்பு ஹுக்கவின் தலைப்பகுதியில் புகையிலை நிறைப்பான், உரக்க ஓசையுடன் இரண்டொரு முறை புகை இழுப்பான், பின்பு வணக்கமாகக் குனிந்து, “இந்தாருங்கள், முல்லா-அகா” என்பான்.

இந்தச் சாயாக் கடையில் எத்தனையோ விந்தைப் பொருள்களைக் காணலாம். ஆனால் இவற்றில் எல்லாம் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது வாயில் அருகே விட்டத்திலிருந்து தொங்கிய தங்க முலாம் பூசிய பெரிய கூண்டுதான். தீய கண் படாமல் காப்பதற்காகக் கட்டிய பல வித ரட்சைகளும் பல வண்ணச் சிறு கொடிகளும் அதை அலங்கரித்தன. அந்தக் கூண்டில் இருந்தது ஒரு கிளி—ஆண்டவன் ஆணை, உண்மையன உயிருள்ள கிளி! அதன் இறகுகள் வானவில்லின் எல்லா நிறங்களுடனும் ஒளிர்ந்தன—சித்திரத் தையல் வேலை செய்யும் ஆயஷாவின் பெட்டியில் இருக்குமே, பட்டு நூல்கள், அவை மாதிரி. நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஜா, பழுப்பு, கருஞ்சிவப்பு, இளம் பச்சை—உலகில் உள்ள எல்லா நிறங்களுமே! ஆனால் முக்கியமானது அந்தக் கிளி பேசுவதுதான். அது வெகு உற்சாகமாக, வேடிக்கையாகப் பேசும். இப்போதுதான் பேசக் கற்றுக் கொண்ட மூன்று வயதுப் பெண்ணின் குரல் போலக் கணீரேன்று அதிர்ந்து ஒலிக்கும் அதன் குரலை இப்போதுகூட நான் கேட்கிறேன்.

“அஸ்ரா, அஸ்ரா, வந்தவருக்கு என்ன வேண்டும் என்று கேள். ஒரு சாயா, ஒரு ஹுக்கா. வாருங்கள் முல்லா-அகா, வாருங்கள் பாய் சாகேப்...”

சிறுவர்களான நாங்கள் அழுக்கேறிய வெறுங்காலர்களின் கூட்டமாகச் சந்தையில் அலைந்து திரிவோம். முரட்டுக் கைத்திறித் துணியில் தைத்த சட்டைகளும் காற் சட்டைகளும் அணிந்திருப்போம். சில வேளைகளில் தனித்தனியாகச் சிதறியும் வேறு சில வேளைகளில் மறுபடி ஒன்று சேர்ந்தும் எங்கும் குடுகுடுவென்று ஓடித்திரிவோம். சாயாக் கடையே, எப்போதும் எங்களைக் கவர்ந்து இழுக்கும்.

“செல்லக்கிளி, ஏய் செல்லக்கிளி!” என்று கொஞ்சலாக அழைப்போம்.

வழுக்கைத்தலை அஸ்ரா முகத்தைக் கொடுரமாக வைத்துக்கொண்டு எங்கள்மேல் பாய்வான். அகப்பட்டவனுக்கு நன்றகக் கிடைக்கும் குத்துகள். கிளியோ எங்கள்மேர் வசை மாரி பொழியும்—ஆபாச வசவுகளுந்தான்.

