Thursday 30 July 2009

குறும்பன் அத்தியாயம் 3: சந்தை

நான் கால் போன திக்கில் நடந்தேன். கால்கள் அடிக்கடி இங்கும் அங்கும் போயின ஆதலால் மண் வீடுகளின் வழிகளில் நான் நெடு நேரம் சுற்றிச் சுற்றி வந்தேன். முடிவில் நகரிலிருந்து நேரே வெளிச் செல்லும் சாலையை அடைந்தேன். அதற்குள் இருட்டலாயிற்று. சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த மரங்களின் நிழல்கள் ஒன்று கலந்தன. பகலில் அவை குளுமை தந்தன. இப்போதோ வெட்ட வெளியைக் காட்டிலும் மரங்களின் அடியில் அதிகப் புழுக்கமாய் இருந்தது. சாலை வெறுமை ஆயிற்று. நேரங்கடந்து எதிரெதிரே வந்த இரண்டு வண்டிகள் வசவுகளுடன் ஒன்றையொன்று விலகிச் சென்றன. யாரோ உழவன் நொண்டிக் கொண்டே அருகாகப் போனான். அவன் என்னை முந்திவிட்டான்—வீடு திரும்பும் அவசரம் போலும். நானும் இராத் தங்குவது பற்றி நினைக்க வேளை வந்துவிட்டது. அவ்வப்போது எவையேனும் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் சாலைவரை நீண்டிருக்கக் காணப்படும். அவற்றுக்குள் விருந்தோம்பல் இன்றிக் குலைக்கும் நாய்கள். வெட்ட வெளியிலேயே இரவைக் கழிக்கத் தீர்மானித்தேன். அங்கே உண்மையில் குளுமையாக இருந்தது. எனக்குச் சாப்பாடோ புறாக்களுக்கு இரையோ எடுத்து வரவில்லை என்பதை இப்போதுதான் நினைத்துக்கொண்டேன். காலைவரை பொறுத்திருக்க வேண்டும். அத்தையின் சூடான ரொட்டிகளையும் பாழாய்ப்போகிற பறவைகளுக்கு நான் ஊட்டிய தயிரையும்கூட வருத்தத்துடன் நினைவுகூர்ந்தேன். புறாக்களின் கூண்டை ஒரு புதருக்குள் நுழைத்தேன். பக்கத்திலேயே மேலங்கியை விரித்துப் படுத்தேன். விண்மீன்கள் பதித்த கரு வானம் எனக்கு நேர் மேலே பரந்திருந்தது. முதல் தடவையாக அது எனக்கு அவ்வளவு பெரிதாகத் தென்பட்டது. விண்மீன்களோ, எண்ணத் தொலையாதபடி அத்தனை நிறைய இருந்தன .அவற்றை எண்ண முயன்றவாறே உறங்கிப்போனேன்.

சூரியன் என்னை எழுப்பிற்று. அது அப்போதுதான் தொடுவானிலிருந்து கிளம்பி நேரே என் கண்களில் ஒளியைப் பாய்ச்சியது. படுக்கை கரடுமுரடாய் இருந்தபடியால் உடம்பு லேசாக வலித்தது. ஆனால் மூளை தெளிவாக, சுறு சுறுப்பாக இருந்தது. கசங்கிய மேலங்கியைப் போட்டுக்கொண்டு புறாக்கூண்டை எடுத்துக் கொண்டு மேலே வழி நடக்கலானேன்.

எவ்வளவு நேரம் இப்படி நடந்தேனோ தெரியாது, சாலைக்கு இடப் புறமும் வலப் புறமும் குடியிருப்பு வீடுகள் தென்படலாயின. அச்சாபாத் என்பது அந்தச் சிற்றூரின் பெயர் என அப்புறம் தெரிந்து கொண்டேன். நான் நின்று நிதானிப்பதற்குள் பல்வேறு வயதினரான அழுக்கடைந்த பையன்களின் கும்பல் ஒன்று எதிரே வரக் கண்டேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஏற இறங்க நோட்டமிட்டபடி என்னைப் பற்றிக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்தக் கருத்துக்கள் நட்புறவில் வெவ்வேறு தரமானவை. எனது மேலங்கியைப் பற்றிய பாராட்டுரையிலிருந்து தொடங்கி, அழையா இடத்துக்கு நான் போகாமல் இருக்கும் பொருட்டு என்னை அடித்து நொறுக்க வேண்டும் என்னும் யோசனையில் முடிந்தன அவை. அவர்கள் ஓர் இருபது பெயர். சிலர் என்னைப் போல ஒன்றரை மடங்கு உயரம். மற்றவர்கள் என் இடுப்புவரை வந்தார்கள்—இந்த மாதிரி நான்கு பெயரை ஒரே அறையில் வீழ்த்தி விடலாம். இப்போதோ இதைப்பற்றி எண்ணவே முடியாதிருந்தது.

எதிர்பாரா விதமாக அவர்களிடமிருந்து வந்தது வியாபார யோசனை.

“புறாக்களை விலைக்கு கொடு” என்று கட்டைக் குரலில் சொன்னான் எல்லாரிலும் உயரமான பையன். அவன்தான் அவர்களுடைய தலைவன் போலும் அவன் போட்டிருந்த செம்பழுப்புக் குல்லாய் கிட்டத்தட்ட நடுவரை கிழிந்திருந்தது. எனவே அவன் தலை தூரப்பார்வைக்கு வெடித்த முலாம்பழம் போல் இருந்தது.

“முடியாது. இவை விற்பதற்காக இல்லை” என்று கூடியவரை கண்டிப்பாகச் சொன்னேன்.

“ஆ, அப்படியா, விற்பதற்காக இல்லையோ?” என்று அடித்தொண்டையில் முழங்கினன் செம்பழுப்புக் குல்லாய். என்னைப் பதம் பார்ப்பதற்கு இப்போது வேளை வந்துவிட்டது என்பதுபோல வைரத்துடன் ஒலித்தது அவன் குரல். கும்பல் இன்னும் நெருக்கமாக என்னைச் சூழ்ந்தது. செம்பழுப்புக் குல்லாய் சற்று யோசித்துவிட்டு, “அப்படியானால் மாற்றகக்கொடு!” என்றன்.

“எதற்கு?” என்று கேட்டேன். என் உயிரைக் கூடியவரை உயர்ந்த விலைக்கே கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.

உடனே அவர்கள் உரக்கச் சளசளக்கத் தொடங்கி அவரவர் கைகளில் இருந்தவற்றை என் முன்னே நீட்டினார்கள். விலைமதிப்புள்ள பொருள் எதுவும் என் கண்ணில் படவில்லை. என்றலும் புறாக்களிடமிருந்தோ நான் எப்படியும் பிரிய வேண்டியிருந்தது (அவர்கள் அவற்றை என்னிடமிருந்து வெறுமே பிடுங்கிக் கொள்வார்கள் என்று உறுதியாக எண்ணினேன்), ஆகவே ஒன்றுமில்லாததைவிட இவை மேலாக இருந்தன. நிமிட நேரத்திற்கெல்லாம் அவர்கள் புறாக்களுடன் போய்விட்டார்கள். நானோ கைகள் நிறையப் பொருட் குவியலுடன் நின்றேன். கிராதி விளிம்புகள் மூன்று, மரக் கிலுகிலுப்பை ஒன்று, விளையாட்டுத் தொட்டிகள் இரண்டு, ஓட்டைவிழுந்த தம்பட்டம் ஒன்று,—இதன் தோலும் விளிம்பும் எதனாலோ செந்நிறம் பூசப்பட்டிருந்தன—மர மண்வெட்டி, சவைப்பதற்கேற்ற கந்தகம் இரண்டு துண்டுகள் முதலியவை அவற்றில் இருந்தன. இந்தப் பண்டமாற்றில் ஏமாந்தவன் நானோ, அவர்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் இப்போது என் சுமை அநேக மடங்கு கனமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. எல்லாவற்றையும் எப்படியோ ஒரு மூட்டையாகக் கட்டி முதுகின்மேல் போட்டுக் கொண்டு நான் மேலே நடந்து, வேறு எந்த நிகழ்ச்சிகளும் இன்றி அவ்வூரைக் கடந்து சென்றேன்.