ஆனால் சந்தையில் எங்கள் அக்கறையை முழுமையாகக் கவர்ந்தவர்கள் கிறுக்கர்கள் தாம். தாஷ்கந்த் நகரில்தான் எத்தனை கிறுக்கர்கள்! எண்ணித் தொலையாது! கரீம்-ஜின்னி, செம்பட்டையன், ஜுப்த்-கப்தார், மைராம் ஹான், பைத்தியங்களில் எல்லாம் பைத்தியம், மௌல்வியின் மனைவி, ஹால்-பராங்க், தாஜீஹான், அலீம், அலாஸ்...இவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கே உரிய வகையில் கிறுக்குகள். தனித் தனி விதத்தில் பைத்தியம் பிடித்தவர்கள். உதாரணமாக ஜுப்த் –கப்தார் அதிகாரிகள் மேல் உள்ள வெறுப்பால் பைத்தியம் பிடித்தவன். ஜார் நிக்கொலாய், காவுப்மான், மொச்சாலவ், திருடன் நபி என்ற பட்டப்பெயர் பெற்ற போலீஸ் சார்ஜண்டு, எல்லோரையிம் ஒன்றாக விரவித் திட்டி நொறுக்குவான். பழக்கம் இல்லவிட்டல் அந்த வசவுகளைக் கேட்கவே பயங்கரமாய் இருக்கும். கரீம்-ஜின்னியும் வாய் ஓயாமல் வைதுகொண்டிருப்பான். இவனுக்கு அல்லாவோ, தீர்க்கதரிசியோ, ஹாஜியோ, மௌல்வியோ, காஜியோ, யாரானாலும் ஒன்றுதான். எல்லோரையும் இவன் ஏழு தலைமுறைவரை வைது தீர்த்துவிடுவான். நாக்கில் நரம்பில்லாமல் திட்டி நொறுக்குவான். ஒரு காலத்தில் இவன் நெசவுகாரனாக இருந்தான். கைத்தறித் துணி நெய்து சந்தையில் விற்று வந்தான். அப்புறம் மில் துணி ஏராளமாகக் குவிந்துவிடவே கரீம் குடும்பத்தைப் போஷிக்க வகை அற்றவன் ஆகிவிட்டான். கடைசியில் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. ஹால்-பராங்க் விஷயமும் இப்படித்தான். அவன் கோக்கந்தைச் சேர்ந்தவன். மகமல் துணி நெய்துவந்தான். இந்தக் கலையில் தேர்ந்தவனாக மதிக்கப் பட்டான். அவனுடைய தொழிற்கூடமும் தறியும் தீக்கிரையாகிவிட்டதும் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. மைராம்ஹானோ? பைத்தியங்களில் எல்லாம் புகழ்பெற்றவன் இவன் என்று சொல்லலாம். இவனுடைய உண்மைப் பெயர் மாமத்கரீம். கருமானாய் இருந்தான். கைதேர்ந்த கருமான். இவன் தொட்டதெல்லாம் துலங்கும். எவனுடைய தொழிற்கூடம், கடை அல்லது வீட்டிற்கு இவன் போனானோ, எவன் இவனுக்குத் தன் கையால் உணவு ஊட்டினானோ, அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று எண்ணப்பட்டது. மைராம் ஹானுக்குத் தங்கள் கைகளால் புலவு ஊட்டக் கணக்கில்லாத பேர் சித்தமாயிருந்தபடியால் இவன் தன் கையால் சாப்பிட்டதே இல்லையாம், ஜனங்கள் சொல்லுவார்கள். தொட்டில்கள், தறிச்சீப்புகள், கதிர்கள் ஆகியவை செய்வதில் தேர்ந்த கம்பியர்கள் இவனுக்கு உணவு ஊட்டுவதைப் பாக்கியமாக மதித்தார்கள்... மொத்தத்தில் அவன் எல்லாருக்கும் இனியவனாய் இருந்தான். கம்பியில் கோத்த உலோக உடைசல்களைச் சுமந்தவாறு, வேடிக்கை பேசிக்கொண்டும் கண்ணைப் பறிக்கும் புன்னகையால் ஒளி வீசிக்கொண்டும் தெருக்களிலும் கடைவீதிகளிலும் திரிவான். இயந்திரத் தொழிற்சாலைகள் உலோக சாமான்கள் தயாரிக்கத் தொடங்கியதும் இவனுடைய தொழிலுக்கும் இவனுக்கும் அழிவு வந்துவிட்டது. நாளடைவில் யாருக்கும் தேவையற்றவன் ஆகிவிட்டான். வறுமையும் ஏக்கமும் காரணமாக இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

மௌல்வியின் மனைவி என்ற பட்டப்பெயர் கொண்ட கிறுக்கி, பழுப்பேறிய, வடிவமைந்த மேனியும் மெல்லிய கரும் புருவங்களும் உள்ளவள். வயது சுமார் நாற்பத்தைந்து இருக்கும். ஒரு காலத்தில் அவள் மிட்டீஹான்-துராம் என்ற மௌல்வியின் மனைவியாக இருந்தது உண்மையே. அவன் கலந்தர்ஹான் வமிசத்தவன். ஒரு முறை கணவன் தங்கையுடன் சரசமாடுவதை இவள் கண்டு விட்டாளாம். இதனாலேயே இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாம்.