ஊர்ப்புறத்தை ஒட்டியிருந்த மரங்கள் வெகு நேரத்துக்கு முன்பே பின் தங்கிவிட்டன. நாற்புறமும் விரிந்து பரந்திருந்தது நடு நடுவே திட்டுக்கள் கொண்ட வெளி. முட்புதர்கள் அதில் அடர்ந்திருந்தன. இங்கும் அங்கும் உவர் மண் மேடுகள் தென்பட்டன. என் கால்கள் புழுதியில் புதைந்தன. மேலேயோ, மதிய வெயில் பொசுக்கிற்று. பசியும் தாகமும் என்னை வாட்டி வதைத்தன. எது அதிகம் என்று எனக்கே தெரியவில்லை. தூரத்தில் தனி மரம் ஒன்று தென்பட்டது. நிழலைச் சீக்கிரம் அடைவதற்காக நான் முடிந்தவரை நடையை விரைவுபடுத்தினேன். மரத்தின் அருகே நான் நெருங்கிவிட்டபோது எதிர்ப்புறத்திலிருந்து அதே மரத்தை நோக்கி மண்வெட்டியும் தோளுமாக ஒர் உருவம் வரக் கண்டேன். அந்த உருவத்தில் ஏதோ எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. நாங்கள் இன்னும் கிட்டத்தில் வந்ததும்—என்ன ஆச்சரியம்!—அது என் நண்பன் அமன்பாய் என அடையாளம் தெரிந்து கொண்டேன். எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த அதே அமன்பாய். இவனுடைய தகப்பனார் துர்ஸீன்-பிச்சாக்சி தாமே தயாரித்த கத்திகளை விற்று வந்தார். நாங்கள் இருவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். வெக்கையையும் அலுப்பையும் மறந்து ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு ஒடினோம். அந்தப் பழைய ஜித் மரத்தின் அடியில் சந்தித்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமன்பாயை அவன் தகப்பனார் கிராமத்திலுள்ள உறவினர்களிடம் அனுப்பியிருந்தார்— அவனை நாட்கூலிவேலையில் அமர்த்தும்படி. இப்போது நாட்கூலி வேலை முடிந்துவிட்டது. அமன்பாய், சுமார் நான்கு மணங்கு எடையுள்ள மண்வெட்டியைத் தோளில் சுமந்தவாறு கால் நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான். நான் வீட்டை விட்டு ஒடிய சங்கதி எதுவும் அவனுக்குத் தெரியாது. கிராதி விளிம்புகளைக் கண்டதும், நானும் வராட்டி தட்டிக் கூலி வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பதாக நினைத்துவிட்டான். இருவரும் மரத்தடியில் உட்கார்தோம். நான் என் துன்பக் கதையை அவனுக்குக் கூறினேன்.

செய்திகள் பரிமாறிக் கொண்டபின், பட்டினியாய் இருப்பதை இருவரும் நினைவுபடுத்திக் கொண்டோம். சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அண்ணாந்து பார்த்தோம். ஆனால் அந்தோ, மரத்தில் பழங்களே இல்லை.

“இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் வகை போலிருக்கிறது. அடுத்த வருஷம் மறக்காமல் இங்கே வர வேண்டும்.” என்று நஞ்சு தோய்ந்த குரலில் சொன்னேன்.

“நல்ல முட்டாள் அடாநீ! இது ஸரத்தான் என்ற நாலாவது மாதம் ஆயிற்றே, மறந்து விட்டாயா? இந்த மாதத்தில் பழங்கள் மெக்காவுக்குப் போய்விடும், அங்கே அவற்றின் கொட்டைகள் ‘அலீப்’ என்ற முதல் எழுத்து பொறிக்கப்படும்! விரைவில் அவை திரும்பிவரும்” என்றான் அமன்.

அவன் சொன்னது உண்மைதான். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எங்களிடம் தின்பதற்கு எதுவும் இல்லை. என்னிடமோ அமனிடமோ உணவுப் பண்டம் ஒரு பொருக்குகூட இல்லை.

“கோக்-தெராக் இங்கிருந்து அப்படி ஒன்றும் ரொம்ப தூரம் இல்லை. அது பெரிய நகரம்... சந்தையும் அங்கே மிகப் பெரியது.” என்று தயக்கத்துடன் சொன்னான் அமன்.

“போவோமா?”

“நான் தான் வீட்டுக்குப் போகிறேனே...”

“போவோம்! என்னிடம் பணம் இருக்கிறது. தவிர எத்தனை சாமான்கள், பார். விற்போம்!” என்றேன்.

“என்னிடமுந்தான் பணம் இருக்கிறது. நான்தான் வேலை செய்து சம்பாதித்தேனே.”

“அதுதானே! போவோம் வா. நாளை வீடு திரும்பு! இல்லாவிட்டால்... என்னுடன் வாயேன், ஊம்?”

அமன் பேசாதிருந்தான். அவன் மனதுக்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் யோசனை அவனுக்குக் கவர்ச்சி உள்ளதாகப் பட்டது. வருங்காலப் பயணம் பற்றியும் எங்களுக்கு நேரவிருக்கும் வளமான வாய்ப்புக்கள் பற்றியும் நான் பிரமாதமாக வருணித்தேன். எப்போதாவது என்னை ஒரக் கண்ணால் பார்த்தபடி அவன் காது கொடுத்துக் கேட்டான். பின்பு திடீரொன்று துள்ளிக் குதித்தான்.


“ஆகா, சரி! கொடு கையை! சத்தியம் செய், எல்லாம் ஆளுக்குப் பாதி, ஊம்?” என்றான்.

நான் சந்தோஷமாகச் சத்தியம் செய்தேன்.

இருவரும் சாமான்களை ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொண்டோம். பணத்தையும் கணக்கிட்டுப் பாகம் பிரித்துக் கொண்டோம் (நான் அமனை விடப் பணக்காரனாய் இருந்தேன். நாட்கூலி வேலையில் அவன் சம்பாதித்தது எல்லாம் சற்றுக் குறைய ஒரு தன்கா தான்). பின்பு நடக்கலானோம். பொழுது சாய்வதற்குள் கோக்-தெராக் நகரை அடைந்து சாயாக் கடையில் தங்கினோம். அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை. சந்தை கூடும் நாள். காலையில் சந்தைக்குப் புறப்பட்டோம்.

சந்தை என்றால் அதுதான் சந்தை, மெய்யாகவே சொல்லுகிறேன்! அடே அப்பா! சந்தைகளுக்கெல்லாம் சந்தை இது! ஈரானிலோ தூரானிலோ, மெக்காவிலோ மெதீனாவிலோ, மைமானாவிலோ மைஸாராவிலோ, இஸ்தாம்புலிலோ மஸான்தரானிலோ, கீழேயோ மேலேயோ, வலப் புறமோ இடப்புறமோ, எங்குமே இந்த மாதிரிச் சந்தையைக் காண ஒருவனுக்கு வாய்க்காது. இங்கே கடை வரிசைகள் எத்தனை, சரக்குகள் எவ்வளவு, சந்தைக்கு வந்த மக்கள்தாம் எத்தனை வகைவகையானவர்கள் என்பதை எல்லாம் வருணித்து மாளாது. வியாபாரிகளின் முகங்கள்தாம் எவ்வளவு தந்திரம் நிறைந்தவை— உலகம் முழுவதையும் அவர்கள் ஏற்கனவே ஏய்த்துப் பழகிவிட்டகள் போல! அப்புறம் அவர்களுடைய உடைகள்! வானவில்லின் எல்லா நிறங்களும், ஒவ்வொரு நிறத்துக்கும் இரண்டிரண்டு பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் போல் இருந்த வண்ணச் சாயல்களும் அந்த உடைகளில் காணப்பட்டன. ஒவ்வொரு வண்ணச் சாயலுக்கும் என்ன பெயர் கொடுப்பது என்றே தெரியவில்லை, அத்தனை விதம் விதமானவை! கண்களில் பல நிறங்களும் ஒளியும் பளிச்சிட்டன. காதுகளில் ஹோவென்ற இரைச்சலும் கணகணப்பும் தடதடப்பும்—பயங்கர வழக்கு விசாரணைக்குப் பின் மக்கள் திரள் கலைந்துபோவது போல. தீர்க்கதரிசிகள் வரலாறு என்ற நூலிலோ மந்திர வித்தைக்காரி என்ற கதையிலோ இம்மாதிரிச் சந்தை வருணிக்கப்படவில்லை. இதுபோன்ற சந்தை உலகில் எங்குமே இதற்கு முன் கூடியது கிடையாது.