அவாஸ் என்ற ஒருவன் மட்டுமே உண்மையில் கிறுக்கன் அல்ல, வேலை செய்ய விருப்பம் இல்லாமையால் பைத்தியம் போல நடித்தான்.

ஆக்கங்கெட்ட இந்த எல்லாருடையவும் கதைகளை நாங்கள் அறிந்திருந்தோம். பெரியவர்கள் எங்கள் முன்னிலையில் எத்தனை எத்தனையோ தடவைகள் இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்பப் பேசியிருந்தார்கள். ஆனாலும் இரக்கம் காட்டச் சிறுவர்களுக்கு நேரம் கிடையாது. அதைப் பற்றி நாங்கள் நினைக்கவே இல்லை. கண்காட்சிகள் எங்களுக்கு அபூர்வமாகவே காணக் கிடைத்தன. ஆகவே முடிந்தவரை நாங்களே கற்பனை செய்து கொண்டோம். பைத்தியங்களை வைத்துக் கொண்டு நேர்த்தியான நிகழ்ச்சிகள் ஜோடனை செய்ய முடிந்தது. சில வேளைகளில் அவர்களைப் பாடவோ ஆடவோ சொல்லுவோம். ஆனால் பெரும்பாலும் இரக்கமின்றிக் கோரணி செய்து நகையாடுவோம், அவர்கள்மேல் கற்களை எறிவோம். அவர்களுக்கு வெறி பிடிக்கும்போதோ, எங்களுக்கு ஒரே கொம்மாளம். அவர்கள் எங்களை விரட்டிக் கொண்டு வருவார்கள். நாங்கள் விலகித் தப்ப முயல்வோம். ஆனால் சில வேளைகளில் வசமாக மாட்டிக் கொள்வோம், அவர்களிடம் அடி வாங்குவோம்... சுருங்கச் சொன்னால், இன்பக் கிளுகிளுப்புக்கும் காட்டமான உணர்ச்சிகளுக்கும் பஞ்சம் இல்லை. சிரிக்கவும் நிறைய வாய்த்தது. அதிலும் இரண்டு மூன்று பைத்தியங்கள் ஒரே சமயம் வெறி கொண்டுவிட்டாலோ, கேட்கவே வேண்டியதில்லை. தாஜீஹான் என்ற கிறுக்கன் ஒரு தரம் மண்வெட்டிக் காம்பை ஆட்டியவாறு, வழிச் செல்பவர்கள் எல்லோரையும் தெருவின் ஒரு சாரி வழியே நடக்கும்படி விரட்டத் தொடங்கினான்.

“டேய், இங்கும் அங்குமாக நடக்காதீர்கள்! ஒழுங்கு வேண்டும், ஒழுங்கு!” என்று கூப்பாடு போட்டான்.

அலீம்-ஜின்னி வரும்வரையில் அவனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“டேய், பேயா, இங்கே என்ன குட்டை குழப்புகிறாய்?” என்று அதட்டினான் அலீம்-ஜின்னி.

“இவர்கள் ஒரே சாரியில் ஏன் போகமாட்டோம் என்கிறார்கள்? ஜார் நிக்கொலாயின் ஆட்சியில் ஒழுங்கு இருக்க வேண்டும்! கட்டுப்பாடு!” என்றான் தாஜீஹான்.

“அடே, அடி மடையனடா நீ, தாஜீ, படு முட்டாள். நமது பூமி எப்படிப் பட்டது, தெரியுமா? தராசுத் தட்டுகள் போல! எல்லோரும் ஒரே பக்கம் திரண்டால் என்ன ஆகும்? தாம்பாளம் போல அது ஒரு பக்கம் சாயும், நாம் எல்லாரும் குர்தூம்-தரியாவில் விழுந்து முழுகிப் போவோம்!” என்றான் அலீம்-ஜின்னி.

தாஜீஹான் மலைத்துப்போய், திறந்த வாயுடன் சற்று நின்றான், தலையை ஆட்டினான், பின்பு அப்பால் போய்விட்டான். ஒரு பைத்தியக்கார எண்ணத்தை அதைவிடப் பைத்தியக்காரத்தனமான வேறோர் எண்ணம் தான் சிலாம்பை ஊசி எடுப்பது போல அகற்ற முடியும் என்று தெரிந்தது.

இந்த மாதிரி முடிந்த வகையில் எல்லாம் பகல் பொழுதைப் போக்குவோம். எங்களுக்குத் தெரியாமலே மாலை வந்துவிடும். அஸ்தமனத்துக்கு முந்திய மூன்றாம் தொழுகை முடிந்ததுமே வீடுகளுக்கு ஓடுவோம். கோதுமை மாவுக்கூழோ பறங்கிக்காய், அல்லது சாதத்துடன் உளுத்தங் கஞ்சியோ சேமியாக் கஞ்சியோ—வீட்டில் எது கிடைத்ததோ அதை—சாப்பிட்டுவிட்டு மறுபடி தெருவுக்கு ஓடிவிடுவோம். வானத்தில் கண்ணுக்கு இதமான கோடைகால விண்மீன்கள் தெளித்திருக்கும்...

எங்கள் வட்டாரம் ஒரு புறம் திக்கான்லி-மஜார் (“முள் கல்லறை”) வட்டாரத்தையும் மறு புறம் குர்கான்தாகீ (“அடித்தளத்தில்”) வட்டாரத்தையும் ஒட்டினாற்போல் இருந்தது. பிரதான வீதியின் இடப்பக்கம் இருந்த ஆளற்ற அடை சந்துகளில் நாங்கள் குழுமுவோம், மாலை வரை விளையாடுவோம். மாலையில் தான் விளையாட்டு மும்முரமாகும், அதிலும் நிலாக்காலத்தில். கோடையிலும் வசந்தத்திலும் இலையுதிர் காலத்திலும் எங்கள் வீதிகள் புழுதி நிறைந்து மெத்தென்று இருக்கும். அவற்றில் ஒடியாடுவது ஒரே இன்பம். குளிர்காலத்தில் தான் அவற்றில் கண்டபடி சேறும் சகதியும் நிறைந்துவிடும். சிலருக்கு முழங்கால் வரை வரும், நாங்களோ, இடுப்பளவு சேற்றில் புதைந்துவிடுவோம். அப்போது நாங்கள் சதுக்கத்திலோ அல்லது வீட்டு முகப்புக்களிலிருந்து வீதிக்கு வருவதற்கான கூரை வேய்ந்த நடைபாதைகளிலோ விளையாடுவோம். நகராட்சி மன்றத்தால் நாட்டப்பட்ட கம்பங்களில் மங்கிய மண்ணெண்ணெய் விளக்குகள் எரியும். விளக்குக்காரன் மாலை தோறும் ஏணியும் கையுமாக வந்து, எண்ணெய் போட்டு, திரிகளைக் கத்தரித்து, சிம்ணியைத் துடைத்து விளக்கேற்றுவான். காலைதோறும் மறுபடி வந்து விளக்குகளை அணைப்பான். இருட்டில் கொஞ்ச தூரம் போக வேண்டியதுதான், இந்த விளக்குகள் பூனைக் கண்கள் போல லேசாக மினுமினுக்கும். அவற்றின் சிவந்த சுவாலைகள் வீதியில் ஒளி பரப்புவதில்லை. குறுகிய நடைபாதை வழியே செல்பவர்களை, “இந்தா, என் மேல் மோதிக் கொண்டுவிடாதே! நான் இங்கே இருக்கிறேன்” என்று எச்சரிக்க மட்டுமே செய்யும்.

இந்த மாதிரித் தெரு விளக்கின் வெளிச்சத்தில் என்னதான் செய்ய முடியும்? உரையாடுவது கூட அசௌகரியம். பெரியவர்கள் மாலை நேரக் கடைசித் தொழுகை முடிந்ததுமே அவரவர் வீடுகளுக்குப் போய்விடுவார்கள். வீதிகள் வெறுமை ஆகிவிடும். காக்கைகூடப் பறக்காது. நாங்கள் மட்டுமே எஞ்சி இருப்போம். ஒளிந்து விளையாடுவதற்குச் சரியான நேரம்...