வாருங்களேன், எல்லாவற்றையும் வரிசையாகப் பார்வையிடுவோம்! இதோ வாசனைச் சாமான்கள், சில்லறைச் சாமான் கடைகளின் வரிசை வியாபாரிகள் தங்கள் சரக்குகளைத் தரைமேலேயே பரப்பி வைத்திருந்தார்கள். பழஞ் சாக்குகள், முரட்டு இரத்தினக் கம்பளங்கள், கைத்தறித்துணித் துண்டுகள், சிவப்பு, நீல, பச்சைத் துண்த்துண்டுகள், எல்லவற்றையும் ஒட்டுச் சேர்த்துத் தைத்துப் பந்தல்கள் அமைத்துக் கொண்டிந்தார்கள் அவர்கள். உங்களுக்கு என்ன என்ன வாங்க ஆசையோ, உலகம் படைக்கப் பட்ட நாள் தொடங்கி இன்றுவரை அழகுச் சாதனங்களும் வாசனைப் பொருள்களும் தயாரிப்பவர்கள் என்னவெல்லாம் தயாரித்தார்களோ அவை எல்லாம் இங்கே வாங்கலாம். பேன்களையும் தேள்ளுப் பூச்சிகளையும் ஒழிப்பதற்கான பாதரசக் களிம்பு வேண்டுமா? கொழுப்பைப் பாதரசத்துடன் கலந்து அரைத்துத் தயாரித்ததாம் இந்தக் களிம்பு. அல்லது சொறியைக் குணப்படுத்தும் இந்தாவு எண்ணெய் வேண்டுமா? இஞ்சி, பேதி இலை, அல்லது அக்கோனீத் என்னும் நச்சுச் செடியின் இலை தேவையா? அல்லது கண்படாமல் காப்பதற்கான வெண் புள்ளிகள் கொண்ட கரு மணி மாலை வேண்டுமா? அல்லது வயிற்று வலி மருந்து உருண்டைகள் வேண்டுமா? பஞ்சு வைத்த போர்வை தைப்பதற்கான பரு ஊசியோ, தாடி சீப்போ, காற்சட்டைகளின் உள்ளே கொடுத்துத் தைப்பதற்கேற்ற நாடாக்களோ வேண்டுமா? அல்லது “ஹலீலான்- ஜங்” என்னும் மருந்துப் பூண்டு வேண்டுமா? (இந்தப் பூண்டு எந்த நோயைக் குணப்படுத்துமோ தெரியாது. ஆனால் உங்களுக்கு என்ன வியாதி என்பது தெரியாவிட்டல் இதுதான் ஏற்ற மருந்து) எல்லா விதக் காயங்களுக்கும் கடடிகளுக்கும் போடத் தக்க மருந்துப் பிளாஸ்திரி, புஹாரச் சவையல் கந்தகம், கிரம்பு, மருந்து பக்வீட்—எது வேண்டுமோ கிடைக்கும் இங்கே. ஆண்டுதோறும் கூடும் புகழ் பெற்ற சைபீரிய இர்பீத் சந்தை கெட்டது போங்கள்!

இந்தப் பொருள்களை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி அழகாகப் பரப்பி வைத்திருப்பவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதுதான் நாம் செய்ய வேண்டியது...

இதோ இன்னெரு கடை வரிசை. ஒரு புறம் குயவர்கள். மறு புறம் சோப்பு விற்பவர்கள். குயவர்கள் கடைகளில் சுட்ட களிமண்ணல் செய்த அழகு அழகான பாத்திரங்கள் பெரும் பெரும் குடும்பங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. குடங்கள், கலயங்கள், கோப்பைகள், தட்டுகள் முதலியவை. ஒவ்வொரு வகைப் பாத்திரங்களும் இரட்டைப் பிள்ளைகள் அல்லது அடுத்தடுத்துப் பிறந்த சகோதாரர்கள் போல் ஒன்றையொறு ஒத்திருக்கின்றன. உங்களுக்குப் பெரிய பேஸின் வேண்டுமா அல்லது சின்னஞ் சிறு பேஸின? அல்லது பிரமாண்டமான சால் வேண்டுமோ? இதோ, இப்போதுதான் சூளையிலிருந்து எடுத்தது.பாலைப் பிரை குத்துவதற்கேற்ற தயிர்க் கலயம் வேண்டுமா? அல்லது நீண்ட குறுங்கழுத்துள்ள கூஜா வேண்டுமா? இவை எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஒரே ஆவலாய்க் காத்திருக்கின்றன. சுண்டிப் பாருங்கள், களி பொங்கக் கணீர் என ஒலிக்கும்.

சோப்புக் கடைகளில் வட்டச் சோப்பும் “யஹ்னக்” ரகச் சோப்புக்களும் மேழுகு வத்திகளும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. கடைக்காரக்ளுக்கு முன் தொங்கு பைகளில் காய்ச்சிக் கட்டியாக்கிய கொழுப்புத் துண்டுகளும் மிருகங்களின் உள்ளுறுப்புக்களும் நிறைத்து வைத்திருக்கின்றன. ஆயிர மாயிரம் பச்சை ஈக்கள் ஙொய்யென்று மொய்க்கின்றன. இங்கே ஒரு ராத்தல் சோப்பு வாங்க வேண்டும் என்றல் முதலில் மூக்கைக் கைக்குட்டையால் கட்டிக் கொள்ள வேண்டும் அல்லது சட்டைக் கைக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். சில சோப்புக் கடைக்கரர்கள் வாங்குபவர்களை உபசரிப்பதற்காகத் தேநீர்க் கோப்பையும் ரொட்டியும் கைகளில் வைத்துக் கொண்டு நிற்கிறர்கள். ஆனால் இங்கே தேநீராவது ரொட்டியாவது! ஏற்கனவே சாப்பிட்டது வாந்தியாக வெளியேறிவிடமல் வயிற்றில் தங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம். என்னைக் கேட்டால், கெட்டுப்போன கறிப்பொங்கல் போலக் கடுமையாக அடிக்கும் இந்தக் கவிச்சை முகர்வதைவிட ஆயுள் முழுவதும் சோப்பே இல்லாமல் இருப்பது மேல் என்பேன்.

ஆனால் இவை சந்தையின் புகழ்பெற்ற கடை வரிசைகள் அல்ல. “பீத் பஜார்”—அதாவது “பேன்பிடித்த சந்தை”—உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றது. நமக்கு வேண்டியது, வேண்டாதது எல்லாமே இங்கே கிடைக்கும். இராணுவக் காற்சட்டைகள், ஒன்றுக்கொன்று பொருந்தாத தடித்தோல் ஜோடுகள், பஞ்சு வைத்துத் தைத்த பருத்த மேலங்கிகள் (ஏழே ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை. ஒரே கஷ்டம் என்ன என்றல் அவை எந்தத் துணியில் தைத்தவை என்று இப்போது கண்டுபிடிக்க முடியாது!) குல்லாய் (ஒரு வகையில் மிகவும் மதிப்புயர்ந்த குல்லாய். ஏனென்றல், வயதைக் கொண்டு பார்த்தால் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே உள்ள பிரதேசம் முழுவதிலும் இருக்கும் எல்லாக் குல்லாய்களுக்கும் முதுகுரவனாக விளங்கத் தக்கது ஆயிற்றே இந்தக் குல்லாய்!), முழங்கைகள்வரை வரும் குட்டைக் கைகள் வைத்த கிழவிச் சட்டை—மல்யாஹான் காலத்தது, பல நிறத் துண்டுத் துணிகள் (கைதேந்த தையல்காரி இவற்றைக் கொண்டு என்னதான் தைக்க மாட்டள்!)—எது வேண்டுமானலும் இங்கே காணலாம். அல்லது, ஒருவேளை உங்களுக்குக் குதிரைக் கவிசனை வேண்டுமோ? செத்த குதிரைமேலிருந்து கழற்றப்பட்டதுதான் என்றலும் இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தாங்கும். அல்லது உயர் ரக ஆட்டுத்தோல் ஸ்லிப்பர்கள் வேண்டுமா? ஆகா கிடைக்குமே. இவற்றைப் போட்டுக் கொள்ளலாம்—அடித்தோலும் குதியும் புதிதாகத் தைத்துக் கொள்ள வேண்டும், மேற்பகுக்குச் சரியானபடி வண்ணம் பூச வேண்டும், அவ்வளவுதான்! பாதங்களில் சுற்றிக் கொள்வற்கான துணிப்பட்டிகள் தாம் எத்தனை வகை! இஷ்டம்போலப் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இவற்றைக் கோவணமாகவும் பயன்படுத்தலாம்...

எல்லாவற்றையும்விட அக்கறைக்கு உரியவை இந்தச் சாமான்களை எல்லாம் விற்பனை செய்யும் வியாபாரிகளின் முகங்கள்தாம். இவர்கள் முகங்கழுவி ஒரு வாரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும். தாடிகள் பிறந்தது முதலே மழிகத்தியைக் கண்டறியாதவை. ஆயினும் முகங்கள் என்னவோ பளபளக்கின்றன. நீங்கள் சரக்கை நோட்டமிட்டு விலை கேட்க வேண்டியதுதான் தாமதம், இவர்கள் முகங்களில் ஒளி படர்கிறது—நேற்றுத்தான் அழுது புதைத்துவிட்டு வந்த தங்கள் அருமை நண்பனின் பிணம் உயிர் பெற்று வந்துவிட்டது போல. முதலில் கட்டாயமாக முகமன் கூறிக் கைகுலுக்கிய பின்பே விலையைச் சொல்வார்கள். அமெரிக்கா என்ற ஓர் இடம் உலகில் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுதான் அந்த அமெரிக்கா போலும்!

வேடிக்கை என்ன தெரியுமா? இங்கே, “பீத் பஜாரில்” தான் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த ஹுஸ்னிபாய் என்பவனை நாங்கள் சந்தித்தோம்! இரைச்சலாலும் பல் வண்ணங்களாலும், பொருள்களின் செழிப்பாலும் மதிமயங்கியவர்களாக, முதலில் விற்பதா வாங்குவதா என்று தீர்மானிக்க முடியாமல் நாங்கள் வெகு நேரம் சுற்றி அலைந்து விட்டபின் அவனைக் கண்டோம். ஹுஸ்னிபாய் துண்டுத் துணிகள் விற்றுக் கொண்டிந்தான். துண்டுத்துணிகள் என்றல் வெறும் சிறு துண்டுகள் அல்ல, ஓர் அல்லது ஒன்றரை அடி நீள முள்ள பகட்டான துணிகள், சீட்டித் துணித் துண்டுகள். ஒரு பெரியதான துணி விற்கப்படும்போது கடைசியில் இம்மாதிரித் துண்டுகள் மிஞ்சுவது வழக்கந்தான். பெரிய வியாபாரிகள் இவற்றைக் கூவி விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு மலிவாக விற்பனை செய்வார்கள். சில்லறை வியாபாரிகள் தொங்கு பைகளில் பல்வேறு நிறங்களும் கோலங்களும் கொண்ட துணிவிளிம்புகள் வெளித் தெரியும்படி வைத்தவாறு சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பார்கள். இந்தத் துணித் துண்டுகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. மிக மலிவான சீட்டித் துணிகூட ஓர் அர்ஷீன்—இரண்டேகால் அடி—பதினேழு கோப் பெக்குகள் விலை! ஏழைகளுக்கு இந்த விலை கட்டுப்படி ஆகாது. முழுதும் ஒரேவகைத் துணியால் உடைகள் தைத்துக் கொள்ள அவர்களுக்கு முடியாது. அதற்காகத் தான் துணித் துணிடுகளை வாங்கி, சட்டைக்கைகளும், மேலங்கிகளுக்கு அடியில் தெரியும் காற்சட்டைப் பகுதிகளும் தைத்துக் கொள்வார்கள். எஞ்சிய பகுதிகளுக்கு முரட்டுக் கைத்தறித் துணியைப் பயன்படுத்துவார்கள்.

இந்த ஹுஸ்னிபாய் எப்போதுமுதல் சில்லறை வியாபாரி ஆனான் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனோ, இரண்டு தொங்கு பைகளில் செம்மச் செம்ம நிறைந்த துணித் துண்டுகளும் கையில் அளவுகோலுமாக அனுபவசாலியான வியாபாரி போல வளைய வந்தான்.

“பாப்ளின் வேண்டுமா, பூப்போட்ட சிவப்பிச் சீட்டித் துணி வேண்டுமா, புள்ளிபோட்ட சீட்டித்துணி வேண்டுமா, ரோஹ்தான்—பதான் வேண்டுமா, அருமையான மல் துணி வேண்டும, காலிக்கோ வேண்டுமா, உறைத்துணி வேண்டுமா, சைத்தான் தோல் துணி வேண்டுமா? தாராளமாக வங்குங்கள், சந்தோஷமாகத் தைத்துப் போட்டுக் கொள்ளுங்கள்!” என்று தொண்டை கிழியக் கத்தியவன், எங்களைப் பார்த்துவிட்டான். இமாம்கள் ஹஸனையும் ஹீஸேனையும் உயிரோடு எதிரே வரக் கண்டவன் போல மலைத்துப் பேனான்.

“அடே, நீங்களா? எங்கிருந்து வந்து சேர்ந்தீர்கள் இங்கே?... அப்பா குதிரைக் கழுத்துப் பட்டைகளைச் சந்தையில் விற்று வரும்படி என்னிடம் சொன்னார். என்னால் இது முடியாது என்று சொல்லிவிட்டேன். என் சித்தப்பா இருக்கிறாரே, சில்லறை வியாபாரி, அவர் மாதிரிச் சுற்றுத் திரிந்து வியாபாரம் செய்ய எனக்கு வெகு காலமாகவே ஆசை. துணித் துண்டுகள் வாங்க அப்பா எனக்குப் பணம் கொடுத்தார். சையது-பயில்வான் சந்தைக்குப் புறப்பட்டான், நானும் அவனோடு வந்து விட்டேன்... பாருங்கள், எப்பேர்ப்பட்ட சரக்குகள் என்று! யூஸீப் தாவீதவின் கடையில் கூட இந்த மாதிரிச் சரக்கு கிடைக்காது! ரூபிகளுக்கு மூன்று உருப்படி!”—இப்படிப் பெருமை அடித்துக் கொண்டவன் சட்டென நினைவுபடுத்திக் கொண்டு, “ஆமாம், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அமன், நீ கிராமத்திலிருந்து வருகிறாயா?” என்றான். பின்பு என் கதை அவனுக்கு நினைவு வந்துவிட்டது. “நீ இருக்கிறாயே, நல்ல ஆள் தான் போ! ஜிப்ஸிகளிடம் பாடம் கேட்டாயா என்ன? ஒரு வாரத்துக்கு மேலே எங்கே காடுவாழ்சாதியாகச் சுற்றித் திரிகிறாய்? பாவம், உன் தாயார் எங்கெல்லாம் உன்னைத் தேடினாள் தெரியுமா? சௌக்கியமாக இருக்கிறேன் என்று தகவல் கொடுத்தால் செத்துப்போய்விட மாட்டாயே! நல்ல வேளையாக உன் அத்திபேர் வந்து உன் அம்மாவைத் தேற்றினார். தம் வீட்டில் நீ ஐந்து நாட்கள் தங்கியிருந்ததாகவும் அப்பிறம் கப்ளான்பேக்கில் மற்றோர் அத்தை வீட்டுக்குப் போயிப்பதாகவும் சொன்னார். இலையுதிர் காலம்வரை வயல் வேலையில் நீ ஒத்தாசை செய்யப் போகிறாய் என்றார்... இங்கே எப்படி வந்து சேர்ந்தாய் நீ? அத்திம்பேரிடமும் புளுகினாயா? தாயாரை ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டது வாயேன், மடையா! அவள் ஆறுதல் அடைந்துவிட்டாள் என்றாலும் உன்னை நினைத்து அழுகிறாளே...”