ஆனால் நாங்கள் வேறு பல வித விளையாட்டுக்களும் ஆடுவது உண்டு. “குராஷ்” என்று சொல்லப்படும் குஸ்தி, “பாத்மன்-பாத்மன்” என்ற விளையாட்டு. “பாத்மன்-பாத்மன்” ஆட்டக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் முதுகைக் காட்டியவாறு இணை இணையாக நிற்பார்கள், கைகளால் ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்துக் கொண்டு மாற்றி மாற்றி முதுகில் தூக்கிக் கொள்வார்கள். “வெள்ளைப் பாப்ளார், பச்சைப் பாப்ளார்” என்று ஒரு விளையாட்டு. இதில் சிறுவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிவார்கள். ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும், ஆட்டக்காரர்களில் ஒருவனை மனதுக்குள் தெரிந்தெடுக்கும். யாரை என்று எதிர்க்கட்சி ஊகித்து அறிய வேண்டும். சரியாக ஊகிக்கும் குழுவினர் எதிர்க் குழுவினரின் முதுகுகள்மேல் ஏறிச் சவாரி செய்வார்கள். இன்னும் என்னென்ன? “மிண்டி-மிண்டி” (ஒட்டக விளையாட்டு), திருடன் விளையாட்டு, “என் பட்சியின் தலை” என்ற விளையாட்டு, இப்படி எத்தனையோ.

உள்ளதைச் சொன்னால் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் ஒரளவு ஒரே மாதிரி இருந்தன. பக்கத்துப் பையன் முதுகில் சவாரி செய்வதில் இவ்வளவு இன்பம் கிடைப்பது ஏன்? “என் பட்சியின் தலை” என்ற விளையாட்டிலும் பையன்கள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து ஒவ்வொரு கட்சிக்கும் ‘தாய்’ எனப்படும் தலைவனைத் தெரிந்தெடுத்துக் கொள்வார்கள். ‘தாய்கள்’ ஏதேனும் துணியை எடுத்து, சுருட்டி முடிச்சுப்போட்டு ஏதேனும் பறவையின் உருவத்தை அதற்குத் தர முயல்வார்கள். பின்பு அது என்ன பட்சி என்று தங்களுக்குள் பேசி முடிவு செய்வார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை இரண்டு கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்கும். அப்புறம் ஒரு ‘தாய்’ துணிப் பறவையைக் காட்டிக் கேள்வி கேட்பான்:

“என் பறவையின் தலை இதோ, இப்படி இருக்கும், உடல் இதோ, இப்படி இருக்கும். சொல்லு, அது என்ன பட்சி?”

“பருந்து!” என்று கத்தும் கூட்டம்.

“இல்லை, சரி இல்லை!”

“கோழி!”

“கெக்கே, சரி இல்லையே!”

“காஞ்சனப் பறவை.”

“தப்பு!”

“கோட்டான்!”

‘தாய்கள்’ தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்.

“சரியாய்ச் சொல்லிவிட்டான், சரியாய்ச் சொல்லிவிட்டான்!” என்று கொம்மாளம் கொட்டுவார்கள் பையன்கள்.

எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் சரியாய்ச் சொன்னானோ, அந்தக் கட்சிப் பையன்கள் எதிர்க்கட்சியினர் முதுகுகள்மேல் ஏறிக்கொண்டு, “ஹை, ஹை, என் கழுதைக் கண்ணே !” என்று ஒன்றாகக் கத்தியபடி குறித்த இடம்வரை சவாரி செய்வார்கள். அங்கே எவனாவது ஒருவன் ‘தாயிடம்’ கேட்பான்.

“சவாரியா, நடையா?”

“கீழே இருப்பது மேலே” என்று ‘தாய்’ சொன்னால் கழுதைகளும் சவாரிக்காரர்களும் இடம் மாறிக்கொள்வார்கள்...

சவாரி செய்கையில் நாங்கள் பாட்டுக்கள் பாடுவோம். அம்மாதிப் பாட்டுக்கள் எங்களிடம் ஜாஸ்தி. உதாரணமாக இதோ ஒரு பாட்டு.

“ஹும், ஹும், அதிகாரம் இருந்தால்,
ஜம்மென்று தின்று களித்திடலாம்,
ஹான், ஹான், உமர் அலி,
பேக், பேக், மாதாலி
உம் அதிகாரம் எமக்குத் தாரும்,
ஜம்மென்று உண்டு மகிழ்ந்திடுவோம்!”