“கொஞ்சம் பாடுபட்டுச் சம்பாதிக்கிறேன், உடைகளைச் சீர்படுத்திக் கொள்கிறேன், அப்புறம் திரும்புகிறேன்.”

“ஆமாமாம். சீர்தான் படுத்திக் கொள்வாய்! இதையும் பறி கொடுத்து விட்டு நிற்பாய்!”

“அடேடே, ரொம்பத்தானே பேசாதே... என்னிடமும் இருக்கிறது சரக்கு, இதோ!“

“ஒகோ! மெய்யாகவேதானா? இதை எல்லாம் எங்கே சேகரித்தாய்? காக்கைக் கூட்டைச் சூறையாடினாயா?”

இப்போது அமன் குறுக்கிட்டான். “சரி, சரி! சச்சரவிட்டது போதும். ஏற்கனவே வெக்கை சகிக்க முடியிவில்லை. நம் வட்டாரத்தில் புதிய செய்திகள் என்ன, அதைச் சொல்லு” என்றான்.

“அட அங்கே என்ன புதுச் சேதிகள் இருக்க முடியும்?... ஆமாம், உங்களுக்குத்தான் இன்னும் தெரியாதே”—ஹீஸ்பாய்க்கு உற்சாகம் பிறந்து விட்டது. “அங்கே என்ன நடந்தது தெரியுமோ? ரொட்டிக்காரன் ஜலீல் தீனிப் புல்லை மசூதி முகட்டின் மேல் போட்டிருந்தான். அதிலே தீப்பிடித்துவிட்டது. தீயணைக்கும் படையினர் வந்தார்கள். ஆகா, எவ்வளவு அருமையாக இருந்தது என்கிறாய்! இன்னும் புலாத்ஹோஜா இருக்கிறானே, அவன் அண்ணனுடைய ரிவால்வரை எடுத்துக் காவல்காரனுடைய நாயைச் சுட்டு விட்டான். மீர்ஷாப் அவனை ஒரு நாள் சிறையில் வைத்திருந்தார். இரண்டு போலீஸ்காரர்களும் மச்சாலவ் தானேயும் வந்தார்கள்! எல்லோரும் அவரவர் வீடுகளில் பதுங்கிவிட்டார்கள். நானும் ஸலீஹீம் மீர்-அஜீஸ்-அகா வீட்டு முன்மாடத்திலிருந்து பார்த்தோம். மச்சாலவ் சொன்னார் (இங்கே ஹீஸ்னிபாய் மச்சாலவைக் கோரணி செய்தவாறு மாற்றுக்குரலில் பேசினான்). ‘ஸே, ஸே, மோஸம். படு மோஸம். ஸைபீரியா போவாய் நீ...’ புலாத்ஹோஜாவின் அண்ணனோ அரைகுறை ருஷ்ய மொழியில் கெஞ்சிக் கூத்தாடினான், நிறையக் கைக்கூலி கொடுத்தான். அப்புறந்தான் அவர்கள் போனார்கள். புலாத்ஹோஜா விடுதலை செய்யப்பட்டான். அண்ணன் அவனைச் சக்கை சாறாக விளாறினான் என்று சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் புலாத்ஹோஜா இப்போது வீறாப்பு பேசுகிறான். அவன் யாருக்கும் பயப்படுவதில்லையாம், போலீஸாரிடமே, மச்சாலவிடமோ, காவல்காரன் கூர்-ரஹீமிடமோ அவனுக்கு பயம் இல்லையாம். ‘இஷ்டப்பட்டால் எல்லாரையும் ரிவால்வரால் சுட்டுத் தள்ளிவிடுவேன்’ என்கிறான். நாங்கள் அவனை இரண்டு போடு போட்டோம், அவனோ உங்களையும் சுட்டுத் தள்ளிவிடுவேன் என்கிறான்...”

“அப்படியா? உதைக்கிறேன் பயலை, திரும்பியதுமே” என்றேன் நான்.

“கட்டாயம் உதைப்பாய். முதலில் திரும்பு” என்று கேலி செய்தான் அமன்.

“டேய் ஹீஸ்னிபாய், வீடு திரும்பியதும் அம்மாவிடமும் தங்கைகளிடமும் நான் ரொம்பக் கேட்டாதாகச் சொல்லு. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லு. பொறு, இந்தா, இந்த ஐந்து கோப்பெக்கை யூல்தாஷிடம் கொடு. அவனுக்கு நான் தர வேண்டும் நல்லது, நாங்கள் எங்கள் காரியத்தைப் பார்க்கிறோம். விடை கொடு!” என்றேன்.

“போய் வாருங்கள்!” என்றான் ஹீஸ்னிபாய். மறு வினாடியே அவன் உரக்க முழங்கியது எங்களுக்குக் கேட்டது. “பாப்ளின் வேண்டுமோ, பூப் போட்ட சீட்டித் துணி வேண்டுமா...”

புறாக்களுக்காக எனக்குக் கிடைத்த பொருள்களையும் அவற்றோடு அமனின் மண்வெட்டியையும் விற்பனைக்காக அடுக்கி வைக்க நாங்கள் தீர்மானித்தோம். எங்களைச் சுற்றி வாங்குபவர்கள் ஏராளமாகக் கூடிவிட்டார்கள். எங்கள் சாமான்கள் மளமளவென்று விற்றுப் போகும் என நாங்கள் நினைனத்தோம். ஆனால் கூடியவர்கள் எல்லோரும் வெறுமே வேடிக்கை பார்க்க வந்தவர்கள். சாமான்களின் விலைகளில் கூட அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவை எதற்குப் பயன்பட முடியும் என்பதில்தான் அக்கறை அவர்களுக்கு. பற்பல நையாண்டி யோசனைகளை அவர்கள் கூறினார்கள். ஒரு மணி நேரம் போலத் தொல்லைப்பட பின் அமனுடைய மண்வெட்டியையும் என் மர மண்வாரியையும் ஒருவிதமாக விற்றோம். இது கூட, தாமாகவே முன்வந்த தரகர்களின் உதவி இல்லாமல் நடக்கவில்லை.

வாங்க வந்தவர்களுடன் அரை மணி நேரம் பேரம் பேசிய பிறகு அவர்கள் கேட்ட விலைக்கு, அதாவது மண்வெட்டியை அரை ரூபிகளுக்கும் மர மண்வாரியை (கோடை காலம் ஆதலால்) ஒன்றரைத் தன்காவுக்கும் விற்க நாங்கள் இசைந்தோம். அதற்கு அப்புறமும் இந்தத் தரகர்கள் “கையடித்துக் கொடுப்போமா?” என்றார்களே பார்ப்போம்!

அமன் பணத்தை இடுப்புக் குட்டையில் சுருட்டி முடிந்து கொண்டான். மற்றச் சாமான்களை விற்பது இப்போது அவசியமாயிருந்தது. விளையாட்டுத் தொட்டில்களையும் கிலுகிலுப்பையையும் நான் அமனிடம் கொடுத்தேன். தம்பட்டத்தையும் கிராதிவிளிம்புகளையும் நானே வைத்துக் கொண்டேன். அமன் கிலுகிலுப்பையைக் கிலுக்கினான், நான் தம்பட்டத்தை அடித்தேன்—வாங்குபவர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக. எங்களையே போன்று கந்தல் அணிந்த ஏழைச் சிறுவர்களின் கூட்டம் அக்கணமே எங்களைச் சூழ்ந்து கொண்டது. இலவச வேடிக்கை பார்க்கக் குழுமினார்கள் இவர்கள். ஒர் ஒடிசல் பையனுக்குக் கிலு கிலுப்பை மிகமிகப் பிடித்துப் போயிற்று. அவன் ஒர் உழவனின் மகன். அமன் அவனுடைய கழுத்துப் பட்டையைப் பற்றிக் கொண்டு, அவனுடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் இரண்டு தர்பூஸ் பழங்களும் ஒரு முலாம்பழமும் கிலுகிலுப்பைக்கு மாற்றாக வாங்கிக் கொண்டே விட்டான். நான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தே—சபாஷ், நீ கைராசிக்காரன் என்ற அர்த்தத்தில். இதன் பிறகு நாங்கள் தம்பட்டத்தை விற்றோம். கஞ்ருசிவப்புக் குதிரைமேல் ஏறிச் சந்தையில் சுற்றி வந்த அழகிய மீசையுள்ள ஒர் இளைஞன் அதை வாங்கிக் கொண்டான். ஒரு தன்கா விலை கொடுத்தான் அவன். அப்புறம் கிடைத்தாள் ஒரு “குருட்டு” வாடிக்கைக்காரி. கஸாஃகியக் கிழவி அவள். ஒரு கோழி, முட்டைகள், தயிர்க் கட்டி உருண்டைகள், சாமை ஆகியவற்றை விற்க வந்திருந்தவள்.

“அடாடா, என் கண்களா, இந்தத் தொட்டில்களை எனக்குத் தாருங்கள். சந்தையிலிருந்து குழந்தைகளுக்குப் பரிசாக எடுத்துப் போகிறேன். பேரக் குழந்தைகள் சந்தோஷப்படுவார்கள்!” என்றாள்.

“கிராதி விளிம்புகள் இல்லாமல் தொட்டில்கள் தனியாக விற்கப்படமாட்டா” என்று கண்டிப்பான குரலில் சொன்னான் அமன்.

“அடாடா, என் கண்களா, கிராதிவலை இல்லாமல் விளிம்புகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?...”

தலையை ஆட்டிக் கொண்டே அவள் அப்பால் போக புறப்பட்டவள், திரும்பி வந்தாள்.

“சரி அப்படியே ஆகட்டும். வாங்கிக் கொள்கிறேன். குழந்தைகள் விளையாடுவார்கள். என்ன விலை கேட்கிறீர்கள்?” என்றாள்.
நாங்கள் வெகு நேரம் பேரம் பேசினோம். முடிவில் இருபது முட்டைகளும் ஒரு குல்லாய் நிறையச் சாமையும் ஒட்டகத் தயிர்க்கட்டி உருண்டைகள் பத்தும் பெற்றுக் கொண்டு சாமான்களை அவள் தலையில் கட்டினோம். சாமான்களைக் கொடுத்து விலையும் பெற்றுக் கொண்ட பின் பறவைகள் போல லேசாகி விட்டதாக உணர்ந்தோம்.

“அப்பா, களைத்துப் போய்விட்டேன். ஏதாவது சாப்பிட வேண்டும், இல்லையா?” என்று சோம்பல் முறித்துக் கொண்டே சொன்னான் அமன்.

“போவோம். என்ன சாப்பிடுவது?”

“மலிவாய் இருக்க வேண்டும், வயிறும் நிறைய வேண்டும். அதுதான் முக்கியம்.”

“அப்படியானால் தினைக் கஞ்சி குடிப்போம்!”

இரண்டு கோப்பெக்குகள் கொடுத்து இரண்டு மக்காச்சோள ரொட்டிகள் பறங்கிக்காய்க் கறியுடன் வாங்கிக் கொண்டு சூடான உணவுப் பண்டங்கள் விற்கும் பகுதிக்குப் போனோம். அங்கே பல விதப் பண்டங்கள் விற்பனைக்குத் தயராய் இருந்தன. தணலில் வாட்டிய கல்லீரல் (கல்லீரல் கொஞ்சம் கவிச்சடித்தது என்பது உண்மையே. ஆனால் இம்மாதிரி அற்ப விஷயங்களை யார் பொருட்படுத்துகிறார்கள்?), உருளைக் கிழங்கு ஸமோஸா, சேமியா, அரிசிக் குறுநொய்ப் பொங்கல், கறித் துறுவல், கோதுமைக் கஞ்சி, தினைக் கஞ்சி முதலியன. பெரிய பெரிய அண்டாக்கள் நிறைய உணவுப் பண்டங்கள் சாப்பிட்டுவோரை எதிர்பார்த்துக் காத்திருந்தன. சாப்பிடுவர்கள் வந்து குத்திட்டு உட்கார்ந்தார்கள், சமையல்காரகல் கரண்டிகளால் கஞ்சியைக் கிண்ணங்களில் ஊற்றிச் சற்று வணக்கத்துடன் அவர்களுக்குக் கொடுத்தார்கள். ஒரு கிண்ணத்தில் சேமியாவுடன் ஏதோ கறுப்பான மிதந்தது. “இது என்ன, ஈயா?” என்று கேட்டார் சாப்பிட வந்த நாசூக்குக்காரர். “அட நீங்கள் ஒன்று! ஈயாம்! சேமியாவில் ஈ எங்கிருந்து வரும்? கருகிப்போன வெங்காயம் அல்லவா இது?” என்று பதிலளித்து, சட்டெனக் கிண்ணத்தில் விரலை விட்டுக் கருகிப் போன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் சமையல்காரன் “இப்போது நிம்மதியாகச் சாப்பிடுங்கள்” என்றான்.

இங்கே மலிவு, துப்புரவாயும் இருக்கிறது என்று எண்ணி, நாங்களும் ஆளுக்கு ஒரு கிண்ணம் சேமியா வாங்கிக் கொண்டோம். ஒரு கிண்ணம் சேமியாவின் விலை மூன்று கோப்பெக்குகள். ஆனால் நாங்கள் இரண்டு கிண்ணங்கள் ஐந்து கோப்பெக்குகளுக்குத் தரும்படிப் பேரம் பேசி இரட்டை மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தொடங்கினோம். நன்றாயிருந்தது! சேமியா கொஞ்சம் ஊசிப் போயிருந்தது, ஆனால் முறுமுறுவென்று இருந்த மக்காச் சோள ரொட்டியோடு சேர்த்துத் தின்பதற்குப் பாலாடைபோல ருசியாய் இருந்ததாகவே எங்களுக்குப் பட்டது. அமன் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்தவாறு, பெரிய பாம்புக்கூட்டம் கலவரம் அடைந்துவிட்டது போன்ற உரத்த சீறல் ஒலியுடன் சேமியாவைக் கிண்ணத்திலிருந்து உறிஞ்சி உறிஞ்சித் தின்றான். நானும் மும்முரமாக முயன்றேன். இருவரும் இடது கையால் அடிக்கொரு தரம் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டோம்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஒரு தர்பூஸ் பழத்தையும் தின்றுவிட்டு நாங்கள் இனிமையாகச் சோம்பல் முறித்தோம். முட்டைகள், சாமை, தயிர்க்கட்டி உருண்டைகள், மிஞ்சிய மக்காச்சோள ரொட்டித் துண்டுகள் ஆகியவற்றை என் இடுப்புக் குட்டையில் மூட்டை கட்டினோம். மூட்டையையும் முலாம் பழத்தையும் நான் எடுத்துக் கொண்டேன். தர்பூஸ் பழத்தை அமன் தூக்கிக் கொண்டான். மேலே எங்கு போவது?

அமனுக்குப் புதிய எண்ணம் தோன்றிவிட்டது. எங்கள் பணம் அவன் இடுப்பில் இருந்தது. இப்போது கணிசமான தொகை—சுமார் இரண்டு ரூபிள் சேர்ந்திருந்தது. இந்த ரூபிள்கள் அவனை நிம்மதியாய் இருக்க விடாமல் அடித்தன. கொழுப்பு சேர்வது செம்மறிக் கடாவுக்கு மட்டுமே கெடுதல் அல்ல என்று ஐனங்கள் சொல்வது உண்மைதான். அமன் அதற்குள்ளாகவே ஜமீன்தார் மகன் போல மிடுக்கு பண்ணத் தொடங்கிவிட்டான்.