இப்படி விளையாடுவோம், பாடுவோம், கத்துவோம். கடைசியில் எவளாவது கிழவி பொறுமை இழந்து சபிப்பாள்:

“நீங்கள் படக்கென்று போக, சைத்தான் மக்களா!”

...ஆம், இன்னொரு விளையாட்டு உண்டு. “அம்மணப் பந்தயம்” என்று அதற்குப் பெயர். ஆனால் இது மிகவும் சாதாரணமானது. இரண்டு குல்லாக்களை எடு்த்துப் பொருத்துக்களுடன் சேர்த்துக்கட்டுவோம். குதிரைக் காதுகள் போல் இருக்கும் அவை. சட்டை நுனியை வால்போன்று பின்னால் முறுக்கிக் கட்டுவோம். பின்பு வேவ்வேறு தூரங்களுக்கு ஓட்டப் பந்தயம் விடுவோம். வழக்கமாக நாங்கள் திக்கான்லி-மஜார், காரத்தாஷ், யலான்காரீ, அல்மாஸரா, திவான்பேகி ஆகியவற்றின் வழியாக ஓடி மறுபடி திக்கான்லி-மஜார் சேர்ந்து விடுவோம். இது சுமார் மூன்று மைல் தொலைவு. முதலாவதாக ஓடி வருபவன் கைதட்டல்களுடனும் பாராட்டுரைகளுடனும் வரவேற்கப்படுவான். பல வகையிலும் அவனுக்கு மரியாதை செய்யப்படும். அடுத்த பந்தயம் வரை அவன் எல்லாரையும்விட பலசாலியாக மதிக்கப்படுவான் என்பது முக்கியமானது...

பலசாலிகள் தவிர, பணக்கரார்களும் எங்களிலே உண்டு. ஆனால் எங்களுடைய செல்வமும் தனி வகைப்பட்டது. வர்ணம் பூசப்பட்டு, காரீயத் துண்டு நிறைத்த ஆட்டு எலும்பு—இதற்கு ஆல்ச்சிக் என்று பெயர்—எல்லாவற்றிலும் மதிப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. நூற்புக் கதிர் செய்யும் கம்மியர்கள் எங்களுக்காகச் செதுக்கித் தரும் எலும்பு மட்டையும் கொட்டைகளும் கூட மதிப்புள்ளவையே. வேறு ஒன்றும் இல்லாவிட்டால் ஏதேனும் பழைய கடிகாரத்தின் மூடியாவது இருக்க வேண்டும்... கோடைகாலப் பகல் நேரத்தில் வெக்கை மிகுதியாக இருக்கும், கடை வீதியிலோ பிறத்தியார் தெருக்களிலோ ஓடித்திரிய முடியாது. குளிர்காலத்திலோ சேறும் சகதியுமாக இருக்கும். அம்மாதிரி நேரங்களில் எங்கள் சொத்துக்கள் பயன்படும். ஆல்ச்சிக்குகளையும் கொட்டைகளையும் பந்தையும் கிட்டிப்புள்ளையும் வைத்துக் கொண்டு எத்தனையோ விதமான விளையட்டுக்கள் ஆடுவோம். “யோர்-யோர்” எனப்படும் முற்றுகைப் போர் விளையாட்டு, அம்பு எய்யும் விளையாட்டு, குதிரைத் திருடன் விளையாட்டு முதலியவை வேறு.

ரம்ஜான் விரத மதத்திலோ இவற்றோடு கூட இன்னும் பல சுவையான பொழுதுபோக்குகள் சேர்ந்து கொள்ளும். மாலையில் நாங்கள் வீடு வீடாகப்போய் “ரம்ஜான்” பாடுவோம். அஸ்தனத்துக்குப் பிறகு “நமாஸ்ஷமா” எனப்படும் நான்காவது தொழுகை நேரம் வந்ததும் நாங்கள் ஒவ்வொரு மசூதியாகச் சுற்றி வந்து முல்லாக்கள் அசைந்தாடியவாறு ராகத்துடன் குரான் ஓதுவதைக் கேட்போம். நள்ளிரவில் விரதம் முடிந்து எல்லோரும் பொதுவில் உணவு அருந்தும் வேளை வரை இப்படிப் பொழுதைக் கடத்துவோம்.