“கால் நடைச் சந்தையைச் சுற்றிப் பார்க்கலாம் வா” என்று என்னை அழைத்தான்.

“எதற்காக?”

“என் பங்குப் பணத்துக்கு ஆட்டுக்கடா வாங்கி நகரத்துக்கு ஒட்டிப் போகிறேன்.”

“உனக்கென்ன, மூளை புரண்டுவிட்டதா? உன் வயிற்றுப்பாட்டுக்கே வழியைக் காணோம், ஆட்டுக் கடாவுக்கு எப்படித் தீனி போடுவாய்? அல்லது உன்தகப்பனார் நீ ஆட்டுக்கடாவை வீட்டுக்கு ஒட்டிவருவாய் என்று ரொம்பத்தான் காத்துக் கொண்டிருக்கிறாரோ? என்றேன்.”

ஆனால் என் சொற்கள் தம்பட்டத்தில் பட்ட பட்டாணிபோல அவனிட மிருந்து துள்ளி விழுந்துவிட்டன. என்னை இழுத்துக் கொண்டு கால் நடைச் சந்தைக்குப் புறப்பட்டன். முலாம்பழத்தையும் தர்பூஸையும் வாயிலில் கட்டணம் வசூலிப்பவனிடம் வைத்துவிட்டு மூட்டையை உடன் எடுத்துக் கொண்டோம்—அதை யாரிடமும் நம்பி ஒப்படைக்க எங்களுக்கு மனம் இல்லை. சந்தையின் மற்றப் பகுதிகள் பயங்கர நீதி மன்றத்தின் முன்னறை போல் இருந்தன என்றால், கால்நடைச் சந்தையில் இந்த பயங்கர நீதி விசாரணையே நடந்து கொண்டிருந்தது. பாவம் கால்நடைகள் இதைப்பற்றி என்ன நினைத்தனவோ, அறியேன். ஆனால் இறுதி நாள் வந்துவிட்டது என்றே அவையும் எண்ணியிருக்கும். ஒரு புறம், பத்து பத்தாக ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்து ஆட்டுக்கடாக்கள் வாய் ஓயாது கத்திக் கொண்டிருந்தன. மறுபுறம் வெள்ளாடுகளும் குட்டிகளும் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. சற்று தூரத்தில் பசுக்களும் இளங்கன்றுகளும் மூன்று வயதுக் கன்றுகளும், எருதுகளும், உழவு மாடுகளும் மாவென்று அலறிக் கொண்டிருந்தன. இன்னும் அப்பால் இருந்தது குதிரைத்தாவணி. அங்கே குதிரை வியாபாரிகள் அப்பாவி உதவாக்கரைக் குதிரைக்களைச் சவாரிப் புரவிகள் என்று சொல்லி விற்றுக் கொண்டிருந்தார்கள். இதற்காக அவர்கள் முதலில் குதிரைகளை இரக்கமின்றிச் சவுக்கால் விளாறி ஆற்றுக்கு விரட்டினார்கள். ஸகாலிக் என்னும் இந்த ஆறு சற்று தூரத்தில் ஓடுகிறது. மக்கள் கூட்டம் முன்னும் பின்னும் போய்வந்த வண்ணமாய் இருந்தது. பெரும்பாலும் இவர்கள் வாங்கி விற்பவர்கள். கட்டிப்போட்ட குதிரைகளின் அருகே விற்பவர்களும் வாங்குபவர்களும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டோ, பேரம் செய்து கொண்டோ அல்லது வெறுமே உரக்கப் பேசிக் கொண்டோ நின்றார்கள். பெரிய செம்மறி மந்தைகளின் சொந்தக்காரர்கள் ஒரு பக்கத்தில் இருந்தார்கள். அவர்களில் இருவர் பெஷாகாச் பணக்காரகள் தாஷ் கந்தகாரர்கள். மற்றவர்கள் கஸாஃகுகள். நமுதா நீளங்கிகளும் நமுதாத் தொப்பிகளும் அணிந்த இவர்கள் ஒருவர் கையில் ஒருவர் அடித்து, பேரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவிலும் தரகர்கள் நடமாடினார்கள். “வாங்குங்கள், பாய்-அத்தா, வாங்குங்கள்!” என்றோ, “விற்றுவிடுங்கள், பாய்-அத்தா, விற்றுவிடுங்கள், இதுதான் சரியான சமயம்!” என்றோ வியாபாரிகளை அடிக்கொரு தரம் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள் இவர்கள். தரகர்களின் கண்கள் பளிச்சிட்டன, கைகள் நடுங்கின. பின்னே என்ன, இங்கே ஆதாயத்துக்கு வழி இருந்தது, நூற்றுக்கணக்கான ரூபிள்களுக்குப் பேரங்கள் குதிர்ந்தன, பல நூறு கால்நடைகள் கைமாறி...


மாடுகளின் அலறல், குதிரைகளின் கனைப்பு, ஆடுகளின் கத்தல் ஆகியவற்றின் பேரரவத்தில் மனிதக் குரல்கள் அமுங்கிவிட்டன. சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டது. வெக்கை தாங்க முடியவில்லை. காற்றில் புழுதிப் படலம் கலையாமல் மிதந்தது. வியர்வை, சிறுநீர், சாணம், ரோமம் இவற்றின் கள்ளென்ற நெடிகள் அடித்தன. இவை எல்லாவற்றுக்கும் நடுவே, தண்ணீக்காரன் நீர்நிறைந்த தோற்பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு இரண்டு மட்குவளைகளும் கைகளுமாக மெதுவாக நடந்தான்.

“தருமத் தண்ணீர்! தருமத் தண்ணீர்!” என்று முழங்கினான் அவன். பரமாத்தமாக இவ்வாறு உபசரித்து, வேண்டியவர்களுக்கெல்லாம் குடிநீர் பருகக் கொடுத்தான். தண்ணீருக்காகப் பணம் கொடுக்க விரும்பியவர்கள் தண்ணீர்க்காரனின் கையிலிருந்த குவளையில் காசைப் போட்டார்கள். விருப்பம் இல்லாதவன் காசு கொடுக்க வேண்டாம். தண்ணீர்க்காரன் அவனைப் பார்க்கவே இல்லை.

குளிர்ந்த மோர் வேண்டுமா மோர் என்று கத்தி திரிந்தார்கள் இரண்டு வாண்டுகள்—என்னையும் அமனையும்விடச் சின்னவர்கள். அவர்கள் கையிலிருந்த வாளியில் மோருக்கு மேல் மிதந்தன அழுக்கடைந்த பனிக்கட்டித் துண்டுகள். பனிக்கட்டி இவர்களுக்கு எங்கே கிடைத்ததோ?

பீத் பஜாரின் நெரிசலுக்கும் பரபரப்புக்கும் நாங்கள் ஏற்கனவே பழகியிருந்தோம். ஆனால் இந்தக் கூச்சலும் கொந்தளிப்பும் எங்களுக்குத் திகைப்பூட்டின. நாங்கள் நடந்து திரிந்தோம். பேரம் பண்ணுபவர்களின் அருகே நிற்போம், அவர்களுடன் ஏதேனும் ஒட்டகத்தின் பற்களைப் பிடித்துப் பார்ப்போம். ஏதேனும் குதிரையின் நடையையும் நிலையையும் கூர்ந்து நோக்குவோம். பல நிற எருதின் விலையைப் பேசுவோம். அமன் ஆட்டுக்கடா வாங்கும் தன் யோசனையை மறந்துவிட்டான் என்று நினைத்தேன். சந்தையின் கிழக்குப் பகுதியில் சச்சரவு ஏற்பட்டிராவிட்டால் அவன் இப்போதும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பான். சச்சரவின் அரவம் கூதிர்கால மழைப்புயலுக்கு முன் அதிரும் இடி முழக்கம்போல மெதுவாகவே எங்களை எட்டியது. ஆனால் கடைசியில் எட்டியே விட்டது.

“உர் ஷெஷெந்தி!” (அடி இவனை) என்று கஸாஃகிய மொழியில் எவனோ கூச்சலிட்டான்.

“கிஸ்ஸாவூர், கிஸ்ஸாவூர்” (ஜேபடித்திருடன்)!

“சந்தையில் திருடன்!”

ஊதல்கள் கீச்சிட்டன. கஸாஃகும் உஸ்பேக்குமான இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு கையில் வாளை ஓங்கிக் கொண்டும் மறு கையால் நீலநிறமான கம்பளிக் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டும் இடறியவாறு அந்தப் பக்கம் ஓடினார்கள். நாங்கள் அவர்கள் பின்னே ஓடி, உடனேயே அவர்களை முந்திவிட்டோம். கூட்டத்தின் நடுவில் யாரைக் கண்டோம் தெரியுமோ? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அமன் எனக்குச் சாட்சி எங்கள் வட்டாரத்தின் அண்டையில் உள்ள கூகிர்மாச் வட்டாரத்தைச் சேர்ந்த, எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த திருடன் ஸுல்தான் நடுவே நின்று கொண்டிருந்ததான்! ஆனால் இங்கே அவன் திருடனாக அல்ல, திருட்டுக் கொடுத்தவனாக நடித்தான்! ஆம், ஆம் தொழிற்கூட உதவி மேஸ்திரிபோல் காணப்பட்ட எவனோ அப்பாவி இளைஞனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, உயர்குடியினனுக்கு உரிய சீற்றமும் கண்ணீரும் விழிகளில் பொங்க, கூட்டத்தின் நடுவில் நிமிர்ந்து நின்றான் ஸுல்தான்.

“முஸல்மான்களே! என் பணம் திருட்டுப்போனபோது இந்த ஆள் பக்கத்திலேயே வளைய வந்து கொண்டிருந்தான்... நான் இவனைச் சந்தேகிக்கிறேன்.” என்று அழுகைக் குரலில் சொல்லி, மார்பில் ஒரு கையால் அடித்துக் கொண்டான்.

வெள்ளைத் துணிபோல வெளிறிப்போன இளைஞன் உடம்போடு நடுங்கினான்.

“ஆண்டவனே, என்னை அவதூறிலிருந்து காப்பாற்று! ஆண்டவனே, எப்பேர்ப்பட்ட சங்கடத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன்!” என்று முணுமுணுத்தான்.

இதற்குள் அருகே வந்துவிட்ட கஸாஃகியப் போலீஸ்காரன், “உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று ஸுல்தானிடம் கேட்டான்.

“ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் நான்கு தன்காக்களும். வர்ணக் கோடுகள் போட்ட சணல் மணிபர்ஸில் வைத்திருந்தேன். என்வெள்ளி மோதிரமும் அதில் இருந்தது. ‘ஓ, அலி’ என்ற சொற்கள் பொறித்தது அது. நான் ஏழைச் செம்மான் ஒரு நோஞ்சல் ஆடு வாங்கலாம் என்று வந்தேன்!”

இவ்வாறு சொல்கையில் கூட்டத்தைச் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் கண்களில் நானும் அமனும் பட்டுவிட்டோம்.

“இதோ, இந்தப் பையன்களும் நேரே கண்டார்கள்!” என்றான் அவன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமனுக்கு எதிர்பாராமையால் புரைகூட ஏறிவிட்டது. அவன் “ஐயோ” என்று கூவி, பின்னே நகர்ந்து, ஆட்களின் முதுகுகளுக்குப் பின் மறைந்துவிட்டான். என்னாலோ இடத்தைவிட்டு நகரவே முடியவில்லை.

“உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று இளைஞனிடம் கேட்டான் போலீஸ்காரன்.

“என்னிடமும்... வர்ணக் கோடுகள்போட்ட சணல் மணிபர்ஸ்... பணம்... பணம் ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் இரண்டு தன்காக்களும். நானும் ஆடு வாங்கவே வந்தேன். சத்தியமாக.”

“இதிலே எந்த விதச் சாட்சிகளும் தேவையில்லை. எங்கே வாருங்கள் இரண்டு பேரும் பஞ்சாயத்துத் தலைவரிடம். அங்கே விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கூட்டம் கலையட்டும்!” என்றான் உஸ்பேக் போலீஸ்காரன்.

அவர்கள் போய்விட்டார்கள். நான் அவர்களைத் தொடரவில்லை. நான் அமனைத் தேடுவதற்கு விரைந்தேன். அவனோ, கிலி கொண்டு ஆட்டையும் என்னையும் எல்லாவற்றையுமே அடியோடு மறந்துவிட்டு, கண்காணாமல் மறைந்துவிட்டான். பொழுது சாயும் தறுவாயில்தான் நான் அவனைக் கண்டு பிடித்தேன். அவனுடைய பேடித்தனத்தையும் அறிவீனத்தையும் சக்கைசாறாகப் புரட்டி எடுத்தேன். அவனோ திகிலிருந்து இன்னும் விடுபட்ட பாடில்லை.

“விவகாரம் எப்படி முடிந்தது?” என்று கேட்டான்.

“எப்படி முடிந்ததா? நல்ல வேளைதான் நீ கம்பி நீட்டினாய். நீ ஜேபடித்திருடனுக்கு உடந்தையாய் இருந்தாயாம். போலீஸ்காரர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.” என்றேன்.


“மெய்யாகவா? இப்போது நாம் என்ன செய்வது?”

“என்ன செய்வது? என்ன செய்வது?” என்று அவனைக் கோரணி செய்தேன். “ஒரு காரணமும் இல்லாமல் நழுவி ஓடினாயே, அப்போது நினைத்திருக்க வேண்டும். என்ன செய்வது என்று. உன்னால் முலாம்பழமும் தர்பூஸும் கட்டண. வசூல்காரனிடமே தங்கிவிட்டன!” என்றேன்.

அமன் சற்று நிம்மதி அடைந்தான்.

“எங்கே இராத் தங்குவது?” என்று கேட்டன்.

நாங்கள் அனேகச் சாயாக்கடைகளுக்குப் போய்ப் பார்த்தோம். கடைக்காரர்களும் குதிரை வியாபாகிளும் கூலி விற்போரும் எல்லாவிற்றிலும் நிறைந்திருந்தார்கள். குந்துவதற்குக் கூட இடம் இல்லை.

“நாம் எங்கேதேன் போவது?” என்று மறுபடி கேட்டான் அமன்.

“பயப்படாதே ஏதாவது வழி கண்டுபிடிப்போம்... பொறு, வழி கண்டு பிடித்துவிட்டேன் போலிருக்கிறது. போன வருஷம் என் சித்தப்பாவும் இங்கே சந்தை நாளில் வந்திருந்தார். சாயாக்கடையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் எவனோ கிழவியின் வீட்டில் தங்கியதாகவும் சொன்னார்... அவள் கஸாஃகிய மாது என்று நினைக்கிறேன்... வேடிக்கையான பெயர் அவளுக்கு ... ஆ, நினைவு வந்துவிட்டது யக்ஷீ கிஸ் (நல்ல நங்கை)! அவள் வீடு சந்தையிலிருந்து வெகு தூரம் இல்லை, அவள் கூடாரத்தில் வசிக்கிறாளாம், சாராயம் காய்ச்சி விற்கிறாளாம். போவோமா அவளிடம்?”

நாய்களால் துரத்தப்படும் நரிபோல இங்குமங்கும் மிரண்டு மிரண்டு பார்த்துக்கொண்டிருந்த அமன் பேசாமல் என் பின்னே நடந்தான்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

5 comments:

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

சரவணன் said...

தகவலுக்கு நன்றி ராம்.

Robin said...

சோவியத் நாடு சிறு கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. சிறு வயதில் படித்தது நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் ரஷியா ஒரு கனவு தேசம் போல தோன்றும்.

Robin said...

உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டுகள்.

சரவணன் said...

நன்றி ராபின்.