இதெல்லம் இருந்தாலும் எங்களுக்கு ஒழிவு நேரம் வேண்டிய அளவு இருந்தது. பள்ளிக்கூடத்தில் நாங்கள் சொற்ப நேரமே கழித்தோம். வேலையோ... எங்களுக்கு என்ன வேலை இருக்க முடியும்? சில வேளைகளில் எங்கள் பெற்றோருக்கே வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். இந்த அழகில் சின்னப் பையன்களை வேலைக்கு அமர்த்துவது எங்கே? எங்களது போன்ற வட்டாரங்களில் வசித்தவர்கள் வழக்கமாகச் சிறு கைத்தொழிலாளர்கள். குடமுழவுகளுக்கும் தம்பட்டங்களுக்கும் தோல் பதனிட்டு இறுக்குவது, கைத்துவாலைகளும் கயிறுகளும் செய்வது முதலிய வேலைகளில் தேர்ந்த தோல் தொழிலாளர்கள், உலோக இறுக்கிகளின் உதவியால் பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களைச் செப்பனிடுபவர்கள், நீர் சுமப்பவர்கள், சுமைகாரர்கள், குதிரைக்காரர்கள், காவலாட்கள், உடம்பைத் தேய்த்துப் பிடித்து விடுபவர்கள், சுற்றுப்புற மசூதிகளின் சில்லறைப் பணியாட்கள் முதலியோர் இவர்கள். ஆனால் எங்கள் வட்டாரத்தில் பெரும்பலாக வசித்தவர்கள் அச்சுக்கூடங்களிலும் மிட்டாய்த் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தவர்கள். இருந்தாலும் எங்கள் வட்டாரத்தில் எத்தனை எத்தனையோ வகைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் என் தோழர்களின் பெற்றோர். அவர்களை எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

என் தோழன் அமன் என்பவனின் தகப்பனார் துர்ஸுன் பாய்- அகா பேனாக்கத்திகள் தயாரித்தார். அவர் மனைவி அமனின் சிறு வயதிலேயே இறந்து விட்டாள். அவர் மறு மணம் செய்து கொள்ளவில்லை. எனவே அமன் ஒரே மகனாக வளர்ந்தான். ஆபித் என்ற பெயருள்ள இரண்டு பையன்கள் எங்களிடையே இருந்தார்கள். ஒருவனை “நாய்க்குட்டி ஆபித்” என்றும் மற்றவனைச் “சீலைப் பேன் ஆபித்” என்றும் பட்டப் பெயர்களால் அழைத்தோம் நாங்கள். “நாய்க்குட்டி ஆபி்”தின் தகப்பனார் ஜாஹித்-அகா பழைய சாமான்கள் வாங்கி விற்பவர். “சீலைப் பேன் ஆபி”தின் தகப்பனார் ரஸூல்காஜி-அகா வாள் உறைகள் செய்பவர். ஹுஸ்னிபீயின் தகப்பனர் அமன்பீ தோல் சமான்கள் தயாரிப்பவர். அவர் குதிரைக் கழுத்துப்பட்டைகளும் நுகங்களும் செய்பவர்.

ஸலீஹ் என்பவரின் தகப்பனார் யூனுஸ்-அகா, பாடகர். துராபாயின் தந்தை ஜியாமத்-அகா பருத்தி வியாபாரி. அப்துல்லாவின் தகப்பன அஜீஸ்-அகா மண்ணெண்ணெய் வியாபாரி. ஒரு பெரிய பீப்பாயை வண்டியில் ஏற்றிக் கெர்ண்டு தெருத்தெருவகப் போய் மண்ணெண்ணெய் விற்றார். வண்டி, குதிரை, பீப்பாய், மண்ணெண்ணெய்—எதுவுமே அவருக்குச் சொந்தம் அல்ல என்று சொல்லவே தேவையில்லை. அவர் நொபேல் கம்பெனியின் வேலையாள், அவ்வளவுதான்.

புலாத்ஹோஜாவின் தகப்பனார் விற்பனை ஏஜெண்டு. நாட்டு எல்லையின் இரு புறங்களிலும் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு அவர் பயணம் செய்வார். சில வேளைகளில் நீண்ட காலம் கண்ணிலேயே பட மாட்டார். புலாத்ஹோஜா தாயின் வயிற்றில் ஆறு மாதக் கருவாக இருந்தபோது கருப்பையோடு இணைந்து அங்கேயே தங்கிவிட்டானாம்—காஷ்காரில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த தகப்பனார் வரும்வரை. அவர் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்தாராம். தகப்பனார் திரும்பி மூன்று மாதங்கள் கழிந்ததும் புலாத்ஹோஜா பிறந்தானாம், ஜனங்கள் பேசிக்கொண்டார்கள்.

நாங்கள் யூல்தாஷ் என்பவன் வீட்டில் குழுமுவது வழக்கம். அவன் வீட்டில் பெரியவர்கள் யாரும் கிடையாது. தாயார் வெகு காலத்துக்கு முன்பே இறந்து போனாள். செம்மானாயிருந்த தகப்பனார் பிறகு நோய்ப்பட்டுக் காலமாகி விட்டார்.

எங்கள் வட்டாரத்தில் செம்மான் வேலை மீர் அஜீஸ்-அகா என்பவரும் செய்துவந்தார். நான் கூட வேலை பழகுவதற்காக அவரிடம் அனுப்பப்பட்டேன். அவர் குறிப்பிடத்தக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனர் ஸலீம்பாய்-ஸூபி எங்கள் வட்டரத்தில் குடியேறியது முதல் கசாப்புக் கிடங்கிலிருந்து எலும்புகளைக் கொண்டுவந்து அவற்றை வேகவைத்துக் கொழுப்பு எடுப்பார். ஆனால் ஒரு காலத்தில் அவர் யாக்கூப்பேக்கிடம் படைவீரராக இருந்தார். காஷ்கார் கிளர்ச்சியின் போது ஒரு சீனப் பெண்ணை வெற்றிச் சின்னமாகக் கவர்ந்து வந்தார். குதிரைச் சேணத்தின்மேல் ஏற்றி அவளைக் கொண்டுவந்து, இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்து, பிறகு மணந்து கொண்டார். அவளுடைய சீனப் பெயரை பஹ்தீபூவி என்று மாற்றினார். பஹ்தீபூவியின் மூன்று புதல்வர்களில் இளையவர் மீர்அஜீஸ்-அகா.

என் அண்டை அயலார் எல்லாரையும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறேன?... அடத் தூ, எல்லாரிலும் முக்கியமானவர்களை அனேகமாக மறக்கத் தெரிந்தேன். ஆனால் காலந்தான் எப்படி மாறுகிறது! அந்தக் காலத்தில் அவர்கள் முதல்வர்களாக, உண்மைப் பணக்காரகளாக இருந்தார்கள். தொழிற்சாலைச் சொந்தக்காரர் கரீம்-கோரி, மெழுகு வர்த்தகர் யாக்கூப்-கவாக், வர்ண வர்த்தகர் அப்துல்லாஹாஜி ஆகியோர் இவர்கள். மசூதியில் எல்லாருக்கும் முன்னே நிற்பார்கள் இவர்கள்! எங்கள் வட்டாரத்தின் பக்கத்தில் இரண்டு மசூதிகள் உண்டு—ஒன்று திக்கான்லி மஜாரிலும் மற்றது குர்கான் தாகியிலும். இவற்றில் எந்த எந்த மசூதிக்கு எந்த எந்தப் பிரமுகர்கள் போனர்கள் என்பதுதான் நினைவில்லை. ஒவ்வொரு மசூதியையும் சேர்ந்த பள்ளிக்கூடம் உண்டு. இமாம்களே ஆசிரியர்கள். திக்கான்லிமஜாரில் ஷம்ஸீ-தோம்லாவும் குர்கான்தாகியில் ஹஸன்பாயும். நான் குர்கான்தாகியில், ஹஸன்பாயிடம் படித்தேன். அவர் குரானிலிருந்து பொறுக்கிய பகுதிகள் கொண்ட “ஹப்தியாக்” முறைப்படி அல்ல, “உஸ்தாதி- அவ்வல்” என்ற நவீனப் பாடப் புத்தகப்படிச் சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களைவிட எவ்வளவோ விரைவில் எழுதப் படிக்கக் கற்றுத் தந்துவிட்டார் அவர்...

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

No comments: